ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று நடந்தது.
ரிஷிவந்தியத்தில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கடந்த நவ., 27ம் தேதி கும்பாபிஷேக விழா நடந்தது. இதைத்தொடர்ந்து, தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் மண்டல பூஜை நடந்தன.
48 நாட்கள் நடந்த கும்பாபிஷேக மண்டல பூஜையின் நிறைவு விழா நேற்று நடந்தது. இதையொட்டி, விக்னேஸ்வர பூஜை, கலச ஆவாகணம், மகா பூர்ணாஹூதி பூஜைகளும், செல்வ விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி, முத்தாம்பிகை அம்மன் சமேத அர்த்தநாரீஸ்வரர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட உற்சவர் மூர்த்திகளுக்கு கலசாபிஷேகமும் செய்யப்பட்டது.
மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு பலாப்பழம், தேன், பால் உட்பட 49 வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து, புனித நீர் ஊற்றப்பட்டது.
தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது. நாகராஜ், சோமு குருக்கள் பூஜைகளை செய்தனர்.