பதிவு செய்த நாள்
15
ஜன
2026
01:01
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ஆதினங்களும், மடாதிபதிகளும்.
பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார்
நல்லறம் ஓங்க வேண்டும். நற்றமிழ் பயில வேண்டும். சொல்லியவாறு செய்யும் தொண்டுள்ளம் வேண்டும், வாழ்க்கை கல்வியால் இளையோரிடமுள்ள கசடுகள் நீங்க வேண்டும். பல்வளம் பெற்று பொங்கும் பால்பொங்கல் பொழியட்டும்.
சிரவையாதினம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள்
தமிழர்கள் இயற்கையையும் சூரியனையும் தெய்வமாக வணங்கினர். பெரும் பொலிவோடு, பழமை மாறாமல் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுவோம். அனைவரிடமும் ஒற்றுமை மேலோங்கட்டும். அறிவு சார் சமுதாயமாக தமிழ் சமுதாயம் திகழட்டும் வெற்றி நிலைக்கட்டும்.
காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள்
பாடுபட்டு சேர்த்து வைத்த பண்பாடு புகழனைத்தும் நீண்ட காலம் நிலைத்திருக்கச் செய்திடுவோம், புத்தரிசி, புதுப்பானை, புதுவெல்லம் பொங்கலினை புத்தமுதாய் உண்டிடுவோம்; புத்துணர்வு கண்டிடுவோம். தை மகளை வரவேற்போம். கன்னித்தமிழ் காத்திடுவோம்.
ஸ்ரீ அய்யனார் ஆதினம் சீனிவாச சுவாமிகள்:
வெற்றி, வளம், செல்வம், சந்தோஷம், நிம்மதி அனைவரது வாழ்வில் நிறையட்டும். வளர்ச்சி, உயர்வு, புதிய வாய்ப்பு அனைத்தும் கிடைக்கட்டும். குடும்பம் ஒற்றுமை மேலோங்கட்டும்; மனதில் பக்தி வளரட்டும்.
ஸ்ரீ தர்மராஜா அருள் பீடம் அன்னதான மடாலயம் கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள்
மும்மாரி மழை பொழிந்து நோய் நொடியின்றி மக்கள் வாழ்ந்திடவும், மக்களிடம் கைமாறு பெருக வேண்டும். அன்பும் பண்பும் நிலைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு, ஆதினங்கள், மடாதிபதிகள்தெரிவித்துள்ளனர்.