பதிவு செய்த நாள்
23
ஏப்
2015
11:04
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு செல்லும் படிகளில், குப்பை அதிகளவில் சேர்ந்தும், மதுபிரியர்களின் கழிவுகளும் உள்ளதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இருவழிகள்: திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு, சரவணப்பொய்கை என்கிற திருக்குளம் வழியாக மலைப்படியும், மேல்திருத்தணி நல்லாங்குளம் வழியாக மலைப்படியும் என, இருவழிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. திருக்குளம் வழியாக உள்ள படியை, பக்தர்கள் அதிகளவில் பயன்படுத்துவதால், ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் மூலம் தினசரி சுத்தம் செய்யப்படுகிறது. மேல்திருத்தணி வழி படியை மிக குறைந்த பக்தர்களே பயன்படுத்துகின்றனர். காரணம், ஆடிக்கிருத்திகை, படித் திருவிழாவின் போது மட்டும், இந்த வழியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்வர். பக்தர்கள் அதிகளவில் நடமாட்டம் இல்லாததால், இந்த படிகளில், சில மதுபிரியர்கள், மது அருந்திவிட்டு, பிளாஸ்டிக் கழிவுகளை படியிலேயே போட்டு செல்கின்றனர். இதனால், படிகளில் அதிகளவில் குப்பையும், சிறுசெடிகளும் முளைத்துள்ளதால், இவற்றை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
குப்பை தொட்டி: இதுகுறித்து, கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், மேல்திருத்தணி படி வழியாக, பக்தர்கள் சரியாக வருவதில்லை. இருப்பினும், இனி ஒரு வாரத்திற்கு ஒரு முறையாவது படிகள் சுத்தம் செய்தும், முக்கிய விழாக்களின் போது குப்பை தொட்டி வைக்கப்படும் என்றார்.