மஞ்சூர் : மஞ்சூர் அருகே மழை வேண்டி கிராம மக்கள் குடங்களில் சிறப்பு பூஜையுடன், தண்ணீரில் அபிஷேகம் செய்தனர்.மஞ்சூர் சுற்றுவட்டாரத்தில் நடப்பாண்டு துவக்கத்திலிருந்து மழை இல்லை. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோடை வெயில் தாக்கத்தால் பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கிராம மக்கள் ஊற்று நீரை தேடி அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது.மழை இல்லாததால் தேயிலை, மலை காய்கறி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மழை இல்லாததால் தேயிலை மகசூல் படிப்படியாக குறைந்தது. தேயிலை விவசாயத்தை நம்பியுள்ள விவசாயிகள் வேலையிழப்பு ஏற்பட்டது. மழை வேண்டி அந்தந்த கிராமங்களில் பூஜை செய்து வருகின்றனர். மஞ்சூர் அருகே அண்ணாநகர் ஓணிக்கண்டி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காலி குடங்களை எடுத்து வந்து அருகில் உள்ள ஹாடா பகுதியிலிருந்து ஊற்று நீரை குடங்களில் எடுத்து ஒன்றாக வைத்து மழை வேண்டி பூஜை செய்தனர். தொடர்ந்து, கிராம மக்கள் ஊர்வலமாக குடங்களில் எடுத்து வரப்பட்ட தண்ணீரை குல தெய்வமான மாரியம்மன், காளியம்மன், முனீஸ்வரன் கோவிலுக்கு எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிப்பட்டனர்.