ஐயப்பனுக்கு சபரிமலை மட்டுமன்றி மேலும் சில தலங்களும் குறிப்பிடத்தகுந்தபடி சிறப்பானவை. அவை எரிமேலி தர்ம சாஸ்தா, அச்சங்கோயில் அரசன், ஆரியங்காவு ஐயன், குளத்துப் புழை பாலகன், பந்தளம் மாமணி (இளவரசன்), பெரியமேடு சாஸ்தா அல்லது பூதநாதன். இதில் பெரியமேடு சாஸ்தாவுக்கு ஒரு சிறப்பு உண்டு. இது பெண்களால் மட்டுமே பூஜிக்கப்பட்டு வருகிறது. சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து பெண்கள் இவரை வழிபடுகிறார்கள். சபரிமலை செல்ல இயலாத பெண்களுக்காக ஐயன் ஏற்படுத்திக் கொடுத்த இடம் இது. சபரி மலை உள்ளிட்ட ஏழு கோயில்களுமே நம் உடலில் செயல்படும் ஏழு சக்கரங்களைக் குறிக்கிறது. அவை மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணி பூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை, பிரம்மரந்திரம் என்பனவாகும். இந்தச் சக்கரங்களைப் பற்றிய சூட்சும அறிவு நமக்கு ஏற்பட்டு விட்டால் இறைவனை அடைவது எளிது. ஆனால் இத்தகைய கடுமையான மார்க்கங்கள் இல்லாமல் இறைவனை எளிமையான பக்தி மார்க்கம் மூலம் அடையலாம் என்பதை இந்த கோயில் தரிசனத்தின் மூலம் ஐயன் நமக்கு உணர்த்துகிறார். ஐயப்ப பக்தர்கள் அனைவருக்கும் முக்கியமான கோட்பாடாக இருப்பது பிறருக்கு உதவுதல், பசித்தவர்க்கு அன்னமிடல் என்பனவாகும். விரதங்கள் இருப்பவர்கள் மனத்தூய்மையுடன் இருந்தால் அவர்களுக்கு இம்மைக்கு வேண்டிய பொருட்செல்வத்தையும், மறுமைக்கு வேண்டிய அருட்செல்வத்தையும் ஹரிஹரசுதன் தந்து மகிழ்விப்பார். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே செல்ல முடிந்தாலும் வருடம் பூராவும் வழிபட்டால் கேட்ட வரத்தைத் தருவார் தர்ம சாஸ்தா. சபரிமலைக்குச் செல்ல முடியாதவர்கள் மேலே குறிப்பிட்ட மற்ற ஆறு கோயில்களுக்கும் சென்று வந்தால் சபரிமலைக்குச் சென்ற பயன் கிடைக்கும்.