பதிவு செய்த நாள்
23
ஏப்
2015
11:04
செங்கல்பட்டு: திருக்கச்சூரில், தியாகராஜ சுவாமி கோவிலில், 33 ஆண்டுகளுக்கு பின், புதிய திருத்தேர் வெள்ளோட்டம் நேற்று, கோலாகலமாக நடைபெற்றது. சிங்கபெருமாள்கோவில் அடுத்த, திருக்கச்சூர் கிராமத்தில், அருள்மிகு அஞ்சலாட்சி உடனுறை அமிர்த தியாகராஜ சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில், இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலுக்கு என, இருந்த தேர், மிகவும் பழமையாகி, பழுதடைந்து போனதால், 33 ஆண்டுகளுக்கு முன், தேரோட்டம் நடத்துவது நிறுத்தப்பட்டது. புதிய தேர் செய்ய வேண்டும் என, பக்தர்கள் மற்றும் கிராமவாசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, புதிய தேர் செய்வதற்கு கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி, 2007 - 2008ல், நிதி கிடைக்கப் பெற்று, 60 லட்சம் செலவில் தேர் செய்யும் திருப்பணிகள் துவங்கின. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், நேற்று தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. காலை 9:00 மணிக்கு, தேர் மீது புனித நீர் ஊற்றி, கலசத்துடன் வெள்ளோட்டத்தை, இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் சிவாஜி துவக்கி வைத்தார். கோவில் வளாகத்திலிருந்து புறப்பட்ட தேர், முக்கிய வீதிகள் வழியாக சென்று, 2:30 மணிக்கு நிலைக்கு வந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.