புதுச்சேரி: புதுச்சேரி வேதபாரதி இயக்கம் சார்பில், நடந்து வந்த மார்கழி மாத பஜனை சேவை, முத்தியால்பேட்டை வீர ஆஞ்சநேயர் கோதண்டராமர் கோவிலில் நேற்று நிறைவு பெற்றது.
புதுச்சேரி வேதபாரதி இயக்கம் சார்பில், கடந்த 8 ஆண்டுகளாக புதுச்சேரியின் நகர மற்றும் கிராமப்புற பகுதிகளில், மார்கழி மாதம் முழுதும் ஒவ்வொரு பகுதிகளில் ஒரு நாள் என தனுார் மாத வீதி பஜனை நடந்து வருகிறது.
8ம் ஆண்டு பஜனை நிகழ்ச்சி, கடந்த மாதம் 16ம் தேதி துவங்கியது. இதன் நிறைவு நாள் பஜனை நிகழ்ச்சி, முத்தியால்பேட்டை காந்தி வீதி தென்கலை ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில், துவங்கி எம்.எஸ். அக்ரஹாரம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் நிறைவு பெற்றது.
வேதபாரதியின் மார்கழி மாேஹாத்சவ நிறைவு சிறப்பு நிகழ்சியாக வரும் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை பஜன் மேளாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி,புதுச்சேரி இ.சி.ஆரில் உள்ள சங்கர வித்யாலயா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நான்கு நாட்களும் காலை, மாலை என, இரு வேலையும் சிறப்பு பஜனை நடைபெறுகிறது. அதில், பிரபலமான பாகவதர்கள் பங்கேற்க உள்ளனர். ஏற்பாடுகளை வேதபாரதி தலைவர் பட்டாபிராமன், பொதுச் செயலாளர் நடராஜன், பொருளாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.