பதிவு செய்த நாள்
03
டிச
2013
05:12
பந்தளமன்னர் ராஜசேகரன், தன் மகன் மணிகண்டன் பிரிந்து சென்ற வருத்தத்தில் இருந்தார். அப்போது, அவருக்கு ஆறுதல் கூறும் வகையில், அகத்தியர் ஒரு கதையைச் சொன்னார். ஒருமுறை, கங்கையில் நீராடிய ராம லட்சுமணரும் சீதாவும், பிதுர்களுக்கு (மறைந்த முன்னோர்) திதி செய்தனர். அன்றைய காலகட்டத்தில், பிதுர்கள் நேரில் வந்து பிண்டம் பெற்றுச்செல்வது வழக்கம்.சீதாதேவி மட்டும் ராமலட்சுமணருடன் அமராமல், தனியாக அமர்ந்து திதி கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது தசரதர் வந்தார். தன் பிள்ளைகளிடம் பிண்டம் பெறாமல், மருமகளிடம் பிண்டத்தை வாங்கிக் கொண்டு மறைந்து விட்டார். இதைக்கண்ட ராமபிரானுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. ஆஞ்சநேயரை வரவழைத்து, சத்திய லோகத்தில் இருக்கும் தன் தந்தையை உடனே அழைத்து வர உத்தரவு போட்டார். ஆஞ்சநேயரும் மிக விரைவில் அவரை அழைத்து வந்தார்.தந்தையே! பெற்றவர்கள் பிள்ளைகள் கையால் பிண்டம் பெறுவது தான் உலக நியதி. நீங்களோ, மருமகளிடம் பிண்டம் பெற்றுச் சென்றீர்களே! ஏன் இப்படி செய்தீர்கள்? என பணிவோடு கேட்டார்.
மகனே! நீ கடவுளின் அவதாரம். ஆனால், நான் வாழ்ந்த காலத்தில், உன்னை என் மகனாக எண்ணி, நீ காட்டுக்குப் போன காலத்தில் மனம் வருந்தியிருக்கிறேன். பாசபந்தம் என்ற கட்டில் சிக்கித் தவித்தேன். நான் ஞானமார்க்கத்தை தேடிய போது தான், இந்த வாழ்வு பொய்யானது, மாயை என்ற உண்மையை உணர்ந்தேன். அதன் பின் தான் ராமன் தான் சீதை, சீதை தான் ராமன், உலகிலுள்ள எல்லா உயிரும் ஒரே இடத்திலிருந்தே உற்பத்தியானவை, மாயையில் இருந்து விலகிய பின் அவை வந்த இடத்தையே சென்று சேரும் என்பதை உணர்ந்தேன். எல்லாரும் ஒன்று என்றான பிறகு, சீதையிடம் இருந்து பிண்டத்தை ஏற்றாலும், உன்னிடமிருந்து ஏற்றாலும் ஒன்று தானே என அவளிடம் பிண்டத்தைப் பெற்றேன், என்றார்.தந்தையே! தங்கள் விளக்கம் ஏற்புடையதாக இருந்தாலும், சாஸ்திர முறையை மீறியதாக உள்ளது. அதை மீறியது என் தந்தையே என்றாலும், அதை நான் ஏற்பதற்கில்லை. எனவே, இனிமேல், பிண்டம் பெற பிதுர்கள் யாரும் நேரில் வரக்கூடாது. அது அவர்களை வந்து சேரும் வகையில் ஏற்பாடு செய்வேன், என்று ஒரு விதிமுறையை உருவாக்கினார். கங்கை போன்றே, சபரிமலையிலுள்ள பம்பையும் புனிதமானது. அங்கும் பிதுர்களுக்கு திதி கொடுக்கலாம். பம்பை நதி நீரே பொன்னம்பல மேட்டிலுள்ள ஐயப்பனுக்கு முனிவர்கள் அபிஷேகம் செய்கிறார்கள். இவ்வாறு கதையை முடித்தார் அகத்தியர். தசரதர் போன்றே, தெய்வப்பிறவியான மணிகண்டனை, தன் சொந்த மகனாக எண்ணியதும் மாயை செய்த சதியே என்பதை ராஜசேகர மன்னனும் உணர்ந்து ஆறுதல் அடைந்தார். மணிகண்டனின் கட்டளைப்படி, சபரிமலையில் கோயில் கட்ட முடிவெடுத்தார். தன் அரண்மனையில் வாழ்ந்த தெய்வசக்தியான ஐயப்பனை மனதில் தியானம் செய்தபடியே வாழ்நாள் முழுவதையும் கழித்தார்.