Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவஞானபோதம் பகுதி-6 சிவஞானபோதம் பகுதி-8
முதல் பக்கம் » சிவஞானபோதம்
சிவஞானபோதம் பகுதி-7
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2013
02:11

எடுத்துக் காட்டு- 1
வெண்பா

13. கண்ட நனவைக் கனவுணர்வின் தான்மறந்து
விண்படர்ந்து அத்தூடு வினையினால்- கண் செவி கெட்டு
உள்ளதே தோற்ற உளம் அணுவாய்ச் சென்று மனம்
தள்ள விழும் கருவில் தான்.

இதன் பொருள்:

உயிர் மற்றொரு பிறப்பிற் செல்லுதல்:

கண், செவி முதலிய உறுப்புகளையுடைய பருவுடம்பு அழிந்து போகும். அது போல அழியாமல், உலகம் முடியுங் காலம் வரை நிலைத்து நிற்பது நுண்ணுடம் பாகிய சூக்கும சரீரமாகும்.

பருவுடம்பு அழியும் போது நுண்ணுடம்பு சுவர்க்க வுலகிற்கோ நரக வுலகிற்கோ ஏற்ற வேறொரு பருவுடம்பைத் தன்னிடமிருந்து தோற்றுவிக்கும்.

உயிர் அவ்வேறு உடம்போடு கூடித் துறக்க வுலகம் அல்லது நிரய வுலகம் சென்று அங்குள்ள இன்பம் அல்லது துன்பத்தை வினை உள்ள அளவும் நுகரும்.

வினை தீர்ந்த பின் அவ்வுயிர் துறக்கும் அல்லது நிரயத்திற்கு உரிய அவ்வுடம்பு நீங்கி மீண்டும் நுண்ணுடம்பையே வடிவமாகக் கொண்டு நிலவுலகிற்கு வந்து, இனி அனுபவிக்க இருக்கும் வினைக்கு ஏற்ற பிறப்பில் அவா உண்டாகி, அப்பிறப்பிற்குரிய கருவிலே சென்று சேரும்.

அவ்வாறு பிறக்கும் பொழுது, தான் முந்திய பிறப்பில் இருந்த நிலையையும், இறந்த முறையையும், அதன்பின் துறக்கம், நிரயம் ஆகிய இடங்களுக்குச் சென்றதையும், அங்கு இன்பத் துன்பங்களை நுகர்ந்த அனுபவத்தையும் அறவே மறந்து விடும். இது விழிப்பு நிலையில் நிகழ்ந்தவற்றை முற்றிலும் மறந்து கனவு காண்பவனது நிலை போன்றதாகும்.

பதவுரை

கண் செவி கேட்டு - கண் செவி முதலிய உறுப்புக்களை உடைய பருவுடம்பு அழிந்தபோது

உள்ளதே - அப்பருவுடம்பு போல அழியாது உலகம் உள்ளளவும் நிலைபெற்றிருப்பதாகிய நுண்ணுடம்பே

தோற்ற - சுவர்க்கம் அல்லது நரகம் ஆகிய உலகிற்கு உரிய வேறு உடம்பைத் தன்னிடத்தினின்றும் தோற்றுவிக்க

உளம் - உயிர்

அத்தூடு - அந்த உடம்போடு பொருந்தி

விண்படர்ந்து - சுவர்க்கம் அல்லது நரகிற் சென்று அங்குள்ள இன்பம் அல்லது துன்பத்தை நுகர்ந்து (அவ்வினை கழிந்த பின்)

கண்ட நனவைக் கனவுணர்வின் தான் மறந்து - நனவில் நிகழ்ந்தவற்றைக் கனவின்கண் மறந்து அறிவு வேறுபட்டாற்போல, இறப்பிற்கு முன் நிலவுலகில் தான் இருந்த நிலையையும் பின்பு தனக்கு இறப்பு நேர்ந்த முறையையும் அதன் பின்பு துறக்க நரகங்களுக்குச் சென்றதையும் அங்கே தான் நுகர்ந்த இன்பதுன்ப அனுபவங்களையும் அறவே மறந்து,

மனம் தள்ள - இனி அனுபவிக்க இருக்கும் வினைக்கு ஈடான பிறப்பில் அவாவை உண்டாக்கி மனம் செலுத்த

வினையினால் - எஞ்சி நின்ற அந்த வினையினால்

அணுவாய்ச் சென்று - நுண்ணுடம்போடு சென்று

கருவில் விழும் - மனம் செலுத்திய அந்தப் பிறப்பிற்குரிய கருவிலே பொருந்தும்.

விளக்கம்

செய்யுளில் முன்பின்னாக மாறிக் கிடக்கும் சொற்களைப் பொருளுக் கேற்றவாறு பின்வரும் முறையில் இயைத்துக் கொள்ள வேண்டும். கண் செவி கெட்டு, உள்ளதே தோற்ற, உளம் அத்தூடு விண்படர்ந்து, கண்ட நனவைக் கனவுணர்வின் தான் மறந்து வினையினால் மனம் தள்ள, அணுவாய்ச் சென்று கருவில் விழும்

நுண்ணுடம்பு:

மூன்றாம் அடியில் உள்ளது என்பது அழிவின்றி இருப்பதாகிய சூக்கும சரீரத்தைக் குறிக்கும்.

படைப்புக்காலத்தில்இறைவன் உயிர்களுக்கு முதலிற் கொடுப்பது சூக்கும சரீரமே யாகும். இது மனம், புத்தி, அகங்காரம், ஐந்து தன்மாத்திரைகள் (சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம்) ஆகிய எட்டினாலும் ஆனது. ஆகையால் புரியட்டக சரீரம் என்றும் கூறப்படும்.

சூக்கும சரீரமாகிய நுண்ணுடம்பிலிருந்தே தூல சரீரமாகிய பருவுடம்பு தோன்றும். எனவே பருவுடம்பிற்கே மூலம் நுண்ணுடம்பு என்பது அறியத்தக்கது. ஆண், பெண் என்ற பால் வேறுபாடு பருவுடம்பிற்கேயன்றி நுண்ணுடம்பிற்கு இல்லை. மேலு<ம் தேவர், மக்கள், விலங்கு, பறவை, நீர் வாழ்வன, ஊர்வன, தாவரம் என்ற எழுவகைப் பிறப்பு வேறுபாடுகளும் பருவுடம்பு பற்றியே அமைவனவாகும். நுண்ணுடம்பில் இவ்வேறுபாடுகள் இல்லை.

அச்சு மாறுதல்:

மூலமாகிய நுண்ணுடம்பு என்றும் ஒரு தன்மையாய் இருக்க அதிலிருந்து தோன்றும் பருவுடம்புகளே வெவ்வேறு வடிவினாய் மாறி அமையும். எனவே ஒரு பிறப்பில் ஆணாகிய பருவுடம்பைப் பெற்ற உயிர் மற்றொரு பிறப்பில் பெண்ணாகிய பருவுடம்பை மாறிப் பெறுதல் கூடும. அவ்வாறே மக்கட் பிறப்பு எய்தினோர் பறவை, விலங்கு முதலியனவாக மாறிப் பிறத்தலும், பறவை விலங்கு முதலியன மக்களாக உயர் பிறப்பு எய்துதலும் இயலும். இவ்வாறு மாறிப் பிறத்தலை அச்சு மாறுதல் என்பர்.

நுண்ணுடம்பினின்றும் தோன்றும் பருவுடம்பு மூவகைப்படும். அவை நிலவுலகத்திற்குரிய உடம்பு, துறக்க வுலகத்திற்குரிய உடம்பு, நரகவுலகத்திற்குரிய உடம்பு என்பன.

நிலவுலக உடம்பு பூதங்களின் காரியமாகிய தோல், இறைச்சி, என்பு, குருதி, முதலிய தாதுக்களால் ஆக்கப் பெற்றமையால் பூதனா சரீரம் எனப் பெயர் பெறும்.

துறக்க வுலக உடம்பு சாத்துவிக குணமே மேம்பட்டு, ஒளியுடம்பாய் நிற்கும். இது பூத சார சரீரம் எனப் பெயர் பெறும்.

நரக உடம்பு எத்துணைப் பெருந்துன்பத்தையும் தாங்க வல்லதாய், தாமத குணமே மேம்பட நிற்கும். இது யாதனா சரீரம் என்பபடும். துன்ப உடம்பு என்பது பொருள்.

மேலுலகமும் மீளப் பிறத்தலும்:

நல்வினை செய்த உயிர் இறந்தபின் துறக்க வுலகத்தை அடைந்து அங்குள்ள இன்பங்களை நுகர்ந்து பின் அவ்வுடம்பு நீங்கி, நுண்ணுடம் போடு மேக மண்டலத்தை அடைந்து, மேகம் மழை பொழியும் காலத்தே அம்மழை நீரோடு கூடி நிலத்தையடைந்து, உணவாகப் பயன்படும் தாவரங்களிற் சென்று, உணவு வழியாகத் தந்தையின் உடம்பிற் சென்று தாங்கிப் பின் தாய் உடம்பிற் புகுந்து கருவாகி உருவாகிப் பிறக்கும் என்று நூல்களிற் கூறப்படுகிறது. தீவினை செய்த உயிருக்கு இம்முறை இல்லையாம்.

எடுத்துக்காட்டு- 2

இம் மூன்றாம் கூறினது தொடக்கத்தில் குடம் உடைந்தபோது அதனுள் இருந்த ஆகாயம் வெளியிலுள்ள ஆகாயத்தோடு ஒன்றாகி விடுதல் போல, ஓர் உடம்பில் நின்று விளையாடிய உயிர் அவ்வுடம்பு நீங்கியவுடன் பிரமத்தோடு கலந்து பிரமமாகி விடும் என்பார் கொள்கையைப் பார்த்தோம்; இறந்த வுயிர் பிரமம் ஆகுமன்றி மீளப் பிறத்தல் இல்லை என்று அவர்கள் கூறுவதை மறுத்து உயிர் இறந்தும் பிறந்தும் வரும் என்பதை ஆசிரியர் நிறுவிய முறையையும் அறிந்தோம்.

இனி, அவர்கள் காட்டிய குடாகாய ஆகாய உவமைக்கு அவர்கள் கொண்ட கருத்துப் பொருந்தாது எனில், அவ்வுவமையின் பொருள்தான் யாது என்னும் ஐயம் மாணவர்க்கு எழும் அன்றோ? அதனைத் தெளிவித்தற்கு இவ்விரண்டாம் எடுத்துக் காட்டினைக் கூறுகின்றார்.

வெண்பா

14. அரவுதன் தோல் உரிவும் அக் கனவும் வேறு
பரகாயம் போய்வரும் அப் பண்வும்- பரவில்
குடாகாய ஆகாயக் கூத்தாட்டாம் என்பது
அடாது; உள்ளம் போமாறு அது.

இதன் பொருள்:

நூல்களில், ஓர் உடம்பின் நீங்கிய உயிர் மற்றோர் உடம்பைப் பெறுதற்குப் பலவுவமைகள் கூறப்பட்டுள்ளன.

பாம்பு பழைய தோலை உரித்துக் கழித்துப் புதியதொரு தோலொடு இயங்குதல், யாவரும் நனவு உடம்பை விட்டுக் கனவு உடம்பிற் சென்று அங்கு நிகழ்வனவற்றை அறிதல், யோகிகள் தம் உடம்பை விட்டுப் பிறிதோர் உயிரின் உடம்பிற் புகுந்து  மீளுதல் ஆகிய இவ்வுவமைகளும் கூறப்பட்டிருக்க, அவற்றையெல்லாம் எடுத்துக் கொள்ளாமல் குடாகாய ஆகாய உவமை ஒன்றை மட்டும் கொண்டு, இறந்த வுயிர் பிரமத்தோடு சேர்ந்து விடும்; அது மீளப் பிறவாது என வாதிடுதல் பொருந்தாது.

பருவுடம்பு நீங்கிய அளவில் உயிர் பிரமத்தைச் சேர்ந்துவிடும். அஃதாவது முத்தியைப் பெற்றுவிடும் என்று அவர்கள் கூறுவது மறுப்புக்கு உரியது. பருவுடம்பு நீங்கியதும் உயிர் நுண்ணுடம்போடு நிற்குமேயன்றி முத்தியைப் பெற்று விடாது; அந்நுண்ணுடம்பும் நீங்கிய போதே முத்தியாகும். ஆதலால், உயிர் நுண்ணுடம்பு நீங்கி உடம்பின்றி இறைவனோடு கூடும் முறைமைக்கே அவ்வுவமை சொல்லப்பட்டுள்ளது.

இவ்வாறு அவ்வுவமையின் கருத்தைத் தெளிவுறுத்துகிறார் ஆசிரியர்.

பதவுரை:

(ஒரு பருவுடம்பின் நீங்கிய உயிர் மற்றொரு பருவுடம்பைப் பெறுதற்குப் பின் வரும் உவமைகள் ஆகமங்களுள் சொல்லப்பட்டுள்ளன.)

அரவு தன் தோல் உரிவும் - பாம்பு தனது பழைய தோலை உரித்துக் கழித்துப் புதிய தோலைப் பெறுதலும்

அக்கனவும் - நாம் யாவரும் கனவு காணும்போது பருவுடம்பை விட்டுக் கனவுடம்பிற் சென்று அங்கு நிகழ்வனவற்றைக் காணுதலும்

பரகாயம் - யோகிகள் தம் உடம்பை விட்டுப் பிறிதோர் உயிரின் உடம்பில்

போய்வரும் அப்பண்பும் - சென்று பின் தம் உடம்பிற் மீளுதலும் ஆகிய உவமைகள்

பரவில் - ஆகமங்களுள் பரவலாகப் பல இடங்களில் கூறப்பட்டிருக்க (அவற்றையெல்லாம் நீ விடுத்து)

குடாகாய ஆகாயக் கூத்தாட்டம் என்பது - குடம் உடைந்தபோது குடத்தினுள் இருந்த ஆகாயம் வெளியேயுள்ள ஆகாயத்தோடு கலந்து ஒன்றாய் விடுதல் போல என உபநிடதங்ளில் வந்துள்ள ஓர் உவமையை மட்டும் கொண்டு, ஓர் உடம்பில் நின்று விளையாடிய உயிர் அவ்வுடம்பு நீங்கிய காலத்துப் பிரமத்தோடு கலந்து ஒன்றாய் விடும்; அது மீளப் பிறவாது என்று கூறுவது.

அடாது - பொருந்தாது.

அது - அக் குடாகாய ஆகாய உவமை

உள்ளம் போமாறு - உயிர் சூக்கும உடம்பும் நீங்கி, உடம்பு இன்றி இறைவனோடு கூடும் முறைக்கே சொல்லப்படுவதாகும்.

விளக்கம்

ஆசிரியர் விளக்கிய உவமையையும் பொருளையும் பின்வருமாறு பொருத்திக் காணலாம்.

உவமை             பொருள்

குடம்                நுண்ணுடம்பு
குட ஆகாயம்     உயிர்
வெளி ஆகாயம்     இறைவன்

ஈற்றடியிலுள்ள உள்ளம் என்பதற்கு நுண்ணுடம்பு என்பது பொருள்.

நான்காம் கூறு

நூற்பாவின் இறுதிப் பகுதியாகிய ஆணையின் நீக்கமின்றி நிற்கும் அன்றே என்ற தொடரை விளக்குதற்கு இந்நான்காம் கூறினை அமைகின்றார் ஆசிரியர்.

இறைவன் உலகத்தோடு அத்துவிதமாய் இயைந்து நிற்றலும், இயைந்து நின்று உயிர்களுக்கு இருவினைகளைக் கூட்டுவித்தலும், அவ்வினைகளுக்கு ஏற்ப உயிர்களைப் போக்குவரவு புரிவித்தலும் ஆகிய எல்லாம் அவனது சத்தியாலேயாம்.

அவ்வாறாயின் அவனும் சத்தியும் ஒன்றா, வேறா? அவனுக்கும் சத்திக்கும் உள்ள சம்பந்தம் யாது? என்னும் ஐயம்  மாணவர்க்கு எழுதல் இயல்பு. அவ்வையத்தை நீக்கி, சிவனுக்கும் சத்திக்கும் உள்ள தொடர்பு இவ்வகைப்பட்டது என்பதை உணர்த்துதல் இந் நான்காம் கூறின் நோக்கமாகும்.

இறைவன் தனது சத்தியினின்றும் நீக்கமின்றி நிற்பன் என்பதனை மேற்கோளாக வைத்து அதனை ஏதுவினால் நிறுவுகிறார் ஆசிரியர்.

மேற்கோள்

இனி, நீக்கம் இன்றி நிற்கும் அன்றே- என்றது
.

மேற்கோளின் பொருள்

இவ்வாக்கியத்தில் இறைவன் என்னும் எழுவாயையும், ஆணையின்  என்பதனையும் வருவித்துக் கொள்ள வேண்டும்.

இதன்பொருள், இறைவன் தனது சத்தியினின்றும் பிரிப்பின்றி நிற்பான் என்பதாம்.

மேற்கோள் விளக்கம்

தற்கிழமை:

ஒரு பொருளுக்குத் தன்னின் வேறாகாது நிற்கும் பொருளோடு உள்ளதாகிய இயைபு தற்கிழமை எனப்படும்.

நீரினதுகுளிர்ச்சி, தீயினது சூடு என்பவற்றில் நீரும் குளிர்ச்சியும், தீயும் சூடும் தம்மில் வேறாகாது நிற்பவை. எனவே அவற்றிற்கிடையே உள்ள இயைபு தற்கிழமையாகும்.

குளிர்ச்சி என்பது குணமும், அதனையுடைய நீர் குணியும் ஆகும். அவ்வாறே சூடு குணமும் அதனையுடைய தீ குணியும் ஆகும். எனவே குணத்திற்கும் அதனையுடைய குணிக்கும் இடையேயுள்ள இயைபு தற்கிழமை எனலாம்.

தற்கிழமை யாகிய இவ் வியைபு வடமொழியில் தாதான்மிய சம்பந்தம் எனப்படும்.

சிவமும் சத்தியும்

சத்தி என்பது குணமும், அதனையுடைய இறைவன் குணியும் ஆதலால் இறைவனுக்கு அவனது சத்தியோடு உள்ளதாகிய சம்பந்தம் தாதான்மிய சம்பந்தம் என்பது விளங்கும். இச் சம்பந்தத்தைக் கருத்திற் கொண்டே ஆசிரியர் முதல்வன் தனது சத்தியினின்றும் நீக்கமின்றி நிற்பன் எனக் கூறுகின்றார்.

முதல்வனாகிய சிவனும் அவனது சத்தியும் பொருளால் ஒன்றேயாம்; ஆயினும் செயற்பாட்டில் இருதிறப்பட்டு நிற்கும். ஒரு பொருளே இரு திறப்பட்டு நிற்பதனை ஓர் எடுத்துக்காட்டு வாயிலாக விளக்கலாம்.

கதிரவனுக்கு இரு நிலைகள் உண்டு. ஒன்று தானேயாய் நிற்கின்ற நிலை. அந்நிலையில் அது தன்னைத்தான் விளக்கிக் காட்டுகிறது. அந்நிலையில் கதிரவன், சூரியன், ஞாயிறு, என்றெல்லாம் பெயர் பெறுகிறது.

மற்றொரு நிலை, உலகத்தோடு இயைந்து உலகப் பொருள்களை விளக்கி நிற்பது. அந்நிலையில் கதிர், ஒளி, வெயில் என்ற பெயர்களைப் பெறுகிறது.

இவ்வாறு தன்னிலையில் நிற்கும்போது கதிரவன் என்றும், உலகெங்கும் பரவி நின்று பொருள்களை விளக்கிக் காட்டும்போது ஒளி என்றும் இரு திறப்பட்டு நிற்றலைக் காணலாம்.

அதுபோல இறைவனுக்கும் இரு நிலையுண்டு. ஒன்று தானேயாய் நிற்கும் நிலை. அந்நிலையில் அவன் தன்னையே தான் விளக்கி நிற்பன்; அதுவே சிவம் எனப்படும் நிலை.

மற்றொரு நிலை, உயிர்களோடும் பாசப் பொருள்களோடும் இயைந்து நின்று அவற்றைச் செயற்படுத்துகின்ற நிலை. அந்நிலையே சத்தியாய் நிற்கும் நிலை.

இவ்வாறு ஒருவனாகிய இறைவனே சூரியனும் ஒளியும் போலத் தானும் தன் சத்தியும் என  இரு திறப்பட்டு நிற்பன். எனவே சிவமும் சத்தியும் பொருளால் ஒன்றாய், தன்மையால் இரண்டாய், ஒன்றையின்றி மற்றொன்று இல்லாத நிலையினவாகும்.

தாதான்மியமும் அத்துவிதமும்

சிவம், சத்திகளிடையே உள்ள சம்பந்தம் தாதான்மியம் என்று குறிப்பிட்டோம். இதனை ஒருமையில் இருமை என்பர். சிவம் உயிர்களோடு ஒன்றாய், வேறாய், உடனாய் இயைந்து நிற்றலாகிய சம்பந்தம் அத்துவிதம் என்பதையும் முன்னே பார்த்தோம். அதனை இருமையில் ஒருமை எனபர்.

தாதான்மியம் அத்துவிதம் ஆகிய  சம்பந்தங்களையும், அவற்றிடையே உள்ள வேறுபாட்டையும் நன்கு மனத்திற் கொள்ள வேண்டும். தாதான்மியம் என்பது, பொருள் ஒன்றேயாயினும் செயற்பாட்டில் இரு திறப்பட்டு நிற்றல்; அத்துவிதம் என்பது, பொருள் இரண்டாயினும் அவை பிரிந்து நில்லாமல் ஒரு தன்மைப்பட்டு நிற்றல்.

இனி, இறைவன் தனது சத்தியோடு இயைந்து நிற்பான் என்பதை நிறுவுவதற்கு ஏதுக் கூறுகின்றார்.

ஏது

அவன் ஏகானேகம் இரண்டும் இன்றிச் சருவ வியாபியாய் நிற்றலான்.

ஏது விளக்கம்

சருவ வியாபியாய் நிற்றல் என்பதற்கு எல்லாப் பொருளிலும் நிறைந்து நிற்றல் என்பது பொருள். இறைவன் அவ்வாறு நிறைந்து நிற்கிறான் என்பது அத்துவிதம் பற்றி விளக்கிய இடத்தில் கூறப்பட்டது, அதனையே இங்கு ஏதுவாகக் கூறுகிறார்.

சூரியன் உலககெங்கும் நிறைந்து நிற்கிறது; சூரியன் இல்லாத இடமேயில்லை என்றெல்லாம் கூறுகிறோம். அவ்வாறு கூறுவது எதை உணர்த்துகிறது? சூரியன் தன் ஒளியோடு பிரிப்பின்றி நிற்கிறது என்பதைத் தானே உணர்த்துகிறது. அம்முறையில், இறைவன் எங்குமாய் நிறைந்து நிற்கிறான் என்ற ஏதுவினால், அவன் தன் சத்தியோடு பிரிப்பின்றி இயைந்து நிற்பான் என்பதைத் துணியலாம். இவ்வாறு மேற்கோளை நிறுவுகிறார்.

இதனை மேலும் விளக்குதற்குப் பின்வரும் எடுத்துக்காட்டுக் கூறுகின்றார்.

எடுத்துக் காட்டு
வெண்பா

15. எங்கும் உளன் என்றளவை ஒன்றன்று; இரண்டு என்னில்
எங்கும் உளன் அன்று; எவற்று எவனும்- அங்கண்
அவை அவனன்று இல்லை; பொன்னொளிபோல் ஈசன்;
அவை உடைமை; ஆளாம்நாம் அங்கு,

இதன் பொருள்:

முதல்வன் எல்லாப் பொருளிலும் நிறைந்து நிற்பான் என்பதை வைத்து ஆராயின், அவன் ஒருவனாய் உள்ளான் எனல் பொருந்தாது. ஏனெனில், அவன் ஒருவனே யாயின் எல்லா இடத்தும்  எப்படி நிறைந்து நிற்றல் இயலும்? கங்கைக் கரையில் நின்ற ஒருவனே அதே நேரத்தில் காவிரிக் கரையிலும் நிற்க இயலாது அன்றோ? ஆதலால் சருவ வியாபியாகிய முதல்வன் ஒருவனே யாதல் கூடாது என்பது விளங்கும்.

இனி அவன் இருவராய் நிற்பான் எனக் கொள்வோம் எனில் அவன் எங்கும் நிறைந்தவன் என்பது இல்லையாகி விடும். ஏனெனில் தன்னுள்ளேயே வேறுபட்டு நிற்பவன் எப்படிப் பிற பொருள்களில் ஒற்றுமைப்பட்டு நிறைந்து நிற்றல் கூடும்?

ஒருவனாதல், இருவராதல் என்ற இரண்டும் பொருந்தாமற் போதலின், அவன் எங்கும் நிறைந்தவன் என்ற கொள்கையை விட்டு விடுவோம் எனிலோ, அதுவும் கூடாது. ஏனெனில் எவ்விடத்து உள்ள எவ்வகைப் பொருளும் அவனது கலப்பு இல்லையேல் இல்லை என  நூல்கள் அறுதியிட்டுக் கூறும். ஆதலால் அவன் எங்கும் உள்ளவன் என்ற கொள்கையையும் விடுதல் இயலாது.

ஒருவனாதல், இருவராதல் என்ற இரண்டையும் விடுத்து, அவன் எங்கும் உள்ளவன் என்பதையும் உடன்பட்டு, வேறு எவ்வகைப்பட்டவன் எனக் கொள்வது எனில்,

ஞாயிறும் அதன் ஒளியும் ஒன்றும் ஆகாமல், இரண்டும் ஆகாமல் அவ்விரண்டற்கும் பொதுவாய் நிற்றல் போல முதல்வன் ஒருமையனும் ஆகாமல், இருமையனும் ஆகாமல் அவ்விரண்டற்கும் பொதுவாய்த் தானும் தன் சத்தியும் என இயைந்து நிற்பான் எனக் கொள்ளுதல் வேண்டும்.

முதல்வனைப் போல உயிர்களும், பாசப் பொருள்களும் சத்தியை உடையன வாதலின் அவையும் அவனைப் போல வியாபகமாம் எனக் கொள்ளலாமோ எனில், பதியாகிய முதல்வனுக்குப் பசுவாகிய உயிர்கள் என்றும் அடிமையாய் நிற்கும்; பாசப்பொருள்கள் அவனுக்கு உடைமையாய் நிற்கும்.

ஞாயிற்றின் ஒளி எங்கும் வியாபித்தலை உடையது. விளக்கின் ஒளி அவ்வாறு வியாபித்து நிற்க மாட்டாது. அதுபோலப் பசுக்களும் பாசங்களும் தத்தம் சத்திக்கு ஏற்பத் தம்மளவில் வியாபகம் உடையனவேயன்றி முதல்வனைப் போல முழு வியாபகம் உடையனவல்ல என்பது இறுதியடியின் கருத்து.

பதவுரை

எங்கும் உளன் என்ற அளவை - முதல்வன் எல்லாப் பொருளிலும் நிறைந்து நிற்பான் என்பது முன்னே அத்துவிதம் பற்றிக் கூறிய இடத்தில் விளக்கப்பட்டது. அதனை அளவையாகக் கொண்டு ஆராயின்

ஒன்று அன்று - அவன் சத்தி என்பதின்றித் தான் ஒருவனேயாய் உள்ளான் எனல் பொருந்தாது.

(ஒருவனேயாயின் ஒரு காலத்தில் ஓரிடத்தில் மட்டுமே நிற்றல் கூடும். அவன் எல்லா இடத்திலும் நிறைந்து நிற்பவன் ஆதலால் அவன் ஒருவனாதல் கூடாது என்பது விளங்கும்.)

இரண்டு என்னில் - முதல்வன் ஒருவன் ஆகாது, இருமை உடையன் எனக் கொள்ளலாம் எனில்

எங்கும் உளன் அன்று - அவன் எங்கும் நிறைந்தவன் என்பது இல்லையாய் விடும்.

(தன்னுள்ளே வேறுபட்டு இருமை உடையனாய் நிற்பவன் மற்றைய பொருள்களில் ஒற்றுமைப்பட்டு எங்கும் நிறைந்து நிற்றல் எங்ஙனம் கூடும்? ஆகவே அவன் இருமையன் என்றால் எங்கும் ஒற்றுமைப்பட்டு நிறைந்து நிற்றல் இயலாது என்பது விளங்கும்.)

(இறைவன் எங்கும் நிறைந்தவன் என்று கொள்வதனால் அன்றோ அவன் ஒருமையுடையன் என்பதும், இருமையுடையன் என்பதும் பொருந்தாமற் போகின்றன. ஆதலால் அவன்  எங்கும் நிறைந்தவன் என்ற கொள்கையை விட்டு விடுவோம் எனில்,)

எவற்று எவனும் - எவ்விடத்து எப்பொருளும் ஆகிய

அங்கண் - அவ்விடத்து அவை அனைத்தும்

அவன் அன்று இல்லை - அவன் அவற்றில் கலந்து இல்லையேல் இல்லையாம். (ஆதலால் அவன் எங்கும் நிறைந்து நிற்பவன் என்ற கொள்கையை விட்டு விடுதல் இயலாது)

(அவ்வாறாயின், அவன் எங்கும் உள்ளவன் என்பதை உடன்பட்டு, அவன் ஒருமையன் அல்லது இருமையன் என்பதையும் கொள்ளாமல் வேறு எத்தன்மையன் என்று கொள்வது எனில்,)

ஈசன் பொன் ஒளிபோல் - ஞாயிறும் அதன் ஒளியும் ஒன்றும்  ஆகாமல் இரண்டும் ஆகாமல் அவ்விரண்டிற்கும் பொதுவாய் நிற்றல் போல, முதல்வன் தானும் தன் சத்தியுமாய் ஒருமையனும் ஆகாமல் தாதான்மியம் என்னும் தன்மையில் இயைந்து எங்கும் நிறைந்து நிற்பன்.

(முதல்வன் தான் ஒருவனே யாகாது சத்தியை உடையன் எனக் கூறினால், அவனைப் போல் ஏனைய பசுக்களும் பாசங்களும் சத்தியை உடையனவாதலின் அவையும் முதல்வனோடு ஒப்ப வியாபகமாய் அவனக்குச் சமமாய் விடும் எனின்)

அங்கு - அம்முதல்வனிடத்து

நாம் ஆள் ஆம் - பசுக்களாகிய நாம் என்றும் அடிமையாவோம்.

அவை உடைமை - பாசங்கள் உடைமையாகும்.

(ஆதலால், பசு பாசங்கள் முதல்வனோடு சமமாய் விடுதல் எவ்வாறு? என்பது குறிப்பு. அவை தம் தம் அளவில் வியாபகம் உடையனவேயன்றி முதல்வனோடொத்த பெரு வியாபகம் உடையனவல்ல. அவை அவனிடத்தில் வியாப்பியமாய் அடங்கி நிற்கும் என்பதாம்.)

இரண்டாம் நூற்பா முடிந்தது.

 
மேலும் சிவஞானபோதம் »
temple news
நூல்முகம்: இவ்வுலகம், முதலில் சில பக்கங்களும் முடிவில் சில பக்கங்களும் இல்லாத நிலையில் கிடைத்த ஒரு ... மேலும்
 
இருவகை இயல்புகள்சைவ சித்தாந்தத்தில் பொருளுக்கு இரு வகையான இயல்புகள் சொல்லப்பெறும். அவை உண்மையியல்பு, ... மேலும்
 
முதல் நூற்பாமுதற் கடவுள் ஒருவர் உண்டு என்பதை நிறுவுவது முதல் நூற்பாவின் குறிக்கோள். காணப்பட்ட உலகைக் ... மேலும்
 
அம் முதல்வன் அழித்தற்  கடவுளே:இனி அம் முதல்வன் யாவன்? என்ற வினா இயல்பாக எழுகிறது. அதற்கு ... மேலும்
 
இரண்டாம் நூற்பாமுதல் நூற்பாவோடு இந்நூற்பா தொடர்புற்று நிற்கிறது. எவ்வாறெனில், முதல் நூற்பாவில் உலகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar