Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவஞானபோதம் பகுதி-7 சிவஞானபோதம் பகுதி-9
முதல் பக்கம் » சிவஞானபோதம்
சிவஞானபோதம் பகுதி-8
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2013
02:11

மூன்றாம் நூற்பா

முந்திய இரண்டாம்  நூற்பாவில், இறைவன் தன் சத்தியோடு இயைந்து நின்று, உயிர்களை அவற்றின் வினைக்கேற்பச் செயற்படுத்துவான் என்று கூறப்பட்டது. அவ்வாறு செயற்படுத்தப்படும் உயிர் என்பதுதான் எது? உடம்புதான் உயிரா? அல்லது உடம்பின் பகுதிகளுள் ஒன்று உயிரா? அல்லது, இவையனைத்திற்கும் வேறான ஒன்றா? இப்படிப் பலவாறான ஐயங்கள் மாணவர்க்கு எழுதல் இயல்பு. அவற்றை நீக்குதற் பொருட்டு இம் மூன்றாம் நூற்பாவைச் செய்கின்றார் ஆசிரியர்.

ஆசிரியர் கருத்துரை:

என்பது சூத்திரம்,  என் நூதலிற்றோ எனின், ஆன்மப் பிரகாசம் உணர்த்துதல் நுதலிற்று.

கருத்துரை விளக்கம்

ஆன்மப் பிரகாசம் என்பது ஆன்மாவைப் பற்றிய விளக்கம் எனப் பொருள்படும். அவ்விளக்கம் இரண்டு வகையாய் அமையும்.

1. ஆன்மா உண்டு என உணர்த்துதல்

2. ஆன்மாவினது இலக்கணத்தை உணர்த்துதல்

அவ்விரண்டனுள் முதலாவதாகிய, ஆன்மாவுண்டு என்பதனையே இந்த நூற்பாவால் உணர்த்துகிறார் ஆசிரியர்; ஆன்மாவின் இலக்கணத்தை நான்கு, ஏழாம் நூற்பாக்களில் உணர்த்துவார்.

உயிர் எது என்பதில் கருத்து வேறுபாடு:

உயிர் என்பது யாது என வினவினால், உணரும் தன்மையுடையது எதுவோ அஃது உயிர் என விடையிறுக்கலாம். இதனை யாவரும் ஒப்புவர். இதிலே சிக்கல் இல்லை. ஆயின், உணரும் தன்மையுடையது எது? என்று  வினவும் போதுதான் அதற்கு விடை கூறுவதில் கருத்து வேறுபாடு உண்டாகிறது. உடம்பு, பொறி முதலிய வெவ்வேறானவற்றைச் சுட்டி, உணர்வுடையதாய் நிற்பது அதுவே யாகலின் அதுவே உயிர் என்கிறார்கள். அவற்றையெல்லாம் மறுத்து உயிர் அவற்றிற்கெல்லாம் வேறாய் உள்ளது என நிறுவுகிறார் ஆசிரியர்.

இந்நூற்பாவில் ஏழு வகையான மாறுபட்ட கருத்துக்களை எடுத்துக்கொண்டு மறுக்கின்றனர். எட்டாவதாகிய கொள்கையொன்றை அடுத்த நூற்பாவில் மறுப்பார்.

இந்நூற்பாவில் மறுக்கப்படும் கருத்துக்கள்:

1. ஆன்மா என்பது சூனியம்
2. பருவுடம்பே ஆன்மா
3. இந்திரியங்களே ஆன்மா
4. சூக்கும தேகமே ஆன்மா
5. பிராண வாயுவே ஆன்மா
6. பிரமமே ஆன்மா
7. அனைத்தும் கூடிய தொகுதியே ஆன்மா என்பன.

ஆசிரியர் ஏழு கூறுகளாக அமைத்துக் கொண்டு, மேற்கூறிய கருத்து ஒவ்வொன்றையும் ஒவ்வொரு கூறில் வைத்து மறுக்கின்றார்.

நூற்பாவின் பொருள்:

1. உடம்பின்கண் உள்ள ஒவ்வோர் உறுப்பையும் பகுத்துப் பகுத்து ஆராய்ந்து பார்த்தும் ஆன்மா இன்னது என அறிய வாராமையால் ஆன்மா சூனியமே என்பர். அங்ஙனம் ஆராய்ந்து ஆன்மா சூனியமே எனக் கூறுகின்ற அறிவு உள்ளதேயன்றோ? அவ்வறிவைச் சூனியம் என்றால் பொருந்தாது. அவ்வறிவே ஆன்மாவாம் என்கிறார் ஆசிரியர்.

2. அறிவு உடம்பிலன்றி வேறிடத்தில் நிகழக் காணாமையால் பருவுடம்பே ஆன்மா என்பர். அதுவும் பொருந்தாது. உடம்பே ஆன்மா எனின், யான் உடம்பு என்று யாரேனும் சொல்லுகிறார்களா? அங்ஙனம் சொல்லும் வழக்கம் எக்காலத்திலும் இல்லை. எனது உடம்பு என உடம்பை உடைமைப் பொருளாகத்தான் சொல்லுகிறோம். இதனால் உடம்பிற்கு வேறாய் யான் எனப்படும் ஆன்மா உண்டு என்பது பெறப்படும்.

3. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளே புலன்களை அறிவன ஆதலின் அவைகளே அறிவாகிய ஆன்மாவாம் என்பர். இதுவும் பொருந்தாது. பொறிகளுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புலனை மட்டுமே அறியும்; ஏனை நான்கு புலன்களை அறியாது நிற்கும். அவை எப்படி ஆன்மாவாக முடியும்? ஐம்பொறிகளுக்கும் வேறாக இருந்து, அவ்ஐந்தையும் கருவியாகக் கொண்டு நான் கண்டேன், நான் கேட்டேன், நான் சுவைத்தேன் என இவ்வாறு ஐந்து புலன்களையும் அறிவதே ஆன்மாவாம்.

4. இனி, அகத்தே நிற்கும் சூக்கும தேகமே பொறிகளைச் செலுத்திப் புறப்பொருள்களை அறியும்; அதனால் அந்தச் சூக்கும தேகமே ஆன்மாவாம் என்பர்.

அவரது கூற்றும் பொருந்தாது. ஒருவன் சற்றுமுன் கண்ட ஒன்றை இப்பொழுது தெளிவாக நினைவு கூர்ந்து சொல்லுகிறான், அதில் அவனுக்குக் குழப்பமில்லை. சூக்கும தேகமே  ஆன்மாவாயின் கனவை அறிந்த அதுவே விழித்த பின்பு அதனை மீள நினைவு கூர்கிறது. அங்ஙனமாயின் சற்று முன் கனவிற் கண்டதைக் கண்டவாறே தெளிவாய் அறிதல் வேண்டுமன்றிக் குழப்பமாக அறிதல் கூடாது. ஆனால் அன்றாட அனுபவத்தில் விழித்தெழுந்தபின் கனவு கண்டோமா இல்லையா, கனவில் இப்படிக் கண்டோமா அப்படிக் கண்டோமா என்றெல்லாம் குழம்பி அறிகிற நிலையே உள்ளது. இதனால் சூக்கும தேகம் ஆன்மா அன்று என்பது விளங்கும்.

சூக்கும தேகத்திற்கு வேறாய் இருந்து அறிகின்ற மற்றொன்று உள்ளது. அதுவே விழிப்பு நிலையில் தூல தேகத்தில் நின்று புறத்து நிகழ்ச்சிகளை அறிகிறது. அத்தேகம் செயலாற்றுப் போனபோது அகத்தே சூக்கும தேகத்தைப் பொருந்திக் கனவு நிலையில் அகத்து நிகழ்ச்சிகளை அறிகிறது. பின் விழிப்பு வந்த காலை அது சூக்கும தேகத்தை விட்டு மீண்டும் தூலதேகத்திற்கு வருகிறது. இவ்வாறு இந்த இரண்டு உடம்பிற்கும் வேறாகிய ஆன்மாவே ஓரும்பை விட்டு மற்றோர் உடம்பைப் பற்றும்போது அந்த மாற்றத்தால் அத்தகைய குழப்பத்தை அடைகிறது. இதனால் ஆன்மா சூக்கும தேகத்தின் வேறாய் உள்ளது என்பது விளங்கும்.

5. பிராணவாயு (மூச்சுக்காற்று) வெளிச் சென்றும் உட்புகுந்தும் தொழிற்பட்டு ஏனைக் கருவிகளை இயக்கி அறியும் ஆகலின் அதுவே ஆன்மாவாம் என்பர். இதுவும் பொருந்தாத கூற்றே.

உறங்காத பொழுது புலன் நுகர்ச்சியும், உடம்பின் செயற்பாடும் நிகழ்கின்றன. அதற்குக் காரணம், கண் செவி முதலிய அறிகருவிகளும், வாக்கு பாதம் முதலிய செயற்கருவிகளும் இயங்குவதேயாகும். ஆனால் உறக்கத்தில் இவ்விருவகைக் கருவிகளும் இயங்காத காரணத்தால் புலனுகர்ச்சியும் உடம்பின் செயற்பாடும் இல்லையாகின்றன.

விழிப்பு நிலையில் அக்கருவிகளை இயக்கி நிற்பதும், உறக்கத்தில் அவற்றை இயக்காது மடிந்திருப்பதும் ஆகிய ஒன்று உள்ளது என்பது இதனால் விளங்குகிறது. அந்த ஒன்று எது? அது பிராண வாயுவாக இருக்க முடியாது. ஏனென்றால், அதுதான் விழிப்பு உறக்கம் ஆகிய எல்லா நிலையிலும் இயங்கிக் கொண்டிருக்கிறதே; ஒருபோதும் மடிந்திருப்பதில்லையே.

பிராணவாயு உறக்கத்திலும் சலியாது இயங்கிக் கொண்டிருக்கும்பொழுது கருவிகள் மட்டும் இயக்கமின்றி மடிந்திருக்கின்றன. பிராண வாயுவே ஆன்மாவாகிய தலைவன் என்றால், தலைவன் இயங்கிக் கொண்டிருக்க அத்தலைவனுக்குக் கீழ்ப்பட்ட கருவிகள் இப்படி மடிந்திருக்குமா? பிராணவாயு தலைவன் இல்லை என்பதை இதுவே காட்டவில்லையா?

எனவே உறங்காதபோது கருவிகளை இயக்கி நிற்பதும், உறக்கத்தில் அவற்றை இயக்காது மடிந்திருப்பதும் ஆகிய ஆன்மா பிராணவாயுவுக்கு வேறான ஒன்று என்பது தெளிவாகும்.

6. இனி அறிவாய் நிற்பது பிரமம் ஆதலின் அதனையே ஆன்மா என்றல் நிரம்பும் என ஏகான்மவாதிகள் கூறுவர். ஆன்மாவினது அறியும் தன்மைக்கும் பிரமத்தின் அறிவுநிலைக்கும் உள்ள வேறுபாட்டினை எடுத்துக்காட்டி, ஆன்மா பிரமத்தின் வேறாய் உள்ளது என நிறுவுகிறார் ஆசிரியர்.

ஆன்மா இயல்பிலே அறிவுடையதாயினும் எதனையும் தானே அறிய மாட்டாத தன்மையையுடையது. எப்பொருளை அறிவதற்கும் அதற்கு ஒரு துணை வேண்டும். துணைப் பொருள் அறிவிக்கவே ஆன்மா அறிவதாகும். துணையாகிய கருவிகள் உணர்த்தவே ஆன்மா அறிவதாகும். துணையாகிய கருவிகள் உணர்த்தவே ஆன்மா உலகப் பொருள்களை உணர்கிறது; நல்லாசிரியரின் துணையைப் பெற்று அவர் அறிவுறுத்தியபோதே மெய்ப்பொருளை உணரவல்லதாகிறது. பிரமமே ஆன்மாவாயின், பிரமம் அறிவிக்கும் துணையைப் பெற்றே அறியும் என்றல்லவா ஆகிறது? இஃது எவ்வாற்றானும் பொருந்தாது. எனவே, அறிவித்தாலன்றி அறிய மாட்டாத ஆன்மா எல்லாவற்றையும் தானே அறிந்து நிற்கும் அப் பிரமத்தின் வேறாய் உள்ளது என்பது பெறப்படும்.

7. இனி, அனைத்துக் கருவிகளும் கூடிய கூட்டமே ஆன்மா என்பர் சிலர். அவர் கூற்றும் பொருந்தாது. கருவிகள் எல்லாம் சேர்ந்த தொகுதி உடம்பு ஆகுமே யன்றி ஆன்மாவாகாது. உடம்பு ஓர் இயந்திரம் போன்றது. உடம்பிலுள்ள கருவிகள் அவ்வியந்திரத்தின் உறுப்புக்கள் போன்றவை. உறுப்புக்கள் சீரான நிலையில் இருந்தாலும் இயந்திரம் தானே இயங்காது. அதனை இயக்குவோன் வேறாக இருந்து இயக்கவே இயங்கும். அதுபோல, உடம்பும் தன்னை இயக்குவதாகிய ஆன்மா வேறாக இருந்து செலுத்தவே செயற்படும். ஆதலால் உடம்பினுள் நின்று உடம்பை இயக்குகிற அறிவாகிய ஆன்மா சடமாகிய இக்கருவிகளின் கூட்டத்திற்கு வேறாய் உள்ளது என்பது விளங்கும்.

பதவுரை

இலது என்றலின் - ஆன்மா என்பதொன்று இல்லை என்று கூறும் போது, அங்ஙனம் ஆராய்ந்து கூறும் அறிவு ஒன்று இருத்தலின்

ஆன்மா உளது - அவ்வறிவே  ஆன்மாவாம். ஆதலின் ஆன்மா சூனியம் ஆகாது அதனின் வேறாய் உள்ளதேயாம்.

(இது ஆன்மா சூனியம் என்பதை மறுத்தது.)

எனது உடல் என்றலின் - உடம்பை நான் உடம்பு என வழங்காமல் எனது உடம்பு என வேறாகக் குறிக்கின்ற வழக்கத்தினால்

ஆன்மா உளது - அங்ஙனம் குறிக்கின்ற ஆன்மா உடம்பு ஆகாது அதனின் வேறாய் உள்ளதாகும்.

(இது பருவுடம்பே ஆன்மா என்பதை மறுத்தது.)

ஐம்புலன் அறிதலின் - ஐம்பொறிகளுக்கு வேறாய் ஒரு பொருள் இருந்து அவ் ஐம்பொறிகளையும் கருவியாகக் கொண்டு ஓசை முதலிய ஐந்து புலன்களையும் அறிந்து வருதலால்

ஆன்மா உளது - அவ்வாறு அறிகின்ற அதுவே ஆன்மாவாம்.
(இது இந்திரியங்களே ஆன்மா என்பதை மறுத்தது)

ஒடுக்கம் அறிதலின் - ஐம்பொறிகளும் செயற்படாது ஒடுங்கி நின்ற கனவு நிலையில் நடந்தவற்றை விழித்தெழுந்த பின் தெளிவாக அறியமாட்டாது, கனவில் இப்படிக் கண்டோமா, அப்படிக் கண்டோமா எனப் பலவாறு குழம்பி அறிதலினால்

ஆன்மா உளது - அகத்தே சூக்கும தேகத்திற் புகுந்து கனவு அனுபவங்களை அடைந்தும், பின் விழிப்பு நிலையில் தூல தேகத்திற்கு வந்து கனவிற் கண்டவற்றை மறந்தும் மயங்கியும் நிற்பதாகிய ஆன்மா சூக்கும தேகத்திற்கு வேறாய் உள்ளது.

(இது சூக்கும தேகமே ஆன்மா என்பதை மறுத்தது.)

கண் படில் - உறக்கத்தில்

உண்டி, வினை இன்மையின் - இன்ப துன்ப நுகர்ச்சியும், வினையாகிய செயற்பாடும் நிகழாமையால்

ஆன்மா உளது - உறங்காத பொழுது நுகர்ச்சிக்கும், செயலுக்கும் உரிய கருவிகளை இயக்கி நிற்பதும், உறக்கத்தில் அக்கருவிகளை இயக்காது மடிந்திருப்பதும் ஆகிய ஆன்மா பிராணவாயுவுக்கு வேறாய் உள்ளது. (பிராண வாயு உறக்கத்தில் மடியாது இயங்கிக் கொண்டிருக்கும் நிலையிலும் ஏனைக் கருவிகள் இயங்காது போதலை எண்ணினால், பிராணவாயு ஆன்மா அன்று என்பது புலனாகும்.)

(இது பிராண வாயுவே ஆன்மா என்பதை மறுத்தது)

உணர்த்த உணர்தலின் - தானே தனித்து நின்று ஒன்றை உணரும் தன்மையில்லாமல், அறிவிக்கும் கருவிகள் கூடி நின்று உணர்த்த உலகப் பொருள்களை உணர்ந்து வருதலினால்

ஆன்மா உளது - அங்ஙனம் அறிவித்தாலன்றி அறிய மாட்டாத ஆன்மா தானே அறியும் பேரறிவுப் பொருளாகிய பிரமத்தின் வேறாய் உள்ளது.

(இது பரம்பொருளாகிய பிரமமே ஆன்மா என்பதை மறுத்தது.)

மாயா இயந்திர தனுவினுள் - அனைத்துக் கருவிகளும் கூடிய கூட்டமும் உடம்பு எனப் பெயர் பெறுதலின்றி, ஆன்மா எனப் பெயர் பெறுதல் இல்லை. மாயா காரியமாகிய அக்கருவிகளால் கட்டி அமைக்கப்பட்ட இயந்திரம் போன்றுள்ள உடம்பின்கண்

ஆன்மா உளது - அறிவாகிய ஆன்மா சடமாகிய கருவிக் கூட்டத்திற்கு வேறாய் உள்ளது.

(இது கருவிக் கூட்டமாகிய சமூகமே ஆன்மா என்பதை மறுத்தது.)

சிறப்புரை

நூற்பாவின் இறுதியில் உள்ள ஆன்மா என்பதை எடுத்து முதலில் நிற்கும் உளது என்பதனோடு பொருத்திக் கொள்ள வேண்டும்.

இங்கு மறுக்கப்படும் கருத்துக்கள் ஏழு. அவற்றை மறுத்தற்குக் கூறும் ஏதுக்களும் ஏழாயின. அந்த ஏதுக்கள் ஒவ்வொன்றனோடும் ஆன்மா உளது என்பது சென்று இயையும்.

ஆன்மா உளது என ஒருமையாற் கூறினாரேனும் உடம்பு தோறும் வேறு வேறாய் எண்ணிறந்த ஆன்மாக்கள் உள்ளன என்பதே கருத்தாகும்.

மேற்கோளும் ஏதுவும் அமைந்துள்ள முறை:

ஏனைய நூற்பாக்களில் கூறுதோறும் மேற்கோள் வேறு வேறாய் இருத்தலைக் காணலாம். இந்நூற்பாவில் எல்லாக் கூறுகளிலும் மேற்கோள் ஒன்றேயாம். ஆன்மா வேறாய் உளது என்பதே அம் மேற்கோள்.

மேற்கோள் ஒன்றாயினும் மறுக்கப்படும் கருத்துக்கள் ஏழாயிருத்தலின் அவற்றை மறுத்தற்குக் கூறும் ஏதுக்கள் ஏழாயின.

ஏனை நூற்பாக்களில், மேற்கோளும் ஏதுவும் நூற்பாவின் கண் இல்லாமல் உரையிலேயே கொணர்ந்து கூறப்படும். இங்க அவ்வாறன்றி மேற்கோளுடன் ஏதுக்கள் நூற்பாவிலேயே சொல்லப்பட்டுள்ளன என்பதும் நோக்குதற்குரியது.

முதற் கூறு

சூனியான்மவாத மறுப்பு

ஆன்மா என்பதொன்று இல்லை எனக் கொள்பவர் பவுத்தர். அவருள் ஒரு பிரிவினர் பின் வருமாறு கூறுவர்; உலகில் யாதொரு பொருளும் உள்ளதன்று. எல்லாம் சூனியமே. அவை மயக்கத்தால் உள்ளன போல உணரப்படுகின்றன. அம்முறையில், ஆன்மா என்பதும் சூனியமே என்பர். அவர்கள் கூறுவது சூனியான்ம வாதம் எனப்படும். அதனை இம் முதற் கூறில் வைத்து மறுக்கின்றார் ஆசிரியர்.

மேற்கோளும் ஏதுவும்

ஈண்டு இலது என்றலின் ஆன்மா உளது என்றது.

இதனை விளக்கி ஆசிரியர் செய்த பொழிப்புரை வருமாறு:

பொழிப்புரை

எவற்றினையும் அன்று அன்று என விட்டு ஆன்மா இலது என நிற்பது உளதாகலின், அதுவே அவ்வான்மாவாம் - என்றது.

விளக்கம்

சூனியான்ம வாதம் கூறுவோர் பொறி, மனம் முதலியவற்றை ஒவ்வொன்றாகச் சுட்டி, இஃது ஆன்மாவா, இஃது ஆன்மாவா என வினவி, இவற்றுள் ஒன்றும் ஆன்மா ஆகாமையால் ஆன்மா இல்லை என்பதே முடிவு என்பர்.

அவர்தம் வாதத்தை மறுக்கின்றார் ஆசிரியர். ஆன்மா இலது என்னும் வழக்குரையே ஆன்மா உள்ளது என்பதை உணர்த்தும் என்கின்றார். எவ்வாறெனில், உடல் பொறி முதலியவற்றை எடுத்து ஆராய்ந்து, இஃது ஆன்மா அன்று என ஒவ்வொன்றாகக் கழித்த ஓர் அறிவு உள்ளதே அன்றோ? அவ்வறிவே ஆன்மாவாம் என நிறுவுகிறார். அவர்கள் கூறும் வழக்குரையே கொண்டு அவரை மறுத்துள்ள திறன் எண்ணி வியத்தற்குரியது.

எடுத்துக் காட்டு
வெண்பா

16. அன்று அன்று எனநின்று அனைத்தும்விட்டு அஞ்செழுத்தாய்
நின்றொன்று உளது அதுவே நீ; அனைத்தும்- நின்றுஇன்று
தற்பணம்போல் காட்டலால் சார்மாயை நீயல்லை
தற் பரமும் அல்லை; தனி.

இதன் பொருள்:

உடம்பும் பொறியும் மனமும் முதலிய பொருள்கள் உயிரே எனும்படி ஒன்றி நிற்பவை. அவற்றை ஒவ்வொன்றாக இது நான் அன்று, இது நான் அன்று எனக் கண்டு அனைத்தையும் நீக்கி விட்டால் அங்ஙனம் நீக்கிய அறிவாய் ஒரு பொருள் எஞ்சி நிற்பது புலனாகும். அதுவே அஞ்செழுத்து வடிவாய் அனைத்தையும் அறிந்து வருவது. அங்ஙனம் புலனாகின்ற அந்த அறிவே நீ என உணர்வாயாக. ஆகவே நீ சூனியம் ஆகாய்

மாயையின் காரியங்களாகிய உடம்பு, ஐம்பொறிகள் முதலிய யாவும் கண்ணுக்குக் கண்ணாடி போல, தனித்து நின்று அறிய மாட்டாத உனக்குத் துணையாகி உன் அறிவை விளக்க வந்த கருவியேயன்றி அவை தாமே அறிவன அல்ல. கண் கண்ணாடியாகாது. அதுபோல நீ அம்மாயையின் காரியங்கள் ஆக மாட்டாய்.

மாயையின் துணையினால் அறிவு விளங்கப் பெற்று வரும் நீ, ஒரு துணையும் வேண்டாது தானே எல்லாவற்றையும் அறிபவனாய், அந்த மாயைக்கு அப்பாற்பட்டவனாய் உள்ள சிவமும் ஆக மாட்டாய்.

அவ்விரண்டும் இல்லையாயின் யான் யாது எனின். பதியாகிய சிவத்திற்கும் பாசமாகிய மாயா காரியங்களுக்கும் வேறாய் உள்ள ஒரு தனிப்பொருள் ஆவாய்.

பதவுரை:

அனைத்தும் நின்று - உடல், பொறி, மனம் முதலிய அனைத்திலும் அது அது தானாகவே நின்று

அன்று அன்று எனவிட்டு - பின்பு ஒவ்வொன்றாக இது நான் அன்று என்று கண்டு அவற்றினின்றும் நீங்கிய பின்னும்

அஞ்செழுத்தாய் நின்று ஒன்று உளது - சூக்கும பஞ்சாக்கரம் என்ப்படும் அந்த ஐந்தெழுத்தே தனது வடிவாய் நின்று, எல்லாவற்றையும் அறிந்து வந்த அறிவு நீங்காதே உள்ளது அன்றோ?

அதுவே நீ - அந்த அறிவே நீயாகும். (ஆதலால் நீ சூனியம் ஆகாய்)

அனைத்தும் - மாயையின் காரியங்கள் யாவும்

இன்று - இப்பெத்த காலத்தில்

தற்பணம் போல் நின்று - கண்ணுக்குக் கண்ணாடி போல உன்னோடு பொருந்தி நின்று

காட்டலால் - உனது அறிவை நிற்பனவேயன்றி அவை தாமே பொருள்களை அறிவனவல்லஆதலால்

சார் மாயை நீ அல்லை - நீ அம் மாயா காரியங்கள் ஆகமாட்டாய்

தற்பரமும் அல்லை - இனி அந்த மாயைக்கு அப்பாற்பட்டு நிற்கின்ற சிவமும் ஆகமாட்டாய்.

தனி - பதி, பாசம் என்னும் அவ்விரண்டின் வேறாகிய ஒரு தனிப்பொருள் ஆவாய் நீ.

விளக்கம்

அஞ்செழுத்து என்றது சூக்கும ஐந்தெழுத்தை. சூக்கும ஐந்தெழுத்தாவது நாதம் சுத்த மாயையினின்றும் தோன்றுவதாகிய நாதமே உயிரோடு நீங்காமல் ஒற்றித்து நின்று அதற்குப் பொருளுணர்வைத் தருவது. <உயிர் நாதமே வடிவாய் நின்று அறிந்து வருதலின் அஞ்செழுத்தாய் ஒன்று உளது என்றார்.

உயிர் பதிக்கும் பாசத்திற்கும் வேறாகிய மூன்றாவதொரு பொருள் என்பது உணர்த்தப்பட்டது.

இரண்டாம் கூறு

தூலதேகான்ம வாத மறுப்பு:

அறிவு உடம்பினிடத்தேயன்றி வேறிடத்தில் காணப் பெறாமையால் பருவுடம்பே ஆன்மாவாம் என்பர். அவர் கூற்று தூலதேகான்ம வாதம் எனப்படும். மேலும், நான் மெலிந்தேன், நான் பருத்தேன் என்று தானே கூறுகிறோம். அவ்வழக்குகளில் நான் என்பது உடம்பைத் தானே குறிக்கிறது. ஆதலால் உடம்பே ஆன்மாவாம் எனக் காட்டுவர். அவர் கூற்றை இவ்விரண்டாம் கூறில் மறுக்கின்றார் ஆசிரியர்.

மேற்கோளும் ஏதுவும்

இனி, எனதுடல் என்றலின் ஆன்மா உளது- என்றது.

இதன் பொருளை விளக்கி ஆசிரியர் செய்த பொழிப்புரை வருமாறு.

பொழிப்புரை

என் பதி, என் மனை என்றாற் போல, என் கை, என் கால் என நிற்பது உளதாகலின் அதுவே அவ்வான்மாவாம்- என்றது.

பொழிப்புரையின் விளக்கம்

பதி என்பது கணவனையும், மனை என்பது மனைவியையும் குறிக்கும். என் பதி என்று ஒருத்தி தன் கணவனைச் சொல்லுகிறாள். சொல்லுகிற அவள் வேறு, கணவன் வேறு என்பது சொல்லாமலே விளங்கும். என் மனை என்று ஒருவன் தன் மனைவியைக் குறிப்பிடுகிறான். குறிப்பிடுகிற அவன் அவளின் வேறானவன் என்பது வெளிப்படை.

என்பதி, என் மனை என்றாற் போன்றனவே என் கை, என் கால், என் உடம்பு என வழங்குவனவும்.

என் கைப்பட எழுதியது என்று உறுதி கூறுகிறோம்.

என் கால் தூசு பெறமாட்டான் என்று செருக்கிச் சொல்லுகிறோம்.

இதை உண்ண ஆசை. ஆனால் அதற்கு என் உடம்பு இடங்கொடுக்கவில்லையே என்று வருந்திச் சொல்லுகிறோம்.

இவ்வாறு என் கை, என் கால், என் உடம்பு எனச் சொல்லுகிற அறிவு அக்கை, கால், உடம்பு முதலியவற்றிற்கு வேறானது என்பது தெரிகிறது அல்லவா? அவ்வறிவே ஆன்மா ஆதலால், எனதுடல் என்ற வழக்கே ஆன்மா உடம்புக்கு வேறாய் உள்ளது என்பதைக் காட்டும்.

இனி, நான் மெலிந்தேன், நான் பருத்தேன் என்பவற்றில் நான் என்பது உடம்பையே குறித்தலால் உடம்பே ஆன்மா என வழக்கிடுவது பொருந்தாது. ஏனெனில், உயிர் உடம்பைச் சார்ந்து தான் வேறு  அது வேறு என்றில்லாமல் தான் அதுவேயாய் ஒற்றுமைப்பட்டு நிற்கிறது. அவ்வொற்றுமையால் உடம்பின் தன்மையையே தன் தன்மையாகக்  கொண்டு நிற்கிறது. அது பற்றியே, உடம்பு மெலிவுற்றால் நான் மெலிந்தேன் என்கிறோம்; உடம்பு பருமையுற்றால் நான் பருத்தேன் என்கிறோம். எனவே அவற்றைக் காட்டி உடம்பே ஆன்மா என நிறுவ முயல்வது பொருந்தாது.

மேலும், உடம்பே ஆன்மாவாயின், நான் உடம்பு என்ற கூறுகின்ற வழக்கு ஓரிடத்திலேனும் உண்டா? அவ்வாறு எங்கும் கூறப்படுதல் இல்லை. என் உடம்பு என்றுதான் கூறி வருகிறோம். ஆதலின் எனதுடல் என்றலின் ஆன்மா வேறாய் உள்ளது என்பது பெறப்படும்.

எடுத்துக்காட்டு
வெண்பா

17. என்து என்ற மாட்டின் எனதலாது என்னாது
உனதலாத உன்கைகால் யாக்கை- எனது என்றும்
என் அறிவ தென்றும் உரைத்துநீ நிற்றிகாண்;
உன்னில் அவை வேறாம் உணர்.

இதன் பொருள்:

இயற்கையில் தனக்கு உரியதாகாமல் செயற்கையாய் இடையில் உரியதாகிய பொருளை எனதன்று என விட்டொழியாமல் எனது என்றே உரிமை பாராட்டி நிற்றலை உலகியலில் காணலாம்.

அதுபோல, இயற்கையில் உனக்கு உரியனவாகாமல் உன்னோடு இயைந்து நிற்கும் உனது கை, கால், உடம்பு முதலியவற்றை, அவை வேறு என்ற உண்மையை உணராமல், எனது என்றும், அவை போன்ற கருவிகள் தோற்றுவித்த அறிவையே என் அறிவு என்றும் கூறி அவற்றோடு ஒற்றுமைப்பட்டு நிற்கின்றாய்.

உன் கை, கால், உடம்பு முதலியவற்றின் இயல்பை ஆராய்ந்து உணர்வாயாயின், அவை வேறாய் நீங்குவனவாம்.

பதவுரை

எனது அலாது என்னாது - இயற்கையில் உனக்கு உரியதாகாமல் செயற்கையாய் உன்னை வந்து பொருந்திய, உன்னின் வேறாகிய பொன், பொருள், மனைவி, மக்கள் முதலியவற்றை எனதன்று என்று எண்ணாமல்

எனது என்ற மாட்டின் - அவற்றோடு நீ ஒற்றுமைப்பட்டு நின்று எனது எனது என்றே உரிமை கூறி நிற்றலைப் போல

உனது அலாத - இயற்கையில் உன்னோடு ஒன்றாய் இல்லாது பின் ஒரு காலத்தில் உன்னோடு வந்து இயைந்து நிற்பனவாகிய

உன் கை கால் யாக்கை - உனது கை, கால், உடம்பு என்பவற்றை

எனது என்றும் - எனது எனது என்றும்

என் அறிவு என்றும் - அவை போன்ற கருவிகள் உன்னிடம் தோற்றுவித்த அறிவை எனது அறிவு என்றும்

உரைத்து நீ நிற்றி - (அவை வேறு என்ற உண்மையை உணராமல் அவற்றோடு ஒற்றுமைப்பட்டு நின்று) நீ கூறி வருகிறாய்

உன்னில் - கை, கால், உடம்பு முதலியவற்றின்  இயல்பையும் உனது இயல்பையும் நீ ஆராய்ந்து உணரின்

அவை வேறாம் - அவை உனக்கு வேறேயாதல் விளங்கும்.

உணர் - ஆகவே நீ அவற்றின் இயல்பை உணர்வாயாக.

விளக்கம்

இவ்விடத்தில் திருமூலர் கூறிய கருத்து ஒன்றை எண்ணிப் பார்ப்போம்.

குயில் தனது முட்டையைக் கூட்டில் இட, காக்கை அதனைச் சிறிதும் வேறாக நினையாது தன் முட்டையென்றே கருதி அடைகாத்துக் குஞ்சு பொரிக்கும்; சிறிது காலத்தில் அக் குஞ்சினைத் தன் குஞ்சு என்றே எண்ணி வளர்க்கும்.

அதுபோல இறைவன் உயிருக்கு உடம்பைக் கொடுத்தாற் பொருட்டு அவ்வுயிரைத் தாயின் கருவிலே இட, அத்தாய் அதனைச் சிறிதும் வேறாக நினையாமல், அதனைப் போக்கி விடவும் கருதாமல் பேணிக் காத்து வளர்ப்பது மயக்கத்தால் ஆகும் என்பார் அவர்.

காக்கையின் செயலைத் தாயின் செயலுக்கு உவமையாக்கினார் திருமூலர். அவ்வுவமை இவ்விடத்து உயிரின் செயலுக்குப் பொருந்துவதேயாம்.

காக்கை தனக்கு உரியதாகாத குயிலின் குஞ்சைத் தன் குஞ்சு என்றே கருதி வளர்த்தல் போல, உயிரும் தனதல்லாத உடம்பு முதலியவற்றை எனது எனது என்று பேணி வளர்த்து வருகிறது. காக்கைக்கு உண்மை தெரிந்தவுடன் அது குயிற் குஞ்சை அடித்துத் துரத்தி விடும். அதுபோல் உயிரும் உடம்பு முதலியவற்றின் உண்மையியல்பை ஆராய்ந்து உணரின், அவற்றை வேறாகக் கண்டு அவற்றின் தொடர்பை விட்டொழிக்கும் எனப் பொருத்திக் கொள்ளலாம்.

 
மேலும் சிவஞானபோதம் »
temple news
நூல்முகம்: இவ்வுலகம், முதலில் சில பக்கங்களும் முடிவில் சில பக்கங்களும் இல்லாத நிலையில் கிடைத்த ஒரு ... மேலும்
 
இருவகை இயல்புகள்சைவ சித்தாந்தத்தில் பொருளுக்கு இரு வகையான இயல்புகள் சொல்லப்பெறும். அவை உண்மையியல்பு, ... மேலும்
 
முதல் நூற்பாமுதற் கடவுள் ஒருவர் உண்டு என்பதை நிறுவுவது முதல் நூற்பாவின் குறிக்கோள். காணப்பட்ட உலகைக் ... மேலும்
 
அம் முதல்வன் அழித்தற்  கடவுளே:இனி அம் முதல்வன் யாவன்? என்ற வினா இயல்பாக எழுகிறது. அதற்கு ... மேலும்
 
இரண்டாம் நூற்பாமுதல் நூற்பாவோடு இந்நூற்பா தொடர்புற்று நிற்கிறது. எவ்வாறெனில், முதல் நூற்பாவில் உலகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar