Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஐந்தாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-2) | தேவாரம் ஐந்தாம் திருமுறையில் பாடிய பாடல் ...
முதல் பக்கம் » ஐந்தாம் திருமறை
ஐந்தாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-1) | தேவாரம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 செப்
2011
04:09

திருநாவுக்கரசர் பாடிய 4,5,6 திருமுறைகளில் மொத்தம் 3064 பாடல்கள் உள்ளது. இதில் ஐந்தாம் திருமுறையில் 1015 பாடல்களும், அதன் தெளிவுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. கோயில் (அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1. அன்னம் பாலிக்கும் தில்லைசிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண்டு இன்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.

தெளிவுரை : தில்லைச் சிற்றம்பலத்தில் திருநடனம் புரியும் நடராசப் பெருமானைத் தரிசிக்க, உயிர்க்கு அமுதாகிய வீட்டின்பம் கிடைக்கும்; உடலின் வளமைக்குரிய உணவு கிடைக்கும்; பொன்னுலகமாகிய தேவர் உலக வாழ்வு கிடைக்கும். இப்பூவுலகில் கண்டு இன்புறுவதற்குரிய திருக்காட்சியைக் கண்டு தரிசித்தவர்களுக்கு யாவும் கை வரப்பெறும். எம் பெருமானைத் தரிசித்தவர்களுக்கு மீண்டும் இப்பிறவி வாய்க்குமோ ?

2. அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர்
சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோ
கரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பெரும்பற் றப்புலி யூர்எம் பிரானையே.

தெளிவுரை : எம்பெருமானாகிய ஈசனை, அரும்புகளை நீக்கி, நல்ல செழுமையான மலர்களைக் கொண்டு தேர்ந்து பறித்துத் தூவித் தொழுவீராக. அப்பெருமான், கரும்பு வில்லையுடைய மன்மதனை எரித்தவர். அவர் தில்லையில் வீற்றிருப்பவரே ஆவார்.

3. அரிச்சுற் றவினை யால்அடர்ப் புண்டுநீர்
எரிச்சுற் றக்கிடந் தார்என்று அயலவர்
சிறிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனம்
திருச்சிற் றம்பலம் சென்றடைந்து உய்ம்மினே.

தெளிவுரை : மக்கட்பிறவியானது, வினை வசத்தால் வாய்க்கப் பெறுவது. அதனைப் போக்கிக் கொள்வதற்கு, இத் தேகத்தை உபகரணமாகக் கொண்டு, திருச்சிற்றம்பலத்தில் வீற்றிருக்கும் ஆனந்தக் கொண்டு, திருச்சிற்றம்பலத்தில் வீற்றிருக்கும் ஆனந்தக் கூத்தப்பெருமானைத் தரிசிக்க வேண்டும். அவ்வாறு இன்றேல், உயிர்பிரிந்து சென்றபின் உடலை இடுகாட்டில் எரிக்கும்போது, அயலவர் எள்ளி நகையாடுவர். எனவே இறப்பு வருவதன்முன் ஈசனைக் கண்டு, வணங்க வேண்டும் என்பது, குறிப்பு.

4. அல்லல் என்செயும் அருவினை என்செயும்
தொல்லை வல்வினைத் தொந்தந்தான் என்செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்கு
எல்லை இல்லதோர் அடிமைபூண் டேனுக்கே.

தெளிவுரை : தில்லை மாநகரில் மேவும் சிற்றம்பலத்தை இடமாகக் கொண்டு விளங்குகின்ற நடராசப் பெருமானுக்கு, எல்லை இல்லாத அடிமை பூண்ட எனக்கு, அல்லல் இல்லை; அரிய வினையாகிய பிராரத்த வினையால் நேரக்கூடிய துன்பமும் இல்லை. தொன்று தொட்டுப் பிறவிகள் தோறும் சேர்ந்து பற்றிய சஞ்சித கன்மமும் என்னை எதுவும் செய்யாது.

5. ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம்
நான்நி லாவி இருப்பன்என் நாதனைத்
தேன்நி லாவிய சிற்றம் பலவனார்
வான்நி லாவி இருக்கவும் வைப்பரே.

தெளிவுரை : இத் தேகத்தில் விளங்கும் உயிரை, மூச்சுக்காற்றுக் கொண்டு உயிர்த்திருக்கச் செய்யும் பொழுது எல்லாம் நான் என் நாதராகிய திருச்சிற்றம் பலவாணரையே நினைத்துக்கொண்டிருப்பவன் அவர், என் உள்ளத்தில் தேன் போன்று இனிமையைச் சேர்த்துக் கொண்டிருப்பவர். அப்பெருமான், என்னைப் பேரின்ப வீட்டில் இருக்கவும் வைப்பவரே.

6. சிட்டர் வானவர் சென்று வரங்கொளும்
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை
சிட்டன் சேவடி கைதொழச் செல்லும்அச்
சிட்டர் பால்அணு கான்செறு காலனே.

தெளிவுரை : முனிவர்களும் தேவர்களும் சென்று, வேண்டிய வரங்களைக் கொள்ளும் இடமாவது, அந்தணர்கள் வாழும் தில்லைச்சிற்றம்பலம். ஆங்கும் உறையும் நடராசப் பெருமானுடைய செம்மையான அடிமலரைத் தொழுது ஏத்தச்செல்கின்ற மெய்யன்பர்கள்பால், காலன், அணுகமாட்டான்.

7. ஒருத்த னார்உல கங்கட்கு ஒருசுடர்
திருத்த னார்தில்லைச் சிற்றம் பலவனார்
விருத்த னார்இளை யார்விடம் உண்டஎம்
அருத்த னார்அடி யாரை அறிவரே.

தெளிவுரை : ஈசன், ஒப்பற்ற ஒருவராய் விளங்குபவர்; உலகங்களுக்கு எல்லாம் சோதியாய்த் திகழ்பவர். செம்மை யுடையவராய் விளங்கி யாவற்றினையும் திருக் குறிப்பால்ச இயக்குபவர்; தில்லைச் சிற்றம்பலத்தில் உரியவர்; விருத்தராகவும் இளமையுடையவராகவும் திகழ்பவர், கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு உலகைக் காத்தருளியவர்; எமக்கு மெய்ப்பொருளாக இருப்பவர். அப்பெருமான், அடியவர் பெருமக்களை நன்கு அறியும் இயல்பினர் ஆவார்.

8. விண்நி றைந்ததோர் வெவ்வழ லின்னுரு
எண்நி றைந்த இருவர்க்கு அறிவொணாக்
கண்நி றைந்த கடிபொழில் அம்பலத்து
உள்நி றைந்துநின்று ஆடும் ஒருவனே.

தெளிவுரை : விண்ணில் நிறைந்து நின்ற பேரழலாகிய ஒரு வடிவமானது, எண்ணத்தில் நிறைந்து ஏத்தி மேவிய திருமால், பிரமன் ஆகிய இருவருக்கும் அறிவு கொண்டு அறியமுடியாதவாறு திகழ்ந்தது. அப்பொருள், கண்ணுக்கு நிறைந்து குளிர்ச்சிமிக்க நறுமணம் கமழும் பொழில் சூழ்ந்து விளங்கும் தில்லை அம்பலத்தில் நின்று என் உள்ளம் நிறைந்து நின்று திருநடனம் புரியும் நடராசப்பெருமானே ஆகும்.

9. வில்லை வட்டப்பட வாங்கி அவுணர்தம்
வல்லைவட் டம்மதில் மூன்றுடன் மாய்த்தவன்
தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினை
ஒல்லைவட் டங்கடந்து ஓடுதல் உண்மையே.

தெளிவுரை : சிவபெருமான், மேருமலையை வில்லாகக் கொண்டு, மூன்று அசுரர் புரங்களை மாய்த்தவர். அவர் வீற்றிருக்கும் இடமானது தில்லை நகராகும். அத்திசை நோக்கிக் கைதொழும் அன்பர்களின் வினைகள் யாவும் விரைவில் விலகும். இது உண்மையே.

10. நாடி நாரணன் நான்முகன் என்றிவர்
தேடி யும்திரிந் தும்காண வல்லரோ
மாட மாளிகை சூழ்தில்லை அம்பலத்து
ஆடி பாதம்என் நெஞ்சுள் இருக்கவே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் ஈசனை நாடவேண்டும் என்று, முறையே பூமியில் குடைந்து தேடியும், வானில் திரிந்தும், சென்றனர். அவர்களால் காண இயலவில்லை. அதற்குக் காரணம் மாட மாளிகைகள் சூழ்ந்த தில்லையில் மேவும் அம்பலத்தில் ஆடும் நடராசப்பெருமானின் திருப்பாதமானது, என் நெஞ்சுள் இருப்பதே ஆகும்.

11. மதுரவாய்மொழி மங்கையோர் பங்கினன்
சதுரன் சிற்றம் பலவன் திருமலை
அதிர ஆர்த்தெடுத் தான்முடி பத்திற
மிதிகொள் சேவடி சென்றடைந்து உய்ம்மினே.

தெளிவுரை : ஈசன், இனிய மொழியால் நவிலும் உமாதேவியைத்தன் திருமேனியில் ஒரு பாகமாக உடையவர்; எல்லாத்தன்மையிலும் தேர்ந்து ஐந்தொழிலாகிய படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய சதுரப்பாடு உடையவர்; கயிலையை எடுத்த இராவணனுடைய பத்துத் தலைகளும் நெரியுமாறு திருப்பாத விரல் கொண்ட ஊன்றியவர்; தில்லைச் சிற்றம்பலத்தில் திருநடனம் புரிபவர். அப் பெருமானுடைய மலர்ப் பாதத்தை நண்ணி, ஏத்தி, உய்ம்மின்.

திருச்சிற்றம்பலம்

2. கோயில் (அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

12. பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்ப வர்மனம் கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்த னைப்பொழு தும்மறந்து உய்வனோ.

தெளிவுரை : ஈசன், பனை போன்ற நீண்ட துதிக்கையும் மூன்று வகையான மதங்களும் உடைய யானையின் தோலை உரித்தவர்; தன்னை நினைத்து ஏத்தும் அடியவர்களின் மனத்தைக் கோயிலாகக் கொண்டு விளங்குபவர். யார் யார் எத்தன்மையில் காண விழைகின்றார்களோ அத்தகைய திருக் கோலத்தில் மேவிக் காட்சியளிப்பவர். அவர், அம்பலத்தில் விளங்கும் நடராசப் பெருமான் ஆவார். அப்பெருமானை, இமைப்பொழுது மறந்தாலும் உய்ய முடியுமோ ! ஆதலால் நான் மறவாது அப்பெருமானை ஏத்துவேன் என்பது குறிப்பு.

13. தீர்த்த னைச்சிவ னைச்சிவ லோகனை
மூர்த்தி யைமுத லாய ஒருவனைப்
பார்த்த னுக்கருள் செய்தசிற் றம்பலக்
கூத்த னைக்கொடி யேன்மறந்து உய்வனோ.

தெளிவுரை : சிவபெருமான், பாவங்களைத் தீர்ப்பவர்; அன்புடையவர்; அன்பின் உலகமாக விளங்கும் சிவ லோகத்தின் தலைவர்; ஐந்தொழில் முழுமுதலாய் விளங்கும் ஒப்பற்ற ஒருவனாய் விளங்குவர்; பார்த்தனுக்குப் பாசுபதம் அருள் செய்த பரமன்; சிற்றம்பலத்தில் திருநடனம் புரியும் கூத்தப்பெருமான். அப்பெருமானை நான் மறந்தால் உய்ய முடியுமோ !

14. கட்டும் பாம்பும் கபாலங்கை மான்மறி
இட்ட மாயிடு காட்டுஎரி ஆடுவான்
சிட்டர் வாழ்தில்லை யம்பலக் கூத்தனை
எட்ட னைப்பொழு தும்மறந்து உய்வனோ.

தெளிவுரை : சிவபெருமான், பாம்பைக் கங்கணமாகக் கட்டி இருப்பவர்; மான்கன்றையும் கபாலத்தையும் கையில் ஏந்தி இருப்பவர்; சுடுகாட்டில் விரும்பி நடனமாடுபவர்; முனிவர்கள் வாழும் தில்லை அம்பலத்தில் திருநடனம் புரிபவர். அப்பெருமானை இமைப்பொழுதும் நான் மறவாமல் ஏத்துவேன்.

15. மாணி பால்கறந்து ஆட்டி வழிபட
நீணு லகெலாம் ஆளக் கொடுத்தஎன்
ஆணி யைச்செம்பொன் அம்பலத் துள்நின்ற
தாணு வைத்தமி யேன்மறந்து உய்வனோ

தெளிவுரை : ஈசனை மணலால் தாபித்துப் பால் கறந்து அபிடேகம் செய்த பிரமகாரியாகிய சண்டேசருக்கு, உலகம் எல்லாம் அருளாட்சி செய்யும் பெருமையை வழங்கியவர், பொன்னம்பலத்தில் தாண்டவம் புரியும் சிவபெருமான். தாணுவாகிய அப்பரமனை நான் மறவாது ஏத்துவன்.

16. பித்த னைப்பெருங் காடரங் காவுடை
முத்தனைமுளை வெண்மதி சூடியைச்
சித்த னைச்செம்பொன் னம்பலத் துள்நின்ற
அத்த னையடி யேன்மறந்து உய்வனோ.

தெளிவுரை : சிவபெருமான், மன்னுயிர்பால் பேரன்பு உடையவர்; மயானத்தை அரங்காகக் கொண்டு நடனம் புரிபவர்; பாசம் நீங்கி முத்தனாய்த் திகழும் இயல்புடையவர்; இளம் பிறைசந்திரனைச் சூடியவர்; சித்தனாய் விளங்குபவர்; பொன்னம்பலத்தில் விளங்கும் அன்புடையவர். அப்பரமனை, அடியேன் மறவேன். மறந்தால் உய்வனோ ?

17. நீதி யைநிறை வைமறை நான்குடன்
ஓதி ழையொரு வர்க்கும் அறிவொணாச்
சோதி யைச்சுடர்ச் செம்பொனின் அம்பலத்து
ஆதி யைஅடி யேன்மறந்து உய்வனோ

தெளிவுரை : ஈசன், அறநெறியில் புகலப்படும் நீதியாகத் திகழ்பவர்; யாவற்றையும் உடைய நிறைபொருளானவர்; நான்கு வேதங்களையும் ஓதி அருளிச் செய்தவர்; யார்க்கும் அறிய ஒண்ணாத சோதியாக விளங்குபவர்; ஒளி திகழும் பொன்னம்பலத்துள், ஆதியாக இருந்து நடம்புரிபவர். அப்பரமனை மறந்து அடியேன் உய்யமுடியுமோ ?

18. மைகொள் கண்டன்எண் தோளன்முக் கண்ணினன்
பைகொள் பாம்பரை ஆர்த்த பரமனார்
செய்ய மாதுறை சிற்றம்ப லத்தெங்கள்
ஐய னைஅடி யேன்மறந்து உய்வனோ.

தெளிவுரை : ஈசன், கருமையான கண்டத்தை உடையவர்; எட்டுத்தோள் உடையவர்; மூன்று கண்ணுடையவர்; படம் கொண்ட பாம்பை அரையில் நன்கு கட்டி இருப்பவர்; திருமகள் விளங்கி மேவும் சிற்றம்பலத்தில் உறையும் எம்தலைவர். அப்பரமனை அடியேன் மறந்து உய்வு பெறமுடியுமோ ?

19. முழுதும் வானுல கத்துள் தேவர்கள்
தொழுதும் போற்றியும் தூயசெம் பொன்னினால்
எழுதி மேய்ந்தசிற் றம்பலக் கூத்தனை
இழுதை யேன்மறந்து எங்ஙனம் உய்வனோ.

தெளிவுரை : வானுலகத்தில் உள்ள தேவர்கள் தொழுது போற்ற விளங்குவது தூய பொன் வேய்ந்த விமானத்தையுடைய சிற்றம்பலம் ஆகும். ஆங்குத் திருநடனம் புரியும் அம்பலக்கூத்தனை நான் மறந்து, உய்தற்பாலதோ !

20. காரு லாமலர்க் கொன்றையந் தாரனை
வாரு லாமுலை மங்கைம ணாளனைத்
தேரு லாவிய தில்லையுட் கூத்தனை
ஆர்கி லாஅமு தைமறந்து உய்வனோ.

தெளிவுரை : சிவபெருமான், கார் காலத்தில் நன்கு விளங்கும் பிரணவ புட்பமாகிய கொன்றை மலர் மாலை யணிந்தவர்; உமாதேவியின் மணவாளர். தேவர் உலவும் தில்லையுள் திருநடனம் புரிபவர். ஆரா அமுதாகிய அப்பெருமானை நான் மறந்து உய்வு பெற முடியுமா ?

21. ஓங்கு மால்வரை யேந்தலுற் றான்சிரம்
வீங்கி விம்முற வூன்றிய தாளினான்
தேங்கு நீர்வயல் சூழ்தில்லைக் கூத்தனைப்
பாங்கி லாத்தொண்ட னேன்மறந்து உய்வனோ

தெளிவுரை : சிவபெருமான், கயிலையை அசைத்த இராவணனுடைய சிரங்கள் நெரியுமாறு ஊன்றிய திருப்பாதத்தை உடையவர்; நீர்வயல் சூழ்ந்த தில்øயில் வீற்றிருப்பவர். அப்பரமனாகிய கூத்தப்பெருமானைத் தொண்டனாகிய யான் மறந்து உய்ய முடியுமா!

திருச்சிற்றம்பலம்

3. திருநெல்வாயில் அரத்துறை (அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருவட்டத்துறை, கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

22. கடவு ளைக்கட லுள்ளெழு நஞ்சுண்ட
உடலு ளானையொப் பார்இ லாதஎம்
அடலு ளானை அரத்துறை மேவிய
சுடரு ளானைக்கண் டீர்நாம் தொழுவதே

தெளிவுரை : சிவபெருமானே கடவுள். அவர், கடலில் தோன்றிய நஞ்சினை உட்கொண்ட அருள் திருமேனியுடையவர். தனக்கு உவமை கூறக்கூடியவர் யாரும் இல்லை என்னும் பேராற்றல் உடையவர். அப் பெருமான் அரத்துறையில் சுடர் ஒளியாய்த் திகழ்பவர். அவரே நாம் தொழுகின்ற கடவுள் கண்டீர் என்பது, உறுதிப்பாட்டினை உணர்த்தியது.

23. கரும்புஒப் பானைக் கரும்பினிற் கட்டியை
விரும்புஒப் பானை விண்ணோரும் அறிகிலா
அரும்புஒப் பானை அரத்துறை மேவிய
சுரும்புஒப் பானைக் கண்டீர்நாம் தொழுவதே.

தெளிவுரை : சிவபெருமான் கரும்பு ஒத்த சுவையுடையவர்; கரும்பின் சாற்றைத் திரட்டிக் காய்ச்சி வடித்த கட்டியை ஒத்தவர்; விரும்பிய ஒண்பொருளாய்த் திகழ்ந்து மகிழ்விப்பவர்; விண்ணோரும் காணற்கு அரியவர்; அகவழிபாட்டினில் கொல்லாமை, அருள், ஐம்பொறி அடக்கல், பொறை, தவம், வாய்மை, அன்பு அறிவு, ஆகிய அட்டமலர்கள் என ஓதப்பெறும் இதய மலர்களில் துளிர்க்கும் பக்தித் தேனை நுகரும் சுரும்பு போன்றவர், அவர் அரத்துறையில் மேவி விளங்குபவர். அவரே நாம் தொழுகின்ற இறைவன்.

24. ஏறொப் பானையெல் லாவுயிர்க் கும்இறை
வேறொப் பானைவிண் ணோரும் அறிகிலா
ஆறொப் பானை அரத்துறை மேவிய
ஊறொப் பானைக் கண்டீர்நாம் தொழுவதே.

தெளிவுரை : ஈசன், ஏறு ஒப்ப பீடு (பெருமை) உடையவர்; எல்லா உயிர்க்கும் கடவுளாவர்; தேவர்களால் அறிப்படாதவர்; தீர்த்தமாக விளங்குபவர்; நல்லுணர்வாகத்திகழ் பவர். அரத்துறையில் மேவிய அவரே, நாம் தொழுது ஏத்தும் கடவுள்.

25. பரப்புஒப் பானைப் பகலிருள் நன்னிலா
இரப்புஒப் பானை இளமதி சூடிய
அரப்பு ஒப்பானை அரத்துறை மேவிய
சுரப்புஒப் பானைக் கண்டீர்நாம் தொழுவதே

தெளிவுரை : ஈசன், சூரியனைப்போன்ற பரந்த ஒளி யானவர்; இரவில் ஒளிரும் வெண்ணிலாவானவர்; இளமையான சந்திரனைச்சூடி விளங்கும் நிலா முற்றம் போன்றவர்; ஊருணி போன்று கருணை வயத்தால் அருள்சுரந்து விளங்குபவர். அரத்துறை மேவிய அப்பெருமானே நாம் வணங்கும் கடவுள்.

26. நெய்யொப் பானைநெய் யிற்சுடர் போல்வதோர்
மெய்யொப் பானைவிண் ணோரும் அறிகிலார்
ஐயொப் பானை அரத்துறை மேவிய
கையொப் பானைக் கண்டீர்நாம் தொழுவதே

தெளிவுரை : ஈசன், பாலிற்படுநெய்போல் மறைய நிற்கும் தன்மை போன்று விளங்குபவர்; பஞ்சகவ்வியத்தில் மேவும் நெய்யின் சுடரென ஒளிரும் தூய நற்சோதி வடி வமாகி விளங்குபவர். தேவர்களாலும் காணுதற்கு அரி யவராய், நுண்மையைப் புரிபவர்; நுண் பொருளாகத் திகழ்பவர். அரத்துறை மேவிய ஆற்றல் உடைய அப்பர மனே, நாம் வணங்கும் கடவுள்.

27. நெதியொப் பானை நெதியிற் கிழவனை
விதியொப் பானை விண்ணோரும் அறிகிலார்
அதியொப் பானை அரத்துறை மேவிய
கதியொப் பானைக் கண்டீர்நாம் தொழுவதே.

தெளிவுரை : ஈசன் உலகில் போற்றி ஒழுகப்படும் நெறி முறைகளாக விளங்குபவர்; அத்தகைய நெறிமுறைக்கு உரிய தலைவர் ஆகுபவர். செய்யும் வினைகளாற் சேரும் ஊழ் எனத் திகழ்பவர்; தேவர்களால் அறியப்படாதவராய், மேலாக விளங்குபவர்; உயிர்களுக்கு அமையும் வினைவழியாகிய பயனாக விளங்குபவர். அரத்துறை மேவிய அப்பெருமானே நாம் தொழும் கடவுள்.

28. புனலொப் பானைப் பொருந்தலம் தம்மையே
மினலொப் பானை விண்ணோரும் அறிகிலார்
அனலொப் பானை அரத்துறை மேவிய
கனலொப் பானைக் கண்டீர்நாம் தொழுவதே.

தெளிவுரை : ஈசன், அட்ட மூர்த்தங்களுள் ஒன்றாகிய நீராய் விளங்குபவர்; பகைத்து நிற்கும் தன்மையர் ககுமூளாத் தீயாகிய மின்னல் போன்று தோன்றி, மாயச் செய்பவர்; தேவர்களால் அறிவதற்கு அரியவர். நெருப்புப் போன்று சிவந்த திருமேனியுடையவர். அட்ட மூர்த்தங்களுள் ஒன்றாகிய கனல் (நெருப்பு) போன்றவர். அரத்துறை மேவிய அப்பரமனே, நாம் தொழுகின்ற கடவுள்.

29. பொன்னொப் பானைப் பொன்னறிசுடர் போல்வதோர்
மின்னொப் பானை விண்ணோரும் அணிகிலார்
அன்னொப் பானை அரத்துறை மேவிய
தன்னொப் பானைக் கண்டீர்நாம் தொழுவதே.

தெளிவுரை : ஈசன், பொன்போன்று மேலாக விளங்குபவர். பொன்னின் சுடராகுபவர், மின்னலை ஒத்து ஒளிர்பவர்; தேவர்களால் காண்பதற்கு அரியவர்; அன்னையைப் போன்று விளங்குபவர்; தன்னையன்றி வேறு உவமையில்லாத பெருமை உடையவர். அரத்துறை மேவிய அப்பரமனே நாம் தொழுகின்ற கடவுள்.

30. காழி யானைக் கனவிடை யூருமெய்
வாழி யானை வல்லோரும்என்று இன்னவர்
ஆழி யான்பிர மற்கும் அரத்துறை
ஊழி யானைக் கண்டீர்நாம் தொழுவதே.

தெளிவுரை : சிவபெருமான், சீகாழிப்பதியில் விளங்குபவர். பெருமைமிக்க இடப வாகனத்தில் ஊர்ந்து எக்காலத்திலும் விளங்குபவர். திருமாலும் பிரமனும் வணங்க, ஊழிதோறும் விளங்கும் அரத்துறை மேவும் பரமனே, நாம தொழுகின்ற இறைவன்.

31. கலையொப்பானைக் கற்றார்க்கோர் அமுதினை
மலையொப்பானை மணிமுடி யூன்றிய
அலையொப்பானை அரத்துறை மேவிய
நிலையொப் பானைக் கண்டீர்நாம் தொழுவதே.

தெளிவுரை : ஈசன, வேதப் பொருளானவர்; கற்றவர்க்கு அமுதானவர்; கயிலை மலை போன்றவர்; இராவணனை நெரியுமாறு ஊன்றிய திருப்பாதம் உடையவர். அரத்துறையில் எக்காலத்திலும் நிலைத்து மேவும் அப்பரமனே நாம் தொழுது ஏத்தும் கடவுள் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

4. திருஅண்ணாமலை (அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை)

திருச்சிற்றம்பலம்

32. வட்ட னைம்மதி சூடியை வானவர்
சிட்ட னைத்திரு அண்ணா மலையனை
இட்ட னைஇகழ்ந் தார்புர மூன்றையும்
அட்ட னைஅடி யேன்மறந்து உய்வனோ

தெளிவுரை : ஈசன், கிழிக்கப் பெற்ற துகிலைக் கோவணம் எனப்படும் வட்டம் என, அணிந்தவர்; பிறைச் சந்திரனைச் சூடியவர்; வானவர்களால் ஏத்தித் தொழப்படுபவர்; திருமிகுந்த அண்ணாமலை வடிவத்தில் விளங்குபவர்; உயிரின்பால் விருப்பம் மிகுந்து கருணை புரிபவர்; பகைமை கொண்டு இகழ்ந்த அசுரர்களின் முப்புரங்களை அழித்தவர். அப் பெருமானை அடியவன் மறந்து உய்தல் ஆகுமோ ?

33. வான னைம்மதி சூடிய மைந்தனைத்
தேன னைத்திரு வண்ணா மலையனை
ஏன  னைஇகழ்ந் தார்புர மூன்றெய்த
ஆன னைஅடி யேன்மறந்து உய்வனோ.

தெளிவுரை : ஈசன், பரமகாசம் எனப் பெறும் பெருமையுடைய சிவலோகநாதர்; பிறைச்சந்திரனைச் சூடிய அழகர்; தேன் போன்று இனிமையானவர்; செல்வம் பெருகும் அண்ணாமலை வடிவாகியவர்; ஏனத்தின் கொம்பினை அணிந்தவர்; தன்னை இகழ்ந்த மூன்று அசுரர்களின் புரங்களைக் கணை ஒன்றினால் எய்து, எரித்தவர்; இடப வாகனத்தை உடையவர். அப்பரமனை, அடியேன் மறந்து, உய்தல் ஆகுமோ ?

34. மத்த னைம்மத யானையு ரித்தஎஞ்
சித்த னைத்திரு வண்ணா மலையனை
முத்த னைம்முனிந் தார்புர மூன்றெய்த
அத்த னையடி யேன்மறந்து உய்வனோ.

தெளிவுரை : ஈசன், ஊமத்த மலர் அணிந்து விளங்குபவர்; யானையின் தோலை உரித்தவர்; எமது சித்தத்தில் விளங்குபவர்; செல்வம் திகழும் அண்ணாமலையாக விளங்குபவர்; முத்தனாய்த் திகழ்பவர்; முனிந்த பகைவர்களின் முப்புரங்களை எரித்தவர்; அன்புக்குரியவர். அப்பெருமானை, அடியேன் மறந்து உய்வு பெறமுடியுமோ ?

35. காற்ற னைக்கலக் கும்வினை போயறத்
தேற்ற னைத்திரு வண்ண மலையனைக்
கூற்ற னைக்கொடி யார்புர மூன்றெய்த
ஆற்ற னைஅடி யேன்மறந்து உய்வனோ.

தெளிவுரை : சிவபெருமான், அட்ட மூர்த்தங்களில் ஒன்றாகிய காற்றாகி விளங்குபவர்; உயிரிற் பற்றிய வினையானது பிறவிதோறும் தொடர்ந்து மேவ, அதனை அறுத்தொழிப்பவர்; திருவண்ணாமலை யுடையவர்; மார்க்கண்டேயரின் உயிரைக் கவரவந்த கூற்றுவனை அழித்தவர்; கொடிய அசுரர்களின் மூன்று புரங்களையும் எரித்தவர்; கங்கையத்தரித்த சடைமுடியுடையவர். அப்பரமனை அடியேன் மறந்து உய்தல் ஆகுமோ ?

36. மின்னனைவினை தீர்த்தெனை ஆட்கொண்ட
தென்ன னைத்திரு வண்ணா மலையனை
என்ன னைஇகழ்ந் தார்புர மூன்றெய்த
அன் னைஅடி யேன்மறந்து உய்வனோ.

தெளிவுரை : ஈசன், மின்னலைப் போன்ற ஒளிர்பவர்; என்னுடைய தீவினையைத் தீர்த்து என்னை ஆட்கொண்டு அருளியவர்; இனிமையானவர்; திரு அண்ணாமலை நாதர்; என்னை ஆளாகக் கொண்டு விளங்கும் அன்னை போன்ற என் தலைவனை இகழ்ந்த அசுரர்களின் மூன்று புரங்களைக் கணையொன்றினால் எய்து எரிந்த, பேராற்றல் உடையவர். அத்தகைய பரமனை அடியேன் மறந்து உய்வனோ ?

37. மன்றனைம் மதி யாதவன் வேள்விமேல்
சென்ற னைத்திரு வண்ணா மலையனை
வென்ற னைவெகுண் டார்புற மூன்றையும்
கொன்ற னைக்கொடி யேன்மறந்து உய்வனோ.

தெளிவுரை : ஈசன், பஞ்ச சபைகளில் மேவி விளங்கித் திருநடனம் புரிபவர்; மதியாத தக்கனின் வேள்வியைச் சாடி அழித்தவர்; திருஅண்ணாமலைநாதர்; ஐம்புலன்களை வென்ற பரமனாய்த் திகழ்பவர்; வெகுண்டெழுந்து தீங்கு விளைவித்த அசுரர்களின் மூன்று புரங்களையும் எரித்துச் சாம்பலாக்கி அழித்தவர். அப்பெருமானை, வினைக்கொடியவனாகிய யான் மறந்து உய்தல் கூடுமோ ?

38. வீரனைவிடம் உண்டனை விண்ணவர்
தீர னைத்திரு வண்ணா மலையனை
ஊர னைஉண ரார்புர மூன்றுஎய்த
ஆர னைஅடி யேன்மறந்து உய்வனோ.

தெளிவுரை : சிவபெருமான், அட்டவீரச் செயல்களைப் புரிந்தவர்; கடலில் தோன்றி நஞ்சினை அமுதாகக் கொண்டு உட்கொண்டு, கண்டத்தில் தேக்கித் தேவர்களைக் காத்தருளியவர்; தேவர்களின் தலைவர்; திரு அண்ணாமலை அண்ணலாக விளங்குபவர்; ஊர்தொறும் திகழ விளங்குபவர்; தெய்வ உணர்வில்லாத அசுரர்களின் மூன்று புரங்களை வென்று எரித்துச் சாம்பலாக்கியவர்; மலர்மாலைகள், எலும்பு மாலை, உருத்திராக்க மாலை , பாம்பு ஆகிய ஆரங்களைத் தரித்துள்ளவர். அப்பரமனை அடியேன் மறந்து உய்தல் கூடுமோ !

39. கருவி னைக்கடல் வாய்விடம் உண்டஎம்
திருவி னைத்திரு வண்ணா மலையனை
உருவி னையுண ரார்புர மூன்றெய்த
அருவி னைஅடி யேன்மறந்து உய்வனோ.

தெளிவுரை : ஈசன், எல்லாப் பொருட்கும் கருவாக விளங்கி மலரச் செய்பவர்; கடலில் தோன்றிய நஞ்சினை அருந்தி உய்வித்தவர்; எமக்குப் பெருஞ் செல்வமாகத் திகழ்பவர்; திருஅண்ணாமலை  நாதராய் விளங்குபவர்; அழகிய திருக்கோலத்தை உணராத அசுரர்களின் மூன்று புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்த அருவமானவர். அடியேன், அப்பரமனை மறந்து உய்தல் கூடுமோ ?

40. அருத்த னைஅர வைந்தலை நாகத்தைத்
திருத்த னைத்திரு வண்ணா மலையனைக்
கருத்த னைக்கடி யார்புர மூன்றெய்த
அருத்த னைஅடி யேன்றந்து உய்வனோ.

தெளிவுரை : ஈசன், எல்லாப் பொருள்களின் வடிவாகவும் அதன் விளக்கமாகவும் திகழ்பவர்; ஐந்து தலையுடைய நாகத்தை அணியும் மாண்பினர்; திரு அண்ணாமலை, நாதராகத் திகழ்பவர்; நற்பொருளின் கருத்தாக இருப்பவர்; முப்புரங்களை எரித்து அழித்தவர். அப்பரமனை அடியேன் மறந்து உய்தல் முடியுமோ ?

41. அரக்க னைஅலறவ்விரல் ஊன்றிய
திருத்த னைத்திரு வண்ணா மலையனை
இருக்க மாய்என் உடலுறு நோய்களைத்
துரக்க னைத்தொண்ட னேன்மறந்து உய்வனோ.

தெளிவுரை : ஈசன், இராவணன் அலறுமாறு திருப்பாதத்தால் ஊன்றிக் கயிலையால் அவன் முடிகள் பத்தும் நெறியுமாறு செய்தவர். அப்பெருமான் திரு அண்ணாமலை நாதராக விளங்கி என் மீது இரக்கம் கொண்டு என் உடலில் உற்ற நோய்களைத் தீர்த்து விலக்கியவர். அப்பரமனைத் தொண்டனாகிய நான் மறந்து உய்தல் ஆகுமோ !

திருச்சிற்றம்பலம்

5. திருஅண்ணாமலை (அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை)

திருச்சிற்றம்பலம்

42. பட்டி ஏறுகந்து ஏறிப் பலஇ(ல்)லம்
இட்ட மாக இரந்துண்டு உழிதரும்
அட்ட மூர்த்தி யண்ணாமலை கைதொழக்
கெட்டுப் போம்வினை கேடில்லை காண்மினே.

தெளிவுரை : ஈசன், யாங்கணும் திரிந்தும் அலையும் எருதினை வாகனமாகக் கொண்டு ஏறித் தாருகவனத்தில் உள்ள மகளிரின் மனைதொறும் திரிந்து இரந்து, அவர்கள், இட்ட உணவை விரும்பி உண்டவர். அட்ட மூர்த்தமாக விளங்கும் அண்ணாமலை நாதராகிய அப்பரமனைக் கைதொழுது போற்ற, வினையாவும் கெட்டழியும், அங்ஙனம் செய்தால் முத்திப் பேற்றினை அடைவதற்கு யாதொரு தடையும் இன்றிக் கை கூடும்.

43. பெற்றம் ஏறுவர் பெய்பலிக்கு என்றவர்
சுற்ற மாமிகு தொல்புக ழுõனொடும்
அற்றம் தீர்க்கும்அண் ணாமலை கைதொழ
நற்ற வத்தொடு ஞானத் திருப்பரே.

தெளிவுரை : ஈசன், இடப வாகனத்தில் ஏறிக் கபாலம் ஏந்திப் பிச்சையேற்பவர் ஆவர். அவர், தனக்குச் சுற்றமாக விளங்கும் பழமையான புகழுடன் திகழும் உமா தேவியாரை உடனாகக் கொண்டு விளங்குபவராய்த் திருவண்ணாமலையில் துன்பத்தைத் தீர்ப்பவராகி வீற்றிருப்பவர். அப்பரமனைக் கைதொழுது போற்ற நற்றவப்பயனும் சிவஞான உணர்வும் கைவரும்.

44. பல்லில் ஒடுகை யேந்திப் பலஇலம்
ஒல்லை சென்று உணங்கல்கவர் வார்அவர்
அல்லல் தீர்க்கும்அண் ணாமலை கைதொழ
நல்ல வாயின நம்மை அடையுமே.

தெளிவுரை : ஈசன், மண்டையோட்டைப் பிச்சைப் பாத்திரமாகக் கையில் ஏந்திப் பல இல்லங்களில் சென்று உணவைப் பெறுபவர். அப்பெருமான், துன்பத்தைத் தீர்க்கும் அண்ணாமலையில் வீற்றிருப்பவர். அவரைக் கை தொழுது ஏத்த, நல்லவை யாவும் நம்மை வந்து அடையும்.

45. பாடிச் சென்று பலிக்கென்று நின்றவர்
ஓடிப் போயினர் செய்வதொன்று என்கொலோ
ஆடிப் பாடிஅண் ணாமலை கைதொழ
ஓடிப் போகும்நம் மேலை வினைகளே.

தெளிவுரை : சிவபெருமான், தாருகவனத்தில் மேவும் மகளிர்தம் மனைதொறும் சென்று பலியேற்றவர். அவர், பலியேற்ற பின்னர், அம் மங்கையர்தம் உள்ளத்தைக் கவர்ந்து மறைந்தனர். அப்பெருமான், வீற்றிருக்கும் திருவண்ணாமலையைக் கைதொழுது ஆடிப்பாடி ஏத்தி வணங்க, நம்மைப் பற்றிக் கொண்டு, இகவாழ்க்கையில் இன்னல்களும், ஆராத் துயரங்களும், பின்னர் பிறவிப் பிணியையும் நல்கும் வினைகள் யாவும் விலகிச் செல்லும்.

46. தேடிச் சென்று திருந்தடி யேத்துமின்
நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்
ஆடிப் பாடிஅண் ணாமலை கைதொழ
ஓடிப் போம்நமது உள்ள வினைகளே

தெளிவுரை : திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் சிவ பெருமானை மனதார எண்ணிச் சென்று, அப் பெருமானின் தூய மலர்ப் பாதங்களை ஏத்துமின். பக்தியில் திளைத்து மெய்மறந்து ஆடுமின்; கசிந்து உருகிப் புகழ்ப்பாடல்களைப் பாடுமின்; கைதொழுது வணங்குமின். அத்தன்மையில் அப்பெருமான் நமது உள்ளத்தில் புகுந்து நம்மை ஆட்கொள்வார். நமது வினைகள் யாவும் நம்மை விட்டு ஓடிப் போகும்.

47. கட்டி யொக்கும் கரும்பின் இடைத்துணி
வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார்
அட்ட மூர்த்திஅண் ணாமலை மேவிய
நட்ட மாடியை நண்ணநன்கு ஆகுமே.

தெளிவுரை : சிவபெருமான், கரும்பின் கட்டியைப் போன்று இனிமையுடையவர். அவர், வீணையின் நரம்புகளை நன்கு முறுக்கிச் சுரங்களின் சுருதியானது சீராக அமையுமாறு இறுக்கியும் துணித்தும் செம்மையாக்கி, வாசித்துப் பாடும் விகிர்தன் ஆவார். அட்டமூர்த்தியாக விளங்கும் அண்ணாமலைநாதர், நன்கு ஏத்த, எல்லா நலன்களும் கைகூடும்.

48. கோணிக் கொண்டையர் வேடமுன் கொண்டவர்
பாணி நட்டங்கள் ஆடும் பரமனார்
ஆணிப் பொன்னன் அண்ணாமலை கைதொழப்
பேணி நின்று பொருவினை போகுமே.

தெளிவுரை : சிவபெருமான், சேர்ந்து அலங்காரம் செய்து, கொண்டையாகக் கட்டிய சடைமுடியை உடையவர்; கைத்தாளங்கள் இட்டுத் திருநடனங்கள் புரிபவர். அப்பரமன் உயர்ந்த பொன் போன்றவராய் விளங்கும் அண்ணாமலைநாதர் ஆவார். அப்பெருமானைக் கைதொழுது போற்றி ஏத்த, இப்பிறவியில் பொருட்டுச் சார்ந்த பிராரத்தமாகிய பெருவினை விலகிப் போகும்.

49. கண்டந் தான்கறுத் தான்காலன் ஆருயிர்
பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார்
அண்டத்து ஓங்கும்அண் ணாமலை கைதொழ
விண்டு போகுநம் மேலை வினைகளே.

தெளிவுரை : சிவபெருமான், கழுத்தில் கருமையினையுடைய திருநீலகண்டர்; காலனுடைய உயிரைத் திருப்பாதத்தால் மாய்த்தவர். அண்டமெல்லாம் ஓங்கும் அண்ணாமலைநாதர். அப்பெருமானைக் கைதொழுது போற்ற இவ் உயிரைப்பற்றி நின்று துன்புறுத்தும் தீவினைகள் யாவும் சிதறிக் கெட்டழியும்.

50. முந்திச் சென்றுமுப் போதும் வணங்குமின்
அந்தி வாயொளி யான்றன்அண் ணாமலை
சிந்தி யாஎழு வார்வினை தீர்த்திடும்
கந்த மாமலர் சூடும் கருத்தனே.

தெளிவுரை : அந்தி நேரத்தில் மேவும் செவ்வண்ணம் போன்ற ஒலியுடைய அண்ணாமலைநாதரைச் சிந்தித்து ஏத்துமின். முந்திச் சென்று அப்பெருமானை முக்காலங்களாகிய காலை, பகல், மாலை ஆகிய பொழுதுகளில் வணங்குமின். அப்பெருமான் நறுமணம் மிக்க மலர்களைக் கருத்துடன் சூடி இருந்து விளங்கும் இயல்பினர். எனவே மென்மைத் தன்மையுடைய அப்பெருமான் தன்னை ஏத்தி வழிபடுபவர்களுக்கு, வினைதீர்த்து அருள்புரிபவர் ஆவார்.

51. மறையி னானொடு மாலவன் காண்கிலா
நிறையும் நீர்மையுள் நின்றருள் செய்தவன்
உறையும் மாண்பின்அண் ணாமலை கைதொழப்
பறையும் நாம்செய்த பாவங்க ளானவே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் காணுதற்கு அரியவராகிய தன்மையில் விளங்கி அருள் புரியும் சிவபெருமான் உறைகின்ற மாண்புடையது திருவண்õமலை. அப் பெருமானைக் கைதொழுது ஏத்த நாம் செய்த பாவங்கள் யாவும் சிதைந்து அழியும்.

திருச்சிற்றம்பலம்

6. திருஆரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்)

திருச்சிற்றம்பலம்

52. எப்போ தும்மிறை யும்மற வாதுநீர்
முப்போ தும்பிர மன்தொழ நின்றவன்
செப்போ தும்பொனின் மேனிச் சிவனவன்
அப்போ தைக்கஞ்சல் என்னும்ஆ ரூரனே.

தெளிவுரை : சிவபெருமானைச் சிறிதளவு காலமும் மறவாது நினைத்து ஏத்துவீராக. பிரமன், அப்பரமனை மூன்று காலங்களிலும் நித்தமும் பூசித்து வணங்குபவர். ஈசன் செம்மேனியராகவும் அழகுடையவராகவும் விளங்குபவர். அப்பெருமான் உயிருக்கு அச்சம் ஏற்படுகின்ற அந்தக் கணத்திலேயே அஞ்சாதே என்று தேற்றி அருள் செய்பவர். அவர், ஆரூரில் மேவும் இறைவனே.

53. சடையின் மேலுமொர் தையலை வைத்தவர்
அடைகி லாஅர வைஅரை யார்த்தவர்
படையின் நேர்தடங் கண்ணுமை பாகமா
அடைவர் போலிடு காடர்ஆ ரூரரே.

தெளிவுரை : சிவபெருமான், சடை முடியின்மீது கங்கையைத் தரித்துள்ளவர்; ஆரவாரம் கொண்டு அடங்காது சீறிப்படம் எடுக்கும் அரவத்தை அரையில் கட்டியவர்; வேல் போன்ற கூரிய அகன்ற கண்ணுடைய உமா தேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; மயானத்தில் இருந்து நடனம் புரிபவர். அவர் ஆரூரில் மேவும் இறைவர் ஆவார்.

54. விண்ட வெண்டலை யேகல னாகவே
கொண்ட கம்பலி தேரும் குழகனார்
துண்ட வெண்பிறை வைத்த இறையவர்
அண்ட வாணர்க்கு அருளும்ஆ ரூரரே.

தெளிவுரை : சிவபெருமான், உடைந்த மண்டை ஓட்டைக் கலனாகக் கொண்டு மகளிரின் மனைதோறும் சென்று பிச்சை ஏற்ற அழகர். துண்டாகிய வெள்ளிய பிறைச் சந்திரனைச் சடை முடியில் சூடிய இறைவர். அப் பெருமான், தேவலோகத்தில் உள்ளவர்களுக்கு அருள்புரிபவர். அவர் ஆரூரில் மேவும் இறைவர் ஆவார்.

55. விடையும் ஏறுவர் வெண்தலை யிற்பலி
கடைகள் தோறுந் திரியும்எங் கண்ணுதல்
உடையும் சீரை யுறைவது காட்டிடை
அடைவர் போலரங் காகஆ ரூரரே.

தெளிவுரை : சிவபெருமான், இடப வாகனத்தில் ஏறி விளங்குபவர்; பிரம கபாலம் ஏந்திப் பலி ஏற்றுத் தாருகவனத்தில் மேவும் மகளிர்தம் மனைகள் தோறும் திரிபவர்; நெற்றியில் கண்ணுடையவர்; கிழிந்த ஆடையைக் கோவணமாகக் கொள்பவர்; மயானத்தில் உறைபவர்; அவர், ஆரூரை அரங்கமாகக் கொண்டு விளங்குபவரே.

56. துளைக்கை வேழத்து உரியுடல் போர்த்தவர்
வளைக்கை யாளையொர் பாகம் மகிழ்வெய்தித்
திளைக்கும் திங்கட் சடையில் திசைமுழுது
அளக்கும் சிந்தையர் போலும்ஆ ரூரரே.

தெளிவுரை : சிவபெருமான், யானையின் தோலை உரித்து அதன் தோலைப் போர்த்திக் கொண்டவர்; வளையல் அணிந்த திருக்கரத்தையுடைய உமாதேவியாரை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்பவர்; பிறைச் சந்திரனைச் சூடிய சடையின் அருள் வளத்தால், எல்லாத் திசைகளையும் அளக்கின்ற அரும் சிந்தையுடையவர். அப்பெருமான், ஆரூரில் வீற்றிருக்கும் இறைவனே ஆவார்.

57. பண்ணின் இன்மொழி யாளையொர் பாகமா
விண்ணி னார்விளங் கும்மதி சூடியே
சுண்ண நீறுமெய்ப் பூசிச் சுடலையின்
அண்ணி யாடுவர் போலும்ஆ ரூரரே.

தெளிவுரை : திருவாரூரில் வீற்றிருக்கும் சிவபெருமான். பண் இசை போன்ற இனிய மொழி பேசும் உமாதேவியாரை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; விண்ணில் மேவும் சந்திரனைச் சூடியவர்; வெண்மையுடைய திருநீற்றினைத் திருமேனியில் பூசித் திகழ்பவர். சுடலையில் மேவி நடனம் புரிபவர்.

58. மட்டு வார்குழ லாளொடு மால்விடை
இட்ட மாஉகந்து ஏறும் இறைவனார்
கட்டு வாங்கம் கனல்மழு மான்தனோடு
அட்ட மாம்புய மாகும்ஆ ரூரரே.

தெளிவுரை : திருவாரூரில் வீற்றிருக்கும் சிவபெருமான், உமாதேவியை உடனாகக் கொண்டு பெருமையுடைய இடபவாகனத்தில் விருப்பமாக ஏறி அமர்ந்து அருள் புரியும் இறைவன் ஆவார். அவர், தண்டு, மழு, மான் ஆகியவற்றுடன் விளங்கும் எட்டுத் தோள்கள் உடையவராய்த் திகழ்பவர்.

59. தேய்ந்த திங்கள் கமழ்சடை யன்கனல்
ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார்
காய்ந்து காமனை நோக்கின கண்ணினார்
ஆய்ந்த நான்மறை ஓதும்ஆ ரூரரே.

தெளிவுரை : திருவாரூரில் வீற்றிருக்கும் சிவபெருமான், பிறைச் சந்திரனை நறுமணம் கமழும் சடை முடியில்  தரித்தவர்; நெருப்பைக் கையில் ஏந்தி இரவில் நடனம் ஆடும் இறைவர்; மன்மதனை எரித்து நோக்கிய நெற்றிக் கண்ணுடையவர். அப்பெருமான் நான்கு மறைகளை ஆய்ந்து ஓதும் பரமரே.

60. உண்டு நஞ்சுகண் டத்துள் அடக்கியங்கு
இண்டை செஞ்சடை வைத்த இயல்பினான்
கொண்ட கோவண ஆடையன் கூர்எரி
அண்ட வாணர் அடையும்ஆ ரூரரே.

தெளிவுரை : சிவபெருமான், நஞ்சினை உட்கொண்டு கண்டத்தில் தேக்கியவர்; செஞ்சடையில் இண்டை மாலை புனைந்து விளங்குபவர்; கோவண ஆடை தரித்தவர்; கொழுந்துவிட்டு எரியும் நெருப்பைக் கையில் கொண்டவர்; தேவர்களால் ஏத்தப்படுபவர். அவர் திருவாரூரில் மேவும் பரமரே.

61. மாலும்நான் முகனும் அறி கிற்கிலார்
கால னாயஅவனைக் கடந்திட்டுச்
சூலம் மான்மழு ஏந்திய கையினார்
ஆலம் உண்டுஅழ காயஆ ரூரரே.

தெளிவுரை : சிவபெருமான், திருமால் நான்முகன் ஆகியவர்களால் அறிய முடியாதவர்; மார்க்கண்டேயருடைய உயிரைக் கவர வந்த காலனைத் திருப்பாதத்தால் உதைத்தவர்; சூலம், மான், மழு ஆகியவற்றைக் கையில் ஏந்தியவர். அப்பெருமான், நஞ்சினை உட்கொண்டு அழகிய திருக்கோலத்துடன் திருநீலகண்டராய்த் திகழ்பவர். அவர் ஆரூரில் மேவும் ஈசனே.

திருச்சிற்றம்பலம்

7. திருஆரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்)

திருச்சிற்றம்பலம்

62. கொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டி
பக்க மேபகு வாயன பூதங்கள்
ஒக்க ஆடல் உகந்துடன் கூத்தராய்
அக்கி னோடரவு ஆர்ப்பர்ஆ ரூரரே.

தெளிவுரை : ஈசன், கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி ஆகிய கருவிகள் இயம்பவும், பூத கணங்கள் பக்கத்தில் இருந்து ஆடி மகிழவும், திருநடனம் செய்பவர். அவர், எலும்பையும் நாகத்தையும் உடன் திகழும் மாலையாகக் கொண்டு ஆடுபவர். அவர், ஆரூரில் மேவும் பெருமானே.

63. எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே
பந்தம் வீடவை யாய பராபரன்
அந்த மில்புகழ் ஆரூர் அரநெறி
சிந்தை யுள்ளும் சிரத்துளும் தங்கவே.

தெளிவுரை : நெஞ்சமே ! நீ எத்தகைய பெருமை மிக்க தவத்தினைச் செய்தனை ! இம்மையில் பந்தம் கொண்டு ஆட்கொண்டு அருள்பவராய் விளங்கிப் பின்னர், மறுமையில் வீட்டின்பமும் ஆகி விளங்குபவர், சிவபெருமான். அப் பெருமான் புகழ்மிக்க ஆரூரில் மேவும் அரநெறியில் வீற்றிருப்பவர். அப் பரமனை நீ சிந்தையில் கொண்டுள்ளாய்; தலையாய பெரும் பொருளாகவும் கொண்டுள்ளனை.

64. வண்டு லாமலர் கொண்டு வளர்சடைக்கு
இண்டை மாலை புனைந்தும் இராப்பகல்
தொண்டர் ஆகித் தொடர்ந்து விடாதவர்க்கு
அண்டம் ஆளவும் வைப்பர்ஆ ரூரரே.

தெளிவுரை : வண்டு ரீங்காரம் செய்யும் தேன் நிறைந்த மலர் கொண்டு இண்டை மாலை புனைந்து சூடியும், இரவும் பகலும் அணுக்கத் தொண்டுகளை இடைவிடாது செய்யும் அன்பர்களுக்கு, அண்டங்களை ஆளும் பெரும் பதவியை அளித்தருளுபவர் ஆரூரில் மேவும் ஈசன் ஆவார்.

65. துன்பெ லாம்அற நீங்கிச் சுபத்தராய்
என்பெ லாம்நெக்கு இராப்பகல் ஏத்திநின்று
இன்பராய் நினைந்து என்றும் இடையறா
அன்ப ராம்அவர்க்கு அன்பர்ஆ ரூரரே.

தெளிவுரை : திருவாரூரில் மேவும் பெருமான், தன்பால் அன்புடையவராகி, இரவும் பகலும் தியானம் செய்யும் அடியவர் பெருமக்களுக்கு அன்பராக விளங்குபவர். அத்தகைய நிலையில், எலும்பும் உருகுமாறு பக்திப் பெருக்கினால் திளைத்து மேவுபவர்களுக்குத் துன்பம் இல்லாத வாழ்வு அமையும். அவர்கள் எல்லாச் சுபங்களையும் இம்மையில் பெற்றவராவர். இத்தகைய பெரு மகிழ்வு நிலையானது மறுமைக்கும் ஆகும் என்பது குறிப்பு. அது பிறாவமையாகிய பெருஞ்சிறப்பும் ஆகும் எனக் கொள்க.

66. முருட்டு மெத்தையில் முன்கிடத் தாமுனம்
அரட்டர் ஐவரை ஆசறுத் திட்டுநீர்
முரட்ட டித்தவத் தக்கன்றன் வேள்வியை
அரட்ட டக்கிதன் ஆரூர் அடைமினே.

தெளிவுரை : நெஞ்சமே ! முரட்டுத் தவத்தையுடைய தக்கனுடைய வேள்வியை அடக்கியவர் சிவபெருமான். இத் தேகத்தை ஈமப்படுகையில் கிடத்துவதற்கு முன்பாக அரட்டை செய்யும் ஐம்புலன்களின் குற்றங்களை அறுத்து, ஆரூர் சென்றடைந்து ஈசனை ஏத்தித் தொழுமின்.

67. எம்மை யாரிலை யானும் உளேனலேன்
எம்மை யாரும் இதுசெய வல்லரே
அம்மை யார்எனக்கு என்றென்று அரற்றினேற்கு
அம்மை யாரைத்தந் தார்ஆரூர் ஐயரே.

தெளிவுரை : எம்மைக் காக்கும் தாய் தந்தையர் இல்லாமற் போனமையால் யானும் உலகில் இருந்து வாழ்வதற்கு இல்லாதவன். என் உடன் தோன்றிய தமக்கையாரும் அவ்வாறு மண்ணுலகிலிருந்து உயிர் நீக்கத் துணிவாராயின் எனக்குத் தாயாய் விளங்குபவரும் காப்பவரும் யாரோ ! எனத்துயருற்று அரற்றியபோது, என் தமக்கையாரை எனக்கு அம்மையாராகத் தந்து வாழ்வித்தவர், ஆரூரில் மேவும் தலைவரே.

68. தண்ட வாளியைத் தக்கன்றன் வேள்வியைச்
செண்டது ஆடிய தேவர் அகண்டனைக்
கண்டு கண்டிவள் காதலித்து அன்பதாய்க்
கொண்டி யாயின வாறுஎன்றன் கோதையே.

தெளிவுரை : ஈசன், தீயவர்களைத் தண்டித்து ஆட்கொண்டு அருள் செய்பவர். அவர், தக்கனுடைய வேள்வியை அழித்து வெற்றி கொண்ட பெருமையுடையவர். அப்பெருமானைத் தொடர்ந்து தரிசித்து மகிழ்ந்த நங்கையானவள், அன்பு மேலிட்டுக் காதல் கொண்டவளாகித் தன்னை மறந்த நிலையில் ஆயினள்.

69. இவள்ந மைப்பல பேசத் தொடங்கினாள்
அவண மன்றெனில் ஆரூர் அரன்எனும்
பவனி வீதி விடங்கனைக் கண்டிவள்
தவனி யாயின வாறுஎன்றன் தையலே.

தெளிவுரை : வீதிவிடங்கப் பெருமானைத் திருவீதியில் பவனி வரும்போதும் கண்டு தரிசித்த நங்கையானவள், தன்னை மறந்து சுற்றியுள்ளவர்களைப் பொருட்டாகக் கொள்ளாமல் ஈசன் புகழைப் பேசத் தொடங்கினாள். அப் பெண்ணின் தெய்வப் பற்றானது தீப்போல் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி விட்டது.

70. நீரைச் செஞ்சடை வைத்த நிமலனார்
காரொத் தமிடற் றர்கனல் வாயரா
ஆரத் தர்உறை யும்மணி ஆரூரைத்
தூரத் தேதொழு வார்வினை தூளியே.

தெளிவுரை : சிவபெருமான், கங்கையைச் செஞ்சடையில் வைத்த நிமலர்; கரிய கண்டத்தை உடையவர்; நஞ்சு உமிழும் அரவத்தை ஆரமாக உடையவர்; ஆரூரில் உறைபவர். அப் பெருமானைத் தூரத்தில் நின்று ஏத்தித் தொழும் அடியவர்களின் வினையானது தூளாகிக் கெடும். இது, கட்புலனுக்குத் தொலைநோக்கு என அமைந்திடுமாயினும், ஈசன் திருவடி மலரைக் கருத்தினுள் பதிக்கும் செம்மையை ஏத்துதலாயிற்று.

71. உள்ள மேயொ ருறுதி உரைப்பன்யான்
வெள்ளம் தாங்கு விரிசடை வேதியன்
அள்ளல் நீர்வயல் ஆரூர் அமர்ந்தஎம்
வள்ளல் சேவடி வாழ்த்தி வணங்கிடே.

தெளிவுரை : உள்ளமே ! உனக்கு உறுதியாக நற்பயன் விளைவிக்கக்கூடிய ஒன்றை உரைக்கின்றேன். சிவ பெருமான், கங்கையைச் சடை முடியில் தரித்தவர்; வேதப்பொருளாக விளங்குபவர்; சேறு நிறைந்தும் நீர் வளம் கொண்டும் விளங்குகின்ற வயல்கள் கொண்ட ஆரூரில் வீற்றிருக்கும் எம் வள்ளல். அப் பெருமானுடைய திருவடியை வாழ்த்தி வணங்குவாயாக. இது ஈசனின் திருவடியைப் போற்றுதலும் வணங்குதலும் இப்பிறவியில் மக்கள் காண வேண்டிய கடமை எனவும் அதுவே உறுதிப் பயன் எனவும் எடுத்தோதப் பெற்றது.

72. விண்ட மாமலர் மேலுறை வானொடும்
கொண்டல் வண்ணனும் கூடி அறிகிலா
அண்ட வாண்னதன் ஆரூர் அடிதொழப்
பண்டை வல்வினை நில்லா பறையுமே.

தெளிவுரை : வரித்த தாமரை மலர்மேல் உறைபவர் பிரமன். மேகம் போன்ற கரிய வண்ணம் கொண்டு விளங்குபவர் திருமால். இவர்கள் இருவரும் சேர்ந்து தேடிச் சென்றும் காண்பதற்கு அரியவராகிய ஈசன், அண்டங்கள்தோறும் நிறைந்து நிற்கும் பெருமான் ஆவார். அப் பெருமானுக்கு, உரித்தாக விளங்குவது ஆரூர். அப் பெருமானின் திருவடியைத் தொழுது போற்றிடப் பண்டை வல்வினை என்று உரைக்கப் பெறும் சஞ்சித வினையானது இன்மையாகும்.

73. மையுலாவிய கண்டத்தன் அண்டத்தன்
கையு லாவிய சூலத்தன் கண்ணுதல்
ஐயன் ஆரூர் அடிதொழு வார்க்கெலாம்
உய்ய லாம்அல்லல் ஒன்றிலை காண்மினே.

தெளிவுரை : சிவபெருமான், கரிய கண்டத்தை உடையவர்; அண்டங்கள் யாவிலும் நிறைந்தவர்; கையில் சூலப்படையுடையவர். நெற்றியில் கண்ணுடையவர். அப் பெருமான் ஆரூரில் வீற்றிருக்கும் தலைவர். அவரைத் தொழுபவர்களுக்கு இவ்வுலகத்தில் எத்தகைய துன்பமும் இல்லை. அவர்கள், வினை வயத்தால் அடையக்கூடிய துன்பம் எதுவாயினும், அதிலிருந்து உய்யலாம். இது நிச்சயம்.

திருச்சிற்றம்பலம்

8. திருஅன்னியூர் (அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், வன்னியூர், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

74. பாற லைத்த படுவெண் தலையினன்
நீற லைத்தசெம் மேனியன் நேரிழை
கூற லைத்தமெய் கோளர வாட்டிய
ஆற லைத்த சடையன்னி யூரனே.

தெளிவுரை : ஈசன், மண்டை ஓட்டைக் கையில் தரித்துள்ளவர்; சிவந்த திருமேனியில், வெண்மையான திருநீற்றை அணிந்திருப்பவர்; உமாதேவியாரைத் தனது திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டு விளங்குபவர்; நாகத்தை மாலையாக அணிந்திருப்பவர்; கங்கையைத் தரித்த சடை முடியடையவர். அவர் அன்னியூரில் மேவும் பெருமானே.

75. பண்டொத் தமொழி யாளையொர் பாகமாய்
இண்டைச் செஞ்சடை யன்னிருள் சேர்ந்ததோர்
கண்டத் தன்கரி யின்னுரி போர்த்தவன்
அண்டத் தப்புறத் தான்அன்னி யூரனே.

தெளிவுரை : அன்னியூரில் வீற்றிருக்கும் சிவபெருமான், பண் போன்ற இனிய மொழி பேசும் உமாதேவியைத் திருமேனியில் பாகமாக உடையவர்; செஞ்சடையில் இண்டைமாலை தரித்தவர்; இருள் போன்ற கரிய வண்ணமுடைய நஞ்சினைக் கண்டத்தில் இருத்தி, நீலகண்டனாக விளங்குபவர்; யானையின் தோலைப் போர்த்தியவர். அவர் அண்டங்களையும் கடந்து விளங்குபவரே.

76. பரவி நாளும் பணிந்தவர் தம்வினை
துரவை யாகத் துடைப்பவர் தம்மிடம்
குரவம் நாறும் குழலுமை கூறராய்
அரவம் ஆட்டுவர் போலன்னி யூரரே.

தெளிவுரை : அன்னியூரில் வீற்றிருக்கும் சிவபெருமான், நாள்தோறும் தன்னைப் பரவிப் பணிந்து ஏத்தும் அடியவர்களுடைய வினையைத் தீர்த்தருள் புரிபவர். குராமலரின் நறுமணம் கமழும் கூந்தலையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு மேவும் அப்பெருமான், நாகத்தை அணிந்து ஆட்டுபவர் ஆவார்.

77. வேத கீதர்விண் ணோர்க்கும் உயர்ந்தவர்
சோதி வெண்பிறை துன்று சடைக்கணி
நாதம் நீதியி னால்அடி யார்தமக்கு
ஆதி யாகிநின் றார்அன்னி யூரரே.

தெளிவுரை : ஈசன், வேதங்களை இனிது இசைத்து விரிப்பவர்; தேவர்களுக்கும் எட்டாதவராய் உயர்ந்து விளங்குபவர். வெண்பிறைச் சந்திரனைச் சடை முடியில் தரித்தவர்; நியமமாக ஒழுகிப் போற்றி வணங்கும் அடியவர்களுக்கெல்லாம் முதற்பொருளாய் விளங்கி அருளைப் பொழிபவர். அப்பெருமான், அன்னியூரில் மேவும் பரமரே.

78. எம்பி ரான்இமை யோர்கள் தமக்கெலாம்
இன்ப ராகி இருந்தஎம் ஈசனார்
துன்ப வல்வினை போகத் தொழுமவர்க்கு
அன்ப ராகிநின் றார்அன்னி யூரரே.

தெளிவுரை : ஈசன், தேவர்களுக்கெல்லாம் தலைவராகத் திகழ்பவர்; எக்காலத்திலும் பேரின்பத்தில் திளைத்துக் கொண்டு இருப்பவர். தொழுது ஏத்தும் அன்பர்களுக்கு அன்பராகி நின்று, துன்பம் தரும் தீவினையைத் தீர்த்தருள்பவர். அவர், அன்னியூரில் வீற்றிருக்கும் பரமரே.

79. வெந்த நீறுமெய் பூசுநன் மேனியர்
கந்த மாலர் சூடும் கருத்தினர்
சிந்தை யார்சிவ னார்செய்ய தீவண்ணர்
அந் ணாளர்கண் டீர்அன்னி யூரரே.

தெளிவுரை : சிவபெருமான், திருநீற்றினைத் திருமேனியில் பூசி விளங்குபவர்; நல்ல திருமேனியுடையவர்; நறுமணம் கமழும் மலர்களைச் சூடும் கருத்தினர்; சிந்தையில் சிவமாக மேவி அன்பினைப் பொழிபவர்; சிவந்த தீயின் வண்ணத்தையுடையவர்; ஒழுக்க சீலம் உடையவராய் விளங்கி அதனைப் பாதுகாத்து ஆள்பவர்; அத்தகைய பெருமான், அன்னியூரில் வீற்றிருக்கும் நாதரே ஆவார். அவரைக் கண்டு ஏத்துவீராக.

80. ஊனை யார்தலை யிற்பல கொண்டுழல்
வானை வானவர் தாங்கள் வணங்கவே
தேனை யார்குழ லாளையொர் பாகமா
ஆனை யீர்உரி யார்அன்னி யூரரே.

தெளிவுரை : சிவபெருமான், ஊன் பொருந்திய மண்டை ஓட்டைப் பிச்சை ஏற்கும் கலனாகக் கொண்டு திரிபவர்; தேவர்களால் வணங்கப் பெறுபவர்; தேன் மணம் கமழும் கூந்தலையுடைய உமாதேவியை, ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; யானையின் தோலை உரித்தவர்; அப்பெருமான் அன்னியூரில் வீற்றிருப்பவரே.

81. காலைப் போய்ப்பலி தேர்வர்கண் ணார்நெற்றி
மேலை வானவர் வந்து விரும்பிய
சோலை சூழ்புறம் காடரங் காகவே
ஆலின் கீழறத் தார்அன்னி யூரரே.

தெளிவுரை : சிவபெருமான், காலைப்பொழுதில் சென்று கபாலம் ஏந்திப் பலி கொள்ளும் தன்மை உடையவர்; நெற்றியில் கண்ணுடையவர்; விண்ணுலகத்தில் மேவும் வானவர்களே வந்து விரும்பிய சோலை சூழ உள்ள மயானத்தை, அரங்காகக் கொண்டு ஆடுபவர், கல்லால மரத்தின் கீழ் இருந்து, தட்சிணாமூர்த்தித் திருக்கோலத்தில் சனகாதி முனிவர்களுக்கு அறப்பொருளை உணர்த்தியவர். அவர், அன்னியூரில் மேவும் இறைவரே.

82. எரிகொள் மேனியர் என்புஅணிந்து இன்பராய்த்
திரியு மூவெயில் தீயெழச் செற்றவர்
கரிய மாலொடு நான்முகன் காண்பதற்கு
அரிய ராகிநின் றார்அன்னி யூரரே.

தெளிவுரை : சிவபெருமான், நெருப்பின் வண்ணத்தைப் போன்ற திருமேனி உடையவர்; எலும்பு மாலை அணிந்துள்ளவர்; எக் காலத்திலும், வரம்பில்லாத இன்பம் உடையவராகி ஆனந்த மயமாய் விளங்குபவர்; வானத்தில் பறந்து சென்று தீங்கும் செய்த மூன்று அசுரர்களின் கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கியவர்; திருமாலும் நான்முகனும் காண்பதற்கு அரியவராகிச் சோதி வடிவாகி, ஓங்கி உயர்ந்து நின்றவர். அவர் அன்னியூரில் மேவும் இறைவரே.

83. வஞ்ச ரக்கன் கரமும் சிரத்தொடும்
அஞ்சும் அஞ்சுமோர் ஆறுநான் கும்இறப்
பஞ்சின் மெல்விர லால்அடர்ந்து ஆயிழை
அஞ்சல் அஞ்சல்என் றார்அன்னி யூரரே.

தெளிவுரை : சிவபெருமான், வஞ்சனையுடைய அரக்கனான இராவணனுடைய இருபது கரங்களும் தோள்களும் தலைமுடிகளுடன் நலியுமாறு அடர்த்து, உமாதேவிக்கு அஞ்சாதே என அருளிச் செய்தவர். அவர் அன்னியூரில் மேவும் இறைவரே.

திருச்சிற்றம்பலம்

9. திருமறைக்காடு (அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

84. ஓத மால்கடல் பாவி உலகெலாம்
மாத ரார்வலம் கொள்மறைக் காடரைக்
காதல் செய்து கருதப்படுமவர்
பாதம் ஏத்தப் பறையும்நம் பாவமே.

தெளிவுரை : சிவபெருமான், கடல் அலைகளின் ஓதம் பெருக விளங்கும் மறைக்காட்டில், நற்குண நங்கையர்கள் வலம் வந்து ஏத்தி வணங்க, வீற்றிருப்பவர். அவர் யாவராலும் அன்புடன் ஏத்தப்படுபவர். அப் பரமனின் திருவடி மலரைப் பணிய, நம் பாவங்கள் யாவும் விலகிச் செல்லும்.

85. பூக்கும் தாழை புறணி அருகெலாம்
ஆக்கந் தானுடை மாமறைக் காடரோ
ஆர்க்கும் காண்பரி யீர்அடி யார்தம்மை
நோக்கிக் காண்பது றும்பணி செய்யிலே.

தெளிவுரை : நீர்க்கால்வாயின் கரையில் தாழை பூக்க நறுமணம் வீசும் தன்மையைப் போன்று, ஆக்கத்தை உடைய மாமறைக் காட்டில் மேவும் ஈசனே ! தேவரீரை யாராலும் காண முடியாது. ஆயினும், தேவரீருக்குப் பணி செய்யும் அடியவர் பெருமக்களை நீவிர் நன்கு நோக்கிக் காண்பவராவீர் !

86. புன்னை ஞாழல் புறணி அருகெலாம்
மன்னி னார்வலம் கொள்மறைக் காடரோ
அன்ன மெல்நடை யாளையொர் பாகமாச்
சின்ன வேடம் உகப்பது செல்வமே.

தெளிவுரை : புன்னை, ஞாழல் ஆகிய மரங்கள் ஊர்ப் புறத்தே உள்ள ஓடை களின் மருங்கே திகழ விளங்கும் மறைக்காட்டில் வீற்றிருக்கும் பெருமானே ! தேவரீர் உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்கும் திருவேடம் அல்லவா விரும்புகின்ற செல்வம் என ஆகியது.

87. அட்ட மாமலர் சூடி அடும்பொடு
வட்டப் புன்சடை மாமறைக் காடரோ
நட்டம் ஆடியும் நான்மறை பாடியும்
இட்ட மாக இருக்கும் இடமிதே.

தெளிவுரை : அட்ட மாமலர் எனப்படும் புன்னை, வெள்ளெருக்கு, செண்பகம், நந்தியாவர்த்தம், நீலோற்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை ஆகியவற்றுடன் அரும்பு என்னும் ஒருவகைக்  கொடிப்பூவும் சடை முடியைச் சுற்றி அணிந்து மேவும் மறைக்காடர், நடனம்புரிந்தும் நான்கு மறைகளை  ஓதியும் திகழ்பவர். அப்பெருமான் விருப்பத்துடன் மேவும் இடமாவது மறைக்காடே ஆகும்.

88. நெய்தல் ஆம்பல் நிறைவயல் சூழ்தரும்
மெய்யி னார்வலங் கொள்மறைக் காடரோ
தையல் பாகங்கொண் டீர்கவர் புன்சடைப்
பைதல் வெண்பிறை பாம்புடன் வைப்பதே.

தெளிவுரை : நெய்தல், ஆம்பல் ஆகிய மலர்கள் நிறைந்து நீர் வளம் பெருகும் வயல்கள் சூழ்ந்தும், மெய்யன்பு உடையவர்கள் வலங்கொளத் திகழ்ந்து விளங்குவதும் ஆகிய மறைக்காட்டில் மேவும் பெருமான், உமாதேவியை ஒரு பாகத்தில் கொண்டு விளங்குபவர். அவர், பிறைச் சந்திரனைக் கவருமாறு மேவும் நாகத்தைச் சடை முடியில் வைத்த பாங்குதான் என்னே !

89. துஞ்சும் போதும் துயிலின்றி யேத்துவார்
வஞ்சின் றிவலங் கொள்மறைக் காடரோ
பஞ்சின் மெல்லடிப் பாவை பலிகொணர்ந்து
அஞ்சி நிற்பதம் ஐந்தலை நாகமே.

தெளிவுரை : இத் தேகமானது, உறங்குகின்ற காலத்திலும் உள்ளுக்குள் விளங்கும் ஆன்மாவானது, உறங்காது விழிப்புணர்வுடன் ஈசனை ஏத்தித் துதித்துக்கொண்டு இருக்கும். அத் தன்மையுடைய உத்தமர்கள், திருக்கோயில் வலம் வந்து ஏத்த வீற்றிருக்கும் மறைக்காட்டு நாதருக்கு, மென்மை உடைய பாவையானவள் பலியிட்டு உபசரிப்பதற்கு அஞ்சினள். அதற்குக் காரணம், ஈசனிடம் மேவும் ஐந்தலை நாகமே.

90. திருவி னார்செல்வ மல்கு விழாவணி
மருவி னார்வலங் கொள்மறைக் காடரோ
உருவி னாள்உமை மங்கையொர் பாகமாய்
மருவி னாய்கங்கை யைச்சென்னி தன்னிலே.

தெளிவுரை : செம்மையான உள்ளம் உடைய செல்வந்தர்கள், விழாக்களின் சிறப்புடைய திருக்கோயிலை வலம் வர மேவும் மறைக்காட்டு நாதர், உமாதேவியை ஒரு பாகமாகக்  கொண்டு விளங்கிக் கங்கையைச் சென்னியில் தரித்துள்ளவர்.

91. சங்கு வந்துஅலைக் கும்தடம் கானல்வாய்
வங்க மார்வலங் கொள்மறைக் காடரோ
கங்கை செஞ்சடை வைப்பதும் அன்றியே
அங்கை யில்அனல் ஏந்தல் அழகிதே.

தெளிவுரை : சங்குகளை அலைகளின் வாயிலாகக் கொண்டு வந்து சேர்க்கும் சோலைகள் சூழ்ந்த கரையில், கப்பல்கள் வலம் கொள்ளும் சிறப்புடைய மறைக்காட்டில் மேவும் பெருமான், கங்கையைச் சடை முடியில் வைத்ததோடு அல்லாமல், நெருப்பைக் கையில் ஏந்தி, அழகுடன் விளங்குபவர். அப் பெருமானை ஏத்துமின் என்பது குறிப்பு.

92. குறைக்காட் டான்விட்ட தேர்குத்த மாமலை
இறைக்காட் டிஎடுத் தான்தலை ஈரைந்தும்
மறைக்காட் டான்இறை யூன்றலும் வாய்விட்டான்
இறைக்காட் டாய்எம் பிரானுனை யேத்தவே.

தெளிவுரை : இராவணன் புட்பக விமானத்தில் மேலே பறந்து சென்றபோது கயிலை மலையில் முட்டி நின்றது. அதனால் அம் மலையை எடுத்துப் பிறிதோர் இடத்தில் வைக்க வேண்டும் எனக் கருதிப் பெயர்த் தெடுக்க, அவனுடைய பத்துத் தலைகளும் நெரியுமாறு சிறிது ஊன்றியவர், மறைக்காட்டில் வீற்றிருக்கும் ஈசன். அதனால் அவ்வரக்கன் வாய்விட்டு அலறினான். எம் பெருமானே ! நான் தேவரீரை ஏத்திப் போற்றுவதற்காக எனக்கு இறப்பினைக் காட்டாது அருள் புரிபவர் ஆயினீர்.

திருச்சிற்றம்பலம்

10. திருமறைக்காடு (அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

93. பண்ணின் நேர்மொழி யாள்உமை பங்கரோ
மண்ணி னார்வலம் செய்ம்மறைக் காடரோ
கண்ணி னால்உமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.

தெளிவுரை : சிவபெருமானே ! யாழில் எழும் பண் போன்ற இனிய மொழியினைப் பகரும் உமாதேவியைப் பாகமாகக் கொண்ட ஈசனே ! தேவரீர், இம் மண்ணுலகத்தவர் வலம் வந்து தொழுது ஏத்தும் மறைக்காடர். அடியவர்களாகிய நாங்கள், தேவரீரைக் கண்ணாரக் கண்டு தரிசிப்பதற்குத் திருக் கதவைத் திறந்து அருள் செய்வீராக.

94. ஈண்டு செஞ்சடை ஆகத்துள் ஈசரோ
மூண்ட கார்முகி லின்முறிக் கண்டரோ
ஆண்டு கொண்டநீ ரேஅருள் செய்திடும்
நீண்ட மாக்கத வின்வலி நீக்குமே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், சிவந்த சடைமுடியுடன் திகழ்பவர்; கரிய மேகத்திலும் மிகுந்த கருமையுடைய கண்டத்தை உடையவர்; அடியேனை ஆட்கொண்ட தேவரீர், அருள் செய்வீராக; நீண்டு விளங்குகின்ற இத் திருக்கதவினை அடைத்துத் தடுத்திருக்கின்ற வலிமையான தாளை நீக்குவீராக.

95. அட்ட மூர்த்திய தாகிய அப்பரோ
துட்டர் வான்புரம் சுட்ட சுவண்டரோ
பட்டம் கட்டிய சென்னிப் பரமரோ
சட்ட இக்கத வம்திறப் பிம்மினே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், அட்டமூர்த்தியாய் விளங்கும் பெரியவர்; தீயவர்களாகிய அசுரர்களில் மூன்று புரங்களை எரித்தவர்; சென்னியில் திருப்பட்டத்தைக் கட்டி விளங்கும் பரமர்; இக்கதவை விரைவில் திறக்குமாறு செய்வீராக.

96. அரிய நான்மறை யோதிய நாவரோ
பெரிய வான்புரம் சுட்ட சுவண்டரோ
விரிகொள் கோவண ஆடை விருத்தரோ
பெரிய வான்கத வம்பிரிவிக்கவே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், நான்க மறைகளை விரித்து ஓதியவர்; முப்புரங்களை எரித்தவர்; கோவண ஆடையை அணிந்திருப்பவர். பெருமைக்குரிய இக்கதவைத் திறக்க வைப்பீராக.

97. மலையில் நீடிருக் கும்மறைக் காடரோ
கலைகள் வந்திறைஞ் சும்கழல் ஏத்தரோ
விலையில் மாமணி வண்ண உருவரோ
தொலைவி லாக்கத வம்துணை நீக்குமே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், மலைப்பினைத் தருமாறு, அழியாதவாறு ஊழிதோறும் நிலைத்திருக்கும் மறைக்காட்டில் மேவும் பெருமானே ! வேதங்களாகிய கலைகளால் ஏத்தப்பெறும் ஈசனே ! விலை மதிக்க முடியாத பெருமையுடைய மாணிக்க வண்ணம் உடைய பரமனே ! அண்மையில் தாளிட்டு இருக்கும் இத் திருக்கதவினைத் திறக்கச் செய்வீராக.

98. பூக்கும் தாழை புறணி யருகெலாம்
ஆக்கும் தண்பொழில் சூழ்மறைக் காடரோ
ஆர்க்கும் காண்பரி யீரடி கேள்உமை
நோக்கிக் காணக் கதவைத் திறவுமே.

தெளிவுரை : நீர்க்கரையின் புறங்களில் தாழை பூக்கும் பொழில் சூழ மேவும் மறைக்காட்டில் மேவும் ஈசனே ! யாராலும் காண்பதற்கு அரியராக விளங்கும் அடிகளே ! தேவரீரை யாம் தொழுவதற்குக் கதவைத் திறவீராக.

99. வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தரோ
அந்த மில்லி யணிமறைக் காடரோ
எந்தை நீயடி யார்வந்து இறைஞ்சிட
இந்த மாக்கத வம்பிணி நீக்குமே.

தெளிவுரை : திருநீறு பூசி விளங்கும் விகிர்தனே ! எக்காலத்திலும் அழியாத அழகுடைய மறைக்காட்டீசரே ! அடியவர்கள் வந்து இறைஞ்சுகின்றோம். பெருமைக்குரிய இக் கதவத்தின் பிணியை நீக்குவீராக.

100. ஆறு சூடும் அணி மறைக் காடரோ
கூறு மாதுமைக் கீந்த குழகரோ
ஏற தேறிய எம்பெரு மான்இந்த
மாறி லாக்கத வம்வலி நீக்குமே.

தெளிவுரை : ஈசனே ! கங்கையைத் தரித்த மறைக்காட்டு ஈசனே ! உமாதேவிக்கு ஒரு பாகத்தை வழங்கி அருளிய பரமனே ! இடப வாகனத்தில் ஏறிய எம்பெருமானே ! மாற்றமில்லாத இக் கதவின் வலிமையான தாளை நீக்குவீராக.

101. சுண்ண வெண்பொடிப் பூசும் சுவண்டரோ
பண்ணி யேறுகந்து ஏறும் பரமரோ
அண்ண லாதி அணி மறைக் காடரோ
திண்ண மாக்கத வம்திறப் பிம்மினே.

தெளிவுரை : ஈசனே ! திருவெண்ணீறு பூசும் பரமனே ! நன்கு அலங்காரம் செய்யப்பட்ட இடபத்தை விழைந்து ஏறிய பரம் பொருளே ! அண்ணலே ! ஆதி காலத்திலிருந்து ஊழிகளால் அழியாதவாறு நிலைத்து மேவும் மறைக்காட்டில் நாதரே ! உறுதியாக விளங்கும் இக் கதவைத் திறக்கச் செய்வீராக.

102. விண்ணு ளார்விரும் பிஎதிர் கொள்ளவே
மண்ணு ளார்வணங் கும்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.

தெளிவுரை : தேவர்கள் எல்லாரும் விரும்பி எதிர்கொள்ளவும், மண்ணுலகத்தில் உள்ள அடியவர்கள் எல்லாரும் வணங்கவும் திகழும் மறைக்காட்டு நாதனே ! தேவரீரைக் கண்ணால் காண வேண்டும். திண்ணமாக இக் கதவினைத் திறந்து அருள் செய்வீராக.

103. அரக்கனைவிர லால்அடர்த் திட்டநீர்
இரக்கம் ஒன்றிலீர் எம்பெரு மானிரே
சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ
சரக்க இக்கத வம்திறப் பிம்மினே.

தெளிவுரை : புன்னை மரங்கள் பெருகிச் சூழ்ந்து மலர்களைச் சொரியும் மறைக்காட்டில் விளங்கும் பெருமானே ! கயிலை மலையை எடுத்த இராவணனைத் திருப்பாதவிரலால் அடர்த்து எநரித்த ஈசனே ! எம் பெருமானே ! தேவரீர் இரக்கம் அற்றவரானீர் ! இக் கதவுகளை விரைவில் திறக்குமாறு செய்வீராக.

திருச்சிற்றம்பலம்

11. திருமீயச்சூர் - இளங்கோயில் (அருள்மிகு சகலபுவனேஸ்வரர் திருக்கோயில், திருமீயச்சூர், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

104. தோற்றும் கோயிலும் தோன்றிய கோயிலும்
வேற்றுக் கோயில் பலஉள மீயச்சூர்க்
கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடையரற்கு
ஏற்றம் கோயில் கண் டீர்இளங் கோயிலே.

தெளிவுரை : திருக்கோயில்கள் பல ஆங்காங்கே எழுப்பப் பெற்று, இறைவனுடைய திருமூர்த்தங்களை நிலை நிறுத்தித் தாபித்து மக்கள் வழிபடுகின்றனர். முன்னரே விளங்கும் சிவாலயங்கள் பல உள்ளன. வெவ்வேறு இடங்களிலும் வழிபடுகின்ற கோயில்கள் பல உள்ளன. இனி வரும் காலங்களில் தோன்றி வழிபடத்தக்க திருக்கோயில்களும் சிறப்புற விளங்க உள்ளன. கூற்றுவன் மீது பாய்ந்து சென்று அழித்தவரும், குளிர்ந்த சடை முடி உடையவருமாகிய சிவபெருமானுக்கு ஏற்றமாக விளங்குவதானது, மீயச்சூரில் திகழும் இளங்கோயிலே.

105. வந்த னையடைக் கும்மடித் தொண்டர்கள்
பந்தனை செய்து பாவிக்க நின்றவன்
சிந்தனை திருத் தும்திரு மீயச்சூர்
எந்த மையுடை யார்இளங் கோயிலே.

தெளிவுரை : திருவடிக்குத் தொண்டு செய்யும் அணுக்கத் தொண்டர்கள், வந்தனை செய்து பக்திப் பெருக்கால் கசிந்து உருகிப் போற்ற, அவர்களைத் திருவருளால் பந்தப்படுத்திச் சிவானந்தத் தேனைப் பருகுமாறு பாலித்தருள்புரிபவர், சிவபெருமான். அவர், அத்திருத் தொண்டர்கள்பால் உலகப்பற்றானது தோன்றி, அஞ்ஞானத்தில் சாராதவாறு அகத்தில் புகுந்து குளிர்வித்துச் சிந்தனையில் தெளிவை ஊறச் செய்து, என்னையும் ஆட்கொண்டிருப்பவர். அப்பெருமான் வீற்றிருப்பது திருமீயச்சூரின் இளங்கோயிலே ஆகும்.

106. பஞ்ச மந்திரம் ஓதும் பரமனார்
அஞ்ச ஆனை உரித்தனல் ஆடுவார்
நெஞ்சம் வாழி நினைந்திரு மீயச்சூர்
எந்தமை யுடை யார்இளங் கோயிலே.

தெளிவுரை : சிவபெருமான், பஞ்ச மந்திரங்களை ஓதும் பரமனார் ஆவார். அவர் யாவரும் அச்சம் கொண்டு விதிர்க்குமாறு, யானையின் தோலை உரித்தவர்; கையில் அனலை ஏந்தி ஆடுபவர்; நெஞ்சமே ! நீ அப் பெருமானை மனதார வாழ்த்தி நினைத்து ஏத்தி இருப்பாயாக; அவர் எம்மை ஆளாகக் கொண்டுள்ளவர்; அவர் மீயச்சூர் இளங்கோயிலில் வீற்றிருப்பவரே.

107. நாறு மல்லிகை கூவிளம் செண்பகம்
வேறு வேறு விரித்த சடையிடை
ஆறு கொண்டுகந் தான்திரு மீயச்சூர்
ஏறு கொண்டுகந் தார்இளங் கோயிலே.

தெளிவுரை : சிவபெருமான், நறுமணம் கமழும் மல்லிகை, வில்வம், செண்பகம் ஆகிய மலர்களைச் சடையின்மீது தரித்துக் கங்கையைக் கொண்டு விளங்குபவர். அப் பரமன், இடபத்தை வாகனமாகக் கொண்டு திருமீயச்சூர் இளங்கோயிலில் உகந்து வீற்றிருப்பவர்.

108. வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே
கவ்வ வண்ணக் கனல்விரித்து ஆடுவர்
செவ்வ வண்ணம் திகழ்திரு மீயச்சூர்
எவ்வ வண்ணம் பிரான்இளங் கோயிலே.

தெளிவுரை : சிவபெருமான், வெம்மையினைக் காண்போரின் உள்ளத்தில் காட்டும் தன்மையுடைய நாகத்தை அணிந்திருப்பவர். அவர், அத்தகைய நாகம் அஞ்சுகின்ற நெருப்பினைக் கையில் ஏந்தி நடனம் புரிபவர். அப் பெருமான், செவ்வண்ணத் திருமேனி உடையவராய்த் திகழும் திருமீயச்சூரில், அருள் வண்ணத்தினராக இளங்கோயிலில் வீற்றிருக்கும் தலைவர் ஆவார்.

109. பொன்னம் கொன்றையும் பூவணி மாலையும்
பின்னும் செஞ்சடை மேற்பிறை சூடிற்று
மின்னு மேகலை யாளொடு மீயச்சூர்
இன்ன நாள்அக லார்இளங் கோயிலே.

தெளிவுரை : சிவபெருமான், பொன் போன்ற அழகிய கொன்றை மாலையும், மற்றும் ஏனைய மலர்களால் அழகுடன் தொடுக்கப்பெற்ற மாலைகளும், செஞ்சடையில் இணைத்துப் பின்னி விளங்க, அதன் மீது பிறைச் சந்திரனைச் சூடித் திகழ்பவர். அப்பெருமான், ஒளிவிடுகின்ற மேகலை அணிந்து மேவும் உமாதேவியாரை உடனாகக் கொண்டு எல்லாக் காலத்திலும் அகலாது வீற்றிருக்கும் இடமாவது திருமீயச்சூர் இளங்கோயிலே ஆகும்.

110. படைகொள் பூதத்தன் பைங்கொன்றைத் தாரினன்
சடைகொள் வெள்ளத்தன் சாந்தவெண் ணீற்றினன்
விடைகொள் ஊர்தியி னான்திரு மீயச்சூர்
இடைகொண்டு ஏத்தநின் றார்இளங் கோயிலே.

தெளிவுரை : சிவபெருமான், பூத கணங்களைப் படையாகக் கொண்டுள்ளவர்; கொன்றைமாலை தரித்த சடை முடியில் கங்கையைக் கொண்டுள்ளவர்; அமைதியை நல்கும் திருவெண்ணீற்றைக் குழைத்து மணம் கமழப் பூசி விளங்குபவர்; இடப வாகனத்தை உடையவர். அப்பெருமான், திருமீயச்சூர் இளங்கோயிலை இடமாகக் கொண்டு எல்லாரும் ஏத்துமாறு வீற்றிருப்பவர்.

111. ஆறு கொண்ட சடையினர் தாமுமோர்
வேறு கொண்டதொர் வேடத்தர் ஆகிலும்
கூறு கொண்டுகந் தாளொடு மீயச்சூர்
ஏறு கொண்டுகந் தார்இளங் கோயிலே.

தெளிவுரை : சிவபெருமான் கங்கையைத் தரித்த சடை முடியுடையவர்; பலவாகிய திருவேடங்களைக் கொண்டு தோன்றி அடியவர்களை மகிழ்வித்து நல்லருள் புரிபவர்; உமாதேவியைத் திருமேனியில் பாகம் கொண்டு விளங்குபவராகி மீயச்சூர் இளங்கோயிலில் இடபத்தை வாகனமாகக் கொண்டு வீற்று இருப்பவர்.

112. வேதத் தான்என்பர் வேள்வியு ளான்என்பர்
பூதத் தான்என்பர் புண்ணியன் தன்னையே
கீதத் தான்கிள ருந்திரு மீயச்சூர்
ஏதம் தீர்க்கநின் றார்இளங் கோயிலே.

தெளிவுரை : சிவபெருமான், வேதங்களில் மலர்ந்து விளங்குபவராகவும், வேள்வியின்கண் திகழ்பவராகவும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களாக இருப்பவராகவும், எல்லாராலும் ஏத்தப் பெறுபவர். அப் புண்ணியனாகிய ஈசன் இனிய கீதமாகத் திருமீயச்சூர் இளங்கோயிலில் அடியவர்களின் குற்றங்களாகிய வினைகளைத் தீர்த்தருள் புரிய வீற்றிருப்பவர்.

113. கடுக்கண் டன்கயி லாய மலைதனை
எடுக்கல் உற்றஇரா வணன் ஈடற
விடுக்கண் இன்றி வெகுண்டவன் மீயச்சூர்
இடுக்கண் தீர்க்குநின் றார்இளங் கோயிலே.

தெளிவுரை : கரிய விடத்தைக் கண்டத்தில் தேக்கிய ஈசன் தான் விளங்கும் கயிலை மலையைப் பெயர்த்து எடுக்கலுற்ற இராவணனுடைய பெருமை அழியுமாறு வெகுண்டு அடர்த்தவர். அடியவர்களின் துன்பங்களைத் தீர்த்தருளும் பொருட்டு மீயச்சூர் இளங் கோயிலில் வீற்றிருப்பவர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

12. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

114. கரைந்து கைதொழு வாரையும் காதலன்
வரைந்து வைதெழு வாரையும் வாடலன்
நிரந்த பாரிடத் தோடவர் நித்தலும்
விரைந்து போவது வீழி மிழலைக்கே.

தெளிவுரை : சிவபெருமான், தன்னைக் கையால் தொழுது போற்றி, ஏத்திக் கசிந்து, உள்ளம் உருக வேண்டி நிற்கும் அன்பர்களுக்குப் பேரன்புடன் அருள் புரிபவர். மருளால் சூழப்பெற்று, அதனால் ஆட்கொண்டு இனிய வார்த்தைகளைத் துறந்து, இகழ்ந்து பேசுபவர்களை இடர் செய்யாதவர். அப்பெருமான், பூதகணத்தினரால் சூழப் பெற்று விளங்கி, நாள்தோறும் விரைந்து மேவி, அடியவர்களுக்கு அருள் புரியும் இடமாவது, வீழிமிழலையே ஆகும்.

115. ஏற்று வெல்கொடி ஈசன்றன் ஆதிரை
நாற்றம் சூடுவர் நன்னறுந் திங்களார்
நீற்றுச் சந்தன வெள்ளை விரவலார்
வேற்றுக் கோலங்கொள் வீழி மிழலையே.

தெளிவுரை : சிவபெருமான், இடபத்தை வெற்றிக் கொடியாக உடையவர்; திருவாதிரை என்னும் திருநாளுக்கு உரியவர்; நறுமணம் கமழும் மலர்கள் பல சூடி விளங்குபவர்; சந்திரனை அணிந்து திகழ்பவர்; திருவெண்ணீற்றைச் சந்தனம் போன்று குழையப் பூசிப் பற்பல திருவேடங்களையும் கொண்டு மேவுபவர். அப்பெருமான் வீற்றிருப்பது, வீழிமிழலையே ஆகும்.

116. புனைபொற் சூலத்தன் போர்விடை யூர்தியான்
வினைவெல் நாகத்தன் வெண்மழு வாளினான்
நினைய நின்றவன் ஈசனை யேஎனா
வினையி லார்தொழும் வீழி மிழலையே.

தெளிவுரை : சிவபெருமான், பொன்போன்று ஒளிரும் சூலப்படையுடையவர்; போர்த் தினவு உடைய இடபத்தை வாகனமாகக் கொண்டவர்; வினைகளால் பற்றப்படாதவர்; நாகத்தை அணிந்திருப்பவர்; ஒளிமிகும் மழுப்படையுடையவர். அப்பெருமான், தன்னை தொழும் அடியவர்களின் வினையைத் தீர்த்தருள்பவர். அத்தகைய அடியவர்கள் விளங்கும் வீழிமிழலையில், ஈசன் வீற்றிருப்பவர்.

117. மாடத் தாடு மனத்துடன் வைத்தவர்
கோடத் தார்குருக் கேத்திரத் தார்பலர்
பாடத் தார்பழிப் பார்பழிப் பல்லதோர்
வேடத் தார்தொழும் வீழி மிழலையே.

தெளிவுரை : திருவீழிமிழலை என்னும் திருத்தலமானது, விமானம் செய்து விண்ணிலிருந்து தருவித்த திருமால், இந்திரன் ஆகியவர்களால் தொழப்படும் சிறப்புடையதாகும். மற்றும் குரு÷க்ஷத்திரத்தில் மேவிய பாண்டவர்களால் ஏத்தப் பெற்றதும் ஆகும். வேதம் ஓதும் பிரமன் மற்றும் அந்தணர்களால் ஏத்தப் பெறும் பெருமை உடையது வீழிமிழலை. பக்தியுடையவர்களாகியப் பழிமுதலாகிய வினைகளிலிருந்து நீங்கிய சிவ வேடப் பொலிவுடைய அடியவர் பெருமக்களால் ஏத்தப் பெறுவதும், இத் திருப்பதியே ஆகும்.

118. எடுத்த வெல்கொடி யேறுடை யான்தமர்
உடுப்பர் கோவணம் உண்பது பிச்சையே
கெடுப்ப தாவது கீழ்நின்ற வல்வினை
விடுத்துப் போவது வீழி மிழலைக்கே.

தெளிவுரை : இடபத்தைக் கொடியாக உடைய சிவ பெருமானின் அடியவர்கள், கோவண உடையும் பிச்சை ஏற்று உணவும் கொள்வர். அவர்கள் வினையை முற்ற நீக்கியவராகி, வீழிமிழலையில் வீற்றிருக்கும் நாதனைத் தரிசிப்பவர் ஆவர்.

119. குழலை யாழ்மொழி யார்இசை வேட்கையால்
உழலை யாக்கையை ஊணும் உணர்விலீர்
தழலை நீர்மடிக் கொள்ளன்மின் சாற்றினோம்
மிழலை யானடி சாரவிண் ஆள்வரே.

தெளிவுரை : உடலின் மீது பற்றும், உணவின் மீது நாட்டமும், குழலும் யாழும் போன்ற இனிய மொழி பேசுபவர்கள்பால் வேட்கையும் கொண்டு, திரியும் நெஞ்சமே ! இது, நெருப்பை மடியில் கட்டிக்கொண்டு திரியும் கொள்கையைப் போன்றது. இது, நும்மைத் துன்பத்தில் ஆழ்த்திவிடும். எனவே அதனை விட்டுவிடு மிழலையில் வீற்றிருக்கும் ஈசனைச் சார்ந்து ஏத்துக. அது நும்மை விண்ணுலகத்தில் ஆள வைக்கும் பெருமையை நல்கும்.

120. தீரன் தீத்திர ளன்சடைத் தங்கிய
நீரன் ஆடிய நீற்றவண் டார்கொன்றைத்
தாரன் மாலையன் தண்நறுங் கண்ணியன்
வீரன் வீழி மிழலை விகிர்தனே.

தெளிவுரை : சிவபெருமான், முற்றும் உணர்ந்த பெருமான், தீத்திரட்சியாய் ஓங்கி உயர்ந்தவர்; சடை முடியில் கங்கையைத் தரித்தவர்; திருநீற்றினைத் திருமேனியில் பூசி விளங்குபவர்; கொன்றை மாலை தரித்தவர்; நறுமணம் கமழும் மலர் மாலைகளைச் சூடியவர்; வீரம் மிக்கவர்; அவர், வீழிமிழலையுள் மேவும் விகிர்தரே ஆவார்.

121. எரியி னார்இறை யார்இடு காட்டிடை
நரியி னார்பரி யாமகிழ் கின்றதோர்
பெரிய னார்தம் பிறப்பொடு சாதலை
விரியி னார்தொழும் வீழி மிழலையே

தெளிவுரை : சிவபெருமான், நெருப்பைக் கையில் ஏந்திய இறைவனார்; மயானத்தில் திரியும் நரிகளைப் பரிகளாக்கிய பெருமையுடையவர்; பிறப்பும் இறப்பும் இல்லாதவர் அப்பரமன் வீற்றிருப்பது, யாவரும் தொழுது ஏத்தும் வீழிமிழலையாகும்.

122. நீண்ட சூழ்சடை மேலொர் நிறைமதி
காண்டு சேவடி மேலொர் கனைகழல்
வேண்டு வாரவர் வீதி புகுந்திலர்
மீண்டும் போவது வீழி மிழலைக்கே.

தெளிவுரை : ஈசன், நீண்டு விளங்கும் சடைமுடியின் மீது பிறைச் சந்திரனைச் சூடி விளங்குபவர். திருவடியில் வீரக் கழலை அணிந்துள்ளவர். அப்பெருமானைக் கண்டு தரிசனம் செய்ய வேண்டும் எனக் கருதித் திருவீதியில் பவனி வருவார் என எண்ணியது நெஞ்சம். அப்பெருமான் வாராமையால், திருவீழிமிழலையில் சென்று காணப் புகுந்தது.

123. பாலை யாழொடு செவ்வழி பண்கொள
மாலை வானவர் வந்து வழிபடும்
ஆலை யாரழல் அந்தணர் ஆகுதி
வேலை யார்தொழும் வீழி மிழலையே.

தெளிவுரை : யாழ் கொண்டு மீட்டிப் பாலையும் செவ்வழியும் இசைக்கப் பாடிப் போற்றும் பக்தர்கள் நிலவ, தேவர்கள் வந்து வழிபாடு செய்ய, அந்தணர்கள் வேள்வித் தீயை வளர்த்து வேதங்களை ஓத, வீழி மிழலையில் வீற்றிருக்கும் ஈசனை ஏத்துவாராயினர்.

124. மழலை யேற்று மணாளன் திருமலை
சுழல ஆர்த்தெடுத் தான்முடி தோளிறக்
கழல்கொள் காலில் திருவிரல் ஊன்றலும்
மிழலை யானடி வாழ்கென விட்டதே.

தெளிவுரை : சிவபெருமான், இளமையுடைய இடபத்தை வாகனமாக உடையவர். உமாதேவி சமேதராய் மணவாளக் கோலத்தில் வீற்றிருப்பவர். கயிலையை எடுத்த இராவணனுடைய முடியும் தோளும் நெரியுமாறு, தனது வீரக்கழல் அணிந்த திருப்பாத விரலால் ஊன்றி அப்பெருமான், மிழலைப் பெருமான் வாழ்க எனக் கூறக் கேட்டதும் விடுத்தனர்.

இது, இத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஈசனின் கருணைத் திறத்தினை, வியந்து ஏத்துதலாயிற்று.

திருச்சிற்றம்பலம்

13. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

125. என்பொ னேஇமை யோர்தொழு பைங்கழல்
நன்பொ னேநலந் தீங்கறி வொன்றிலேன்
செம்பொ னேதிரு வீழி மிழலையுள்
அன்ப னேஅடி யேனைக் குறிக்கொளே.

தெளிவுரை : எனக்குப் பொன்போன்று மேவும் மேலான நற்பொருளே ! தேவர்களால் தொழுது ஏத்தும் இனிய திருவடியை உடைய நற்பொன் போன்ற ஈசனே ! அடியவன் நன்மை யாது என்றும், தீமை யாது என்றும் அறியும் அறிவு இல்லாதவன். திருவீழிமிழலையில் பேரன்புடையவராய் வீற்றிருக்கும் நாதனே ! அடியவனைக் குறியாகக் கொண்டு காத்தருள்வீராக.

126. கண்ணி னால்களி கூரக்கை யால்தொழுது
எண்ணு மாறு அறி யாதுஇளைப் பேன்றனை
விண்ணு ளார்தொழும் வீழி மிழலையுள்
அண்ண லேஅடி யேனைக் குறிக்கொளே.

தெளிவுரை : தேவர்கள் தொழுது போற்றும் வீழிமிழலைழுயுள் வீற்றிருக்கும் அண்ணலே! தேவரீரைக் கண்களால் கண்டு தரிசித்து மகிழும் பாங்கும், கையால் தொழுது ஏத்திதச் தேவரீரைத் தியானித்து உருகி நிற்கும் ஞானமும் அறியாது இளைக்கின்றேன். அடியவனைத் தேவரீர், குறியாகக் கொண்டு அருள்புரிவீராக.

127. ஞாலமேவிசும் பேநலம் தீமையே
கால மேகருத் தேகருத் தால்தொழும்
சீல மேதிரு வீழி மிழலையுள்
கோல மேஅடி யேனைக் குறிக்கொமே.

தெளிவுரை : திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் அழகிய பெருமானே ! பூமியும் ஆகாயமும் ஆக விளங்கும் நாதனே ! நன்மை தீமைக்கும், காலமும் கருத்தும் ஆகி விளங்கும் பொருளுக்கும் ஒழுக்கமாகிய சீலத்திற்கும் உரிய ஆதாரப் பெரும் பொருளாக மேவும் பரமனே ! அடியவனைக் குறியாகக் கொண்டு காத்தருள்வீராக.

128. முத்த னேமுதல் வாமுகி ழும்முளை
ஒத்த னேஒரு வாஉரு வாகிய
சித்த னேதிரு வீழி மிழலையுள்
அத்த னேஅடி யேனைக் குறிக்கொளே.

தெளிவுரை : திருவீழிமிழலையுள் மேவும் அன்புடைய தலைவனே ! முத்தியாகிய நலத்திற்கு உரிய நாதனே ! முதற்பொருளாகும் பரமனே ! உலகில் தோன்றும் எல்லாப் பொருள்களிலும் தோய்ந்து மேவும் ஒப்பற்ற பெருமானே ! உருவ வடிவாகவும், சித்தத்திலும் மேவும் ஈசனே ! அடியவனைக் குறியாகக் கொண்டு காத்து அருள் புரிவீராக.

129. கருவ னேகரு வாய்த்தெளி வார்க்கெலாம்
ஒருவ னேஉயிர்ப் பாய்உணர் வாய்நின்ற
திருவ னேதிரு வீழி மிழலையுள்
குருவ னேஅடி யேனைக் குறிக்கொளே.

தெளிவுரை : திருவீழிமிழலையுள் மேவிக் குருமூர்த்தமாக விளங்கும் சிவபெருமானே ! உலகத்திற்கெல்õலம் கருப்பொருளாய்த் திகழும் நாதனே ! தேவரீரே யாவற்றுக்கும் மூலப்பொருளாக விளங்குபவர் என்று தெளிந்த ஞானிகளுக்கு, ஒப்பற்ற உயிர்ப் பொருளாகவும் உணர்வாகவும் விளங்கும் செல்வளே ! அடியவனைக் குறியாகக் கொண்டு காத்தருள் புரிவீராக.

130. காத்த னேபொழில் ஏழையும் காதலால்
ஆத்த னேஅம ரர்க்கு அயன் றன்தலை
சேர்த்த னேதிரு வீழி மிழலையுள்
கூத்த னேஅடி யேனைக் குறிக்கொளே

தெளிவுரை : திருவீழிமிழலையுள் மேவும் ஆதிப் பொருளே ! தேவர்கள் விதிப்படி ஏத்திப் பரவித் தொழ, விளங்கும் இறைவனே ! அத்தகைய வானவர்களாலும் உணர முடியாததோர் வேத நாயகனே ! விகிர்தனே ! அடியவனைக் குறியாகக் கொண்டு காத்தருள் புரிவீராக.

132. நீதி வானவர் நித்தல் நியமம் செய்து
ஓதி வானவ ரும்உண ராத தோர்
வேதி யாவிகிர் தாதிரு வீழியுள்
ஆதி யேஅடி யேனைக் குறிக்கொளே.

தெளிவுரை : வீழிமிழலையுள் வீற்றிருக்கும் ஈசனே ! தேவரீரைப் பணிந்து திருவடியை ஏத்திய மார்க்கண்டேயரை, வஞ்சனையால் கவர நினைத்த காலனைச் சாடிய அழகனே ! அடியவனைக் குறியாகக் கொண்டு காத்தருள் புரிவீராக.

133. அண்ட வானவர் கூடிக் கடைந்தநஞ்சு
உண்ட வானவ னேஉணர் வொன்றிலேன்
விண்ட வான்பொழில் வீழி மிழலையுள்
கொண்ட னேஅடி யேனைக் குறிக்கொளே.

தெளிவுரை : வீழிமிழலையுள் வீற்றிருக்கும் ஈசனே ! தேவர்கள் சேர்ந்து பாற்கடலைக் கடைந்த பொழுது தோன்றிய நஞ்சினை உண்டு உலகங்களை உய்வித்த பெருமானே ! அடியவன் உணர்வற்றவனாகித் தேவரீரின் பெருமையை அறியாதவனாக உள்ளேன். அடியேனைக் குறியாகக் கொண்டு காத்தருள்வீராக.

134. ஒருத்தன் ஓங்கலைத் தாங்கலுற் றான்உரம்
வருத்தி னாயவஞ்ச னேன்மனம் மன்னிய
திருத்த னேதிரு வீழி மிழலையுள்
ஒருத்த னேஅடி யேனைக் குறிக்கொளே.

தெளிவுரை : திருவீழிமிழலையுள் மேவும் ஈசனே ! கயிலையை எடுத்த அரக்கனாகிய இராவணனுடைய வலிமையை அழித்த நாதனே ! வஞ்சம் உடைய என் மனத்தை திருந்துமாறு செய்து அடியேனைக் குறியாகக் கொண்டு காத்தருள் புரிவீராக.

திருச்சிற்றம்பலம்

14. திருவிடைமருதூர் (அருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில், திருவிடைமருதூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

135. பாசம் ஒன்றில ராயப்பல பத்தர்கள்
வாச நாண்மலர் கொண்டடி வைகலும்
ஈசன் எம்பெருமா மான்இடை மருதினில்
பூசம் நாம்புகு தும்புனல் ஆடவே.

தெளிவுரை : உலகப் பொருளில் பந்தபாசம் இன்றிப் பக்தர்கள் பலரும் சேர்ந்து, நறுமண மலர்கள் கொண்டு நாள்தோறும் இடை மருதில் வீற்றிருக்கும் எம் பெருமானைப் போற்றி ஏத்திப் பூச நன்னாளில் நீராடி வணங்கித் தொழுவோமாக.

136. மறையின் நாண்மலர் கொண்டடி வானவர்
முறையி னால்முனி கள்வழி பாடுசெய்
இறைவன் எம்பெரு மான்இடை மருதினில்
உறையும் ஈசனை உள்கும்என் உள்ளமே.

தெளிவுரை : தேவர்களும், முனிவர் பெருமக்களும் வேதங்களில் வகுத்த முறையின்படி வழிபாடு செய்ய, எம் பெருமானாகிய ஈசன், இடைமருதில் வீற்றிருப் பவர், அப்பெருமானை, என் உள்ளமானது எக்காலத்திலும் நினைத்து ஏத்தும்.

137. கொன்றை மாலையும் கூவிள மத்தமும்
சென்று சேரத் திகழ்சடை வைத்தவன்
என்றும் எந்தை பிரான்இடை மருதினை
நன்று கைதொழு வார்வினை நாசமோ.

தெளிவுரை : ஈசன், கொன்றை மாலையும் வில்வமும் ஊமத்த மலரும் சடை முடியின் மீது பொருந்துமாறு வைத்துள்ளவர். என் தந்தையாகிய அப் பெருமான், எக் காலத்திலும் இடை மருதில் வீற்றிருப்பவர், ஆவர். அவரைக் கைதொழுது போற்றுபவர்களுக்கு வினையாவும் கெடும்.

138. இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்
அம்மை யேல்பிற வித்துயர் நீத்திடும்
எம்மை ஆளும் இடைமரு தன்கழல்
செம்மை யேதொழு வார்வினை சிந்துமே.

தெளிவுரை : எம்மை ஆள்கின்ற இடைமருதில் மேவும் பெருமானின் திருக்கழலைச் செம்மையாகத் தொழுது ஏத்தும் அடியவர்களுடைய வினையானது விலகி, இப் பிறவியில் தேவர்களைப் போன்ற செல்வம் பெருகி மேவும் வாழ்க்கையைப் பெறுவர். மறுமையில், பிறவித் துன்பத்தை நீக்கியவராக, முத்திப் பேற்றினை அடைந்து, சிவானந்தத் தேனைப் பருகிப் பேரின்பத்தில் திளைத்திருப்பார்கள்.

139. வண்ட ணைந்தன வன்னியும் கொன்றையும்
கொண்ட ணிந்த சடைமுடிக் கூத்தனார்
எண்தி சைக்கும் இடைமரு தாஎன
விண்டு போயறும் மேலை வினைகளே.

தெளிவுரை : சிவபெருமான், வன்னியும் கொன்றையும் சடைமுடியில் விரவ அணிந்து மேவித் திருக்கூத்து புரிபவர். அப்பெருமான், எண் திசைக்கும் தலைவராக இடை மருதில் வீற்றிருப்பவர். அவருடைய திருநாமத்தை மொழிந்து ஏத்த, நம்மைப் பற்றி நின்று துன்பத்தைத் தருகின்ற வினைகள் யாவும் சென்றழியும்.

140. ஏற தேறும் இடைமருது ஈசனார்
கூறு வார்வினை தீர்க்கும் குழகனார்
ஆறு செஞ்சடை வைத்த அழகனார்(கு)
ஊறிஊறி உருகும்என் உள்ளமே.

தெளிவுரை : சிவபெருமான், இடபத்தை வாகனமாகக் கொண்டு திகழ்பவர்; இடை மருதில் வீற்றிருப்பவர். அப்பெருமானை, ஏத்தித் திருநாமத்தை ஓதுபவர்களின் வினை யாவும் தீரும். அத்தகைய ஈசன், கங்கை தரித்த செஞ்சடையுடைய அழகர். அவரை என்னுள்ளத்தில் பதித்துப் போற்ற, நெஞ்சமானது உருகிச் சிவானந்தத்தைப் பொழிவிக்கும்.

141. விண்ணு ளாரும் விரும்பப் படுபவர்
மண்ணு ளாரும் மதிக்கப் படுபவர்
எண்ணி னார்பொழில் சூழிடை மருதினை
நண்ணி னாரைநண் ணாவினை நாசமே.

தெளிவுரை : சிவபெருமான், தேவர்களால் பெரிதும் விரும்பி ஏத்தப்படுபவர்; பூவுலக மாந்தர்களால் பெரிதும் மதித்து வழிபடப்படுபவர். எண்ணத்தில் பொருந்தி மகிழ்ச்சியைத் தரும் பொழில் சூழ்ந்த இடைமருதை நண்ணும் அன்பர்களுக்கு, வினையானது நண்ணாது கெட்டழியும்.

142. வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தனார்
கந்த மாலைகள் சூடும் கருத்தனார்
எந்தை என்னிடை மருதினில் ஈசனைச்
சிந்தை யால்நினை வார்வினை தேயமே.

தெளிவுரை : சிவபெருமான், திருநீறு பூசி விளங்கும் விகிர்தனார்; நறுமணம், கமழும் மலர் மாலைகளைச் சூடுபவர். என் தந்தையாகிய அப்பெருமான், இடைமருதில் மேவும் ஈசன் ஆவார். அவரைச் சிந்தித்து வழி படுபவர்களுடைய வினை யாவும் தேய்ந்து இன்மையாகிவிடும்.

143. வேதம் ஓதும் விரிசடை அண்ணலார்
பூதம் பாடநின்று ஆடும் புனிதனார்
ஏதம் தீர்க்கும் இடைமரு தாஎன்று
பாதம் ஏத்தப் பறையும்நம் பாவமே.

தெளிவுரை : ஈசன் வேதங்களை விரித்து ஓதியருள்பவர்; விரிந்த சடையுடைய அண்ணல் ஆவர்; பூத கணங்கள் பண்ணிசைத்துப் பாடத் திருநடனம் புரியும் புனிதர்; அப் பெருமான், வினைகள் தீர்க்கும் இடைமருதில் வீற்றிருப்பவர். அவருடைய திருநாமத்தை ஓதித் திருவடியை ஏத்திப் பரவப் பாவம் கெடும்.

144. கனியி னும்கட்டி பட்ட கரும்பினும்
பனிம லர்க்குழல் பாவைநல் லாரினும்
தனிமு டிகவித் தாளும் அரசினும்
இனியன் தன்னடைந் தார்க்கிடை மருதனே.

தெளிவுரை : தன்னைச் சரணம் அடைந்தவர்களுக்கு இனிமையாக இருந்து நலன்களைப் புரியும் இடைமருது நாதன், கனியினும் இனிமையானவர்; கரும்பின் கட்டியை விடச் சுவை மிக்கவர்; செந்திருவைக் காட்டிலும் நன்மையாய் இருந்து நலம் அருள்பவர்; ஆட்சி புரியும் அரசினும் பெருமையும் சிறப்பும் உடைய வராய் நலம் புரிபவர். இது, இகப் பொருளினும் பரம் பொருள் நன்கு அருளும் பெற்றிமையை உணர்த்தியது.

145. முற்றி லாமதி சூடும் முதல்வனார்
ஒற்றி னார்மலை யால்அரக் கன்முடி
எற்றி னார்கொடி யார்இடை மருதினைப்
பற்றி னாரைப்பற் றாவினை பாவமே.

தெளிவுரை : இளமையான பிறைச் சந்திரனைச் சூடிய இறைவன், இராவணனைக் கயிலை மலையால் திருப்பாத விரலை ஊன்றி அடர்த்தவர். இடபத்தைக் கொடிய உடைய அப்பெருமான், வீற்றிருக்கும் இடைமருதினைப் பற்றாகக் கொண்டு ஏத்தி வணங்குபவர்களுக்கு, வினையாகிய பாவம் பற்றாது.

திருச்சிற்றம்பலம்

15. திருவிடைமருதூர் (அருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில், திருவிடைமருதூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

146. பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
மறையின் ஓசையும் வைகும் அயலெலாம்
இறைவன் எங்கள் பிரான்இடை மருதினில்
உறையும் ஈசனை உள்கும்என் உள்ளமே.

தெளிவுரை : இடை மருது என்னும் திருத்தலத்தில் தோற்கருவிகளால் செய்யப்பட்ட பறையில் ஓசை கொண்டு திருவிழாக்கள் நடைபெறப் புகழ்ப் பாடல்கள் ஓதப்பெறுகின்றன. அந்தணர்கள் வேதங்களால் ஏத்த ஈசனை வணங்குகின்றனர். அத்தகைய பரமனை எனது உள்ளமானது நினைந்து உருகி ஏத்துகின்றது.

147. மனத்துள் மாயனை மாசறு சோதியைப்
புனிற்றுப் பிள்ளைவெள் ளைம்மதி சூடியை
எனக்குத் தாயைஎம் மான்குடை மருதனை
நினைத்திட்டு ஊறி நிறைந்ததுஎன் உள்ளமே.

தெளிவுரை : சிவபெருமான், மனத்துக்கண் யார்க்கும் புலனாகாதவாறு உள்நிறைந்து விளங்குபவர்; குறைபாட்டினைத் தீர்த்தருளும் சோதி வடிவினராகத் திகழ்பவர்; மிகுந்த இளமையான பிறைச் சந்திரனைச் சூடியவர்; எனக்குத் தாயாக விளங்குபவர்; எனக்குத் தலைவராக இடைமருதில் வீற்றிருப்பவர். அப் பெருமானை எண்ணி, என் உள்ளமானது பேரின்பத்தால் நிறைந்தது.

148. வண்ட ணைந்தன வன்னியும் மத்தமும்
கொண்ட ணிந்த சடைமுடிக் கூத்தனை
எண்டி சைக்கும் இடைமரு தாஎன
விண்டு போயறும் மேலை வினைகளே.

தெளிவுரை : சிவபெருமான், வன்னிப் பத்திரமும் ஊமத்த மலரும் சடை முடியில் விரவ அணிந்தவர்; திருக்கூத்துப் புரிபவர். அப் பெருமானை எட்டுத் திசைகளுக்குத் தலைமையாக விளங்கும் இடைமருதீசனே என ஏத்தி வழிபட, வினை யாவும் விலகிப் போகும்.

149. துணையி லாமையில் தூங்கிருட் பேய்களோடு
அணைய லாவது எமக்குஅருட தேஎனா
இணையி லாஇடை மாமரு தில்எழு
பணையில் ஆகமம் சொல்லும்தன் பாங்கிக்கே.

தெளிவுரை : ஊழிக் காலத்தில் எத்தகைய சலனமும் இன்றித் தனித்துப் பேய்க் கூட்டத்தோடு இருந்து  காலத்தைக் கழிப்பது, ஈசனுக்கு அரிதே ஆகும். அத்தன்மையில், பெருமான் இடை மருதில் மேவித் தன் பாங்கியாகிய உமாதேவிக்குச் சிவாகமங்களை உரைத்தருளுபவராவார்.

150. மண்ணை யுண்டமால் காணான் மலரடி
விண்ணை விண்டயன் காணான் வியன்முடி
மொண்ணை மாமரு தானஎன்றுஎன் மொய்குழல்
பண்ணை யாயமுந் தானும் பயிலுமே.

தெளிவுரை : திருமால், ஈசனின் மலரடியைக் காணாதவராய் மேவ; நான்முகன், அப்பெருமானுடைய பெருமையுடைய முடியையும் காணாதவர் ஆயினர்; அத்தகையை சிறப்புடைய பெருமானே, இடை மருதில் மேவும் பெருமான் என ஏத்திப்பயிலுவர்.

151. மங்கை காணக் கொடார்மண மாலையை
கங்கை காணக் கொடார்முடிக் கண்ணியை
நங்கை மீர்ஈடை மருதர் இந் நங்கைக்கே
எங்கு வாங்கிக் கொடுத்தார் இதழியே.

தெளிவுரை : உமாதேவி காணுமாறு, ஈசன் தனது கழுத்தில் அணிந்துள்ள கொன்றை, மாலையைத் தரமாட்டார். அவ்வாறே, கங்கையானவள் காணுமாறு, சடை முடியில் உள்ள கொன்றை மாலையை, ஈசன் இவ்வடியவளுக்கு வழங்குதல் இயலாது. அவ்வாறு இருக்க, இடைமருதில் வீற்றிருக்கும் ஈசன் இந் நங்கைக்கு எங்கிருந்து கொன்றை மாலையை வழங்கினார் !

திருச்சிற்றம்பலம்

16. திருப்பேரெயில் (அருள்மிகு ஜகதீஸ்வரர் திருக்கோயில், ஓகைப்பேரையூர், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

152. மறையும் ஓதுவர் மான்மறிக் கையினர்
கறைகொள் கண்டம் உடைய கபாலியார்
துறையும் போகுவர் தூயவெண் ணீற்றினர்
பிறையும் சூடுவர் பேரெயி லாளரே.

தெளிவுரை : சிவபெருமான், வேதங்களை விரித்து ஓதுபவர்; மான்கன்றைக் கையில் ஏந்தியவர்; கறை பதிந்த தன்மையில் நீலகண்டத்தை உடையவர்; கையில் பிரம கபாலத்தைக் கொண்டுள்ளவர்; யாவற்றிலும் வல்லவராகி எண்குணங்களில் ஒன்றாக விளங்கும் முற்றும் உணர்தலை உடையவர்; தூய திருவெண்ணீறு அணிந்தவர்; பிறைச் சந்திரனைச் சூடியவர்; அவர், பேரெயில் வீற்றிருந்து அருளாட்சி புரிபவர் ஆவார்.

153. கணக்கி லாரையும் கற்றுவல் லாரையும்
வணக்கி லாநெறி காண்டுகொண் டாரையும்
தணக்கு வார்தணிப் பார்எப் பொருளையும்
பிணக்கு வாரவர் பேரெயி லாளரே.

தெளிவுரை : சிவபெருமான், அளவு கோல் கொண்டு அறியப்படாதவர்; நூல்கள் பல கற்றவரானாலும் வணக்கம் இல்லா நெறியினராயின் அவர்களை அடக்குவிப்பவர்; அன்பர்கள் எத்தகைய துன்பத்தில் சிக்குண்டு இருந்தாலும் அதிலிருந்து மீட்டு அருள்பவர். இனிய பொருளென்று கருதிப் பற்றி நின்றாலும், தனது அடியவர்களுக்குப் பொருந்தாது என்றால் அவற்றை விலக்குவிப்பவர். அப்பெருமான், பேரெயில் என்னும் தலத்தில் வீற்றிருந்து அருள் ஆட்சி புரிபவர் ஆவார்.

154. சொரிவிப் பார்மழை சூழ்கதிர்த் திங்களை
விரிவிப் பார்வெயிற் பட்ட விளங்கொளி
எரிவிப் பார்தணிப் பார்எப் பொருளையும்
பிரிவிப் பார்அவர் பேரெயில் ஆளரே.

தெளிவுரை : சிவபெருமான், மழையைப் பொழிவிப்பவர்; வெண்கதிர்களை நல்கும் சந்திரனை விளங்கச் செய்பவர்; சூரியனை ஒளிரச் செய்பவர்; தண்மையை அருள்பவர்; எல்லாப் பொருள்களையும் நிலையற்ற தன்மையாய் ஆக்கும் வல்லமையுடையவர். அப்பரமன், பேரெயில் என்னும் தலத்தில் மேவி அருள்ஆட்சி புரிபவர்.

155.செறுவிப் பார்சிலை யால்மதில் தீர்த்தங்கள்
உறுவிப் பார்பல பத்தர்கள் ஊழ்வினை
அறுவிப் பார்அது அன்றியும் நல்வினை
பெறுவிப் பார்அவர் பேரெயில் ஆளரே.

தெளிவுரை : சிவபெருமான், மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கியவர். பக்தர்கள் புனிதம் பெறவேண்டிய நிலையில், தீர்த்தங்களைப் படைத்து, நீராடும் பேற்றினை அருள்பவர். ஊழ்வினையால் நலியாதவாறு வினையை அறுத்துக் காத்தருள்பவர். நல்வினையைப் புரியுமாறு செய்து அடியவர்களை மகிழச் செய்பவர். அவர், பேரெயிலில் அருளாட்சி புரிபவர்.

156. மற்றை யார்அறி யார்மழு வாளினார்
பற்றி யாட்டியோர் ஐந்தலை பாம்பரைச்
சுற்றி யார்அவர் தூநெறி யால்மிகு
பெற்றி யார்அவர் பேரெயில் ஆளரே.

தெளிவுரை : சிவபெருமான், யாவற்றுக்கும் முதன்மைப் பொருளாக விளங்கும் பரம்பொருள்; மயிலை, வாகனமாக உடைய முருகப் பெருமானுக்குத் தந்தையானவர்; என்னை ஆளும் இறைவர்; ஊழிக்காலத்தில் யாவும் அழிந்தாலும், தான் நிலைத்துப் பின்னும் விளங்குபவர். அப்பெருமான், பேரெயில் என்னும் தலத்தில் மேவி அருளாட்சி புரிபவர் ஆவார்.

159. உழைத்தும் துள்ளியும் உள்ளத்து ளேயுரு
இழைத்தும் எந்தை பிரான்என்று இராப்பகல்
அழைக்கும் அன்பினர் ஆய அடியவர்
பிழைப்பு நீக்குவர் பேரெயில் ஆளரே.

தெளிவுரை : மனத்தால் தியானித்து நின்று ஏத்தி மகிழ்ந்தும், உள்ளத்திற்குள் திருநாமங்களை உருக்கொண்டு உச்சரித்து ஏத்தி வழிப்பட்டும், தனது மெய் வருந்துமாறு திருத்தொண்டுகளைப் புரிந்தும், திரிகரணங்களால் ஏத்தி வழிபடுகின்றவர்களுக்கு அருள் புரிபவர், சிவபெருமான். அத்தகைய திருத்தொண்டர்கள், தம்மையும் அறியாது பிழை செய்பவர்களாயினும், அதனைக் குற்றமாகக் கொள்ளாது, அருள் புரிபவர், பேரெயிலில் வீற்றிருக்கும் பரமன் ஆவார்.

160. நீரு லாம்நிமிர் புன்சடை யாஎனா
ஏரு லாஅநங்கன் திறல் வாட்டிய
வாரு லாவன மென்முலை யாளொடும்
பேரு ளார்அவர் பேரெயில் ஆளரே.

தெளிவுரை : சிவபெருமான், கங்கை தரித்த மென்மையான சடை முடியுடைய நாதனே என ஏத்திப் போற்றாத மன்மதனை எரித்துச் சாம்பலாக்கியவர். அழகிய கச்சு அணிந்த உமாதேவியைத் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர். அவர், பேரெயில் என்னும் தலத்தில் அருளாட்சி புரிபவர்.

161. பாணி யார்படு தம்பெயர்ந்து ஆடுவர்
தூணி யார்விச யற்கருள் செய்தவர்
மாணி யாய்மண் ணளந்தவன் நான்முகன்
பேணி யார்அவர் பேரெயில் ஆளரே.

தெளிவுரை : சிவபெருமான், படுதம் எனப்படும் கூத்தினை இசைப் பாட்டுக்கேற்ப ஆடுபவர்; விசயனுக்கு அத்திரங்களை அளித்தவர்; வாமன அவதாரத்தில் பிரமசாரியாய்த் தோற்றம் கொண்டு மூவடி மணி அளந்த திருமாலும் மற்றும் நான்முகனும் ஏத்தி வழிபடப் பெற்றவர். அப்பெருமான், பேரெயில் என்னும் தலத்தில் மேவி அருளாட்சி புரிபவர்.

162. மதத்த வாளரக் கன்மணிப் புட்பகம்
சிதைக்க வேதிரு மாமலைக் கீழ்ப்புக்குப்
பதைத்தங் கார்த்தெடுத் தான்பத்து நீண்முடி
பிதக்க ஊன்றிய பேரெயில் ஆளரே.

தெளிவுரை : மதங்கொண்ட அரக்கனாகிய இராவணன் புட்பக விமானத்தில் வான் வழியாகச் சென்றபோது, கயிலை மலை குறுக்கே தடுத்தது. அதனைப் பெயர்த்து வைக்க முனைந்த அவ்வரக்கனுடைய முடிகளை நெரியுமாறு ஊன்றியவர், பேரெயிலில் மேவி அருளாட்சி நல்கும் ஈசனே ஆவார்.

திருச்சிற்றம்பலம்

17. திருவெண்ணி (அருள்மிகு வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயில், கோயில்வெண்ணி, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

163. முத்தி னைப்பவ ளத்தை முளைத்தஎம்
தொத்தி னைச்சுட ரைச்சுடர் போலொளிப்
பித்த னைக்கொலும் நஞ்சினை வானவர்
நித்த னைநெரு நற்கண்ட வெண்ணியே.

தெளிவுரை : சிவபெருமான், முத்தாகவும் பவளமாகவும் முளைத்த வித்தாகவும் பூங்கொத்தாகவும், தீபச் சுடராகவும், சுடரில் பரவும் ஒளியாகவும் விளங்குபவர். அப் பெருமான், பேரன்புடையவராகித் தேவர்களை அச்சுறுத்திய கொலைத் தன்மையுடன் எழுந்த நஞ்சினை அருந்தியவர். அவர், நித்தியத் தன்மையுடையவராகித் தொன்மையான வெண்ணியில் வீற்றிருப்பவரே.

164. வெண்ணித் தொல்நகர் மேயவெண் திங்களார்
கண்ணித் தொத்த சடையர் கபாலியார்
எண்ணித் தம்மை நினைத்திருந் தேனுக்கு
அண்ணித் திட்டமுது ஊறும்என் நாவுக்கே.

தெளிவுரை : வெண்ணி என்னும் தொன்மையான நகரில் மேவும் சிவபெருமான், வெண்மையான சந்திரனைச் சூடிக் கொத்தாகக் கொண்டு விளங்கும் சடை உடையவர்; கபாலத்தைக் கையில் ஏந்தியவர்; அப் பரமனை எண்ணி இருந்த எனக்கு, அவர் அண்மையுடையவராகி, அமுதம் வழங்கி என் நாவுக்கு இனிய சுவையைத் தந்திருளினார்.

165. காற்றி னைக்கன லைக்கதிர் மாமணி
நீற்றி னைநினைப் பார்வினை நீக்கிடும்
கூற்றி னையுதைத் திட்ட குணமுடை
வீற்றி னைநெரு நற்கண்ட வெண்ணியே.

தெளிவுரை : சிவபெருமான், காற்றாகவும் கனலாகவும், ஒளிவிடும் மணியாகவும் திகழ்பவர்; நீறணிந்த திருமேனியர்; நினைப்பவர்களின் வினையை நீக்கும் அருளாளர்; அருள் குணத்தினராகி, மார்க்கண்டேயருக்காக வீறு கொண்டு மேவிய பாங்கில், கூற்றுவனை உதைத்து அடர்த்தவர். அப்பெருமான், வீற்றிருப்பது தொன்மைக் காலத்தில் திகழ்ந்து மிளிர்ந்த வெண்ணியே ஆகும்.

166. நல்ல னைத்திகழ் நான்மறை யோதியைச்
சொல்ல னைச்சுட ரைச்சுடர் போலொளிர்
கல்ல னைக்கடி மாமதில் மூன்றெய்த
வில்ல னைநெரு நற்கண்ட வெண்ணியே.

தெளிவுரை : சிவபெருமான், யாவர்க்கும் நல்லவர்; நான்கு மறைகளை விரித்து ஓதி அருளியவர்; சொல்லில் திகழும் மந்திரமாகத் திகழ்பவர்; சுடரும் சுடரில் விளங்கும் சோதி ஆகுபவர்; திருக்கயிலை மலையை இடமாகக் கொண்டு விளங்குபவர்; அசுரர்களின் மூன்று புரங்களையும், மேரு மலையை வில்லாகக் கொண்டு எரித்துச் சாம்பலாக்கியவர். அப்பெருமான், தொன்மை நகராகிய வெண்ணியில் வீற்றிருப்பவர் ஆவார்.

167. சுடரைப் போலொளிர் சுண்ணவெண் ணீற்றனை
அடரும் சென்னியில் வைத்த அமுதினைப்
படரும் செஞ்சடைப் பால்மதி சூடியை
இடரை நீக்கியை யான்கண்ட வெண்ணியே.

தெளிவுரை : சிவபெருமான், சுடர் போன்று ஒளிரும் வெண்மையான திருநீற்றைத் திருமேனியில் தரித்து விளங்குபவர்; மலர்களும் இதழ்களும் அடர்ந்து மேவும் சடை பரந்த சென்னியில் அமுதம் பொழியும் சந்திரனை வைத்துச் சூடியுள்ளவர்; அடியவர்களின் இடர்களை நீக்கி அருள்பவர். அப்பரமனை யான் கண்டு தரிசித்தது வெண்ணி என்னும் தலமே ஆகும்.

168. பூத நாதனைப் பூம்புக லூரனைத்
தாதெ னத்தவ ழும்மதி சூடியை
நாதனை நல்ல நான்மறை யோதியை
வேத னைநெரு நற்கண்ட வெண்ணியே.

தெளிவுரை : சிவபெருமான், பூத கணங்களுக்கெல்லாம் நாதனாக விளங்குபவர்; பூம்புகலூர் என்னும் திருத்தலத்தில் மேவுபவர்; மகரந்தம் போன்ற வண்ணம் உடைய சந்திரனைச் சூடி உள்ளவர்; எல்லாவற்றுக்கும் மறைகளையும் ஓதி விரித்தவர்; வேதத்தின் பொருளாக விளங்குபவர். அப்பெருமான் வீற்றிருப்பது, தொன்மை விளங்கும் வெண்ணியே.

169. ஒருத்தியை யொரு பாகத்து அடக்கியும்
பொருத்தி யபுனி தன்புரி புன்சடைக்
கருத்த னைக்கறைக் கண்டனைக் கண்ணுதல்
நிருத்த னைநெரு நற்கண்ட வெண்ணியே.

தெளிவுரை : சிவபெருமான், உமாதேவியைத் தனது திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; மற்றொரு நங்கையாகிய கங்கையைத் தனது சடை முடியில் பொருத்தி வைத்த புனிதரானவர்; கறையுடைய கண்டத்தை உடையவர்; நெற்றியில் கண்ணுடையவர்; திரு நடனம் புரிபவர். அப் பெருமான் வீற்றிருப்பது, தொன்மை விளங்கும் வெண்ணியே ஆகும்.

170. சடைய னைச்சரி கோவண ஆடைகொண்டு
உடைய னையுணர் வார்வினை தீர்த்திடும்
படைய னைமழு வாளொடு பாய்தரும்
விடைய னைநெரு நற்கண்ட வெண்ணியே.

தெளிவுரை : ஈசன், சடை முடியுடையவர்; கோவண ஆடையுடையவர்; திருவடியைப் போற்றும் அடியவர் உடையவர்; பாயும் பெருமையுடைய இடபத்தை வாகனமாக உடையவர். அப்பெருமான். அப்பெருமான் வீற்றிருப்பது தொன்மை மேவும் வெண்ணியே ஆகும்.

171. பொருப்ப னைப்புன லாளொடு புன்சடை
அருப்ப னைஇளந் திங்கள்அங் கண்ணியன்
பருப்ப தம்பர வித்தொழுந் தொண்டர்கள்
விருப்ப னைநெரு நற்கண்ட வெண்ணியே

தெளிவுரை : ஈசன், திருக்கயிலையில் வீற்றிருப்பவர்; கங்கையைச் சடையில் ஏற்றுத் திகழ்பவர்; இளமையான சந்திரனைச் சூடியவர்; பருப்பதத்தில் தொண்டர்கள் ஏத்தி வணங்க விருப்பத்துடன் அருள் புரிபவர். அப் பெருமான் வீற்றிருப்பது, தொன்மையுடைய வெண்ணியே ஆகும்.

172. சூல வஞ்சனை வல்லஎம் சுந்தரன்
கோல மாஅருள் செய்ததோர் கொள்கையான்
காலன் அஞ்ச உதைத்திருள் கண்டமாம்
வேலை நஞ்சனைக் கண்டது வெண்ணியே.

தெளிவுரை : வஞ்சனையால் அடியவர்கள் நலியாதவாறு அருள் புரியும் ஈசன், அழகிய திருவடிவினர்; திருவருள் நலம் புரிபவர்; காலனை அழித்தவர்; நீல கண்டத்தினர். அப் பெருமான் வீற்றிருப்பது வெண்ணியே ஆகும்.

173. இலையி னார்கொன்றை சூடிய ஈசனார்
மலையி னால்அரக் கன்திறல் வாட்டினார்
சிலையி னால்மதில் எய்தவன் வெண்ணியைத்
தலையி னால்தொழு வார்வினை தாவுமே.

தெளிவுரை : இலையுடன் கூடிய கொன்றை மாலை சூடிய ஈசன், கயிலை மலைகொண்டு இராவணனுடைய வலிமையை அழித்தவர்; மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எரித்தவர்; அப்பெருமான் வீற்றிருக்கும் வெண்ணியைத் தலையால் தொழும் அடியவர்களின் வினை யாவும் நீங்கும்.

திருச்சிற்றம்பலம்

18. திருக்கடம்பந்துறை (அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில், குளித்தலை, கரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

174. முற்றி லாமுலை யாளிவ ளாகிலும்
அற்றம் தீர்க்கும் அறிவிலள் ஆகிலும்
கற்றைச் செஞ்சடை யான்கடம் பந்துறைப்
பெற்றம் ஊர்திஎன் றாள்எங்கள் பேதையே.

தெளிவுரை : உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவர் சிவபெருமான். அப் பெருமாட்டி மிகவும் இளமையுடையவளாய் மேவுபவன். அப் பெருமான், கற்றையாக உள்ள செஞ்சடையுடையவராகிக் கடம்பந்துறையில் இடபத்தை வாகனமாகக் கொண்டு விளங்குபவர்.

175. தனகு இருந்ததொர் தன்மையர் ஆகிலும்
முனகு தீரத் தொழுதெழு மின்களோ
கனகப் புன்சடை யான்கடம் பந்துறை
நினைய வல்லவர் நீள்விசும்பு ஆள்வரே.

தெளிவுரை : நீங்கள் உள்ளத்தில் களிப்பு உடையவராக இருந்தாலும், வினையானது தீரும் தன்மையில் ஈசனைத் தொழுது ஏத்துவீராக. பொன் போன்ற சடைமுடியுடைய சிவபெருமான் விளங்கும் கடம்பந்துறையை நினைத்து ஏத்த வல்லவர்கள், தேவலோகத்தில் மகிழ்ந்து மேவும் சிறப்பினை அடைவார்கள்.

176. ஆரி யம்தமி ழோடிசை யானவன்
கூரி யகுணத் தார்குறி நின்றவன்
காரி கையுடை யான்கடம் பந்துறைச்
சீரி யல்பத்தர் சென்றடை மின்களே.

தெளிவுரை : ஈசன், வடமொழியும் தென் தமிழ்த் தோத்திரங்களும் ஆகிய இசையாகத் திகழ்பவர். அப்பெருமான், சாத்விக குணம் பொருந்திச் சிவ சிந்தனையில் மேவும் ஞானியர்களுடைய அரும் சொல்லாக விளங்குபவர்; உமாதேவியை உடனாகக் கொண்டு திகழ்பவர். அவர், வீற்றிருக்கும் கடம்பந்துறையை நாடிச் சென்று, பக்தர்கள் வழிபட்டு நற்பேறுகளை அடைவார்களாக.

177. பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை
வண்ண நன்மல ரான்பல தேவரும்
கண்ண னும்அறி யான்கடம் பந்துறை
நண்ண நம்வினை யாயின நாசமே.

தெளிவுரை : சிவபெருமான், பண்ணோடு வழங்கும் இனிய தோத்திரப் பாடல்களைச் செவி மடுக்கும் இயல்புடையவர்; தாமரை மலரின்மீது விளங்கும் பிரமனும், திருமாலும், பற்பல தேவர்களும்  காண்பதற்கு அரியவர். அப்பெருமான் வீற்றிருக்கும் கடம்பந்துறையை நண்ணி வணங்க, நம் வினைகள் யாவும் விலகிச் செல்லும்.

178. மறைகொண் டம்மனத் தானை மனத்துளே
நிறைகொண் டந்நெஞ்சி னுள்ளுற வைம்மினோ
கறைகண் டன்னுறை யும்கடம் பந்துறை
சிறைகொண் டவ்வினை தீரத் தொழுமினே.

தெளிவுரை : சிவபெருமான், வேதத்தின் கருத்தினைக் கொண்டு, எஞ்ஞான்றும் வியாபித்த திருக்குறிப்பு உடையவர். அப் பரமனை நிறைவு கொண்டவராய் நெஞ்சில் பதியுமாறு அன்புற ஏத்தி விளங்குவீராக. நீலகண்டராக மேவும் அப்பெருமான், கடம்பந்துறையில் வீற்றிருப்பவர். அவரைக் கை தொழுது ஏத்த, வினை யாவும் தீரும்.

179. நங்கை பாகம்வைத் தந்நறும் சோதியைப்
பங்கம் இன்றிப் பணிந்தெழு மின்களோ
கங்கைச் செஞ்சடை யான்கடம் பந்துறை
அங்கம் ஓதி அரன்உறை கின்றதே.

தெளிவுரை : சிவபெருமான், உமாதேவியைத் தமது திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; நறுமணம் கமழும் சோதி வடிவானவர்; அப் பரமனைக் குறைவின்றி பணிந்து ஏத்துவீராக. அப் பெருமான், கங்கையைச் செஞ்சடையில் ஏற்றுக் கடம்பந்துறையில் வீற்றிருப்பவர். வேதத்தின் அங்கங்களை ஓதியருளிய அப் பரமன் உறைகின்ற இடம், அதுவே.

180. அரிய நான்மறை ஆறங்க மாய்ஐந்து
புரியன் தேவர்கள் ஏத்தநஞ் சுண்டவன்
கரிய கண்டத்தி னான்கடம் பந்துறை
உரிய வாறு நினைமட நெஞ்சமே.

தெளிவுரை : சிவபெருமான், அரியதாகிய நான்கு வேதங்களாகவும், ஆறு அங்கங்களாகவும், ஐந்து வேள்விகளாகவும் திகழ்பவர்; தேவர்களின் வேண்டுகோளை ஏற்று நஞ்சினைக் கண்டத்தில் தேக்கிக் காத்தருள் புரிந்தவர்; அப்பெருமான், வீற்றிருக்கும் கடம்பந்துறையை, நெஞ்சமே ! உரியவாறு நினைத்து ஏத்துவாயாக.

181. பூமென் கோதை உமையொரு பாகனை
ஓமம் செய்தும் உணர்மின்கள் உள்ளத்தால்
காமற் காய்ந்த பிரான்கடம் பந்துறை
நாமம் ஏத்தநம் தீவினை நாசமே.

தெளிவுரை : பூப்போன்ற மென்மையுடைய உமாதேவியைப் ஒரு பாகமாகக் கொண்டு விளங்கும் ஈசனை, வேள்வி கொண்டு ஏத்தி உள்ளத்தால் நினைந்து வழிபடுக. மன்மதனை எரித்த அப்பெருமான் வீற்றிருக்கும் கடம்பந்துறையைப் பரவியும் அவன் திரு நாமத்தை ஓதியும் வழிபட, நம் தீவினை யாவும் நீங்கும்.

182. பார ணங்கி வணங்கிப் பணிசெய
நார ணன்பிர மன்அறி யாததோர்
கார ணன்கடம் பந்துறை மேவிய
ஆர ணங்கொரு பாலுடை மைந்தனே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் பாரில் அணைந்து ஏத்தியும் அறிதற்கு அரிய காரணகர்த்தராக விளங்கும் ஈசன், கடம்பந்துறையில் உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவர். அப்பெருமானை ஏத்துக.

183. நூலால் நன்றா நினைமின்கள் நோய்கெடப்
பாலான் ஐந்துடன் ஆடும் பரமனார்
காலால் ஊன்றுகந் தானகடம் பந்துறை
மேலால் நாம்செய்த வல்வினை வீடுமே

தெளிவுரை : ஈசனை, சிவாகம விதிப்படி நினைத்து ஏத்துமின்; பிறவி நோய் கெடப் பஞ்சகௌவியத்தால் பூசனை ஆற்றுமின். அப்பெருமான், இராவணனைத் திருப்பாதத்தால் ஊன்றி அடர்த்தி அருள் புரிந்து உகந்து கடம்பந்துறையில் வீற்றிருப்பவர். அப்பரமனை ஏத்த நமது வல்வினை யாவும் நீங்கும்.

திருச்சிற்றம்பலம்

19. திருக்கடம்பூர் (அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், மேலக்கடம்பூர், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

184. தளரும் கோளர வத்தொடு தண்மதி
வளரும் கோல வளர்சடை யார்க்கிடம்
கிளரும் பேரிசைக் கின்னரம் பாட்டறாக்
களருங் கார்க்கிடம் பூர்க்கரக் கோயிலே.

தெளிவுரை : சிவபெருமான், நாகமும் குளிர்ந்த சந்திரனும் சடை முடியில் சூடி விளங்குபவர். அவருக்கு உரிய இடமாவது, கின்னரம் என்கிற இசைக் கருவியால் பாடல்களை எக் காலத்திலும் இசைத்து ஆரவாரத்துடன் திகழும் கடம்பூர்க் கரக் கோயிலாகும்.

185. வெலவ லான்புலன் ஐந்தொடு வேதமும்
சொலவ லான்சுழ லும்தடு மாற்றமும்
அலவ லான்மனை யார்ந்தமென் தோளியைக்
கலவ லான்கடம் பூர்க்கரக் கோயிலே.

தெளிவுரை : கடம்பூரில் திகழும் திருக்கரக் கோயிலில் வீற்றிருக்கும் சிவபெருமான், புலன்களை வென்ற பரம யோகியாய் விளங்குபவர்; வேதங்களை விரித்து ஓதியருள்பவர்; தடுமாற்றங்களை நீக்கி, அடியவர்களைப் பாதுகாப்பவர்; உமாதேவியை உடனாகக் கொண்டு மகிழ்ந்து விளங்குபவர்.

186.பொய்தொ ழாது புலியுரி யோன்பணி
செய்தெ ழாஎழு வார்பணி செய்தெழா
வைதெ ழாதெழு வார்அவர் எள்கநீர்
கைதொ ழாஎழு மின்கரக் கோயிலே.

தெளிவுரை : பொய்த் தன்மையுடைய மாயும் பொருள்களைத் தொழாது, புலித்தோலை ஆடையாகக் கொண்டு விளங்கும் சிவபெருமானைக் கைத்தொழுது போற்றுவீராக. சிவனடியார்களுக்கும் தொண்டு செய்யாது, ஈசனையும் வணங்காதவராய் உள்ளவர்கள், இழிவாகக் கொண்டாலும், நீவிர் அவற்றைக் கருத்தில் கொள்ளாது, கடம்பூர் திருக்கரக் கோயிலில் மேவும் ஈசனைக் கைதொழுது ஏத்துவீராக.

187. துண்ணெ னாமனத் தால்தொழு நெஞ்சமே
பண்ணி னால்முனம் பாடல் அது செய்தே
எண்ணி லார்எயில் மூன்றும் எரித்தமுக்
கண்ணி னான்கடம் பூர்க்கரக் கோயிலே.

தெளிவுரை :  நெஞ்சமே ! மனத்தில் அசைவு இன்றி, அன்புடன் ஈசனைத் தொழுது ஏத்துக; பண்ணின் இசை கொண்டு புகழ்ப் பாடல்களைப் பாடி இறைவனை ஏத்துக. பக்தியின் வயப்படாதவராகிப் பகைமை கொண்ட முப்புர அசுரர்களின் கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கிய பெருமான், முக்கண் செல்வராகிய ஈசன் ஆவார். அவர், கடம்பூர் திருக்கரக்கோயிலில் வீற்றிருப்பவர். அவரை ஏத்துக.

188. சுனையுள் நீல மலரன கண்டத்தன்
புனையும் பொன்னிறக் கொன்றை புரிசடைக்
கனையும் பைங்கழ லான்கரக் கோயிலை
நினையும் உள்ளத் தவர்வினை நீங்குமே.

தெளிவுரை : சிவபெருமான், நீலோத்பல மலர் போன்ற வண்ணமுடைய கண்டத்தை உடையவர்; பொன் போன்ற கொன்றை மாலையைச் சடை முடியில் தரித்தவர்; ஒலித்து ஆரவாரம் செய்யும் திருக்கழலை உடையவர். அப்பெருமான், கடம்பூர் திருக்கரக் கோயிலில் வீற்றிருக்க அவரை நினைத்து ஏத்துபவர்களின் வினை யாவும் நீங்கும்.

189. குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும்
வணங்கி வாழ்த்துவர் அன்புடையாரெலாம்
வணங்கி வான்மலர் கொண்டடி வைகலும்
கணங்கள் போற்றிசைக் கும்கர கோயிலே

தெளிவுரை : அன்பின் மிக்க அடியவர்கள் எல்லாரும், ஈசனின் அருங்குணங்களைப் போற்றி ஏத்தியும், தமது குறைகளை எண்ணி விண்ணப்பம் செய்து, அவற்றைக் களைந்து காத்தருளுமாறு தொழுதும் மேவுகின்றனர். தேவர்களும், பூத கணங்கள் முதலானோரும் தேவலோகத்து மலர்களைக் கொண்டு, ஈசனின் திருவடியை ஏத்துகின்றனர். அத்தகைய பெருமையுடையது, கரக்கோயிலே ஆகும்.

190. பண்ணி னார்மறை பல்பல பூசனை
மண்ணி னார்செய்வ தன்றியும் வைகலும்
விண்ணி னார்கள் வியக்கப் படுவன
கண்ணி னார்கடம் பூர்க்கரக் கோயிலே.

தெளிவுரை : பண்ணின் இசை விளங்க, வேதங்களை ஓதிப் பலவகையான சிறப்புகள் மேவ, இப் பூவுலகத்தவர்கள் பூசைகளைச் செய்பவராயினர். அவ்வாறே, விண்ணுலகத்தில் மேவும் தேவர்கள், வியந்து போற்றிச் சிறப்பான பூசனைகளைப் புரியும் தன்மையில் சேர்ந்து விளங்குகின்றனர். அத்தகைய பெருமை மிக்கது கடம்பூரில் விளங்கும் கரக்கோயில் ஆகும்.

191. அங்கை ஆரழல் ஏந்திநின்று ஆடலன்
மங்கை பாட மகிழ்ந்துடன் வார்சடைக்
கங்கை யானுறை யும்கரக் கோயிலைத்
தங்கை யால்தொழு வார்வினை சாயுமே.

தெளிவுரை : சிவபெருமான், கையில் எரியும் நெருப்பை ஏந்தி நின்று நடனம் புரிபவர்; உமாதேவி இசைத்துப் பாட மகிழ்பவர்; சடையில் கங்கையைத் தரித்து விளங்குபவர். அப்பெருமான் உறையும் திருக்கரக் கோயிலைத் தமது கையால் தொழுது ஏத்தும் அடியவர்களுடைய வினை யாவும் விலகிச் செல்லும்.

192. நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்அடி யேனையும் தாங்குதல்
என்க டன்பணி செய்து கிடப்பதே.

தெளிவுரை : முருகப் பெருமானைப் பெற்ற உமாதேவியாரைப் பாகமாகக் கொண்டு விளங்கும் சிவபெருமான், அழகிய கடம்பையில் திகழும் திருக்கரக் கோயிலில் வீற்றிருப்பவர். அப்பரமன், அடியவனைத் தாங்கிக் காத்தருளும் கருணை வளத்தை இயல்பாகக் கொண்டு விளங்குபவர். என்னுடைய கடனாவது அப்பெருமானுக்குத் திருத்தொண்டு ஆற்றுதலேயாகும்.

193. பணங்கொள் பாற்கடல் பாம்பணை யானொடும்
மணங்க மழ்மலர்த் தாமரை யானவன்
பிணங்கும் பேரழல் எம்பெரு மாற்குஇடம்
கணங்கள் போற்றிசைக் கும்கரக் கோயிலே.

தெளிவுரை : திருமாலும், நான்முகனும் பிணங்கி நின்று தேடப் பேரழல் ஆகிய எம் சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாவது, எல்லாக் கணத்தினாரும் போற்றி ஏத்தும் கரக்கோயிலே ஆகும்.

194. வரைக்கண் நாலஞ்சு தோளுடை யான்தலை
அரைக்க வூன்றி அருள்செய்த ஈசனார்
திரைக்கும் தண்புனல் சூழ்கரக் கோயிலை
உரைக்கும் உள்ளத் தவர்வினை ஓயுமே.

தெளிவுரை : இருபது தோளுடைய அரக்கனாகிய இராவணனுடைய முடிகளைக் கயிலை மலையின் கண் நெரியுமாறு ஊன்றி அருள் செய்தவர், சிவபெருமான். அவர், நீர் வளம் பெருகிச் சூழ விளங்கும் கரக்கோயிலில் வீற்றிருப்பவர். அப்பரமனை ஏத்தி உரைக்கும் நல் உள்ளத்தவர்களுடைய வினை யாவும் நீங்கிச் செல்லும்.

திருச்சிற்றம்பலம்

20. திருக்கடம்பூர் (அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், மேலக்கடம்பூர், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

195. ஒருவ ராயிரு மூவரும் ஆயவன்
குருவ தாய குழகன் உறைவிடம்
பருவ ரால்குதி கொள்ளும் பழனம்சூழ்
கருவ தாங்கிடம் பூர்க்கரக் கோயிலே.

தெளிவுரை : ஈசன், ஒப்பற்ற தனிப் பொருளாக, ஒருவராக விளங்குபவர்; சிவம், சக்தி என இரு வடிவங்களாகக் காட்சி நல்குபவர்; அரி, அரன், அயன் என மூன்றாகவும் விளங்குபவர்; குரு வடிவு மூர்த்தமாகிய தட்சிணாமூர்த்தியாக விளங்குபவர். அப் பெருமான் உறையும் இடமாவது, வரால்கள் குதித்து மேவும் வயல்கள் சூழ்ந்து, எல்லாவற்றுக்கும் கருப் பொருளாகத் திகழும், கடம்பூர்த் திருக்கரக்கோயிலே ஆகும்.

196. வன்னி மத்தம் வளர்இளம் திங்களோர்
கன்னி யாளைக் கதிர்முடி வைத்தவன்
பொன்னின் மல்கு புணர்முலை யாளொடும்
மன்னி னான்கடம் பூர்க்கரக் கோயிலே.

தெளிவுரை : சிவபெருமான், வன்னி, ஊமத்த மலர், இளம் பிறைச் சந்திரன், கங்கை ஆகியன விளங்கித் திகழுமாறு, ஒளிரும் சடை முடியில் தரித்து விளங்குபவர்; உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவர்; அப்பெருமான் பெருமையுடன் வீற்றிருக்கின்ற இடமாவது, கடம்பூரில் மேவும் திருக்கரக்கோயில் ஆகும்.

197. இல்லக் கோலமும் இந்த இளைமையும்
அல்லற் கோலம் அறுத்துய வல்லிரே
ஒல்லைச் சென்றடை யும்கடம் பூர்நகர்ச்
செல்வக் கோயில் திருக்கரக் கோயிலே.

தெளிவுரை : கடம்பூர் நகரில் செல்வக் கோயிலாக விளங்கும் திருக்கரக் கோயிலில் மேவும் ஈசனை, விரைவில் சென்றடைந்து ஏத்தி வணங்குவீராயின், துன்பத்திலிருந்து விடுபட்டு நற்கதியடையலாம். மனை வாழ்க்கையும், நீர்க் குமிழி போன்று சிறிது காலமே இருந்து மறையக் கூடிய இளமைக் கோலமும், துன்பத்தைத் தரவல்லதாதலால், அத்தகைய துயரிலிருந்து விடுபட ஈசனை ஏத்துக என்பது குறிப்பு.

198. வேறு சிந்தை யிலாதவர் தீவினை
கூறு செய்த குழகன் உறைவிடம்
ஏறு செல்வத்து இமையவர் தாம்தொழும்
ஆறு சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.

தெளிவுரை : அஞ்ஞானத்தை நீத்துச் சிவஞானத்தின் பாற் சிந்தையுடைய அடியவர்களின் தீய வினைகளைத் தீர்த்து அருள் புரியும் ஈசன் உறையும் இடமாவது, செல்வம் மிக்க தேவர்கள் தொழுது ஏத்தும் ஆற்று வளம் மேவும் கடம்பூர்க் கரக் கோயில் ஆகும்.

199. திங்கள் தங்கிய செஞ்சடை மேலுமோர்
மங்கை தங்கும் மணாளன் இருப்பிடம்
பொங்கு சேர்மணற் புன்னையும் ஞாழலும்
தெங்கு சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.

தெளிவுரை : சிவபெருமான், சந்திரனைச் செஞ்சடையில் கொண்டு திகழ்பவர்; உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்குபவர். அப் பெருமானுடைய இருப்பிடமாவது, புன்னையும், புலிநகக் கொன்றையும், தென்னையும் சேர்ந்த பொழில் சூழ்ந்த கடம்பூர்த் திருக்கரக் கோயில் ஆகும்.

200.  மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கெலாம்
எல்லை யான பிரானார் இருப்பிடம்
கொல்லை முல்லை கொழுந்தகை மல்லிகை
நல்ல சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.

தெளிவுரை : வளம் பெருகி விளங்கும் இவ்வுலகத்தில் வாழ்கின்ற உயிர்களுக்கெல்லாம் ஆதியும் அந்தமும் ஆகிய பெருமானாகிய சிவபெருமான் மேவும் இடமாவது, முல்லையும் மல்லிகையும் நன்கு செழித்து ஓங்கும் கடம்பூர்க் கரக் கோயில் ஆகும்.

201. தளரும் வாளர வத்தொடு தண்மதி
வளரும் பொற்சடை யாற்குஇடம் ஆவது
கிளரும் பேரொலி கின்னரம் பாட்டறாக்
களரியார்கடம் பூர்க் கரக் கோயிலே.

தெளிவுரை : சிவபெருமான், நாகமும் குளிர்ந்த சந்திரனும் தனது பொன் போன்ற நீண்ட சடை முடியின்கண் தரித்து விளங்குபவர்; அப் பெருமானுக்கு இடமாவது, மனத்தின்கண் பக்தி உணர்வை எழுப்பும் கின்னரம் என்னும் கருவியின் பண்ணின் வயமாகிய பாடல்களை முழங்கும், சிறப்புடைய கடம்பூர்க் கரக் கோயில் ஆகும்.

202. உற்றா ராயுற வாகி உயிர்க்கெலாம்
பெற்றா ராய பிரானார் உறைவிடம்
முற்றார் மும்மதில் எய்த முதல்வனார்
கற்றார் சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.

தெளிவுரை : சிவபெருமான், உற்ற துணையாக விளங்குபவர்; உயிர்க்கு உறவாகியவராகிக் காத்தருள்பவர்; அம்மையாகவும் அப்பனாகவும் திகழ்ந்து அருள்பொழிபவர்; தலைவராக இருந்து கனிந்தருள் புரிபவர். அப்பெருமான் அறிவு அற்றவராகிய முப்புர அசுரர்களின் கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கியவர். அவர் உறையும் இடமாவது, வேதம் கற்ற கலை வல்லவர்கள் சேரும் கடம்பூர்க் கரக்கோயில் ஆகும்.

203. வெள்ளை நீறணி மேனிய வர்க்கெலாம்
உள்ள மாய பிரானார் உறைவிடம்
பிள்ளை வெண்பிறை சூடிய சென்னியான்
கள்வன் சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.

தெளிவுரை : சிவபெருமான், திருவெண்ணீறு தரித்து மேவும் பக்தர்களுக்கெல்லாம் பேரருள் நல்குபவராகி உள்ளத்துள் ஒளிர்பவர்; இளமையான பிறைச் சந்திரனைச் சூடிய சடை முடியுடையவர். அப் பெருமான், பக்தர்களின் உள்ளத்தைக் கவர்ந்த கள்வராகிக் கடம்பூர்க் கரக்கோயிலே தமது உறைவிடமாகக் கொண்டு இருப்பவர்.

204. பரப்பு நீரிலங் கைக்கிறை வன்அவன்
உரத்தி னால்அடுக் கல்எடுக் கல்லுற
இரக்கம் இன்றி இறைவிர லால்தலை
அரக்கி னான்கடம் பூர்க்கரக் கோயிலே.

தெளிவுரை : இலங்கையின் வேந்தனாகிய இராவணன் தனது பலத்தினால் கயிலை மலையை எடுத்தபோது, தனது விரலால் சிறிது ஊன்றி அடர்த்தவர், சிவ பெருமான். அப்பெருமான் வீற்றிருப்பது கடம்பூர்க் கரக்கோயில் ஆகும்.

திருச்சிற்றம்பலம்

21. திருஇன்னம்பர் (அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோயில், இன்னம்பூர்,தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

205. என்னில் ஆரும் எனக்கினி யாரில்லை
என்னி லும்இனி யான்ஒரு வன்உள்ள
என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்கு
என்னுளேநிற்கும் இன்னம்பர் ஈசனே.

தெளிவுரை : என்னை விட எனக்கு யார் இருந்து இனிமையைச் செய்ய இயலும். யாரும் இல்லை. ஆயினும், என்னைவிட அன்பால் இனிமையுடையவர் ஒருவர் உள்ளார். அவர், என்னுள் விளங்கும் உயிர்ப்புச் சக்தியாய் இருந்து, புறத்திலும் இருந்து காப்பவர். அவர், என் உள்ளத்தில் புகுந்து நிலவும் இன்னம்பர் ஈசனே ஆவார்.

206. மட்டுண் பார்கள் மடந்தையர் வாட்கண் ணால்
கட்டுண் பார்கள் கருதுவது என்கொலோ
தட்டி முட்டித் தள்ளாடித் தழுக்குழி
எட்டு மூர்த்தியர் இன்னம்பர் ஈசனே.

தெளிவுரை : நெஞ்சமே ! அறிவு மயக்கத்தைத் தரும் கள்ளும், மன மயக்கத்தை தரும் மடந்தையர் நேயமும் கொள்வது எதற்கு ? புலன்களின் உணர்வு கெட்டுத் தள்ளாடிப் பார்வையும் இழந்து மரணக் குழியில் விழுகின்ற காலத்தில், யாரோ துணையாவர் ! எனவே அட்ட மூர்த்தியாக விளங்கும் இன்னம்பர் ஈசனை ஏத்தி வணங்குவாயாக.

207. கனலும் கண்ணியும் தண்மதி யோடுடன்
புனலும் கொன்றையும் சூடும் புரிசடை
அனலும் சூலமும் மான்மறிக் கையினர்
எனலும் என்மனத்து இன்னம்பர் ஈசனே.

தெளிவுரை : சிவபெருமான், நெற்றியில் நெருப்புக் கண்ணுடையவர்; குளிர்ந்த சந்திரனும் கங்கையும் கொன்றையும் சடை முடியில் தரித்தவர்; நெருப்பும், சூலமும் மான் கன்றும் ஏந்திய கையினர். அத்தகைய பெருமான், இன்னம்பரில் மேவி விளங்க என் மனத்தில் இருப்பவரே.

208. மழைக்கண் மாமயில் ஆலும் மகிழ்ச்சியான்
அழைக்கும் தன்னடி யார்கள்தம் அன்பினைக்
குழைக்கும் தன்னைக் குறிக்கொள வேண்டியே
இழைக்கும் என்மனத்து இன்னம்பர் ஈசனே.

தெளிவுரை : மழைக் காலத்தில் மயிலானது மகிழ்ச்சியால் ஆடும் தன்மையில், ஈசன் தனது அடியவர்ளின் உள்ளம் மகிழுமாறு அன்பினைப் பொழிந்து மகிழ்ச்சியைத் தருபவர். அத்தகைய அன்பிற் குழையும் பெருமான், இன்னம்பரில் மேவி, என் மனத்தில் இனிமையை இழையச் செய்தவர்.

209. தென்ன வன்எனை ஆளும் சிவனவன்
மன்ன வன்மதி யம்மறை யோதியான்
முன்ன மன்னவன் சேர்வன பூழியான்
இன்னம் இன்புற்ற இன்னம்பர் ஈசனே.

தெளிவுரை : சிவபெருமான், என்னை ஆள்பவர்; இன்மையானவர்; பெருமையுடையவர்; யாவராலும் மதிப்புடன் ஏத்தப்பெறும் வேதங்களை ஓதி அருளியவர்; யாவர்க்கும் முதற் பொருளாய் விளங்கி ஒளிர்பவர். திருநீற்றினைத் திகழப் பூசியவர். அப்பெருமான் சச்சிதானந்த சொரூபமாய் இன்னம்பரில் வீற்றிருப்பவர் ஆவார்.

210. விளக்கும் வேறு படப்பிறர் உள்ளத்தில்
அளக்கும் தன்னடி யார் மனத்து அன்பினைக்
குளக்கும் என்னைக் குறிக்கொள் வேண்டியே
இளக்கும் என்மனத்து இன்னம்பரி ஈசனே.

தெளிவுரை : சிவபெருமான், தனது அடியவர்களின் உள்ளத்தில் அன்பினைப் பொழிந்து மகிழ்ச்சியைத் தருபவர்; மாறுபட்டு வேற்று நெறியில் உள்ளவர்பால் எத்தகைய உணர்வும் தோற்றாதவராகி, வேறாகி இருப்பவர். அப்பெருமான், குழைந்த அன்பினனாகிய என்னைக் குறியாகக் கொண்டு, என்னுள் புகுந்து கசிந்து நிற்கச் செய்தவர். அவர், இன்னம்பரில் வீற்றிருக்கும் ஈசனே ஆவார்.

211. சடைக்க ணாள்புன வாள்அனல் கையதோர்
கடைக்க ணால்மங்கை நோக்கிம வான்மகள்
படைக்க ணால்பரு கப்படு வான்நமக்கு
இடைக்க ணாய்நின்ற இன்னம்பர் ஈசனே.

தெளிவுரை : கங்கையானவள், ஈசனின் சடை முடியின்கண் உள்ளவள். அந் நங்கை அனலைக் கையில் ஏந்திய பெருமானைக் கண்டு மகிழ, உமாதேவி உடன்மேவி வேற்கண்ணால் நோக்கி விளங்குகின்றனள். அப்பெருமான், நமக்குத் துயர் தீர்ப்பவராகி இன்னம்பரில் மேவுதல் ஆயினார்.

212. தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று
அழுது காமுற்று அரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே.

தெளிவுரை : ஈசனைத் தொழுதும், தூய மலர்கள் கொண்டு தூவிப் போற்றித் துதித்தும், உள்ளம் கசிந்து நின்று ஏத்திக் கண்ணீர் சிந்தி அழுதும், அரற்றியும் அன்பர்கள் வணங்குகின்றனர்; அவ்வாறு இன்றி, ஈசனைக் கருத்தில் கொள்ளாது, பொழுதுகளை வீணாகக் கழித்தும் புறக்கணித்தும் சிலம் திரிகின்றனர்; சிவபெருமான், இரு தன்மையினரையும் நன்கு அளப்பவராகி, அவ்வவர்களுக்கு ஏற்ப அருள் புரிபவராக விளங்குபவர். அவர் இன்னம்பரில் மேவும் ஈசன் ஆவார்.

213. விரியும் தண்ணிள வேனிலில் வெண்பிறை
புரியும் காமனை வேவப் புருவமும்
திரியும் எல்லையில் மும்மதில் தீயெழுந்து
எரிய நோக்கிய இன்னம்பர் ஈசனே.

தெளிவுரை : இளவேனிற் காலத்தில் குளிர்ச்சியான பணிகளைப் புரியும் மன்மதனை எரித்து அழித்த சிவபெருமான், பறந்தும் திரிந்தும் சென்று தீமைகளை இழைத்த அசுரர்களின் மூன்று புரங்களையும் எரித்துச் சாம்பலாக்கியவர். அவர், இன்னம்பரில் மேவும் ஈசனே ஆவார்.

214. சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும்
முனிவ னாய்முடி பத்துடை யான்றனைக்
கனிய வூன்றிய காரணம் என்கொலோ
இனிய னாய்நின்ற இன்னம்பர் ஈசனே.

தெளிவுரை : சூரியன், சந்திரன், சுக்கிரன், சனி முதலான நவக் கிரகங்களைத் தனது வர பலத்தால் தனக்கு அடங்கி நடக்குமாறு செய்த இராவணனைக் கனிந்த திருக்குறிப்பில் ஊன்றிய காரணம்தான் என் கொலோ ! இனியவராய் மேவும் இன்னம்பர் ஈசனே ! உரைத்தருள்வீராக.

திருச்சிற்றம்பலம்

22. திருக்குடமூக்கு (அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

215. பூவ ணத்தவன் புண்ணியன் நண்ணியங்கு
ஆவ ணத்துடை யான்அடி யார்களைத்
தீவ ணத்திரு நீறுமெய் பூசியோர்
கோவ ணத்துடை யான்குட மூக்கிலே.

தெளிவுரை : சிவபெருமான், செந்தாமரைப் பூவின் வண்ணத்தை உடையவர்; புண்ணிய மூர்த்தியாய் விளங்குபவர்; அடியவர்பால் நண்ணி நின்று அருள் புரிந்து எல்லாச் செயல்களிலும் வெற்றி பெறுமாறு செய்பவர்; தீவண்ணம் உடைய திருமேனியில் திருநீறு பூசி விளங்குபவர்; கோவண ஆடையுடையவர். அவர் குடமூக்கினை உடையவரே.

216. பூத்தா டிக்கழி யாதேநீர் பூமியீர்
தீத்தா டித்திறஞ் சிந்தையுள் வைம்மினோ
வேர்த்தா டுங்காளி தன்விசை தீர்கென்று
கூத்தா டிய்யுறை யுங்குட மூக்கிலே

தெளிவுரை : இப் பூவுலகத்தில் மேவும் மாந்தர்களே ! பயனற்ற செயல்களில் காலத்தைக் கழிக்காதீர்கள். மிக வேகமாக ஆரவாரித்து ஆடுகின்ற காளி தேவியின் வேகம் தீருமாறு நடனமாடிய சிவபெருமான், குடமூக்கில் உறைகின்றார். அப் பெருமானுடைய அருள் திறத்தைச் சிந்தையுள் கொண்டு ஏத்தி, நற்கதி அடைவீராக.

217. நங்கை யாள்உமை யாள்உறை நாதனார்
அங்கை யாளொடு அறுபதந் தாழ்சடைக்
கங்கை யாளவள் கன்னி எனப்படும்
கொங்கை யாள்உறை யும்குட மூக்கிலே.

தெளிவுரை : உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவர் சிவபெருமான். அப் பெருமானுடைய சடை முடியில் விளங்கும் கங்கையானவள், இங்கு கன்னி எனப்படும் தன்மையில் உறைகின்றனன். அது குடமூக்கு ஆகும்.

218. ஓதா நாவன் திறத்தை யுரைத்திரேல்
ஏதா னும்இனி தாகும் மியமுனை
சேதா ஏறுடை யானமர்ந் தஇடம்
கோதா விரியுறை யுங்குட மூக்கிலே.

தெளிவுரை : சிவபெருமானுடைய அருள் திறத்தை ஓதி உரைக்கின் அடங்காது. அப் பெருமானுடைய புகழைக் கூறக் கூற இனிமை உடையதாகும். இடப வாகனத்தை உடைய அப்பெருமான் வீற்றிருக்கும் குடமூக்கில், யமுøøயும் கோதாவரியும் தீர்த்தங்களாகப் பொருந்தி விளங்கும்.

219. நக்க ரையனை நாள்தொறும் நன்னெஞ்சே
வக்க ரையுறை வானை வணங்குநீ
அக்க ரையோடு அரவரை ஆர்த்தவன்
கொக்க ரையுடை யான்குட யான்குட மூக்கிலே.

தெளிவுரை : நல்ல நெஞ்சே ! ஈசனை நாள்தோறும் ஏத்துக. அப்பெருமான், திருவக்கரை என்னும் தலத்தில் கோயில் கொண்டு விளங்குபவர்; எலும்பும், பாம்பும் அரையில் ஆர்த்துக் கட்டியுள்ளவர்; கொக்கரை என்னும் கருவியை இயக்கி, நடனம் புரிபவர்; அவர் குடமூக்கில் வீற்றிருப்பவர். அவரை நீ வணங்கு.

220. துறவி நெஞ்சின ராகிய தொண்டர்காள்
பிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தராய்
மறவனாய்ப் பார்த்தன் மேற்கணை தொட்டஎம்
குறவ னார்உறை யும்குட மூக்கிலே.

தெளிவுரை : யான் எனது என்கின்ற அகப்பற்றினையும் புறப்பற்றினையும் நீக்கித் துறந்த நெஞ்சினராகிச் சிவ பெருமானைப் பற்றி நின்று விளங்குகின்ற திருத் தொண்டர்களே ! இம்மண்ணுலகில் பிறவாமையாகிய பெருஞ் செல்வத்தைப் பெறுகின்ற நோக்கத்தைக் குறியாகக் கொண்டு, ஈசனின் இனிய திருநாமங்களைத் திரும்பத் திரும்ப ஓதுமின். சிவபெருமான், பக்தர்கள்பால் பெரும் பித்து உடையவர்; பார்த்தனுக்கு, வீரனாகிய வேட்டுவ வடிவம் தாங்கிப் பாசுபதம் முதலான அத்திரங்களை வழங்கியருளியவர். அப்பரமன் குடமூக்கில் உறைபவர். அவரை வணங்குக.

221. தொண்ட ராகித் தொழுது பணிமினோ
பண்டை வல்வினை பற்றற வேண்டுவீர்
விண்ட வர்புரம் மூன்றொரு மாத்திரைக்
கொண்ட வன்உறை யும்குட மூக்கிலே.

தெளிவுரை : முற்பிறவியில் செய்த தீவினையைத்  துறப்பதற்குச் சிவபெருமானுக்குத் தொண்டு பூண்டு தொழுது வணங்குவீராக. அப்பெருமான் மூன்று புரங்களையும் ஒருநொடிப் பொழுதில் அழித்த வல்லமையுடையவர். அவர் உறைவது, குடமூக்கு ஆகும்.

222. காமியம் செய்து காலம் கழியாதே
ஓமியம் செய்தங்கு உள்ளத்து உணர்மினோ
சாமி யோடு சரச்சு வதியவள்
கோமி யும் உறையும்குட மூக்கிலே.

தெளிவுரை : தொண்டர்களே ! உலகத்தின் மீது பற்றுக் கொண்டு அதற்குரிய கிரியைகளை மேவிக் காலத்தைக் கழிக்காதீர்கள். வேத நெறியில் உள்ளவாறு வேள்வியைச் செய்து, ஈசனை ஏத்துமின். அக வேள்வியாகக் கொல்லாமை முதலாகிய அட்ட மலர்கள் கொண்டு, தியானம், செய்து வழிபடுக. அப் பெருமான், சாமி, சரஸ்வதி, கோதாவரி முதலான புனித தீர்த்தங்கள் மேவும் குடமூக்கில் வீற்றிருப்பவர்.

223. சிரமம் செய்து சிவனுக்குப் பத்தராய்ப்
பரம னைப்பல நாளும் பயிற்றுமின்
பிரமன் மாலொடு மற்றொழிந் தார்க்கெலாம்
குரவ னார்உறை யும்குட மூக்கிலே.

தெளிவுரை : மெய்யினை வருத்தியும், விரதங்கள் மேவியும், திருத்தொண்டு ஆற்றியும், சிவ பெருமானுக்குப் பக்தர்களாக இருந்து நாள்தோறும் ஏத்துவீராக. பிரமன் திருமால் மற்றும் எல்லாத் தேவர்களுக்கும் நல்ல ஆசானாக இருந்து அருள் பாலிக்கின்ற அப்பெருமான், வீற்றிருப்பது குடமூக்கு ஆகும்.

224. அன்று தானரக் கன்கயி லாயத்தைச்
சென்று தானெடுத் கஉமை அஞ்சலும்
நன்று தான்நக்கு நல்விரல் ஊன்றிப்பின்
கொன்று கீதங்கேட் டான்குட் மூக்கிலே.

தெளிவுரை : இராவணன் கயிலையைப் பெயர்த்து உமாதேவியும் அஞ்சுமாறு எடுக்கத் தனது திருப்பாத விரலை ஊன்றி, அவனை வருத்திச் சாம கானம் கேட்டு விளங்கிய ஈசன் திகழ்வது, குடமூக்கு ஆகும்.

திருச்சிற்றம்பலம்

23. திருநின்றியூர்  (அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில், திருநின்றியூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

225. கொடுங்கண் வெண்தலை கொண்டு குறைவிலைப்
படுங்கண் ஒன்றில ராய்ப்பலி தேர்ந்துண்பர்
நெடுங்கண் மங்கையர் ஆட்டயர் நின்றியூர்க்
கடுங்கைக் கூற்றுதைத் திட்ட கருத்தரே.

தெளிவுரை : வேல் போன்ற நெரிய கண்களையுடைய மங்கையரின் நடனம் நனி விளங்க மேவும் நின்றியூரில், கொடிய பாசக் கயிற்றினைக் கையில் கொண்ட கூற்றுவனைத் திருப் பாதத்தால் உதைத்து அழித்த சிவபெருமான், விரும்பி உறைபவர். அப் பெருமான், மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பலியேற்று உண்பவர். அப் பரமனை ஏத்துக என்பது குறிப்பு.

226. வீதி வேல்நெடுங் கண்ணியர் வெள்வளை
நீதி யேகொளப் பாலது நின்றியூர்
வேதம் ஓதி விளங்குவெண் தோட்டராய்க்
காதில் வெண்குழை வைத்தஎங் கள்வரே.

தெளிவுரை : சிவபெருமான், வேதங்களை விரித்து ஓதியருள்பவர்; ஒரு காதில் நன்கு ஒளிரும் தோடும் பிறிதொன்றில் வெண்மையான குழையும் அணிந்து திகழ்பவர். எனத்து உள்ளத்தைக் கவர்ந்து கள்வராகிய அப்பெருமான், நின்றியூரில் வீற்றிருப்பவர். அவர், வேல் போன்ற நெடிய கண்களையுடைய மகளிரின் பால் ஏக்கத்தைத் தருவித்துக் கைவளையல்களைக் கவர்தல் நீதியோ.

227. புற்றி னார்அர வம்புலித் தோல்மிசைச்
சுற்றி னார் சுண்ணப் போர்வைகொண் டார்சுடர்
நெற்றிக் கண்ணுடை யார்அமர் நின்றியூர்
பற்றி னாரைப்பற் றாவினை பாவமே.

தெளிவுரை : சிவபெருமான், புற்றில் வாழும் அரவத்தையும், புலித் தோலையும் கொண்டிருப்பவர்; திருநீற்றை நன்கு குழைத்துப் பூசி விளங்குபவர்; நெற்றியில் நெருப்புக் கண்ணுடையவர். அப்பெருமான், நின்றியூரில் உறைபவர். அவரைப் பற்றி நின்று ஏத்துபவர்களை வினையாகிய பாவம் பற்றாது, விலகிச் செல்லும்.

228. பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
மறையின் ஓசையும் மல்கி அயல்எலாம்
நிறையும் பூம்பொழில் சூழ்திரு நின்றியூர்
உறையும் ஈசனை உள்கும்என் உள்ளமே.

தெளிவுரை : பூம்பொழில்கள் நிறைந்து மேவும் திருநின்றியூரில் திருவிழாக்கள் பெருகி மேவுமாறு பறையொலியும் இசைப்பாடல்களின் ஒலியும் வேத கீதங்களின் ஒலியும் எல்லா இடங்களிலும் திகழ்கின்றன. ஆங்கு எழுந்தருளியுள்ள ஈசனை என் உள்ளானது நினைந்து ஏத்துகின்றது.

229. சுனையுள் நீலம் சுளியும் நெடுங்கணாள்
இனையன என்றென்றும் ஏசுவது என்கொலோ
நினையும் தண்வயல் சூழ்திரு நின்றியூர்ப்
பனையின் ஈருரி போர்த்த பரமரே.

தெளிவுரை : குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருநின்றியூரில் வீற்றிருக்கும் சிவபெருமான், பனைபோன்ற கரிய பெரிய துதிக்கையுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்ட பரமன் ஆவார். அப்பெருமான்பால் மையல் கொண்ட நங்கையொருத்தி, இப்பெருமான் என்னுள்ளத்தைக் கவர்ந்து கொண்டனனே என, ஏசுவது என் கொலோ !

230. உரைப்பக் கேண்மின்நும் உச்சியு ளான்றனை
நிரைப்பொன் மாமதில் சூழ்திரு நின்றியூர்
உரைப்பொற் கற்றையர் ஆர்இவ ரோஎனில்
திரைத்துப் பாடித் திரிதரும் செல்வரே.

தெளிவுரை : சிவபெருமான், யாவற்றினுக்கும் தலையானவராகத் திகழ்பவர்; அழகிய மதில் சூழ்ந்த திருநின்றியூரில் பொன் போன்ற சடை முடியுடையவராக விளங்குபவர். இப்பெருமான் யாவர் எனக் கேட்கையில் உரைப்பதாவது, பாடிக் கொண்டு அலைந்து திரியும் செல்வர் என்பதாம்.

231. கன்றி யூர்முகில் போலும் கருங்களிறு
இன்றி ஏறல னால்இது என்கொலோ
நின்றி யூர்பதி யாக நிலாயவன்
வென்றி யேறுடை எங்கள் விகிர்தனே.

தெளிவுரை : முகில் போன்ற கருமையுடைய யானையை வாகனமாகக் கொள்ளாது ஈசன், இடபத்தினை வாகனமாகக் கொண்டு விளங்குவது கொல்  ! அப் பெருமான் நின்றியூரைப் பதியாகக் கொண்டு விளங்கி வெற்றி நிலவும் இடபத்தை உடையவரானார்.

232. நிலையி லாவெள்ளை மாலையன் நீண்டதோர்
கொலைவி லால்எயில் எய்த கொடியவன்
நிலையி னார்வயல் சூழ்திரு நின்றியூர்
உரையி னால்தொழு வார்வினை ஓயுமே.

தெளிவுரை : சிவபெருமான், உலக வாழ்க்கையானது நிலையற்ற தன்மையை உடையது எனக் காட்டும் வகையில் எலும்பு மாலையை அணிந்து விளங்குபவர்; மேரு மலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கியவர்; பகைவர்களுக்குக் கொடியவர். அப்பெருமான் வயல் சூழ்ந்த திருநின்றியூரில் வீற்றிருப்பவர். அவரைப் பக்திப் பெருக்கினால் போற்றி வணங்க வினை யாவும் நீங்கும்.

233. அஞ்சி யாகிலும் அன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ
இஞ்சி மாமதில் எய்திமை யோர்தொழக்
குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே.

தெளிவுரை : நெஞ்சமே ! மூன்று புரங்களை எரித்துச் சாம்பலாக்கிய சிவபெருமான், தேவர்களால் தொழுது ஏத்தப்படுபவர்; வானத்தில் விளங்கும் பிறைச் சந்திரனைச் சடை முடியில் தரித்துள்ளவர்; திருநடனம் புரியும் கூத்தர. அப்பரமனை நீ, உன் வினையின், சுமை கண்டு அஞ்சியாகிலும் ஏத்துவாயாக. அல்லது, அப்பெருமான்பால் அன்பின் வயப்பட்டாகிலும் ஏத்தி வணங்குவாயாக. இது ஈசனை ஏத்தி வழிபட்டால் அல்லாது உய்வு பெற இயலாது என்பதனை உணர்த்திற்று.

234. எளிய னாமொழி யாஇலங் கைக்கிறை
களியி னாற்கயி லாயம் எடுத்தவன்
நெளிய வூன்றவல் லான்அமர் நின்றியூர்
அளியி னால்தொழு வார்வினை அல்குமே.

தெளிவுரை : ஈசன்பால் எளியனாகக் கனிந்துருகி ஏத்தி நிற்காது, தன் முனைப்பு உடையவனாகிக் கயிலையை எடுத்த இராவணனை, அம்மலையின் கீழ் நெளிந்து வருந்துமாறு, தனது திரு விரலால் ஊன்றிய ஈசன் வீற்றிருக்கின்ற இடமாவது திருநின்றியூர் ஆகும். அப் பரமனை அன்பின் வயத்தராகித் தொழுது ஏத்த வினையாவும் நீங்கியழியும்.

திருச்சிற்றம்பலம்

24. திருவொற்றியூர் (அருள்மிகு படம்பக்கநாதர் திருக்கோயில், திருவொற்றியூர், திருவள்ளூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

235. ஒற்றி யூரும் ஒளிமதி பாம்பினை
ஒற்றி யூரும்அப் பாம்பும் அதனையே
ஒற்றி யூர வொருசடை வைத்தவன்
ஒற்றி யூர்தொழ நம்வினை ஓயுமே

தெளிவுரை : சிவபெருமானின் சடை முடியில் திகழும் சந்திரன், பாம்பினை ஒற்றிக் கொண்டு ஊர்ந்து செல்லும். அவ்வாறு, ஆங்கு நிலவும் பாம்பும், சந்திரனை ஒற்றிக்கொண்டு ஊர்ந்து செல்லும். அத்தகைய தன்மையில் சந்திரனையும் பாம்பையும் பொருத்த வைத்த ஈசன் வீற்றிருக்கும் திருவொற்றியூர் என்னும் தலத்தினைத் தொழுது ஏத்த, நமது வினை யாவும் விலகி யழியும்.

236. வாட்டம் ஒன்றுரைக் கும்மலை யான்மகள்
ஈட்ட வேயிருள் ஆடி யிடுபிணக்
காட்டில் ஓரி கடிக்க எடுத்ததோர்
ஓட்டை வெணதலைக் கையொற்றி யூரரே.

தெளிவுரை : ஒற்றியூரில் மேவும் சிவபெருமான், இருள் சூழ்ந்த மயானத்தில் நரிகள் கடித்துத் தின்னும் மண்டையோட்டைக் கையில் ஏந்தி நடனம் புரிபவர். இச் செயலானது, உமாதேவியை மனவருத்தம் கொள்ளுமாறு செய்யும் அல்லவா !

237. கூற்றுத் தண்டத்தை யஞ்சிக் குறிக் கொள்மின்
ஆற்றுத் தண்டத் தடக்கும் அரனடி
நீற்றுத் தண்டத்த ராய்நினை வார்க்கெலாம்
ஊற்றுத் தண்டொப்பர் போலொற்றி யூரரே.

தெளிவுரை : அன்பர்களே ! இயமனுடைய கொடுமையான தண்டனை யிலிருந்து மீண்டு, அஞ்சாது இருக்க வேண்டுமாயின், அறநெறியின்பாற் பட்டுத் தீயோரை அடக்கும் அரனின் திருவடியை அடைவீராக. திருநீற்றினைத் தரித்து, அச் சிவபெருமானை நினைத்து ஏத்துக. அப்பெருமான் ஊன்றுகோல் போன்று காத்தருள்பவர். அவர் ஒற்றியூரில் வீற்றிருந்து அருளும் இறைவரே ஆவார்.

238. கற்றும் பேய்சுழ லச்சுடு காட்டெரி
பற்றி ஆடுவர் பாய்புலித் தோலினர்
மற்றை யூர்களெல் லாம்பலி தேர்ந்துபோய்
ஒற்றிய யூர்புக்கு உறையும் ஒருவரே.

தெளிவுரை : சிவபெருமான், பேய்கள் சூழ்ந்து நிற்கச் சுடுகாட்டில், கையில் நெருப்பினை ஏந்தி, நடனம் புரிபவர்; புலித்தோலை உடுத்தியவர்; மற்றைய ஊர்களில் சென்று பலி தேர்ந்து, பின்னர் ஒற்றியூரை அடைந்து உறைபவர். அவர் ஏகனாக விளங்கும் ஒப்பற்ற ஒருவரே ஆவார.

239. புற்றில் வாளரவு ஆட்டி உமையொடு
பெற்றம் ஏறுகந்து ஏறும் பெருமையான்
மற்றை யாரொடு வானவ ரும்தொழ
ஒற்றி யூர்உறை வான்ஓர் கபாலியே.

தெளிவுரை : சிவபெருமான், புற்றில் விளங்கும் நாகத்தைக் கையில் கொண்டு ஆட்டி விளங்குபவர்; உமாதேவியை உடனாகக் கொண்டு இடப வாகனத்தில் ஏறிப் பெருமையுடன் திகழ்பவர்; நிலவுலகில் வாழும் மாந்தர்களுடன், தேவர்களும் தொழுது ஏத்த விளங்குபவர். அவர் ஒற்றியூரில், கையில் கபாலம் ஏந்தி வீற்றிருப்பவரே  ஆவார்.

240. போது தாழ்ந்து புதுமலர் கொண்டுநீர்
மாது தாழ்சடை வைத்த மணாளனார்
ஓது வேதிய னார்திரு வொற்றியூர்
பாதம் ஏத்தப் பறையுநம் பாவமே.

தெளிவுரை : சிவபெருமான், போதுகளை நீக்கி, நன்கு மலர்ந்து விளங்கும் செழுமையான மலர்களைச் சடையில் அணிந்து, அதனில் கங்கையைத் தரித்திருப்பவர்; மணவாளத் திருக்கோலத்தில் விளங்குபவர்; வேதங்களை ஓதுபவர், அப்பெருமான், திருவொற்றியூரில் வீற்றிருக்க அவருடைய திருப்பாதத்தை ஏத்துபவர்களுக்கு, எத்தகைய பாவமும் அணுகாது விலகிச் செல்லும்.

241. பலவும் அன்னங்கள் பன்மலர் மேல்துஞ்சும்
கலவ மஞ்ஞைகள் காரென வெள்குறும்
உலவு பைம்பொழில் சூழ்திரு வொற்றியூர்
நிலவி னான்அடி யேஅடை நெஞ்சமே.

தெளிவுரை : நெஞ்சமே ! அன்னப் பறவைகள், பல்வகைப்பட்ட மணம் மிக்க மலர்களில் சென்றடைந்து அமைதியாக உறங்குகின்றன. அத்தகைய குளிர்ச்சியான நிலையைக் கண்ட மயில்கள், மேகம் சூழ்ந்து விளங்குவதாகக் கருதிப் பின்னர் உண்மையை அறிந்து நாணம் கொள்ளும். அத்தகைய வளப்பம் மிக்க பொழில் சூழ்ந்த திருவொற்றியூரில் வீற்றிருக்கும் ஈசனை அடைந்து மகிழ்க.

242. ஒன்று போலும் உகந்தவர் ஏறிற்று
ஒன்று போலும் உதைத்துக் களைந்தது
ஒன்று போலொளி மாமதி சூடிற்று
ஒன்று போலுகந் தார்ஒற்றி யூரரே.

தெளிவுரை : சிவபெருமான், கந்து வாகனமாகக் கொண்டு விளங்குவது ஒற்றை இடபம். அவர் உதைத்து அழித்தது ஒரு கூற்றுவனையேயாகும். ஈசன் சூடி மகிழ்வது பெருமைமிக்க சந்திரன் ஒன்றே. அத்தகைய ஈசன் ஒன்றி விளங்குவது திருவொற்றியூரே.

243. படைகொள் பூதத்தர் வேதத்தர் கீதத்தர்
சடைகொள் வெள்ளத்தர் சாந்தவெண் ணீற்றினர்
உடையும் தோலுகந் தார்உறை ஒற்றியூர்
அடையும் உள்ளத்து அவர்வினை அல்குமே.

தெளிவுரை : சிவபெருமான், பூத கணங்களைப் படையாகக் கொண்டுள்ளவர்; நான்கு வேதங்களாக விளங்குபவர்; வேதங்களில் ஒலிக்கும் கீதங்களாகத் திகழ்பவர்; சடை முடியில் கங்கையைத் தரித்து மேவுபவர்; நறுமணம் கமழும் திருவெண்ணீற்றினைத் திருமேனிடல் தரித்திருப்பவர்; தோலை உடையாகக் கொண்டிருப்பவர். அப்பெருமான் உறையும் ஒற்றியூரை அடைந்து ஏத்தித் தொழும் அன்பர்களுக்கு வினையாவும் மறைந்து அழியும்.

244. வரையி னாலுயர் தோளுடை மன்னனை
வரையி னார்வலி செற்றவர் வாழ்விடம்
திரையி னார்புடை சூழ்திரு வொற்றியூர்
உரையி னாற்பொலிந் தார்உயர்ந் தார்களே.

தெளிவுரை : மலை போன்ற தோளுடைய இராவணனைக் கயிலை மலைக்குரியவராகிய சிவ கடலலைகள் புடைசூழ மேவும் திருவொற்றியூர் ஆகும். அப் பரமனின் திரு நாமத்தினை நனி உரைத்து ஓதுபவர்கள், மக்கட் பிறவியின் பேற்றினை அடைந்தவர்களாகிச் சிவானந்தத் தேனைப் பருகிப் பேரின்பத்தில் அத்தகையோர் பிறவாமை என்னும் பெருஞ் செல்வத்தை உற்றவர்களாய் முத்திப் பேற்றை அடைவார்கள்.

திருச்சிற்றம்பலம்

25. திருப்பாசூர் (அருள்மிகு வாசீஸ்வரர் திருக்கோயில், திருப்பாசூர்,திருவள்ளூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

245. முந்தி மூவெயில் எய்த முதல்வனார்
சிந்திப் பார்வினை தீர்த்திடும் செல்வனார்
அந்திக் கோன்தனக் கேஅருள் செய்தவர்
பந்திச் செஞ்சடைப் பாசூர் அடிகளே.

தெளிவுரை : சிவபெருமான், மூன்று கோட்டைகளை எரித்தும் சாம்பலாக்கியவர்; சிந்தனை செய்து தீர்த்தருள் புரியும் செல்வர்; அந்திக் காலத்தில் ஒளி பெற்று விளங்கும் சந்திரனுக்குத் தக்கனது சாபம் நீங்குமாறு அருள் செய்த பரமர். அப்பெருமான், நீண்டு விளங்கும் செஞ்சடைகளை வரிசையாகக் கொண்டு பாசூரில் வீற்றிருக்கும் அடிகள் ஆவார்.

246. மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார்
தொடர்ந்த வல்வினை போக்கிடும் சோதியார்
கடந்த காலனைக் கால்கொடு பாய்ந்தவர்
படர்ந்த நாகத்தர் பாசூர் அடிகளே !

தெளிவுரை : சிவபெருமான், உமாதேவியை பாகமாகக் கொண்டு மகிழ்ந்து, அம்மையப்பராக மணவாளத் திருக்கோலத்தை கொண்டு திகழ்பவர்; தனது அடியவர்களின் தீய வினைகளைப் போக்கிக் காத்தருளும் பரஞ்சோதியானவர்; தனது எல்லையைக் கடந்த காலனைத் திருப்பாதத்தில் உதைத்து அழித்து காலகாலன். அப்பெருமான், படர்ந்த நாகத்தை அடையவராகிய பாசூரில் வீற்றிருக்கும் அடிகள் ஆவார்.

247. நாறு கொன்றையும் நாகமும் திங்களும்
ஆறும் செஞ்சடை வைத்த அழகனார்
காறு கண்டத்தர் கையதோர் சூலத்தர்
பாணின் ஒட்டினர் பாசூர் அடிகளே 

தெளிவுரை : சிவபெருமான், நறுமணம் கமழும் கொன்றை மலர் மாலை யணிந்தவர்; செஞ்சடையில்  நாகமும் திங்களும் கங்கையும்  வைத்த அழகர்; கரிய கண்டத்தை யுடையவர்; சூலப் படையைக் கையினில் ஏந்தியவர்; மண்டையோட்டைக் கையில் கொண்டுள்ளவர். அப்பெருமான், பாசூரில் வீற்றிருக்கும் அடிகள் ஆவார்.

248. வெற்றி யூருறை வேதியர் ஆவர்நல்
ஒற்றி யேறுகந்து ஏறும் ஒருவனார்
நெற்றிக் கண்ணினர் நீளர வந்தனைப்
பற்றி யாட்டுவர் பாசூர் அடிகளே.

தெளிவுரை : சிவபெருமான், வெற்றியூரில் வீற்றிருப்பவர்; வேத நாயகர்; இடப வாகனத்தில் நன்கு பொருந்த ஏறுபவர்; நெற்றியில் கண்ணுடையவர்; நீண்ட அரவினைக் கையில் பற்றி ஆட்டுபவர். அவர் பாசூர் மேவும் அடிகள் ஆவார்.

249. மட்ட விழ்ந்த மலர் நெடுங் கண்ணிபால்
இட்ட வேட்கையர் ஆகி இருப்பவர்
துட்ட ரேல்அறி யேன்இவர் சூழ்ச்சிமை
பட்ட நெற்றியூர் பாசூர் அடிகளே.

தெளிவுரை : ஈசன், தேன் மணம் கமழும் தாமரை மலர் போன்ற கண்ணுடைய உமாதேவியை மிக விரும்பியவர். அப்பெருமான் என்னுள்ளத்தைக் கவர்ந்து கொண்டு என்னைக் கருதாதவராகித் துன்பம் இழைக்கும் கொடியவராயின், யான் என் செய்வேன் ! இவர் செய்யும் சூழ்ச்சிதான் என் கொல் ! இப் பெருமான், நெற்றியில் பட்டத்தைக் கட்டியுள்ள மணவாளத் திருக் கோலத்தில் பாசூரில் வீற்றிருக்கும் அடிகளே ஆவார்.

250. பல்லில் ஓடுகை யேந்திப் பகலெலாம்
எல்லி நின்றிடு பெய்பலி யேற்பவர்
சொல்லிப் போய்புகும் ஊர்அறி யேன்சொலீர்
பல்கு நீற்றினர் பாசூர் அடிகளே.

தெளிவுரை :  சிவபெருமான், மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பகல் எல்லாம் பலி யேற்றுத் திரிபவர். ஊர்தோறும் திரியும் அப்பரமனை நான் தேடி அலைகின்றேன். அவர் எங்குற்றார் என்று அறிந்து சொல்வீராக. அப்பெருமான், மிகுதியாகத் திருநீற்றினைத் திருமேனியில் பூசி விளங்குபவராகிப் பாசூரில் வீற்றிருக்கும் அடிகள் ஆவார்.

251. கட்டி விட்ட சடையர் கபாலியர்
எட்டி நோக்கிவந்து இல்புகுந்து அவ்வவர்
இட்ட மாஅறி யேன்இவர் செய்வன
பட்ட நெற்றியர் பாசூர் அடிகளே.

தெளிவுரை : சிவபெருமான், நன்கு சேர்த்துக் கட்டிய சடை முடியுடையவர்; கையில் கபாலத்தை ஏந்தி விளங்குபவர்; பலியேற்பதற்காக இல்லங்கள்தோறும் புகுந்து சென்று, அவ்வவர்களுக்கு விருப்பமானதைச் செய்யும் பெற்றியினை யான் அறியேன். அப்பெருமான், நெற்றியில் பட்டம் கட்டி மணவாளத் திருக்கோலத்தில் வீற்றிருக்கும் பாசூர் மேவும் அடிகள் ஆவார்.

252. வேதம் ஓதிவந்து இல்புகுந் தார்அவர்
காதில் வெண்குழை வைத்த கபாலியார்
நீதி யொன்றுஅறி யார்நிறை கொண்டனர்
பாதி வெண்பிறைப் பாசூர் அடிகளே.

தெளிவுரை : சிவபெருமான், வேதங்களை ஓதிக் கொண்டு இல்புகுந்தவர்; காதில் வெண்மையான குழையணிந்தவர்; கையில் கபாலத்தை ஏந்தியுள்ளவர். அவர் என் இளகிய உள்ளத்தை எண்ணிப் பார்க்காது, என்னைக் கொள்ளைகொண்டு, நிறையைக் கவர்ந்தவர். அப்பெருமான், வெண்மையான பிறைச் சந்திரனைத் தரித்துப் பாசூரில் மேவும் அடிகள் ஆவார்.

253. சாம்பல் பூசுவர் தாழ்சடை கட்டுவர்
ஓம்பல் மூதெருது ஏறும் ஒருவனார்
தேம்பல் வெண்மதி சூடுவர் தீயதோர்
பாம்பும் ஆட்டுவர் பாசூர் அடிகளே.

தெளிவுரை : சிவபெருமான், சுடுகாட்டில் திகழும் சாம்பலைப் பூசி விளங்குபவர்; தாங்குகின்ற வலிமையுடைய பெருமை மிக்க இடபத்தை வாகனமாகக் கொண்டு விளங்கும் ஒப்பற்றவர்; மெலிவுடைய வெண்பிறைச் சந்திரனைத் திருச்சடையில் சூடியவர்; கொடிய விடம் கொண்ட பாம்பினைக் கையில் பற்றிக் கொண்டு ஆட்டுபவர். அப்பரமன் பாசூரில் மேவும் அடிகள் ஆவார்.

254. மாலி னோடு மறையவன் தானுமாய்
மேலும் கீழும் அளப்பரி தாயவர்
ஆலின் நீழல் அறம்பகர்ந் தார்மிகப்
பால்வெண் ணீற்றினர் பாசூர் அடிகளே.

தெளிவுரை : திருமாலும் நான்முகனும் ஆகிய இருவரும் முறையே பூமியின் கீழ் அகழ்ந்து சென்றும் வானில் பறந்து சென்றும், காணுதற்கு அரியவராகிய சிவ பெருமான், கல்லால மரத்தின்கீழ் அமர்ந்து தட்சிணாமூர்த்தி வடிவு கொண்டவராகிச் சனகாதி என்னும் நாற் பொருளின் தத்துவங்களை, உபதேசம் செய்தவர். அப்பெருமான், பால் போன்ற வெண்மையுடைய திருநீற்றினைத் திருமேனியில் தரித்தவர். அவர், பாசூரில் வீற்றிருக்கும் அடிகளே ஆவார்.

255. திரியும் மூவெயில் செங்கணை யொன்றினால்
எரிய எய்தன ரேனும் இலங்கைக் கோன்
நெரிய ஊன்றி யிட்டார்விரல் ஒன்றினால்
பரியர் நுண்ணியர் பாசூர் அடிகளே.

தெளிவுரை : சிவபெருமான்; பல இடங்களில் திரிந்தும் பறந்தும் சென்று அழிவுகளைச் செய்த மூன்று அசுரர்களின் கோட்டைகளை ஒரே ஒரு அக்கினிக் கணைகொண்டு எரித்துச் சாம்பலாக்கியவர்; இராவணனை ஒரு விரலால் ஊன்றி நெரித்தவர். அப்பெருமான், பருமையுடையவராகி எல்லா இடங்களிலும் வியாபித்து அட்டமூர்த்தங்கள் எனப் பெறும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், உயிர் என மேவுபவர்; மிக நுண்மையுடைவராகவும் இருப்பவர். அவர் பாசூரில் வீற்றிருக்கும் அடிகள் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

26. திருவன்னியூர் (அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், வன்னியூர், திருவாரூர் மாவட்டம்).

திருச்சிற்றம்பலம்

256. காடு கொண்டு அரங் காக்கங்குல் வாய்க்கணம்
பாட மாநட மாடும் பரமனார்
வாட மானிறம் கொள்வர் மனங்கமழ்
மாட மாமதில் சூழ்வன்னி யூரரே.

தெளிவுரை : சிவபெருமான், சுடுகாட்டினில் மேவி, அதனையே அரங்கமாகக் கொண்டு இரவில் பூத கணங்கள் பாட, நடனம் புரிபவர். அப்பெருமான், அவரையே எண்ணி மேவும் நங்கையை ஏக்கம் கொள்ளுமாறு செய்து, அவளது எழில் வண்ணத்தைக் கவர்ந்து, பசலை மேவும் நிறத்தைத் தந்தவர். அவர் நறுமணம் கமழும் மாடங்களும், பெரிய மதில்களும் சூழ்ந்த வன்னியூரில் வீற்றிருக்கும் பரமன் ஆவார்.

257. செங்கண் நாகம் அரையது தீத்திரள்
அங்கை யேந்திநின் றார்எரி ஆடுவர்
கங்கை வார்சடை மேலிடங் கொண்டவர்
மங்கை பாகம்வைத் தார்வன்னி யூரரே.

தெளிவுரை : சிவபெருமான், சீற்றம் கொண்ட நாகத்தை அரையில் கட்டி இருப்பவர்; திரட்சியாக எரியும் நெருப்பைக் கையில் ஏந்தி விளங்குபவர்; கங்கையை நெடிய சடை முடியில் கொண்டு திகழ்பவர். அப் பரமன், உமாதேவியைத் திருமேனியில் பாகம் கொண்டவராகி வன்னியூரில் வீற்றிருப்பவரே ஆவார்.

258. ஞானம் காட்டுவர் நன்னெறி காட்டுவர்
தானம் காட்டுவர் தம்மடைந் தார்க்கெலாம்
தானம் காட்டித்தன் தாளடைந் தார்கட்கு
வானம் காட்டுவர் போல்வன்னி யூரரே.

தெளிவுரை : சிவபெருமான், தம்மைச் சரணம் அடைந்த பக்தர்களுக்குக் கலைஞானம் பரஞானம் ஆகியவற்றை உணர்த்தியருள்பவர்; சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நன்னெறியைக் காட்டி அவ்வவர்களுக்கு ஏற்றவகையில் துணை நின்று கூட்டுவிப்பவர்; கீர்த்தி மிகுந்து திகழும் திருத்தலங்களில் தலவாசம் புரியவைத்துச் சேவித்து மகிழ வைத்துச் சிவானந்தத் தேனைப் பருகுமாறு செய்விப்பவர். அப் பெருமானைத் தியானம் செய்து ஏத்தித் திருவடியை நெஞ்சில் பதிக்கும் சிவஞானிகளுக்குச் சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் ஆகிய நிலைகளைக் காட்டிப் பேரின்பத்தில் திளைக்கச் செய்யும் அப் பரமன், உயர்ந்ததாகிய முத்திப் பேற்றினை அளிப்பவராகி, வன்னியூரில் வீற்றிருப்பவர்.

259. இம்மை அம்மை எனஇரண் டும்இவை
மெய்ம்மை தான்அறி யாது விளம்புவர்
மெய்ம்மை யால்நினை வார்கள்தம் வல்வினை
வம்மின் தீர்ப்பர்கண் டீர்வன்னி யூரரே.

தெளிவுரை : இப் பிறவியை எடுத்து, வினைக்கு ஈடாக நன்மை தீமைகளை நுகர்வதும், மீண்டும் இப் பிறவியில் செய்த ஆகாமிய வினைகளுக்கு ஏற்பவும், எஞ்சியுள்ள சஞ்சித கன்ம வினைக்கு ஏற்பவும் மீண்டும் பிறந்து மறுமையில் அவற்றின் பயன்களை மேவுதலும், நூல்களின் வாயிலாகக் கூறப்படும் மெய்ம்மையாகும். இதனை அறியாத தன்மையில், சிலர் விளம்புகின்றனர். இத்தகைய மெய்ம்மையை உணர்ந்து, ஏத்துபவர்களின் வல்வினையைத் தீர்ப்பவர் இறைவன் ஒருவரேயாவர். அப்பரமனைக் கண்டு தரிசித்து ஏத்தி வணங்குங்கள். அவர், உமது வினைகளைத் தீர்ப்பார். இதனை உறுதியாக அறிவீராக.

260. பிறைகொள் வாள்நுதல் பெய்வளைத் தோளியர்
நிறையைக் கொள்பவர் நீறணி மேனியர்
கறைகொள் கண்டத்தர் வெண்மழு வாளினர்
மறைகொள் வாய்மொழி யார்வன்னி யூரரே.

தெளிவுரை : பிறைச்சந்திரனைப் போன்ற ஒளி மிக்க நெற்றியும் வளையல் அணிந்த கைகளும் உடைய மங்கையரின் மனத்தைக் கவர்ந்த சிவபெருமான், திருநீற்றுத் திருமேனியராக விளங்குபவர்; நீல கண்டத்தையுடையவர்; ஒளி மிக்க மழுப்படையுடையவர்; வேதங்களை விரித்து ஓதுபவர். அப்பரமன் வன்னியூரில் மேவும் ஈசன் ஆவார்.

261. திளைக்கும் வண்டொடு தேன்படு கொன்றையர்
துளைக்கை வேழத்தர் தோலர் சுடர்மதி
முளைக்கு மூரற் கதிர்கண்டு நாகம்நா
வளைக்கும் வார்சடை யார்வன்னி யூரரே.

தெளிவுரை : சிவபெருமான், வண்டு தேன் பருகி மேவும் கொன்றை மாலை தரித்தவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்தவர்; சுடர்விடும் ஒளிக் கதிரையுடைய சந்திரனைக் கண்டு நாகமானது தனது நாக்கை நீட்டிச் சந்திரனை வளைக்க முயலும் சடைமுடி பொருந்த விளங்குபவர். அவர், வன்னியூரில் மேவும் இறைவன் ஆவார்.

262. குணங்கொள் தோள்எட்டு மூர்த்தி யிணையடி
இணங்கு வார்கட்கு இனியனு மாய் நின்றான்
வணங்கி மாமலர் கொண்டவர் வைகலும்
வணங்கு வார்மனத் தார்வன்னி யூரே.

தெளிவுரை : சிவபெருமான், எண் குணங்களை உடையவர்; எட்டுத் தோள்களைக் கொண்டு விளங்குபவர்; அட்ட மூர்த்தியாகத் திகழ்பவர்; தனது திருவடியினை இணக்கத்துடன் அன்பு செலுத்தி வணங்கும் அடியவர்களுக்கு இனிமையுடையவராகி மகிழ்ச்சியைத் தருபவர். அப் பரமன், மலர்கொண்டு ஏத்திப் பணிகின்ற தொண்டர்களுக்கும் வணங்கி ஏத்துகின்ற அன்பர்களுக்கும் உள்ளத்தில் நிறைந்து விளங்குபவர். அவர், வன்னியூரில் மேவும் பரமர் ஆவார்.

263. இயலும் மாலொடு நான்முகன் செய்தவம்
முயலிற் காண்பரி தாய்நின்ற மூர்த்திதான்
அயலெ லாம்அன்ன மேயுமந் தாமரை
வயலெ லாம்கயல் பாய்வன்னி யூரரே.

தெளிவுரை : திருமாலும் நான்முகனும் முயற்சி கொண்டு தேடியும் காண்பதற்கு அரியவராகி நின்றவர், சிவபெருமான். அப்பெருமான், தாமரை மலர்மீது அன்னப் பறவைகள் உறையவும், வயல்களில் கயல்கள் துள்ளி விளங்கவும் மேவும் வளம் மிக்க வன்னியூரில் வீற்றிருப்பவர்.

264. நலங்கொள் பாகனை நன்று முனிந்திடா
விலங்கல் கோத்தெடுத் தானது மிக்கிட
இலங்கை மன்னன் இருபது தோளினை
மலங்க ஊன்றிவைத் தார்வன்னி யூரரே.

தெளிவுரை : புட்பக விமானத்தின்மீது அமர்ந்து வான் வழியாகச் சென்ற போது கயிலையைத் தாண்டிச் செல்ல இயலாததாகி அதனை உரைத்த பாகனைச் சினந்து கூறி, இராவணன் மலையைப் பெயர்த்து எடுக்கலுற்றான். அந்நிலையில் அவ்வரக்கனது இருபது தோள்களும் நெரியுமாறு ஊன்றியவர் வன்னியூரில் மேவும் பரமனே ஆவார்.

திருச்சிற்றம்பலம்

27. திருவையாறு (அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு,தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

265. சிந்தை வாய்தலு ளான்வந்து சீரியன்
பொந்து வார்புலால் வெண்தலைக் கையினன்
முந்தி வாயதோர் மூவிலை வேல்பிடித்து
அந்தி வாயதோர் பாம்பர்ஐ யாறரே.

தெளிவுரை : ஐயாற்றின்கண் மேவும் சிவபெருமான், அன்பர்களின் சிந்தையில் புகுந்து விளங்கி மகிழ்வினை விளைவிப்பவர்; சிறப்பின் மிக்கவர்; புலால் ஏந்தியவர்; மூவிலையுடைய சூலப்படை உடையவர்; நஞ்சுடைய நாகத்தை அணிந்தவர்.

266. பாகம் மாலை மகிழ்ந்தனர் பால்மதி
போக ஆனையின் ஈருரி போர்த்தவர்
கோக மாலை குலாய தோர் கொன்றையும்
ஆக ஆன்நெய்அஞ் சாடும்ஐ யாறரே.

தெளிவுரை : ஐயாற்றில் மேவும் சிவபெருமான், திருமாலை ஒரு பாகமாகக் கொண்டுள்ளவர்; பால் போன்ற வெண்மையான பிறைச் சந்திரனைச் சூடி மகிழ்ந்தவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர்; கொன்றை மாலையைத் தோளில் பொருந்தத் தரித்தவர். அப்பரமன் பசுவின் பஞ்ச கவ்வியத்தைப் பூசனைப் பொருளாக ஏற்று விளங்குபவர்.

267. நெஞ்சம் என்பதோர் நீள்கயந் தன்னுளே
வஞ்சம் என்பதோர் வான்சுழிப் பட்டுநான்
துஞ்சும் போழ்துநின் நாமத் திருஎழுத்து
அஞ்சும் தோன்ற அருளும்ஐ யாறரே.

தெளிவுரை : ஐயாற்றில் வீற்றிருக்கும் சிவபெருமானே ! நெஞ்சமாகிய ஆழமாகிய நீர் நிலையின்கண், வஞ்சனையாகிய பெரிய சுழியினால் ஈர்த்துத் தாக்கப்பட்டு, நான் என்னை இழந்து அழியும்போது, தேவரீர், உமது திருநாமமாகிய திருவைந்தெழுத்தை ஓதுமாறு அருளிச் செய்வீராக.

268. நினைக்கும் நெஞ்சினுள் ளார்நெடு மாமதில்
அனைத்தும் ஒள்ளழல் வாய்எரி யூட்டினார்
பனைக்கை வேழத்து உரியுடல் போர்த்தவர்
அனைத்து வாய்தலுள் ளாரும்ஐ யாறரே.

தெளிவுரை : ஐயாற்றில் வீற்றிருக்கும் சிவபெருமான், தன்னை நினைத்து  ஏத்தும் அடியவர்களின் நெஞ்சினுள் குடிகொண்டு மேவுபவர். தீயவர்களாகிய மூன்று அசுரர்களின் கோட்டைகளை நெருப்பில் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர்; உலகில் உள்ள அனைத்துப் பொருள்களிலும் கலந்து வியாபித்து விளங்குபவர்.

269. பரியர், நுண்ணியர் பார்த்தற்கு அரியவர்
அரிய பாடலர் ஆடலர் அன்றியும்
கரிய கண்டத்தர் காட்சி பிறர்க்கெலாம்
அரியர் தொண்டர்க்கு எளியர்ஐ யாறரே.

தெளிவுரை : ஐயாற்றில் வீற்றிருக்கும் சிவபெருமான், எல்லா இடங்களிலும் நிறைந்து மேவும் பருமையும் நுண்மையும் உடையவர்; ஊனக் கண்ணுக்குத் தோன்றாதவர்; அரியதாகிய வேத கீதங்களைப் பாடுபவர்; திருநடனம் புரிபவர்; கரிய கண்டத்தை உடையவர்; தொண்டர் பெருமக்களுக்கு எளியவராகிக் காட்சி நல்குபவராகி ஏனையவர்களுக்கு அரியவராக விளங்குபவர்.

270. புலரும் போதும் இலாப்பட்ட பொற்சுடர்
மலரும் போதுக ளாற்பணி யச்சிலர்
இலரும் போதும் இலாததும் அன்றியும்
அலரும் போதும் அணியும்ஐ யாறரே.

தெளிவுரை : சிவபெருமானைக் காலை, பகல், சந்தி ஆகிய காலங்களில் வில்வம் வன்னி முதலான பத்திரங்களைக் கொண்டும், பிரணவ புட்பமாகிய கொன்ற மலரைக் கொண்டும், அட்ட புட்பங்களைக் கொண்டும், ஆகம விதியின்படி அருச்சித்துத் தூவியும், போற்றுகின்ற அன்பர்களின் வணக்கத்தை ஏற்று, அருள் புரிபவர். அவர் அத்தகைய விதிகளை அறியாது, அப்பெருமானுக்கு உரியதல்லாத பிறமலர்களைக் கொண்டு ஏத்தி வழிபடுகின்ற அன்பர்களுக்கும் அருள் புரிபவர். அப்பரமன் ஐயாற்றில் வீற்றிருக்கும் ஈசனே ஆவார்.

271. பங்க மாலைக் குழலியொர் பால்நிறக்
கங்கை மாலையர் காதன்மை செய்தவர்
மங்கை மாலை மதியமும் கண்ணியும்
அங்க மாலையும் சூடும்ஐ யாறரே.

தெளிவுரை : ஐயாற்றில் வீற்றிருக்கும் சிவபெருமான், பால் போன்ற வண்ணம் உடைய கங்கையை விரும்பிச் சூடியவர்; உமாதேவியை ஒரு பாகமாகக்  கொண்டு விளங்குபவர்; அந்தியில் விளங்கும் பிறைச் சந்திரனைச் சூடியவர்; எலும்பினை மாலையாகக் கொண்டு விளங்குபவர்.

272. முன்னை யாறு முயன்றெழு வீரெலாம்
பின்னை யாறு பிரியெனும் பேதைகாள்
மன்னை யாறு மருவிய மாதவன்
தன்னை யாறு தொழத்தவம் ஆகுமே.

தெளிவுரை : மாந்தர்களே ! முன்னர் துன்பமாகிய பாதையில் முயன்று சென்று, ஈசனை மறந்த நிலையில், பின்னர் அத்தகைய துன்பத்திலிருந்து விடுபட வேண்டும் என நினைப்பவர் ஆனீர். பெருமை மிக்க ஐயாற்றில் மேவும் பெருமானாகிய ஈசனை வழியாகக் கொண்டு, நண்ணி அவரைக் கை தொழுது போற்றுவீராக. அதுவே மெய்த்தவமாகி உங்களைக் கடைத்தேற்றும்.

273. ஆனை யாறென ஆடுகின் றான்முடி
வானை யாறு வளாயது காண்மினோ
நான்ஐ யாறு புக்கு ஏற்கு அவன் இன்னருள்
தேனை யாறு திறந்தாலே ஒக்குமே.

தெளிவுரை : சிவபெருமான், பசுவின் பஞ்சகவ்வியத்தைப் பூசனைப் பொருளாக ஏற்று, ஆடுகின்றவர். அப்பெருமானுடைய திருமுடியில், பெருமையுடைய அழகிய ஆறாகும் கங்கையானவள்,  மகிழ்ந்து விளங்குவதைக் காண்பீராக. நான் ஐயாறு சென்று அப்பரமனை ஏத்தி நிற்க, அவர், தேனாறு திறந்து விட்டதைப் போன்று, எனக்கு இனிய அருள் வெள்ளத்தை நல்கி மகிழ்வுறச் செய்தார்.

274. அரக்கின் மேனியன் அந்தளிர் மேனியன்
அரக்கின் சேவடி யாளஞ்ச அஞ்சல்என்று
அரக்கன் ஈரைந்து வாயும் அலறவே
அரக்கி னான்அடி யாலும்ஐ யாறனே.

தெளிவுரை : சிவபெருமான், அரக்குப் போன்ற சிவந்த திருவண்ணத்தை யுடையவர்; அழகிய தளிர் போன்ற மென்மையான திருமேனியுடையவர்; அரக்குப் போன்ற சிவந்த திருவடிவுடைய உமாதேவி அஞ்சி நடுங்குமாறு கயிலைø எடுத்த அரக்கனாகிய இராவணனுடைய பத்துத் தாடைகளும் கலங்கி வாய்விட்டு அலறுமாறு, தனது திருப்பாத விரலால் ஊன்றியவர். அவர், ஐயாற்றில் மேவும் இறைவனேயாவார்.

திருச்சிற்றம்பலம்

28. திருவையாறு (அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு,தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

275. சிந்தை வண்ணத்த ராய்த்திறம் பாவணம்
முந்தி வண்ணத்த ராய்முழு நீறணி
சந்தி வண்ணத்த ராய்த்தழல் போல்வதோர்
அந்தி வண்ணமும் ஆவர்ஐ யாறரே.

தெளிவுரை : ஐயாற்றில் வீற்றிருக்கும் சிவபெருமான், செம்மை திகழும் சிந்தையில் திகழ்பவர், மாறுபாடில்லாத முதன்மைத் தன்மையடையவர்; திருநீற்றினைப் பூசி விளங்கும் வண்ணம் உடையவர்; சந்திக் காலமாகிய காலையும் மாலையும் தோன்றும் நெருப்பில் வண்ணத்தை நிகர்க்கும் செவ்வானத்தின் வண்ணம் உடையவர்.

276. மூல வண்ணத்த ராய்முதல் ஆகிய
கோல வண்ணத்த ராகிக் கொழுஞ்சுடர்
நீல வண்ணத்த ராகி நெடும்பளிங்கு
ஆல வண்ணத்த ராவர்ஐ யாறரே.

தெளிவுரை : ஐயாற்றில் மேவும் சிவபெருமான், மூலமாக விளங்கும் தன்மையராகி, அழகிய வண்ணத்தவராகவும், சுடர் மிகும் நீல வண்ணத்தினை உடையவராகவும், பளிங்கென ஒளி வண்ணத்தவராகவும் ஆலம்  கொண்டு மேவும் வண்ணத்தவராகவும் திகழ்பவர்.

277. சிந்தை வண்ணமும் தீயதோர் வண்ணமும்
அந்திப் போதழ காகிய வண்ணமும்
பந்திக காலனைப் பாய்ந்ததொர் வண்ணமும்
அந்தி வண்ணமும் ஆவர்ஐ யாறரே.

தெளிவுரை : ஐயாற்றில், மேவும் ஈசன், அன்பர்களின் சிந்தையில் திகழ்பவர்; நெருப்பின் வண்ணத்தைக் கொண்டவர்; மாலைப் பொழுதில் விளங்கும் செவ்வானத்தின் வண்ணத்தை நிகர்த்தவராகிக் காலனை உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்த அருள் வண்ணம் உடையவர்.

278. இருளின் வண்ணமும் ஏழிசை வண்ணமும்
சுருளின் வண்ணமும் சோதியின் வண்ணமும்
மருளு நான்முகன் மாலொடு வண்ணமும்
அருளும் வண்ணமும் ஆவர்ஐ யாறரே.

தெளிவுரை : ஐயாற்றில் மேவும் சிவபெருமான், இருளின் வண்ணமாகவும், ஏழிசையாகவும், சுருண்டு விளங்கும் சடையின் வண்ணமும், சோதியின் வண்ணமும், நான்முகனும் திருமாலும் மயங்குமாறு புரியும் மருள் வண்ணமும், பின்னர் அருள் வண்ணமும் ஆகுபவர்.

279. இழுக்கின் வண்ணங்கள் ஆகிய வெவ்வழல்
குழைக்கும் வண்ணங்கள் ஆகியும் கூடியும்
மழைக்கண் மாமுகில் ஆகிய வண்ணமும்
அழைக்கும் வண்ணமும் ஆவர்ஐ யாறரே.

தெளிவுரை : ஐயாற்றில் மேவும் சிவபெருமான், தீய வழிகளின் பாற்பட்டுச் செல்பவர்க்குத் தெருளும் கொடிய அழல் வண்ணம் ஆகுபவர்; அன்பு செலுத்தி ஏத்துபவர்களுக்குக் குழையும் அன்பின் வண்ணமாகத் திகழ்பவர்; மழை நல்கி நன்மை புரியும் பெருமையுடைய முகில் வண்ணமாக விளங்குபவர். அப்பெருமான், தம்பால் அன்புடையவரை அழைத்து, அருள் வண்ணத்தைப் புரியும் இறைவன் ஆவார்.

280. இண்டை வண்ணமும் ஏழிசை வண்ணமும்
தொண்டர் வண்ணமும் சோதியின் வண்ணமும்
கண்ட வண்ணங்க ளாய்க்கனல் மாமணி
அண்டை வண்ணமும் ஆவர் ஐயாறே.

தெளிவுரை : ஐயாற்றில் வீற்றிருக்கும் சிவபெருமான், இண்டை மாலை புனைந்து மேவும் இயல்புடைவர், ஏழிசையாய் விளங்குபவர்; திருத்தொண்டர்களுடன் கலந்தவராகித் திகழ்பவர்; சோதியின் எழில் வண்ணமாய்த் திகழ்பவர்; தோற்றம் கொள்ளுகின்ற வண்ணங்கள் அனைத்தும் ஆகுபவர்; கனலாகவும், மாணிக்கமாகவும், அண்டங்களில் மேவும் அருவ, உருவ, அரு உருவப் பொருள்கள் என அனைத்தும் ஆகுபவர்.

281. விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமும்
கரும்பின் இன்மொழிக் காரிகை வண்ணமும்
விரும்பு வார்வினை தீர்த்திடும் வண்ணமும்
அரும்பின் வண்ணமும் ஆவர்ஐ யாறரே.

தெளிவுரை : ஐயாற்றில் மேவும் சிவபெருமான், யாவரும் விரும்பும் வண்ணம் திகழ்பவர்; வேதத்தில் ஓதப் பெறும் அரிய பொருளாகுபவர்; கரும்பினைப் போன்ற இனிய மொழியுடைய உமாதேவியின் வண்ணத்தில் திகழ்பவர்; பக்தியுடன் ஏத்தும் அடியவர்களின் வினையைத் தீர்த்தருள்பவர். அப்பெருமான், மலரின் அரும்பு எனப் பக்தர்களுக்கு இனிமையும் மகிழ்ச்சியையும் அளிப்பவர்.

282. ஊழி வண்ணமும் ஒண்சுடர் வண்ணமும்
வேழ ஈருரி போர்த்ததொர் வண்ணமும்
வாழித் தீயுரு வாகிய வண்ணமும்
ஆழி வண்ணமும் ஆவர்ஐ யாறரே.

தெளிவுரை : ஐயாற்றில் மேவும் சிவபெருமான் ஊழியின் வண்ணமாகவும், ஒண் சுடராகிய சூரிய, சந்திர வண்ணமாகவும் திகழ்பவர்; யானையின் தோலைப் போர்த்தியிருப்பவர்; உயிர்களைக் காக்கின்ற வெப்பமாக விளங்குபவர். அப்பெருமான், கடலின் வண்ணமாகத் திகழ்பவராவர்.

283. செய்த வன்திரு நீறணி வண்ணமும்
எய்த நோக்கரி தாகிய வண்ணமும்
கைது காட்சி யரியதோர் வண்ணமும்
ஐது வண்ணமும் ஆவர்ஐ யாறரே.

தெளிவுரை : ஐயாற்றில் கோயில் கொண்டு மேவும் சிவபெருமான், செய்யும் தவமாகத் திகழ்பவர்; திருநீற்று மேனியராகத் திகழ்பவர், நோக்குதற்கு அரியவர்; அன்பின் தலைப்பட்டு மேவும் மனத்தின் கண் திகழ்பவர், அழகிய ஐதுவண்ணம் உடையவர்.

284. எடுத்த வாளரக் கன்திறல் வண்ணமும்
இடர்க்கள் போற்பெரி தாகிய வண்ணமும்
கடுத்த கைந்நரம் பால்இசை வண்ணமும்
அடுத்த வண்ணமும் ஆவர்ஐ யாறரே.

தெளிவுரை : ஐயாற்றில் கோயில் கொண்டு மேவும் சிவபெருமான், கயிலையை எடுத்த இராவணனுடைய வலிமையை அடக்கியவர்; அவனை நெரியுமாறு செய்து, கை நரம்பால் இசை யெழுப்பிச் சாம கானத்தை ஓதச் செய்தவர்; அவ்வரக்கனுக்கு, வாளும், வாழ்நாளும் அளித்தருள் செய்தவர்.

திருச்சிற்றம்பலம்

29. திருவாவடுதுறை (அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாவடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

285. நிறைக்க வாலியள் அல்லள்இந் நேரிழை
மறைக்க வாலியள் அல்லள்இம் மாதராள்
பிறைக்க வாலப் பெரும்புனல் ஆவடு
துறைக்க வாலியோடு ஆடிய சுண்ணமே.

தெளிவுரை : பிறைசந்திரனும் கபாலமும் தரித்துக் கொண்டு விளங்கி, நீர்வளம் மிகுந்த ஆவடு துறையுள் திருநீற்றினைத் திருமேனியில் பூசியவராகி மேவும் சிவபெருமானே ! தேவரீரின் அருள் பொழியும் வண்ணத்தைக் கண்டு உணர்ந்த இந்த நங்கை, தன்னை இழந்த நிலையை மறைக்கும் வலிமையற்றவனாகி ஆயினள்.

286. தவள மாமதிச் சாயலோர் சந்திரன்
பிளவு சூடிய பிஞ்ஞகன் எம்இறை
அளவு கண்டிலன் ஆவடு தண்துறைக்
களவு கண்டனள் ஒத்தனள் கன்னியே.

தெளிவுரை : சிவபெருமான், வெண்மையுடைய பிறைச் சந்திரனைச் சடைமுடியில் சூடிய பிஞ்ஞகன்; அவன் எம்முடைய இறைவன். அப்பரமனை இந் நங்கையானவள் நேராகக் கண்டிலள். ஆயினும் ஆவடு துறையில் மேவும் அப் பரமனைக் கண்டவளைப் போன்று, மனத்தினைச் செலுத்தி, அப்பெருமானைக் கண்டு தரிசித்தவளைப் போன்று மகிழ்பவள் ஆயினள். இது அகத்துறைக் குறிப்பினை நவில்வதாயிற்று. ஆன்மாவைக் கன்னியாக உருவகித்து ஏத்துதலாயிற்று.

287. பாதிப் பெண்ணொடு பாகத்தன் பன்மறை
ஒதி என்னுளம் கொண்டவன் ஒண்பொருள்
ஆதி ஆவடுதண் துறை மேவிய
சோதி யேசுட ரேயென்று சொல்லுமே.

தெளிவுரை : சிவபெருமான், உமாதேவியைத் திருமேனியில் பாகம் கொண்டு மேவி, அம்மையப்பராக விளங்குபவர்; வேதங்களை ஓதியவராகி என்னுடைய உள்ளத்தைக் கவர்ந்தவர்; ஒப்பற்ற பொருளாகத் திகழும் தன்மையுடையவராகி, ஆவடு துறையில் வீற்றிருப்பவர். அப்பரமனைச் சோதியே என்றும் சுடரே என்றும் ஏத்தி மொழிவாயாக.

288. கார்க்கொள் மாமுகில் போல்வதோர் கண்டத்தன்
வார்க்கொள் மென்முலை சேர்ந்திறு மாந்திவள்
ஆர்க்கொள் கொன்றையன் ஆவடு தண்துறைத்
தார்க்கு நின்றிவள் தாழுமா காண்மினே.

தெளிவுரை : சிவபெருமான், கார்மேகம் போன்ற கரிய கண்டத்தை உடையவர்; உமா தேவியை உடனாகக் கொண்டு விளங்குபவர்; நன்கு மிளிரும் கொன்றை மாலையைத் தரித்து ஆவடுதுறையுள் வீற்றிருப்பவர். அப்பெருமானைக் கண்ட இந் நங்கை, முன்னின்று தாழ்ந்து வணங்குதல் ஆயினள்.

289. கருகு கண்டத்தன் காய்கதிர்ச் சோதியன்
பருகு பாலமு தேயெனும் பண்பினன்
அருகு சென்றிலன் ஆவடு தண்துறை
ஒருவன் என்னை உடையகோ என்னுமே.

தெளிவுரை : சிவபெருமான், கரிய கண்டத்தையுடையவர்; சூரியனைப் போன்ற ஒளி வண்ணம் உடையவர்; பருகுவதற்குரிய பாலமுதாகும் எனத் தகும் பண்புடையவர். அப்பெருமான் ஆவடுதுறையில் வீற்றிருப்பவர். இந்நங்கை, அப்பரமனின் அருகில் சென்றிலளாயினும், அப்பெருமானே என்னை ஆளுடைய தலைவர் என்னும் பாங்கில் உரைப்பவள் ஆயினள்.

290. குழலும் கொன்றையும் கூவிள மத்தமும்
தழலும் தையலோர் பாகமாத் தாங்கினான்
அழகன் ஆவடு தண்துறை யாஎனக்
கழலும் கைவளை காரிகை யாளுக்கே.

தெளிவுரை : சிவபெருமான், சடை முடியும், கொன்றை மாலையும் வில்வமும், ஊமத்த மலரும், நெருப்பும் ஏற்று உடையவராகி, உமாதேவியை ஒரு பாகமாகத் திருமேனியில், கொண்டு விளங்குபவர். அவர், ஆவடுதுறையின் அழகனாகத் திகழ்பவர். அப் பெருமானுடைய திருப்பெயரை ஓதிய மாத்திரத்தில், இக்காரிகையின் கைவளையானது கழன்று நழுவியது. இது, ஆன்மாவானது ஈசன்பால் ஒன்றி நின்று. தன்னிலை மறத்தலை ஓதும் தன்மையில், அகத்துறையின் குறிப்பும் ஆயிற்று.

291. பஞ்சின் மெல்லடிப் பாவையோர் பங்கனைத்
தஞ்சம் என்றுஇறு மாந்துஇவள் ஆரையும்
அஞ்சுவா ளல்லள் ஆவடு தண்துறை
மஞ்ச னோடுஇவள் ஆடிய மையலே.

தெளிவுரை : சிவபெருமான், உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர். அப் பெருமானைத் தஞ்சமாக அடைந்தனன், இந் நங்கை. ஆவடுதுறையுள் வீற்றிருக்கும் அவ்வழகிய ஈசன்பால் மையல் கொண்ட இந்நங்கை, அப்பெருமானைத் தன் நெஞ்சில் இருத்தித் தன்னுள்ளம் மகிழலுற்றனள். அவரைத் தஞ்சம் அடைந்தமையால் இறுமாந்து இருந்து, பிறரைக் கண்டு அஞ்சாதவன் ஆயினள். இப் பெண்ணின் பெருமிதம்தான் என்னே !

292. பிறையும் சூடிநற் பெண்ணோடு ஆணாகிய
நிறையும் நெஞ்சமும் நீர்மையும் கொண்டவன்
அறையும் பூம்பொழில் ஆவடு தண்துறை
இறைவன் என்னை உடையவன் என்னுமே.

தெளிவுரை : சிவபெருமான், பிறைச் சந்திரனைச் சூடி விளங்குபவர்; நல்ல பெண்ணாகியவர்; ஆணாக விளங்குபவர்; நிறைந்த நெஞ்சத்தினர்களின்பால் தோன்றும் அன்பை ஏற்றுக்கொண்டு, இனிமையை தோன்றும் அன்பை ஏற்றுக்கொண்டு, இனிமையை அருள்பவர்; வண்டுகள் ஒலிக்கும் பூம்பொழில் சூழ்ந்த ஆவடுதுறையுள் வீற்றிருக்கும் இறைவன் ஆவார். அப் பெருமான், என்னை ஆட்கொண்டு அடிமை யாக்கியவர் என, இந்நங்கை மொழிதல் உற்றனள்.

293. வையம் தான்அளந் தானும் அயனுமாய்
மெய்யைக் காணலுற் றார்க்குஅழல் ஆயினான்
ஐயன் ஆவடு தண்துறை யாஎனக்
கையில் வெள்வளை யும்கழல் கின்றதே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும், சிவபெருமானுடைய திருமேனியைக் காணும் தன்மையில் தேடிச் செல்ல, அப்பெருமான் பெரும் சோதிப் பிழம்பாகி, அழல் வடிவத்தில் திகழ்ந்தனர். அத்தகைய ஈசன், ஆவடுதுறையில் வீற்றிருப்பவர். அப் பரமனின் திரு நாமத்தை ஓதிய இந் நங்கையில் கைவளையல் கழன்று நழுவியது.

294. பக்கம் பூதங்கள் பாடப் பலிகொள்வான்
மிக்க வாளரக் கன்வலி வீட்டினான்
அக்குஅ ணிந்தவன் ஆவடு தண்துறை
நக்கன் என்னும்இந் நாணிலி காண்மினே.

தெளிவுரை : சிவபெருமான், பூதகணங்கள் பக்கத்திலிருந்து பண்ணிசைத்துப் பாடல்களைப் பாடிக் கொண்டு இருக்கப் பலியேற்பவர்; இராவணனுடைய வலிமையை வீழ்த்தியவர்; எலும்பு மாலை அணிந்தவர்; ஆவடு துறையில் விளங்குபவர். அப்பெருமான் நக்கனாகத் திகழ்பவர். அவரைக் கண்டு தரிசிப்பீராக என இந் நங்கையானவள் நாணத்தை நீத்தவளாய் ஓதுதலாயினள்.

திருச்சிற்றம்பலம்

30. திருப்பராய்த்துறை (அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில், திருப்பராய்த்துறை, திருச்சி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

295. கரப்பர் காலம் அடைந்தவர் தம்வினை
சுருக்கு மாறுவல் லார்கங்கை செஞ்சடைப்
பரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத்
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வரே.

தெளிவுரை : காவிரித் தென் கரையில் உள்ள திருப்பராய்த்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமான், பெருகி எழுந்த கங்கையைச் சுருங்குமாறு செய்து, செஞ்சடையில் தரித்துக் கொண்டவர்; காலங்காலமாகப் பிறவிதோறும் செய்து பெருகிய வினைகள் யாவற்றையும் தன்னைச் சரணம் அடைந்த அன்பர்களுக்கு அக்கணத்திலேயே விலக்கி, அருள் புரியும் செல்வர்.

296. மூடி னார்களி யானையின் ஈருரி
பாடி னார்மறை நான்கினோடு ஆறங்கம்
சேட னார்தென்ப ராய்த்துறைச் செல்வரைத்
தேடிக் கொண்டுஅடி யேன்சென்று காண்பனே.

தெளிவுரை : சிவபெருமான், யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர்; நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் ஓதியருளியவர்; மிக்க பெருமையுடையவராகித் தென்பராய்த் துறையில் மேவும் செல்வர். அப்பரமனை அடியவன் தேடிச் சென்று காண்பேன்.

297. பட்ட நெற்றியர் பால்மதிக் கீற்றினர்
நட்டம் ஆடுவர் நள்ளிருள் ஏமமும்
சிட்ட னார்தென் பராய்த்துறைச் செல்வனார்
இட்ட மாயிருப் பாரை அறிவரே.

தெளிவுரை : சிவபெருமான், நெற்றியில் பட்டம் கொண்டு விளங்குபவர்; பால் போன்ற பிறைச் சந்திரனைச் சூடியவர்; நள்ளிருளில் நடனம் புரிபவர்; தென்பராய்த் துறையில் சிறப்புடன் வீற்றிருக்கும் செல்வர்; விரும்பி ஏத்துகின்ற அடியவர்களை நன்கு அறிந்து அருள் புரிந்து காப்பவர்.

298. முன்பெ லாம்சில மோழைமை பேசுர்
என்பெ லாம்பல பூண்டங்கு உழிதர்வர்
தென்ப ராய்த்துறை மேவிய செல்வனார்
அன்ப ராய்இருப் பாரை அறிவரே.

தெளிவுரை : சிவபெருமான், தாருகவனத்தில் உறையும் மகளிர்பால் மோழைமையுடைய மொழிகளை பேசும் இயல்புடையவர்; எலும்பு மாலையணிந்து திரிபவர். அப் பெருமான், திருப்பராய்த் துறையில் மேவிய செல்வராக விளங்கித் தன்பால் அன்பு பூண்டு, ஒழுகுபவர்களை நன்கு அறிந்து காத்தருள்பவர்.

299. போது தாதொடு கொண்டு புனைந்துடன்
தாத விழ்சடைச் சங்கரன் பாதத்துள்
வாதை தீர்க்கஎன்று ஏத்திப் பராய்த்துறைச்
சோதி யானைத் தொழுதுஎழுந்து உய்ம்மினே.

தெளிவுரை : நெஞ்சமே ! சிவபெருமானை நன்கு விரிந்த மலர்கள் கொண்டு மாலை புனைந்து ஏத்துக. ஈசனின் திருப்பாதத்தைப் பணிந்து ஏத்துக. எனது வினையைத் தீர்த்தருள்வீராக ! என்று பராய்த்துறை மேவிய சோதியனை ஏத்தி வணங்குக. அதுவே உய்வு அடைவதற்கு உரிய வழியாகும்.

300. நல்ல நான்மறை யோதிய நம்பனைப்
பல்லில் வெண்டலை யிற்பலி கொள்வனைத்
தில்லை யான்தென் பராய்த்துறைச் செல்வனை
வல்லை யாய்வணங் கித்தொழு வாய்மையே.

தெளிவுரை : நெஞ்சமே ! நலத்தினை விளைவிக்கின்ற நான்கு வேதங்களை ஓதிய நம்பனாகிய சிவபெருமான், மண்டையோட்டினை யேந்திப் பலியேற்பவர்; தில்லையில் மேவித் திருநடனம் புரிபவர்; தென்பராய்த்துறையில் வீற்றிருக்கும் செல்வர். அப்பரமனை, உறுதியாகப் பற்றி நின்று, வணங்கித் தொழுவாயாக. அதுவே மெய்ம்மையைத் தரும் வழிபாடாகும்.

301. நெருப்பி னாற்குவித் தால்ஒக்கு நீள்சடைப்
பருப்ப தம்மத யானை உரித்தவன்
திருப்ப ராய்த்துறை யார்திரு மார்பின்நூல்
பொருப்ப ராவி யிழிபுனல் போன்றதே.

தெளிவுரை : சிவபெருமானுடைய நீண்ட சடை முடியானது, நெருப்பைக் குவித்து வைத்தது போன்ற செம்மையுடையது. அப்பெருமான், மலை போன்ற யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர். திருப்பராய்த்துறையில் வீற்றிருக்கும் அவ்விறைவனின் திரு மார்பில் திகழும் முப்புரி நூலானது, மலையிலிருந்து பொழியும் வெள்ளருவியைப் போன்று விளங்குவதாகும். அப்பரமனை ஏத்துக என்பது குறிப்பு.

302. எட்ட விட்ட விடுமணல் எக்கர்மேல்
பட்ட நுண்துளி பாயும் பராய்த்துறைச்
சிட்டன் சேவடி சென்றடை கிற்றிரேல்
விட்டு நம்வினை யுள்ளன வீடுமே.

தெளிவுரை : உயரமாகக் குவிந்த காவிரி மணலின்மீது பாய்ந்து அடித்துச் செல்லும் நீர்வளம் மிக்க பராய்த்துறையில் மேவும் சிவபெருமானுடைய சேவடியை வணங்குவீராயின், வினை யாவும் விலகிச் செல்லும்.

303. நெருப்ப ராய்நிமிர்ந் தாலொக்கு நீள்சடை
மருப்ப ராய்வளைந் தாலொக்கும் வாள்மதி
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வனார்
விருப்ப ராய்இருப் பாரை அறிவரே.

தெளிவுரை : திருப்பராய் துறையில் வீற்றிருக்கும் செல்வராகிய சிவபெருமான், நெருப்பானது கொழுந்து விட்டு எரியும் தன்மை போன்ற நீண்ட சடைமுடியுடையவர்; யானையின் தந்தம் போன்று வளைந்த பிறைச் சந்திரனை உடையவர். அப்பெருமானிடம் விரும்பி மேவும் அடியவர்களை, அவரே அறிவார்.

304. தொண்டு பாடியும் தூமலர் தூவியும்
இண்டை கட்டி இணையடி யேத்தியும்
பண்ட ரங்கம் பராய்த்துறைப் பாங்கரைக்
கண்டு கொண்டடி யேன்உய்ந்து போவனே.

தெளிவுரை : சிவபெருமான், பண்டரங்கம் என்னும் கூத்தினைப் புரிந்து, திருப்பராய்த் துறையில் வீற்றிருப்பவர். அப்பெருமானைப் போற்றி ஏத்தியும், நண்ணித் திருத்தொண்டு ஆற்றிப் பாடியும், தூய மலர்களால் தூவிப் போற்றியும், இண்டை மாலை புனைந்து சார்த்தி இணையடிகளை வணங்கியும் அடியேன் கண்டு தொழுவேன் ! அவ்வாறு தொழுது உய்வு பெறுவேன் !

305. அரக்கன் ஆற்றல் அழித்த அழகனைப்
பரக்கு நீர்ப்பொன்னி மன்னு பராய்த்துறை
இருக்கை மேவிய ஈசனை யேத்துமின்
பொருக்க நும்வினை போயறும் காண்மினே.

தெளிவுரை : சிவபெருமான், இராவணனுடைய ஆற்றலை அழித்த அழகர்; நீர்வளம் பெருக்கும் காவிரியின் கரையில் பெருமையுடன் மேவும் பராய்த்துறையில் வீற்றிருப்பவர். அப்பெருமானை ஏத்துவீராக. அவ்வாறு செய்ய, நுமது வினைகள் யாவும் நும்மைவிட்டு நீங்குவது உறுதி.

திருச்சிற்றம்பலம்

31. திருவானைக்கா (அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருவானைக்கா, திருச்சி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

306. கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்
தேனைக் காவியுண் ணார்சில தெண்ணர்கள்
ஆனைக் காவில்அம் மானை அணைகிலார்
ஊனைக் காவி உழிதவர்வர் ஊமரே.

தெளிவுரை : தெளிவு அற்றவர்களாகிய சிலர், யாவருக்கும் தலைவராகிய ஈசனைக் குளிர்ந்த மனத்தினராய் வணங்கி ஏத்திச் சிவானந்தத் தேனைப் பருகாதவர்களாக உள்ளனர். திருவானைக்காவில் வீற்றிருக்கும் சிவபெருமானைச் சார்ந்து வணங்காதவர்கள், இவ்வுடம்பினைப் பயனற்றதாக ஆக்கிக் கொண்டு திரிகின்றனர். இறைவனை வணங்குவதற்காக அளிக்கப் பெற்ற இவ்வுடம்பினைப் பயனற்றதாக்கி, வீணாக்குதலைப் போன்று, வாய் இருந்தும், ஊமையவர்கள் என்னும் தன்மையில் உள்ளவர்களாவர்.

307. திருகு சிந்தையைத் தீர்த்துச்செம் மைசெய்து
பருகி யூறலைப் பற்றிப் பதமறிந்து
உருகி நைபவர்க்கு ஊனம்ஒன்று இன்றியே
அருகு நின்றிடும் ஆனைக்கா அண்ணலே.

தெளிவுரை : சிவபெருமான், சிந்தை திரியும் அன்பர்களைச் செம்மைப் படுத்திச் சிவானந்த அமிர்தத்தைப் பருகுமாறு செய்பவர். அத்தகைய அருள் தன்மையில், பக்தியால் உள்ளம் கசிந்து உருகுபவர்களுக்கு, எத்தகைய குறைபாடும் நேராதவாறு அப்பெருமான், அருகில் இருந்து அருள் புரிபவர். அவர், திருவானைக்காவில் வீற்றிருக்கும் அண்ணலே ஆவார்.

308. துன்பம் இன்றித் துயரின்றி என்றும்நீர்
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்
என்பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு
அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே.

தெளிவுரை : உடலால் நுகரப்படும் துன்பமும், மனத்தால் கொள்ளும் துயரமும் இல்லாதவர்களாகி, எக்காலத்திலும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுமென்று கருதுவீராயின், இரவும் பகலும் சிவ பெருமானை ஏத்தி வணங்குவீராக. ஈசனே எனக்கு மேன்மையுடைய பொன்னும் பொருளும் ஆகியவர் என்று, இறைவனை நித்தமும் உருகி நிற்கும் அன்பர்களுக்கு அன்பர் ஆகுபவர். திருவானைக்காவில் வீற்றிருக்கும் அண்ணலே ஆவார்.

309. நாவால் நன்று நறுமலர்ச் சேவடி
ஓவாது ஏத்திஉளத்தடைத் தார்வினை
காவாய் என்றுதம் கைதொழு வார்க்கெலாம்
ஆவா என்றிடும் ஆனைக்கா அண்ணலே.

தெளிவுரை : நாவினால் நன்று ஏத்தி நின்று மலரடியைத் தொழுது உள்ளத்தால் ஒருமித்துத் தியானித்து ஈசனைப் போற்றுகின்ற அடியவர்கள், பெருமானே ! எம்மைக் காத்தருள் புரிவீராக ! வினைத் துன்பங்களைத் தீர்ப்பீராக ! என்று ஏத்த ஈசன் அவ்வாறே அருள்பவராவர். அத்தகைய இறைவன், ஆனைக்காவில் வீற்றிருக்கும் அண்ணல்.

310. வஞ்சம் இன்றி வணங்குமின் வைகலும்
வெஞ்சொல இன்றி விலகுமின் வீடுற
நைஞ்சு நைஞ்சுநின்று உள்குளிர் வார்க்கெலாம்
அஞ்சல் என்றிடும் ஆனைக்கா அண்ணலே.

தெளிவுரை : சிவபெருமானை, மனத்தில் வஞ்சனைக்கு இடமின்றி முழுமையான உள்ளத்தோடு நிஷ்காமிய உணர்வுடன் வணங்குவீராக. கடுமையான சொற்கள் பேசுதலை விலக்குவீராக. முத்தி நலம் நாடி உள்ளம் கசிந்து உருகி ஏத்துவீராக. அத்தகைய அன்பர்களுக்கு ஆனைக்காவில் மேவும் அண்ணல் அஞ்சேல் என்று அபயம் அளித்துக் காத்தருள்பவர்.

311. நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்
தடையொன்று இன்றியே தன்னடைந் தார்க்கெலாம்
அடைய நின்றிடும் ஆனைக்கா அண்ணலே.

தெளிவுரை : உலகில் பொதுவாக நடைபெறும் இயற்கையின் நடையைக் கண்டு அதனையே மெய்யென்று கருதி, வினை, மறுபிறப்பு, இறைவன் ஆகிய பொருள்களை இல்லாதன என்று நாத்திகம் பேச வேண்டாம். பஞ்சமாபூதங்களாகிய நிலம், நீர் நெருப்பு, காற்று, ஆகாயம் என விளங்குவன, மாற்றம் கொண்டு படைகள் போன்று எழுந்து சீற்றத்துடன் தோன்றினாலும், அவற்றால் தடை உண்டாகாதவாறு, தன்னுடைய அடியவர்களைக் காத்து அடைக்கலமாக விளங்குபவர், ஆனைக்காவில் வீற்றிருக்கும் அண்ணல் ஆவார்.

312. ஒழுகு  மாடத்துள் ஒன்பது வாய்தலும்
கழுக ரிப்பதன் முன்னம் கழலடி
தொழுது கைகளால் தூமலர் தூவிநின்று
அழும்அ வர்க்கு அன்பன் ஆனைக்கா அண்ணலே.

தெளிவுரை : ஒன்பது துவாரங்களையுடையதும் ஆகி, ஒழுக்கல் உடைய மாடம் போன்றதாகிய இந்த தேகமானது, கழுகுகள் முதலானவற்றால் அரிக்கப் படுகின்ற இறுதிக்காலம் நெருங்குதவற்கு முன்னர், சிவபெருமானுடைய திருவடியைப் பணிந்து மலர்தூவி ஏத்தி வழிபடுவீராக. உள்ளம் கசிந்து உருகி நின்று கண்ணீர் மல்க ஏத்துவீராக. அத்தகைய அன்புடைய பக்தர்களுக்கு அன்பனாகத் திகழ்பவர் ஆனைக்காவில் மேவும் அண்ணல் ஆவார்.

313. உருளும் போதறி வொண்ணா உலகத்தீர்
தெருளும் சிக்கெனத் தீவினை சேராதே
இருள றுத்துநின்று ஈசன்என் பார்க்கெலாம்
அருள்கொ டுத்திடும் ஆனைக்கா அண்ணலே.

தெளிவுரை : உலகத்தில் மேவும் மக்களே ! இறுதிக் காலத்தில் எதனையும் அறிய முடியாது. எனவே தெளிவுடையவராகித் தீவினையானது சேராதவாறு காத்துக் கொள்வீராக. ஈசனின் திருநாமத்தை ஓதிட, அப்பெருமான் விரைந்து அருள் புரிபவர். அவர் ஆனைக்காவில் மேவும் அண்ணலே ஆவார்.

314. நேச மாகி நினைமட நெஞ்சமே
நாச மாய குலநலம் சுற்றங்கள்
பாச மற்றுப் பராபர ஆனந்த
ஆசை யுற்றிடும் ஆனைக்கா அண்ணலே.

தெளிவுரை : நெஞ்சமே ! குலம், சுற்றம் முதலான பந்த பாசங்களை விடுக; சிவபெருமானைப் பற்றி நின்று நேசமாக விளங்குக; சிவானந்தத்தில் திளைத்து, ஆனைக்காவில் மேவும் அண்ணலை ஏத்துக.

315. ஓத மாகடல் சூழிலங் கைக்கிறை
கீதங் கின்னரம் பாடக் கெழுவினான்
பாதம் வாங்கிப் பரிந்தருள் செய்தங்கோர்
ஆதி ஆயிடும் ஆனைக்கா அண்ணலே.

தெளிவுரை : இலங்கையின் வேந்தனாகிய இராவணன், இனிய கீதத்தால் ஏத்த, முன்னர் ஊன்றிய திருப்பாதத்தைத் தளர்த்தி, அவ்வரக்கனுக்குப் பரிந்து அருள் செய்த சிவபெருமான், ஆதிமூர்த்தியாகிய ஆனைக்காவின் அண்ணலே ஆவார்.

திருச்சிற்றம்பலம்

32. திருப்பூந்துருத்தி (அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், மேலைத்திருப்பூந்துருத்தி, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

316. கொடிகொள் செல்வ விழாக்குண லைஅறாக்
கடிகொள் பூம்பொழிற் கச்சியே கம்பனார்
பொடிகள் பூசிய பூந்துருத்திந் நகர்
அடிகள் சேவடிக் கீழ்நாம் இருப்பதே.

தெளிவுரை : சிவபெருமான் கொடிகள் கொண்டு செல்வம் பெருகும் திருவிழாக்கள் ஓய்வின்றி நடைபெறும் நறுமணம் விளங்கும் பூம்பொழில் சூழ்ந்த கச்சியில், திருவேகம்பத்தில் வீற்றிருப்பவர். அப் பெருமான், திருநீற்றினைத் திருமேனியில் பூசி விளங்குபவராகித் திருப்பூந்துருத்தி என்னும் நகரில் வீற்றிருக்கும் அடிகள் ஆவார். அப்பரமனுடைய செம்மை திகழும் அடியின் கீழ் உள்ள இடமே நாம் இருக்கும் இடமாயிற்று.

317. ஆர்த்த தோலுடை கட்டியோர் வேடனாய்ப்
பார்த்த னோடு படைதொடு மாகிலும்
பூத்த நீள்பொழிற் பூந்துருத் திந்நகர்த்
தீர்த்தன் சேவடிக் கீழ்நாம் இருப்பதே.

தெளிவுரை : தோலை உடையாகக் கொண்டு வேடுவ வடிவம் தாங்கி, அருச்சுனருடன் படை தொடுத்துப் போர் புரிய மேவும் சிவபெருமான், நீண்ட பூம்பொழில் உடைய பூந்துருத்தி நகரில் தீர்த்தனாக வீற்றிருப்பவர். அப் பரமனின் செம்மையுடைய திருவடிக்குக் கீழே விளங்குகின்றதே நாம் இருக்கும் இடமாகும்.

318. மாதினை மதித் தான்ஒரு பாகமாகக்
காதலாற் கரந் தான்சடைக் கங்கையைப்
பூத நாயகன் பூந்துருத் தின்நகர்க்கு
ஆதி சேவடிக் கீழ்நாம் இருப்பதே.

தெளிவுரை : சிவபெருமான், உமாதேவியை நன்கு மதித்து, விரும்பித் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு மேவுபவர்; கங்கையைச் சடைமுடியில் ஏற்று வைத்திருப்பவர்; உயிர்களுக்கெல்லாம் தலைவர்; பூந்துருத்தி நகரில் மேவும் ஆதிபுராணர். அப்பரமனின் செம்மையுடைய திருவடியின் கீழ் உள்ள இடமே நாம் இருக்கும் இடமாகும்.

319. மூவ னாய்முத லாய்இவ் வுலகெலாம்
காவ னாய்க்கடுங் காலனைக் காய்ந்தவன்
பூவின் நாயகன் பூந்துருத் திந்நகர்த்
தேவன் சேவடிக் கீழ்நாம் இருப்பதே.

தெளிவுரை : சிவபெருமான் முப்பெரும் தன்மையில் உள்ள பிரம்மா, விஷ்ணு, ருத்திரனாகத் திகழ்பவர்; யாவர்க்கும் முதல்வராய் மேவும் தலைமையானவர்; உலகெலாம் காப்பவர்; கொடிய காலனைக் காலால் உதைத்து அழித்தவர்; புஷ்பவனேஸ்வரராகப் பூந்துருத்தி நகரில் வீற்றிருப்பவர். அப்பரமனுடைய செம்மையான திருவடி மலரின் கீழே உள்ள இடமே நாம் இருக்கின்ற இடமாகும்.

320. செம்பொ னேயொக்கும் மேனியன் தேசத்தில்
உம்ப ரார்அவ ரோடுஅங்கு இருக்கிலும்
பொன்பொன் னார்செல்வப் பூந்துருத் திந்நகர்
நம்பன் சேவடிக் கீழ்நாம் இருப்பதே.

தெளிவுரை : சிவபெருமான், செம்பொன்போன்ற திருமேனியர். அப்பெருமான் தேவர்களுடன் அவ்வுலகத்தில் விளங்குபவராயினும், பொன்னும், பொன்னைப் போன்ற ஏனைய செல்வங்களும் விளங்குகின்ற பூந்துருத்தி நகரில், நம் உலகத்தவராக விளங்குபவர். அப்பரமனுடைய செம்மை மிகுந்த மலரடிக்குக் கீழ் உள்ள இடமானது, நாம் இருக்கின்ற இடமாகும்.

321. வல்லம் பேசி வலிசெய்மூன் றூரினைக்
கொல்லம் பேசிக் கொடுஞ்சரம் நூறினான்
புல்லம் பேசியும் பூந்துருத் திந்நகர்ச்
செல்வன் சேவடிக் கீழ்நாம் இருப்பதே.

தெளிவுரை : சிவபெருமான், வன்மையானவற்றைப் பேசிக் கொடுமைகள் செய்த மூன்று அசுரர்களின் புரங்களைக் கொடிய சரம் ஒன்றினால் எரித்தச் சாம்பலாக்கியவர். வேற்றார் மாற்று மொழிகளைப் பேசினாலும், பூந்துருத்தியில் மேவும் அப்பரமனின் செம்மையுடைய திருவடியின் கீழ் உள்ள இடமே, நாம் இருக்கின்ற இடமாகும்.

322. ஒருத்த னாய்உல கேழும் தொழநின்று
பருத்த பாம்பொடு பால்மதி கங்கையும்
பொருத்த னாகிலும் பூந்திருத்திந்நகர்த்
திருத்தன் சேவடிக் கீழ்நாம் இருப்பதே.

தெளிவுரை : சிவபெருமான், ஒப்பற்ற ஒருவனாய் விளங்கி, ஏழுலகங்களும் தொழுது ஏத்துமாறு இருப்பவர்; பாம்பும், பிறைச்சந்திரனும், கங்கையும் தரித்து விளங்குபவர். அப்பரமன், பூந்துருத்தியில் மன்னுயிரானது தவறான நெறியில் புகாதவாறு திருத்தி ஆட்கொள்பவராய் விளங்குபவர். அவருடைய செம்மையான இடமாக விளங்கும் திருவடியின் கீழ் உள்ள இடமே, நாம் இருக்கும் இடமாகும்.

323. அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர்
கருத நின்றவர் காண்பரி தாயினான்
பொருத நீர்வரு பூந்துருத் திந்நகர்ச்
சதுரன் சேவடிக் கீழ்நாம் இருப்பதே.

தெளிவுரை : ஆற்றல் மிக்க தேவர், இயக்கர், வித்யாதரர் மற்றும் கருதி வணங்கத் தக்கவர்களாகிய திருமால், பிரமன் எனவிளங்குபவர்களுக்குக் காண்பதரிதாகியவர், சிவபெருமான். அப்பெருமான், நீர்வளம் மிகுந்த பூந்துருத்தியில் மேவும் சதுரர். அவருடைய செம்மை விளங்கும் திருவடிக்குக் கீழ் உள்ள இடமே, நாம் இருக்கும் இடமாகும்.

324. செதுக றாமனத் தார்புறம் கூறினும்
கொதுக றாக்கண்ணி னோன்பிகள் கூறினும்
பொதுவி னாயகன் பூந்துருத்திந் நகர்க்கு
அதிபன் சேவடிக் கீழ்நாம் இருப்பதே.

தெளிவுரை : குற்றங்களை நீக்கி, நற்கதிக்கு வித்திடாதவர்கள், புறங்கூறித் திரிந்தாலும், உடல் தூய்மையுடைய ஆசாரங்களை மேவாது, அதனையே நோன்பாகக் கருதிய வேற்றுச் சமயத்தார் பலவாகக் கூறினாலும், பஞ்ச சபைகளில் மேவித் திருநடனம் புரியும் சிவபெருமானின் செம்மை மிகுந்த திருவடி நிழலே, நாம் இருக்கின்ற இடமாகும். அப்பெருமான் பூந்துருத்தியில் விளங்குபவரே.

325. துடித்த தோள்வலி வாளரக் கன்தனைப்
பிடித்த கைஞ்ஞெரித்து உற்றன கண்ணெலாம்
பொடிக்க வூன்றிய பூந்துருத் திந்நகர்ப்
படிகொள் சேவடிக் கீழ்நாம் இருப்பதே.

தெளிவுரை : தோளின் வலிமை மிகுந்த இராவணனுடைய கைகளும், உரமும், நெரியவும், கண்கள் நீர் தளும்பப் பெருகவும் ஊன்றிய சிவபெருமான், பூந்துருத்தியில் வீற்றிருப்பவர். அப்பரமனின் செம்மையுடைய திருவடி நிழலானது, நாம் இருக்கும் இடமாகும்.

திருச்சிற்றம்பலம்

33. திருச்சோற்றுத்துறை (அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில், திருச்சோற்றுத்துறை, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

326. கொல்லை யேற்றினர் கோளர வத்தினர்
தில்லைச் சிற்றம் பலத்துறை செல்வனார்
தொல்லை ஊழியர் சோற்றுத் துறையர்க்கே
வல்லை யாய்ப்பணி செய்மட நெஞ்சமே.

தெளிவுரை : நெஞ்சமே ! சிவபெருமான், இடபத்தை வாகனமாகக் கொண்டிருப்பவர்; வளைந்தவாறு விளங்கும் நாகத்தை அணியாகக் கொண்டுள்ளவர்; தில்லைச் சிற்றம்பலத்தில் திருநடனம் புரிபவர்; ஊழிக் காலந்தோறும் விளங்கி மேவும் தொன்மையுடையவர்; சோற்றுத் துறையில் வீற்றிருப்பவர். அப்பெருமானுக்கு திருத்தொண்டினை உறுதியுடன் இருந்து ஆற்றுக.

327. முத்தி யாக ஒருதவம் செய்திலை
அத்தி யால்அடி யார்க்குஒன்று அளித்திலை
தொத்து நின்றலர் சோற்றுத் துறையர்க்கே
பத்தி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே.

தெளிவுரை : நெஞ்சமே ! முத்திப் பேற்றினை அடையும் நெறியில், எத்தகைய தவமும் செய்திலை; அடியவர் பெருமக்களுக்கு மனம் உவந்து சிறப்பினைச் செய்யவில்லை. இத்தகைய நிலையில், கொத்தாகப் பூத்து விளங்குகின்ற சோலைகளையுடைய சோற்றுத் துறையில் மேவும் ஈசனுக்குப் பக்தியுடன் திருத்தொண்டினை ஆற்றுக.

328. ஒட்டிநின்ற உடலுறு நோய்வினை
கட்டிநின்று கழிந்தவை போயறத்
தொட்டு நின்றும்அச் சோற்றுத் துறையர்க்கே
பட்டி யாப்பணி செய்மட நெஞ்சமே.

தெளிவுரை : தெளிவில்லாத நெஞ்சமே ! உடலோடு ஒட்டி இருக்கும் பிறவி நோய், வினையானது பற்றி இருப்பதால் உண்டாகின்றது. அத்தகைய வினை நோயானது விலகிச் செல்ல வேண்டுமானால், சோற்றுத் துறை நாதருக்கு மீளா அடிமையாகிப் பணி செய்வாயாக.

329. ஆதியான் அண்ட வாணர்க்கு அருள்நல்கும்
நீதியான் என்றும் நின்மல னேஎன்றும்
சோதியான் என்றும் சோற்றுத் துறையர்க்கே
வாதியாய்ப் பணி செய்மட நெஞ்சமே.

தெளிவுரை : நெஞ்சமே ! சிவபெருமான், ஆதியாக விளங்குபவர்; தேவர்களுக்கு இனிய அருளை நல்கும் சீலம் உடையவர்; நின்மலனாக விளங்குபவர்; சோதிப் பொருளாக விளங்குபவர்; சோற்றுத் துறையில் வீற்றிருப்பவர். அப்பரமனுக்கு உரியவாறு அடிமை பூண்டு, அன்பனாய் மேவிப் பணி செய்வாயாக.

330. ஆட்டி னாய்அடி யேன்வினை யாயின
ஓட்டி னாய்ஒரு காதில் இலங்கு வெண்
தோட்டி னாய்என்று சோற்றுத் துறையர்க்கே
நீட்டி நீபணி செய்மட நெஞ்சமே.

தெளிவுரை : நெஞ்சமே ! சோற்றுத் துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு மிகுந்த அன்பு கொண்டு பேரன்பு மிக்கதாகிப் பணிசெய்வாயாக. அப்பெருமான், யாவற்றையும் ஆட்டுவிப்பவர், அடியவனாகிய என்னுடைய வினை முழுவதும் நீங்குமாறு செய்தவர்; ஒரு காதில் வெண்மையாக ஒளிரும் தோடு அணிந்திருப்பவர்.

331. பொங்கி நின்றெழுந் தகடல் நஞ்சினைப்
பங்கி உண்டதோர் தெய்வம் உண்டோசொலாய்
தொங்கி நீஎன்றும் சோற்றுத் துறையர்க்குத்
தங்கி நீபணி செய்மட நெஞ்சமே.

தெளிவுரை : நெஞ்சமே ! கடலில் இருந்து பொங்கி எழுந்த நஞ்சினைக் கண்டு, எல்லாரும் அச்சம் கொண்டு சிதறி ஓட, அதனைக் கையால் வாங்கிப் பருகிய தெய்வம் சிவபெருமானையன்றி வேறு யார் உளர் என எண்ணுவாயாக. சோற்றுத் துறையில் வீற்றிருக்கும் அப்பரமனின் திருவடியை வணங்கி, அப்பெருமானுக்கே ஆளாக மேவித் திருத்தொண்டு புரிவாயாக.

332. ஆணி போலநீ ஆற்ற வலியைகாண்
ஏறி போல்இழிந்து ஏறியும் ஏங்கியும்
தோணி யாகிய சோற்றுத் துறையர்க்கே
பூணி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே.

தெளிவுரை : நெஞ்சமே ! நல்ல உறுதியுடன் விளங்கும் நீ, ஏணியைப்போல் ஏறியும் இறங்கியும் துயரத்தில் ஏங்கித் தத்தளிப்பது எதற்கு. சோற்றுத் துறையில் வீற்றிருக்கும் ஈசன் உனக்கு நற்றுணையாகத் திகழ்பவர். அப்பெருமானுடைய திருவடியை அடைந்து அடிமை பூண்டு பணி செய்து உய்வு பெறுவாயாக.

333. பெற்றம் ஏறில்என் பேய்படை யாகில்என்
புற்றில் ஆடரவேயது பூணில் என்
சுற்றி நீஎன்றும் சோற்றுத் துறையர்க்கே
பற்றி நீபணி செய்மட நெஞ்சமே.

தெளிவுரை : நெஞ்சமே ! சிவபெருமான், இடபத்தை வாகனமாகக் கொண்டு விளங்குபவர்; பேய்க் கூட்டத்தைப் படையாகக் கொண்டிருப்பவர்; அரவத்தை ஆபரணமாகக் பெற்றிருப்பவர். ஆனாலும் நினக்கு எத்தகைய இடர்ப்பாடும் இல்லை. சோற்றுத்துறையில் வீற்றிருக்கும் பெருமானைச் சார்ந்து, திருவடியைப் பற்றி இருந்து ஏத்தித் திருத் தொண்டுகளைப் புரிவாயாக. அதுவே உன்னை உய்விக்கும்.

334. அல்லி யான்அர வைந்தலை நாகணைப்
பள்ளி யான்அறி யாத பரிசெலாம்
சொல்லி நீஎன்றும் சோற்றுத் துறையர்க்கே
புல்லி நீபணி செய்மட நெஞ்சமே.

தெளிவுரை : நெஞ்சமே ! தாமரையின் அகவிதழில் மேவும் நான்முகனும், ஐந்தலை நாகத்தின் மீது பள்ளி கொண்டுள்ள திருமாலும் காண்பதற்கு அறியாதவாறு, நெடிது உயர்ந்து ஓங்கியவர், சிவபெருமான். அப் பெருமானுடைய புகழை நன்கு ஓதி உரைப்பாயாக. சோற்றுத்துறை நாதரின் திருவடியைப் பணிந்து திருத்தொண்டு புரிவாயாக. அதுவே நற்கதியடைவதற்கு உரிய வழியாகும்.

335. மிண்ட ரோடு விரவியும் வீறிலாக்
குண்டர் தம்மைக் கழிந்துய்யப் போந்துநீ
தொண்டு செய்துஎன்றும் சோற்றுத் துறையர்க்கே
உண்டு நீபணி செய்மட நெஞ்சமே.

தெளிவுரை : நெஞ்சமே ! வாதிட்டுப் பொழுதைக் கழித்தும், அறமல்லாதவற்றை இயல்பென ஆற்றியும் கழித்த காலமானது தீவினையைப் பெருக்குமாறு ஆயின. அதனை மாற்றி உய்ய வேண்டுமானால் சோற்றுத்துறையை நண்ணி, ஆங்கு எழுந்தருளியுள்ள ஈசனை ஏத்திப் பணிவாயாக. திருப்பணிகளைச் செய்து நற்கதியடைவாயாக.

336. வாழ்ந்த வன்வலி வாளரக் கன்றனை
ஆழ்ந்து போய்அல றவ்விரல் ஊன்றினான்
சூழ்ந்த பாரிடம் சோற்றுத் துறையர்க்குத்
தாழ்ந்து நீபணி செய்மட நெஞ்சமே.

தெளிவுரை : வலிமை மிகுந்த அரக்கனாகிய இராவணன் நைந்து அலறுமாறு திருவிரலை ஊன்றிய சிவபெருமான் உறையும் இடமாவது, பூத கணத்தவர்கள் சூழ்ந்து மேவும் சோற்றுத்துறையாகும். நெஞ்சமே ! அப்பரமனின் திருவடியைப் பணிந்து ஏத்தித் திருத்தொண்டு ஆற்றுவாயாக. அதுவே நற்கதிக்கு உரியதாகும்.

திருச்சிற்றம்பலம்

34. திருநெய்த்தானம்  (அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில், தில்லைஸ்தானம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

337. கொல்லி யான்குளிர் தூங்குகுற் றாலத்தான்
புல்லி யார்புரம் மூன்றெரி செய்தவன்
நெல்லி யான்நிலை யானநெய்த் தானனைச்
சொல்லி மெய்தொழு வார்சுடர் வாணரே.

தெளிவுரை : சிவபெருமான், பகைத்து நின்ற மூன்று அசுரர் புரங்களை எரித்துச் சாம்பலாக்கியவர். கொல்லி, குற்றாலம், நெல்லிக்கா ஆகிய தலங்களில் வீற்றிருப்பவர்; நெய்த்தானத்தில் வீற்றிருப்பவர். அப்பரமனைக் காயத்தால் தொழுது ஏத்துபவர்கள், ஒளி மிக்கவராகத் திகழ்வார்கள்.

338. இரவ னையிடு வெண்தலை யேந்தியைப்
பரவ னைப்படை யார்மதில் மூன்றையும்
நிரவ னைநிலை யானநெய்த் தானனைக்
குரவ னைத்தொழு வார்கொடி வாணரே.

தெளிவுரை : சிவபெருமான், மண்டையோட்டினைப் பிச்சைப் பாத்திரமாகக் கொண்டு, பிச்சை கொள்பவர். மன்னுயிர்களால் போற்றிப் பரவப்படுபவர்; பறந்தும், திரிந்தும், தாமே படைக்கலம் போன்று அமைந்து அழிவுகளைப் புரிந்து, மூன்று அசுரர்களின் கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கியவர்; எல்லாக் காலத்திலும் நிலைத்து விளங்கும் நெய்த்தானத்தில் வீற்றிருப்பவர். அத்தகைய பெருமான், தட்சிணாமூர்த்தியாக விளங்கிச் சனகாதி முனிவர்களுக்குக் குருமுகாந்திரமாக உபதேசித்து அருள் புரிந்தவர். அப் பரமனைக் கைதொழுது ஏத்துபவர்கள், மிகுந்த செல்வாக்கு உடையவர்களாகிக் கொடி கட்டி வாழ்பவர் என்று ஏத்தப் பெறும் வகையில், எல்லா நலன்களையும் பெறுவார்கள்.

339. ஆனிடை ஐந்தும் ஆடுவர் ஆரிருள்
கானிடை நடம் ஆடுவர் காண்மினோ
தேனிடை மலர் பாயுநெய்த் தானனை
வானிடைத் தொழு வார்வலி வாணரே.

தெளிவுரை : சிவபெருமான், பசுவிலிருந்து கிடைக்கப் பெறும் பஞ்சகவ்வியத்தால் பூசனை கொண்டு மகிழ்பவர்; மயானத்தில் இருந்து நடு இரவில் இருளில் நடனம் ஆடுபவர். அப்பரமன், தேன் துளிர்க்கும் மலர்கள் விளங்கும் நெய்த்தானத்தில் வீற்றிருக்க அவரைத் தியானம் செய்து உள்ளத்தால் தொழுது ஏத்துபவர்கள், வல்லமை யாவற்றையும் பெறுவார்கள்.

340. விண்ட வர்புர மூன்றும்வெண் ணீறுஎழக்
கண்ட வன்கடி தாகிய நஞ்சினை
உண்ட வன்னொளி யானநெய்த் தானனைத்
தொண்ட வாய்த்தொழு வார்சுடர் வாணரே.

தெளிவுரை : சிவபெருமான், பகைவராகிய மூன்று அசுரர்களின் புரங்களை எரித்துச் சாம்பலாக்கியவர்; மிகவும் கொடிய நஞ்சினை உட்கொண்டு காத்தருள் புரிந்தவர்; நெய்த்தானத்தில் ஒளிமயமாக வீற்றிருந்து அருள் பாலிப்பவர். அப்பெருமானின் தொண்டராக விளங்கி ஏத்தித் தொழுபவர்கள் ஒளி மிக்கவராய்த் திகழ்வார்கள்.

341. முன்கை நோவக் கடைந்தவர் நிற்கவே
சங்கி யாது சமுத்திர நஞ்சுண்டான்
நங்கை யோடு நவின்றநெய்த் தானனைத்
தங்கை யால்தொழு வார்தலை வாணரே.

தெளிவுரை : தேவர்களும் அசுரர்களும் தமது மெய்வருந்தவும், கைகள் நோகவும் கடைந்தபோது எழுந்த நஞ்சினைக் கண்டு அஞ்சி நிற்க, சிவபெருமான் அச்சம் ஏதும் இன்றி, அந் நஞ்சினை உண்டனர். அப்பெருமான், உமாதேவியை உடனாகக் கொண்டு நெய்த்தானத்தில் வீற்றிருப்பவர். அவரைத் தமது கையால் தொழுது ஏத்துபவர்கள், தலை சிறந்தவராகிப் பிறவியில் பயனைப் பெற்றவர்களாவார்கள்.

342. சுட்ட நீறுமெய் பூசிச் சுடலையுள்
நட்டம் ஆடுவர் நள்ளிருள் பேயொடே
சிட்டர் வானவர் தேருநெய்த் தானனை
இட்ட மாய்த்தொழு வார்இன்ப வாணரே.

தெளிவுரை : சிவபெருமான், திருநீற்றினைத் தனது செம்மையான திருமேனியில் விரவப் பூசியுள்ளவர்; சுடுகாட்டில் நள்ளிருளில் பேய்க் கூட்டத்தோடு சேர்ந்து, நடனம் ஆடுபவர். அப்பெருமான், முனிவர்களும் தேவர்களும் சென்று வணங்க, நெய்த்தானத்தில் வீற்றிருப்பவர். அப்பரமனை, விருப்பத்துடன் தொழுது ஏத்தும் அடியவர்கள், இன்பத்தில் திளைத்து மகிழும் இயல்பினை பெறுவார்கள்.

இது மறுமைக்குரிய இன்பத்திற்கு வழி வகுப்பதுடன், இம்மையிலும் அத்தகைய பேற்றினை அடைபவர்களாவார்கள் என உணர்த்திற்று. இத்தன்மையானது, வினை நீக்கத்தைக் குறிப்பால் உணர்த்துவதாயிற்று.

343. கொள்ளித் தீயெரி வீசிக் கொடியதோர்
கள்ளிக் காட்டிடை ஆடுவர் காண்மினோ
தெள்ளித் தேறித் தெளிந்துநெய்த் தானனை
உள்ளத் தால்தொழு வார்உம்பர் வாணரே.

தெளிவுரை : சிவபெருமான் கொழுந்து விட்டு எரியும் நெருப்பைக் கையில் ஏந்தி, கொடுமையுடைய மயானத்தில் நடனம் ஆடுபவர். அப்பெருமான் நெய்த்தானத்தில் வீற்றிருப்பவர். அவரை நன்கு ஞான உணர்வால் தேர்ந்து உணர்ந்து மனம் ஒன்றித் தொழுது ஏத்துபவர்கள், தேவர்களுடன் வாழும் தகுதியும் பெருமையும் உடையவராவர்.

344. உச்சி மேல்விளங் கும்இள வெண்பிறை
பற்றி யாடர வோடும் சடைப்பெய்தான்
நெற்றி யார்அழல் கண்டநெய்த் தானனைச்
சுற்றி மெய்தொழு வார்சுடர் வாணரே.

தெளிவுரை : சிவபெருமான், வானின் உச்சியில் மேவும் இளமையான வெண்பிறையைச் சூடியவர்; அரவத்தையும் சடை முடியில் வைத்து விளங்குபவர்; நெற்றியில் நெருப்புக் கண்ணுடையவர்; நெய்த் தானத்தில் வீற்றிருப்பவர். அப்பரமனைச் சூழ்ந்து நின்று மெய்யான அன்பு கொண்டு ஏத்துபவர்கள், ஒளி வண்ணம் உடைய மேன்மையைப் பெறுவார்கள்.

345. மாலொ டும்மறை ஓதிய நான்முகன்
காலொ டும்முடி காண்பரி தாயினான்
சேலொ டும்செருச் செய்யுநெய்த் தானனை
மாலொ டும்தொழு வார் வினைவாடுமே.

தெளிவுரை : திருமாலும் நான்முகனும் காணுதற்கு அரியவராக ஓங்கிய சிவபெருமான், சேல் விளங்கும் நீர்வளம் மிக்க நெய்த்தானத்தில் வீற்றிருப்பவர். அப் பரமனைப் பேரன்பின் பாற்பட்டுப் பக்தி உணர்வினால், தன்னை மறந்து தொழுது ஏத்தும் அடியவர்கள், வினை முழுவதும் நீங்கப் பெற்றவர் ஆவார்கள்.

346. வலிந்த தோள்வலி வாளரக் கன்றனை
நெருங்க நீர்வரை யூன்றுநெய்த் தானனார்
புரிந்து கைந்நரம் போடிசை பாடலும்
பரிந்த னைப்பணி வார்வினை பாறுமே.

தெளிவுரை : வலிமையுடைய தோளையுடைய இராவணன் நெரியுமாறு, கயிலை மலையை ஊன்றியவர், நெய்த்தானத்தில் மேவும் சிவபெருமான். கை நரம்பு கொண்டு இசைத்துப்பாடி ஏத்திய அவ்வரக்கனுக்குப் பரிந்து அருள் புரிந்தவர் அவர். அப்பெருமானைப் பணிந்து ஏத்தும் அடியவர்களின் வினை யாவும் அழியும்.

திருச்சிற்றம்பலம்

35. திருப்பழனம் (அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருப்பழனம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

347. அருவ னாய்அத்தி யீருரி போர்த்துமை
உருவ னாய்ஒற்றி யூர்பதி யாகிலும்
பருவ ரால்வயல் சூழ்ந்த பழனத்தான்
திருவி னால்திரு வேண்டும்இத் தேவர்க்கே.

தெளிவுரை : சிவபெருமான், அருவமாக விளங்கி எல்லா இடங்களிலும் வியாபித்து விளங்குபவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர்; உமாதேவியை உடனாகக் கொண்டு அம்மையப்பராகத் திருஉருவம் தாங்கி அருள் புரிபவர்; திருவொற்றியூரைப் பதியாகக் கொண்டு மேவுபவர். அப்பெருமான், பருத்த வரால் மீன்கள் திளைக்கும் வயல் சூழ்ந்த பழனத்தில் வீற்றிருப்பவர். அத்தகைய பெருமானிடம், பொருட்செல்வத்தால் திருப்பணிகளையும் திருவிழாக்களையும் ஆற்றிய திருத்தொண்டர்கள், அருட் செல்வத்தையும் முத்திச் செல்வத்தையும் நாடி விளங்குவாராயினர்.

348. வையம் வந்து வணங்கி வலங்கொளும்
ஐய னையறி யார்சிலர் ஆதர்கள்
பைகொள் ஆடரவு ஆர்த்த பழனன்பால்
பொய்யர் காலங்கள் போக்கிடு வார்களே.

தெளிவுரை : உலகமெல்லாம் வந்து வணங்கி வலம் வந்து ஏத்தித் தொழுது, சிவபெருமானைத் துதிக்கின்றன. அப்பெருமான், அரவத்தை அணிகலனாகக் கொண்டு பழனத்தில் வீற்றிருப்பவர். பொய்ம்மையாளர்களும், ஞானமில்லாத கீழ்ப்பட்டோரும் இத்தகைய பெருமையை அறியாதவர்களாகிக் காலத்தை வீணாகக் கழிக்கின்றனரே ! அந்தோ !

349. வண்ண மாக முறுக்கிய வாசிகை
திண்ண மாகத் திருச்சடைச் சேர்த்தியே
பண்ணு மாகவே பாடும் பழனத்தான்
எண்ணும் நீர்அவன் ஆயிரம் நாமமே.

தெளிவுரை : சிவபெருமான், நன்கு முறுக்கு ஏறுமாறு செய்து சேர்த்துக்கட்டிய சடைமுடியுடையவர்; தலைமாலையுடையவர். அப்பெருமான், பண்ணின் இசை விளங்கப் பாடுபவராகிப் பழனத்தில் வீற்றிருப்பவர். அப்பரமனுடைய ஆயிரம் திருநாமங்களை நெஞ்சிற் கொண்டு தியானம் செய்வீராக.

350. மூர்க்கப் பாம்பு பிடித்தது மூச்சிட
வாக்கப் பாம்பினைக் கண்ட துணிமதி
பாக்கப் பாம்பினைப் பற்றும் பழனத்தான்
தார்கொள் மாலை சடைக்குஅணிந் திட்டதே.

தெளிவுரை : சிவபெருமான், கொடிய தன்மையுடைய பாம்பைக் கையில் பிடித்து ஆட்ட, அது பெருமூச்சு விட, அதனைக் கண்ட பிறைச் சந்திரன் அச்சம் உற்றது. ஆயினும் பழனத்தில் வீற்றிருக்கும் அப் பெருமான், அப்பாம்பினைச் சடையில் மேவிய மற்றைய மாலைகளுடன் சேர்த்து, அணிகலனாகப் பொருத்திக் கொண்டனர்.

351. நீலம் உண்ட மிடற்றினன் நேர்ந்ததோர்
கோலம் உண்ட குணத்தால் நிறைந்த தோர்
பாலும் உண்டு பழனன்பால் என்னிடை
மாலும் உண்டுஇறை என்றன் மனத்துளே.

தெளிவுரை : சிவபெருமான், நீல கண்டத்தையுடையவர். அது அழகிய திருக் கோலத்தை நல்குவதாயிற்று. அதன் வழியாகிய அருள் தன்மையில் யான் மயங்கிப் பழனத்தில் வீற்றிருக்கும் இறைவன்பால் சார்ந்தனன். அதனால் என்னுடைய மனத்துள் சிறிது பேரின்பக் களிப்பும் நிகழ்ந்தது.

352. மந்தமாக வளர்பிறை சூடியோர்
சாந்தமாகத் திருச்சடை சாத்துவான்
பந்த மாயின தீர்க்கும் பழனத்தான்
எந்தை தாய்தந்தை எம்பெரு மானுமே.

தெளிவுரை : சிவபெருமான், சாந்தம் திகழும் பிறைச் சந்திரனைச் சடைமுடியின்கண் சாற்றி விளங்குபவர். அப்பெருமான், உயிரைப் பந்தப்படுத்திப் பிறவிக்குக் காரணமாகிய வினையைத் தீர்த்தருளும் பாங்கில், பழனத்தில் கோயில் கொண்டு விளங்குபவர். அவரே எனக்குத் தாய், தந்தை, தலைவர், இறைவன் என ஆகியவர்.

353. மார்க்கம் ஒன்றறி யார்மதி யில்லிகள்
பூக்க ரத்திற் புரிகிலர் மூடர்கள்
பார்க்க நின்று பரவும் பழனத்தான்
தாள்கள் நின்று தலைவணங் கார்களே.

தெளிவுரை : பழனத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை எல்லாரும் கைதொழுது ஏத்தி நின்று வணங்கியும், திருவடியில் மலர்களால் தூவிப் போற்றி வணங்கியும் நற்கதி பெற வேண்டும். அவ்வாறு செய்யாதவர் அறிவற்றவரே.

354. ஏறி னார்இமை யோர்கள் பணிகண்டு
தேறு வாரலர் தீவினை யாளர்கள்
பாறி னார்பணி வேண்டும் பழனத்தான்
கூறி னான்உமை யாளொடும் கூடவே.

தெளிவுரை : உமாதேவியை உடனாகக் கொண்டு மேவும் சிவபெருமான், பழனத்தில் வீற்றிருப்பவர் ஆவார். நன்னிலைக்கு உயர்ந்துள்ள தேவர்கள் எல்லாரும், ஈசனைத் தொழுது ஏத்திப் பெருஞ் சிறப்பினை அடைகின்றனர். யாவர்க்கும் எளியவராகிய அப்பரமனை ஏத்தாது, சிலர் தீவினையின்கண் மூழ்குதல்தான் என்னே !

355. சுற்று வார்தொழு வார்சுடர் வண்ணன்மேல்
தெற்றி னார்திரி யும்புரம் மூன்றெய்தான்
பற்றி னார்வினை தீர்க்கும் பழனனை
எற்றி னான்மறக் கேன்எம் பிரானையே.

தெளிவுரை : சிவபெருமான், பகைத்துத் திரிந்த முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கியவர்; தனது திருவடியைப் பற்றி நின்று அன்பு செலுத்தும் அடியவர்களின் வினையைத் தீர்த்தருள்பவர்; பழனத்தில் திருக்கோயில் கொண்டு விளங்குபவர்; சுடர் விட்டு ஒளிரும் சோதியாகத் திகழ்பவர். அப்பெருமானுடைய திருவடியைத் தொழுது வணங்கித் திருக்கோயிலை வலம் வந்து ஏத்தும் அடியவர்களுக்குக் கருணையுடன் அவர் அருள் புரிபவர். அத்தகைய அருள் பொழியும் எம் தலைவனை, நான் எதற்காக மறக்க வேண்டும். நான் எக்காலமும் மறவேன்.

356. பொங்கு மாகடல் சூழிலங் கைக்கிறை
அங்க மான இறுத்தருள் செய்தவன்
பங்கண் என்றும் படினன் உமையொடும்
தங்கள் தாள்அடி யேனுடை யுச்சியே.

தெளிவுரை : இராவணனுடைய அங்க உறுப்புக்களாகிய தோள், முடி, தாடை, கண் முதலான யாவும் நெரியுமாறு ஊன்றிப் பின்னர், அவ்வரக்கன் ஏத்தி வணங்க அருள் புரிந்தவர், சிவபெருமான். அவர், உமாதேவியை உடனாகக் கொண்டும், தனது பாகத்தில் தங்குமாறு செய்தும், பழனத்தில் திருக்கோயில் கொண்டு விளங்குபவர். அப்பரமனுடைய திருவடியானது அடியேனுடைய தலையின் உச்சியில் விளங்குவதாயிற்று.

திருச்சிற்றம்பலம்

36. திருச்செம்பொன்பள்ளி (அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், செம்பொனார்கோவில், நாகப்பட்டினம்  மாவட்டம்)
 
திருச்சிற்றம்பலம்

357. கான றாத கடிபொழில் வண்டினம்
தேன றாத திருச்செம்பொன் பள்ளியான்
ஊன றாத தோர்வெண்டலை யிற்பலி
தான றாத தோர்கொள்கையன் காண்மினே.

தெளிவுரை :  நறுமணம் கமழும் பொழிலில், வண்டினமானது தேன் சுவைத்தலிலிருந்து பிரியாதுள்ளது. அத்தகைய சிறப்புடைய திருச்செம்பொன் பள்ளியில் மேவும் சிவபெருமான், ஊனின் நாற்றம் விளங்கும் மண்டை யோட்டை யேந்திப் பலியினை இடைவிடாது கொள்ளும் கொள்கையுடையவராக விளங்குபவர்.

358. என்பும் ஆமையும் பூண்டங்கு உழிதர்வர்க்கு
அன்பும் ஆயிடும் ஆயிழை யீர்இனிச்
செம்பொன் பள்ளியும் ளான்சிவ லோகனை
நம்பொன் பள்ளியுள் கவினை நாசமே.

தெளிவுரை : சிவபெருமான், எலும்பும் ஆமை ஓடும் ஆபரணமாகப் பூண்டு திரிபவராக இருந்தாலும், அப்பரமனிடம் அன்பு கொண்டு விளங்கும் நங்கையீர் ! செம்பொன்பள்ளியுள் மேவும் சிவலோக நாதனாகிய அக்கடவுளை, அழகிய உள்ளமாகிய கோயிலில் வைத்து ஏத்துவீராக. வினையாவும் கெட்டழியும்.

359. வேறு கோலத்தர் ஆணலர் பெண்ணலர்
கீறு கோவண வைதுகில் ஆடையர்
தேறல் ஆவதொன்று அன்றுசெம் பொன்பள்ளி
ஆறு சூடிய அண்ணல் அவனையே.

தெளிவுரை : சிவபெருமான், வெவ்வேறு திருக்கோலத்தில் விளங்குபவர். அவர், ஆணும் அல்லர், பெண்ணும் அல்லர்; கிழிந்த கோவணத் துகிலை ஆடையாகக் கொண்டவர்; செம்பொன்பள்ளியில் கங்கை தரித்த சடையுடைய அண்ணலாய் விளங்குபவர். அப்பெருமான், இத்தகைய தன்மையுடையவர் என்று தேர்ந்து அறிவதற்கு அரியவர்.

360. அருவ ராததோர் மேற்புனல் சூடினான்
இருவ ராயிடு வார்கடை தேடுவார்
தெருவெ லாம்உழல் வார்செம்பொன் பள்ளியார்
ஒருவர் தாம்பல பேருளர் காண்மினே.

தெளிவுரை : சக்தியும் சிவமுமாகி இருவராக விளங்கும் சிவபெருமான், பிரம கபாலத்தை யேந்தி நிற்பவர். அப்பரமன் பிச்சை தேடித் தெருவெல்லாம் திரிபவராய் விளங்கிச் செம்பொன்பள்ளியார் என்னும் திருநாமமும் மற்றும் பல நாமங்களையும் உடையவராவார்.

361. பூவு லாம்சடை மேற்புனல் சூடினான்
ஏவ லால்எயில் மூனறும் எரித்தவன்
தேவர் சென்றிறைஞ் சும்செம்பொன் பள்ளியான்
மூவ ராய்முத லாய்நின்ற மூர்த்தியே.

தெளிவுரை : சிவபெருமான், சடைமுடியில் திகழ்கின்ற நறுமலர்களுடன் கங்கையையும் சூடி விளங்குபவர்; முப்புரங்களை எரித்தவர்; தேவர்கள் ஏத்தும் செம்பொன் பள்ளியார்; மூவராகவும் முதல்வராகவும் விளங்கும் மூர்த்தி ஆவார்.

362. சலவ ராய்ஒரு பாம்பொடு தண்மதிக்
கலவ ராவதின் காரணம் என்கொலோ
திலக நீள்முடி யார்செம்பொன் பள்ளியார்
குலவில் லால்எயில் மூன்றெய்த கூத்தரே.

தெளிவுரை : சிவபெருமான், பாம்பையும் தண்மையுடைய சந்திரனையும் ஒருசேரச் சடைமுடியில் வைத்துள்ளவர். அதன் காரணம்தான் யாதுகொல் ! நெற்றியில் திலகம் அணிந்தவராகி, நீண்ட முடியுடைய செம்பொன்பள்ளியார் என்னும் திருநாமத்துடன் மேவும் சிவபெருமான், முப்புரங்களை எரித்து மேவும் கூத்தப் பெருமான் ஆவார்.

363. கைகொள் சூலத்தர் கட்டுவாங் கத்தினர்
மைகொள் கண்டத்த ராகி இருசுடர்
செய்ய மேனிவெண் ணீற்றர்செம் பொன்பள்ளி
ஐயர் கைய தோர்ஐந் தலை நாகமே.

தெளிவுரை : சிவபெருமான், கையில் சூலத்தை ஏந்தியுள்ளவர்; மழுப்படையுடையவர்; கரிய கண்டத்தையுடையவர்; இரு சுடர் எனப்படும் சூரிய சந்திரர்களாக விளங்குபவர்; சிவந்த திருமேனியர்; திருவெண்ணீற்றைத் திருமேனியில் தரித்தவர்; செம்பொன் பள்ளியின் தலைவர்; கையில் ஐந்தலை நாகத்தையுடையவர். 

364. வெங்கண் நாகம் வெருவுற ஆர்த்தவர்
பைங்கண் ஆனையின் ஈருரி போர்த்தவர்
செங்கண் மால்விடை யார்செம்பொன் பள்ளியார்
அங்கணா அடைந் தார்வினை தீர்ப்பரே.

தெளிவுரை : சிவபெருமான், கொடிய கண்ணையுடைய நாகத்தைக் கையில் கொண்டு ஆட்டுபவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர்; சீற்றம் மிகுந்த பெருமைபெறும் இடபத்தை வாகனமாக உடையவர்; செம்பொன் பள்ளியின் தலைவர். ஆங்கு மேவும் அப் பெருமானை அடைந்த அடியவர்களின் தீய வினை யாவும் தீரும்.

365. நன்றி நாரணன் நான்முகன் என்றிவர்
நின்ற நீள்முடி யோடுஅடி காண்புற்றுச்
சென்று காண்பரி யான் செம்பொன் பள்ளியான்
நின்ற சூழலில் நீளெரி யாகியே.

தெளிவுரை : நான்முகனும் திருமாலும் தேடிச் சென்றும், காண்பதற்கு அறியாதவராகிய சிவபெருமான், செம்பொன்பள்ளியான் என்னும் திருநாமம் தாங்கி, அழலின் வடிவினராய் ஓங்கி நின்றவரே.

366. திரியும் மும்மதில் செங்கணை ஒன்றினால்
எரிய எய்துஅன லோட்டி இலங்கைக்கோன்
நெரிய வூன்றியிட் டார்செம் பொன்பள்ளியார்
அரிய வானம் அவர் அருள் செய்வரே.

தெளிவுரை : சிவபெருமான், எல்லா இடங்களிலும் திரிந்து சென்று நாசத்தை விளைவித்த மூன்று மதில்களையுடைய கோட்டைகளை, அக்கினிக் கணை ஒன்றினால் எரித்துச் சாம்பலாக்கியவர்; இராவணனைக் கயிலை மலையின் கீழ் நெரியுமாறு ஊன்றியவர். அவர், செம்பொன் பள்ளியார். அப் பரமன் அரியதாகிய முத்தி நலத்தை அருள் செய்பவரே.

திருச்சிற்றம்பலம்

37. திருக்கடவூர் வீரட்டம் (அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

367. மலைக்கொள் ஆனை மயக்கிய வல்வினை
நிலைக்கொ ளானை நினைப்புறு நெஞ்சமே
கொலைக்கை யானையும் கொன்றிடும் ஆதலால்
கலைக்கை யானைகண் டீர்கட வூரரே.

தெளிவுரை : மலையின்மீது உள்ள யானையானது, மயக்கம் உற்ற தன்மையில் இருத்தல் போன்று, கொடிய வினையானது நிலை கொள்ள மயங்கி வருந்துகின்ற நெஞ்சமே ! கடவூரில் வீற்றிருக்கும் சிவபெருமான், கொலைத் தன்மையுடைய எத்தகைய யானையையும் அழித்துக் கொல்பவராவர். அவர் வேதத்தின் நாயகனாக விளங்குபவர். அப் பரமனை அடைந்து நற்கதி பெறுவாயாக.

368. வெள்ளி மால்வரை போல்வதொர் ஆனையார்
உள்ள வாறுஎனை யுள்புகும் ஆனையார்
கொள்ள மாகிய கோயிலு ளானையார்
கள்ள வானைகண் டீர்கட வூரரே.

தெளிவுரை : சிவபெருமான், வெண்மையான பனிபடர்ந்து மேவும் கயிலாயம் போன்று திகழும் வெள்ளை இடபத்தை உடையவர்; என் உள்ளத்தின் உள்ளே புகுந்து விளங்கும் பெருமையுடையவர்; திருக்கோயிலில் யாவும் அருள் கொண்டு விளங்கும் தன்மையில் மேவுபவர். அப்பெருமான், காண்பதற்கு அரியவராகி உள்ளத்தைக் கவர்ந்தவராய்த் திருக்கடவூரில் வீற்றிருக்கும் இறைவனே ஆவார்.

369. ஞான மாகிய நன்குண ரானையார்
ஊனை வேவ உருக்கிய வானையார்
வேன லானை யுரித்துமை யஞ்சவே
கான லானைக்கண் டீர்கட வூரரே.

தெளிவுரை : சிவபெருமான், ஞானத்தால் உணர்ந்து ஏத்தும் அடியவர்களின் ஊனை உருக்கி, உள்ளொளியைப் பெருக்கி அருள் புரிபவர்; உமாதேவி அஞ்சுமாறு யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர். அப்பெருமான், கடவூரில் வீற்றிருந்து அருளும் இறைவன் ஆவார்.

370.  ஆலமுண் டழ காயதொ ரானையார்
நீலமேனி நெடும் பளிங் கானையார்
கோல மாய கொழுஞ்சுட ரானையார்
கால வானைகண் டீர்கட வூரரே.

தெளிவுரை : சிவபெருமான், ஆலகால நஞ்சினை உண்டு, கண்டத்தில் தேக்கி அழகு மிளிரும் நீலகண்டப் பெருமானாகத் திகழ்பவர். நீலவண்ணம் உடைய உமாதேவியை உடனாகக் கொண்டு, பளிங்கு போன்ற வெண்மையான திருநீற்றுத் திருமேனியராக விளங்குபவர். சுடர்கொண்டு மேவும் அழகிய வடிவம் உடையவர். அப்பெருமான், காலனை அழித்தவராய்க் கடவூரில் மேவும் இறைவன் ஆவார்.

371. அளித்த ஆன்அஞ்சும் ஆடிய வானையார்
வெளுத்த நீள்கொடி யேறுடை யானையார்
எளித்த வேழத்தை எள்குவித் தானையார்
களித்த வானைகண் டீர்கட வூரரே.

தெளிவுரை : சிவபெருமான், பசுவின் பஞ்ச கவ்வியத்தைப் பூசைப் பொருளாக ஏற்று மகிழ்பவர்; வெள்ளை இடபத்தைக் கொடியாகக் கொண்டு திகழ்பவர்; இகழ்ந்து வந்து யானையின் தோலை உரித்து, வெற்றி கொண்டு வீரம் விளைவித்தவர். அப்பெருமான், கடவூரின்கண் இனிது வீற்றிருக்கும் இறைவனே ஆவார்.

372. விடுத்த மால்வரை விண்ணுற வானையார்
தொடுத்த மால்வரை தூயதொ ரானையார்
கடுத்த காலனைக் காய்ந்ததொ ரானையார்
கடுத்த வானைகண் டீர்கட வூரரே.

தெளிவுரை : சிவபெருமான், விண்ணளவு உயர்ந்த பெருமையுடைய கயிலை மலைக்கு உரியவர்; பொன் மலையாகிய மேருவை வில்லாகக் கொண்டு அம்பு தொடுத்து, முப்புரங்களை அழித்தவர்; சினம் மிகுந்து வந்த காலனைக் காலால் உதைத்து, அழித்தவர். அப்பெருமான், கடவூரில் மேவும் இறைவனே ஆவார்.

373. மண்ணு ளாரை மயக்குறும் ஆனையார்
எண்ணு ளார்பலர் ஏத்திடும் ஆனையார்
விண்ணு ளார்பல ரும்அறி யானையார்
கண்ணு ளானைக் கண்டீர்கட வூரரே.

தெளிவுரை : சிவபெருமான், பூவுலகத்தில் பிறவியை நல்கி, மன்னுயிர்கள் பக்குவ நிலையை அடைவிக்கப் புரிபவர்; அன்பர் பெருமக்களின் எண்ணத்தில் குடிகொண்டு ஏத்தி வழிபடப் பெறுபவர்; தேவர்களாலும் அறிய முடியாதவர். அப்பெருமான், கண்ணின் ஒளியாகி நின்று கடவூரில் மேவும் இறைவனே ஆவார்.

374. சினக்கும் செம்பவ ளத்திர ளானையார்
மனக்கும் வல்வினை தீர்த்திடும் ஆனையார்
அனைக்கும அன்புடை யார்மனத் தானையார்
கனைக்கும் ஆனைகண் டீர்கட வூரரே.

தெளிவுரை : சிவபெருமான், செம்பவளத்தின் திரட்சி போன்ற செம்மேனியுடையவர்; கொடிய வினைகளால் மனத்தின்கண் எழுகின்ற மாசுகளைத் தீர்த்தருள்பவர், தாயினும் அன்புடையவர்; மனத்தின் கண் நிறைந்து விளங்குபவர். அப்பெருமான், ஆரவாரத்துடன் மேவிக் கடவூரில் விளங்கும் இறைவன் ஆவார்.

375. வேத மாகிய வெஞ்சுடரானையார்
நீதி யான்நில னாகிய வானையார்
ஓதி யூழி தெரிந்துண ரானையார்
காத லானைகண் டீர்கட வூரரே.

தெளிவுரை : சிவபெருமான், வேதமாகியும் பெருஞ் சோதியாகவும், ஆகம நெறியாகியும் நிலமும் வானும் ஆகிய பஞ்ச பூதங்களாகவும் விளங்குபவர். ஊழிக் காலங்கள்தோறும் நிலைத்து மேவும் பெரும் பொருளாகிய அப்பரமனை, ஓதி உணர்தல் அரியது. அவர், கடவூரில் விருப்பம் கொண்டு வீற்றிருக்கும் இறைவனே ஆவார்.

376. நீண்ட மாலொடு நான்முகன் தானுமாய்க்
காண்டும் என்றுபுக் கார்கள் இருவரும்
மாண்ட ஆரழல் ஆகிய வானையார்
காண்ட லானைகண் டீர்கட வூரரே.

தெளிவுரை : திருமாலும் நான்முகனும் தேடிச் சென்று காண வேண்டும் என்று முயன்றும் ஈசனைக் காண்கிலர். அப்பரமன், பெரும் சோதிப் பிழம்பு ஆகிவானளாவி உயர்ந்தவராகிக் கடவூரில், காண்பதற்கு ஏற்றவாறு மேவும், கடவுள் ஆவார்.

377. அடுத்து வந்த இலங்கையர் மன்னனை
எடுத்த தோள்கள் இறநெரித் தானையார்
கடுத்த காலனைக் காய்ந்தொ ரானையார்
கடுக்கை யானைகண் டீர்கட வூரரே.

தெளிவுரை : அடுத்து வந்து, கயிலையை எடுத்த இராவணனின் தோள்களை நெரித்த சிவபெருமான், சினந்து வந்த காலனைக் காலால் உதைத்து அழித்தவராகிக் கடவூரில் யானை போன்று விளங்குபவராய்க் கொன்றை மாலை தரித்து மேவும் இறைவன் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

38. திருக்கடவூர் மயானம் (அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருமயானம், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

378. குழைகொள் காதினர் கோவண ஆடையர்
உழையும் தாம்கட வூரின் மயானத்தார்
பழைய தம்அடி யார்செய்த பாவமும்
பிழையும் தீர்ப்பர் பெருமான் அடிகளே.

தெளிவுரை : சிவபெருமான், குழையணிந்த காதினர்; கோவணத்தை ஆடையாக உடையவர்; மானைக் கரத்தில் கொண்டு விளங்குபவர்; கடவூர் மயானத்தில் வீற்றிருப்பவர்; வாழையடி வாழையாகத் திருத்தொண்டு மேவும் அடியவர்கள் செய்யும் பாவங்களை தீர்ப்பவர். அத்தகையவர்களின் குற்றங்களை மன்னித்து அருள் புரிபவர், ஆங்கு மேவும் இறைவனே !

379. உன்னி வானவர் ஓதிய சிந்தையில்
கன்னல் தேன்கட வூரின் மயானத்தார்
தன்னை நோக்கித் தொழுதெழு வார்க்கெல்லாம்
பின்னை என்னார் பெருமான் அடிகளே.

தெளிவுரை : கடவூர் மயானத்தில் வீற்றிருக்கின்ற சிவபெருமான், தேவர்கள் வந்து வணங்கித் திருநாமங்களை ஓதி ஏத்தி நிற்க, அவர்களுக்குத் தேன்போன்று இனிமை தருபவர்; தன்னைத் தொழுது ஏத்துகின்ற அடியவர்களுக்குப் பின்னர் அருளலாம் எனக் கொள்ளாதவராய், அக் கணத்திலேயே முன்னிருந்து அருள் புரியும் அடிகள் ஆவார்.

380. சூலம் ஏந்துவர் தோலுடை ஆடையர்
ஆலம் உண்டமு தேமிகத் தேக்குவர்
கால காலர் கடவூர் மயானத்தார்
மாலை மார்பர் பெருமான் அடிகளே.

தெளிவுரை : கடவூர் மயானத்துள் மேவும் சிவ பெருமான், சூலத்தைக் கையில் ஏந்தியுள்ளவர்; புலித்தோலை ஆடையாகக் கொண்டு விளங்குபவர்; நஞ்சினைத் தான் உண்டு, அமுதத்தைப் பிறர்க்கு அளிப்பவர்; காலனுக்குக் காலனாக இருந்து மாய்த்து மார்க்கண்டேயருக்கு அருள் புரிந்தவர். அப் பரமன், மாலையணிந்த திருமார்பினராகிய அடிகள் ஆவார்.

381. இறைவ னார்இமை யோர்தொழு பைங்கழல்
மறவ னார்கட வூரின் மயானத்தர்
அறவ னார்அடி யார்அடி யார்தங்கள்
பிறவி தீர்ப்பர் பெருமான் அடிகளே.

தெளிவுரை : கடவூர் மயானத்துள் மேவும் சிவ பெருமான், தேவர்களால் தொழப்பெறும் இறைவனார். தருமமே வடிவானவர். அப்பெருமான் அடியவர்களின் பிறவிப் பிணியைத் தீர்க்கும் அடிகள் ஆவார்.

382. கத்து காளி கதம்தணி வித்தவர்
மத்தர் தாம் கடவூரின் மயானத்தார்
ஒத்து ஒவ் வாதன செய்துழல் வார்ஒரு
பித்தர் காணும் பெருமான் அடிகளே.

தெளிவுரை : கடவூர் மயானத்துள் மேவும் சிவபெருமான், சினம் கொண்டு ஆரவாரம் செய்த காளி தேவியோடு நடனம் புரிந்து, தணிவித்து வெற்றி கொண்டவர்; ஊமத்த மலர் அணிந்து விளங்குபவர்; ஒத்து யாவரும் ஏத்தும் தன்மையிலும், ஒவ்வாததாகக் கருதி ஏனையோர் அயற்சியுறுமாறும், பித்தரைப் போன்று செயல்களை மேவுபவர். அப்பெருமானின் செயல் வண்ணமாவது, இத்தன்மையது.

383. எரிகொள் மேனி இளம்பிறை வைத்தவர்
கரிதாம் கட வூரின் மயானத்தார்
அரியர் அண்டத்து ளோர்அயன் மாலுக்கும்
பெரியர் காணும் பெருமான் அடிகளே.

தெளிவுரை : கடவூர் மயானத்துள் மேவும் சிவ பெருமான், நெருப்பு அனைய சிவந்த திருமேனியுடையவர்; இளமையான பிறைச் சந்திரனைச் சடை முடியில் தரித்தவர்; எல்லாவற்றுக்கும் சான்றாகத் திகழ்பவர்; அப்பெருமான், தேவர்கள் மற்றும் நான்முகன், திருமால் ஆகியவர்களால் பெருமையுடையவர் என ஏத்தப் பெறும் அடிகள் ஆவார்.

384. அணங்கு பாகத்தர் ஆரண நான்மறை
கணங்கள் சேர்கட வூரின் மயானத்தார்
வணங்கு வார்இடர் தீர்ப்பர் மயக்குறும்
பிணங்கொள் காடர் பெருமான் அடிகளே.

தெளிவுரை : கடவூர் மயானத்துள் மேவும் சிவ பெருமான், உமாதேவியைத் திருமேனியில் பாகமாக உடையவர்; வேதங்களாகிய நான்கு மறைகளாலும் பூத கணங்களாலும் சூழ்ந்து விளங்குபவர்; வணங்கி ஏத்தும் அடியவர்களின் துயர் தீர்ப்பவர். அப் பெருமான், மயக்கத்தைத் தரும் பிணங்களை எரிக்கும் சுடுகாட்டில் நடனம் புரியும் அடிகள் ஆவார்.

385. அரவு கையினர் ஆதி புராணனார்
மரவு சேர்கட வூரின் மயானத்தார்
பரவு வார்இடர் தீர்ப்பர்பணி கொள்வர்
பிரமன் மாற்கும் பெருமான் அடிகளே.

தெளிவுரை : கடவூர் மயானத்துள் மேவும் சிவ பெருமான், பாம்பைக் கையில் பற்றி விளங்குபவர்; ஆதி புராணர்; பரவித் தொழும் அடியவர்களின் இடர்களைத் தீர்ப்பவர். அப்பெருமான், பிரமன், திருமால் ஆகியோருக்கும் தலைவராகும் அடிகள் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

39. திருமயிலாடுதுறை (அருள்மிகு மாயூரநாதர் திருக்கோயில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

386. கொள்ளும் காதன்மை பெய்துறும் கோல்வளை
உள்ளம் உள்கி உரைக்கும் திருப்பெயர்
வள்ளல் மாமயி லாடுதுறை யுறை
வெள்ளம் தாங்கு சடையனை வேண்டியே.

தெளிவுரை : பேரன்பு கொண்டு ஈசனையே நினைத்து மேவும் இந்நங்கையானவள், உள்ளம் கசிந்து உருகி உரைக்கும் திருப்பெயரானது, மாமயிலாடுதுறையில் கங்கையைச் சடை முடியில் தரித்து மேவும் வள்ளலுடைய திருநாமமேயாகும். இது அகத்துறையின் குறிப்புடையதாக, ஆன்மாவானது ஈசனின் திரு நாமத்தை ஓதுதலை உணர்த்திற்று.

387. சித்தம் தேறும் செறிவளை சிக்கெனும்
பச்சை தீரும்என் பைங்கொடி பால்மதி
வைத்த மாமயி லாடு துறையரன்
கொத்தி னிற்பொலி கொன்றை கொடுக்கிலே.

தெளிவுரை : இந்நங்கையின் பசலை வண்ணம் தீர்வதற்கும், கைவளையலானது நன்கு பொருந்தி இருப்பதற்கும், இவளுக்குச் சித்தமானது, நன்கு தெளிய வேண்டும். அதற்குரிய செயலானது, மயிலாடுதுறையில் வீற்றிருக்கும் ஈசனார் பொலிவுடன் அணிந்திருக்கும் கொன்றை மலரை அவளுக்குக் கொடுப்பது ஒன்றே ஆகும். இது, அகத்துறைக்கு உரிய குறிப்பின் பாற்பட்டு, ஆன்மாவானது ஈசன்பால் ஒன்றி நிற்றலை இயம்பி, அருள் பிரசாதத்தை ஈட்டும் பான்மையில் ஓதப் பெற்றது.

388. அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையும்
கண்டு வீற்றிருக் கும்கருத்து ஒன்றிலாம்
வண்டு சேர்மயி லாடு துறையரன்
தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே.

தெளிவுரை : தேவர் உலக வாழ்வும், அங்கு விளங்குகின்ற பதவிகளும், மேன்மை யுடையதாக யாம் கருதவில்லை. மயிலாடுதுறையில் வீற்றிருக்கும் சிவ பெருமானுக்குத் தொண்டு செய்து விளங்கும் திருத்தொண்டர்களின் திருப்பாதங்களைச் சூடி மகிழ்தலையே, நாம் பெருமையாகக் கொள்ளுகின்றோம். அதுவே மகிழ்வைத் தரும்.

389. வெஞ்சினக் கடுங் காலன் விரைகிலான்
அஞ்சி றப்பும் பிறப்பும் அறுக்கலாம்
மஞ்சன் மாமயி லாடு துறையுறை
அஞ்சொ லாள்உமை பங்கன் அருளிலே.

தெளிவுரை : பெருமையுடன் திகழும் மயிலாடுதுறையில் ஆழகிய மொழி பேசும் உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு விளங்கும் சிவபெருமானுடைய திருவருள் துணையானது முன்னின்று மேவ, வெஞ் சினம் கொண்ட காலன் அணுகமாட்டான்; அஞ்சத் தக்கதாகிய இறப்பும் பிறப்பும் அறுக்கலாம்.

390. குறைவி லோம்கொடு மாநுட வாழ்க்கையால்
கறைநி லாவிய கண்டன்எண் தோளினன்
மறைவ லான்மயி லாடு துறையுறை
இறைவன் நீள்கழல் ஏத்தி யிருக்கிலே.

தெளிவுரை : கொடுமைகள் நிறைந்த மானுட வாழ்க்கையில் யாம் குறைவற்றவர் ஆவோம். அதற்குக் காரணமாவது, நீலகண்டராகவும் எட்டுத் தோள்களையுடையவராகவும், வேதங்களில் வல்லவராகவும், மயிலாடுதுறையில் வீற்றிருக்கும் சிவபெருமானின் கழல்களை, ஏத்தி இருப்பதே.

391. நிலைமை சொல்லுநெஞ் சேதவம் என்செய்தாய்
கலைகள் ஆயவல் லான் கயிலாயநன்
மலையன் மாமயி லாடு துறையன் நம்
தலையின் மேலும் மனத்துளும் தங்கவே.

தெளிவுரை : நெஞ்சமே ! எல்லாக் கலைகளாகவும், விளங்கும் சிவபெருமான், கயிலாயமாகிய நன்மை திகழும் மலைக்கு உரியவர்; மயிலாடுதுறையுள் வீற்றிருப்பவர். அப்பெருமான் நம் தலை மீதும், மனத்தின் உள்ளும் பொருந்தி மேவ, எத்தகைய பெருந்தவத்தைப் புரிந்து, பேறு பெற்றனை !

392. நீற்றி னான்நிமிர் புன்சடை யான்விடை
ஏற்றி னான்நமை யாளுடை யான்புலன்
மாற்றி னான்மயி லாடுதுறை யென்று
போற்று வார்க்கும்உண் டோபுவி வாழ்க்கையே.

தெளிவுரை : சிவபெருமான், திருநீற்றினைத் திருமேனியில் பூசியவர்; மென்மையான நீண்ட சடையுடையவர்; இடபத்தை வாகனமாக உடையவர்; பக்தி செய்யும் அடியவர்களை ஆட்கொண்டு அருள் புரிபவர்; ஐம்புலன்கள்பால் கொண்டு மேவும் பற்றினைத் துறக்குமாறு செய்து, அப் புலன்களைக் கொண்டு பெருமானையே பற்றுமாறு செய்பவர். அத்தகைய பெருமையுடைய ஈசனை, மயிலாடுதுறை நாதனே ! என ஏத்தித் தொழுவாயாக. அவ்வாறு தொழுது ஏத்துபவர்களுக்குப் பிறவியாகிய துன்ப வாழ்க்கையானது வாய்க்குமோ ?

393. கோலும் புல்லும் ஒருகையிற் கூர்ச்சமும்
தோலும் பூண்டு துயரம்உற்ற என்பயன்
நீல மாமயி லாடு துறையனே
நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந் தோர்கட்கே.

தெளிவுரை : யோக தண்டம், தருப்பைப்புல், தோல் இருக்கை ஆகியவற்றைக் கொண்டு மேவி, மெய் வருத்தம் கொண்டு சிலர் தொண்டு ஆற்றுகின்றனர். நீல வண்ணம் உடைய மயில்கள் மேவும் மயிலாடு துறையில் வீற்றிருக்கும் நாதனே ! தேவரீரை வழிபட்டு உணர்வு பூர்வமாக விளங்கும் அடியவர்க்கு, நூல்கள் காட்டும் சாதனம் வேண்டுமோ ?

394. பணங்கொள் ஆடரவு அல்குற் பகீரதி
மணங்கொளச் சடை வைத்த மறையவன்
வணங்கு மாமயி லாடு துறையரன்
அணங்கொர் பால்கொண்ட கோலம் அழகிதே.

தெளிவுரை : பாம்பின்படம் போன்ற அல்குல் உடைய கங்கையை மணம் கமழும் சடையில் வைத்தவர், சிவ பெருமான். அவர் யாவரும் ஏத்தும் மயிலாடுதுறையில் வீற்றிருப்பவர். அப் பரமன், உமாதேவியை ஒரு பாகத்தில் கொண்டு அம்மையப்பராகத் திருக் கோலம் காட்டும் அழகுதான் என்னே !

395. நீள்நி லாஅர வச்சடை நேசனைப்
பேணி லாதவர் பேதுற வோட்டினோம்
வாணி லாமயி லாடு துறைதனைக்
காணி லார்க்கும் கடுந்துயர் இல்லையே.

தெளிவுரை : சிவபெருமான், நீண்ட கதிர்களையுடைய சந்திரனையும், அரவத்தையும் சடையில் தரித்து அன்புமயமாய் விளங்குபவர். அப்பெருமானை ஏத்தி வணங்காதவரின் அறிவற்ற தன்மையை உணர்த்தித் தெளிவை அடைவித்தோம். அப்பரமன், மயிலாடுதுறையில் வீற்றிருக்கின்றவர். அவரைக் கண்டு தரிசனம் செய்ய, கடுமையான துயர் யாவும் இல்லாது நீங்கும்.

396. பருத்த தோளும் முடியும் பொடிபட
இருத்தி னான்அவன் இன்னிசை கேட்டலும்
வரத்தி னான்மயி லாடு துறைதொழும்
கரத்தி னார்வினைக் கட்டறுங் காண்மினே.

தெளிவுரை : பருமையான மலை போன்ற உறுதியான தோளும் முடியும் நெரியுமாறு இராவணனை வருத்திய சிவபெருமான், அவ்வரக்கனின் இனிய இசை கேட்டு வரம் நல்கியவர். அப் பரமன் மயிலாடுதுறையில் வீற்றிருப்பவர். அவரைக் கைதொழுது போற்றுபவர்களுக்கு. வினையின் பந்தமானது அறுந்து ஒழியும். இது உறுதி.

திருச்சிற்றம்பலம்

40. திருக்கழிப்பாலை (அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை, கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

397. வண்ணமும் வடி வும்சென்று கண்டிலன்
எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலன்
கண்ணு லாம்பொழில் சூழ்கழிப் பாலைஎம்
அண்ண லே அறிவான் இவள் தன்மையே.

தெளிவுரை : இந்நங்கையானவள் திருக்கழிப்பாலையில் மேவும் சிவபெருமானைக் கண்டு, அப் பெருமானின் அருள் வண்ணத்தைக் காணாத நிøயிலும் அப் பெருமானுடைய எழில் திகழும் திருநாமத்தை ஓதியும், மனத்தினில் நிறைவு அடையாதவளாகி, அவ்வண்ணலின் அருளையே சிந்தையில் கொண்டவளாகித் தன்னை மறந்தனள். இவளுடைய மெய்ந் நிலையை அவ்விறைவன்தான் அறிய முடியும். இது, அகத்துறையின் குறிப்பாக, ஆன்ம சிந்தனையை, எடுத்தோதுதலாயிற்று.

398. மருந்து வானவர் உய்யநஞ்சு உண்டுஉகந்து
இருந்த வன்கழிப் பாலையுள் எம்பிரான்
திருந்து சேவடி சிந்தையுள் வைத்திவள்
பரிந்து உரைக்கிலும் என்சொல் பழிக்குமே.

தெளிவுரை : கழிப்பாலையுள் மேவும் சிவபெருமான், தேவர்கள் உய்ய வேண்டும் என்று நஞ்சினைத் தான் உண்டு தேவாமிர்தத்தைத் தேவர்கள் அருந்துமாறு செய்தவர். இந் நங்கையானவள், மன்னுயிர்களை நல்வழிப்படுத்தும் தன்மையில் விளங்கிச் சிந்தை புகுந்து மேவும் ஈசனைத் தன்பால் கொண்டனள். நான், அந்த நங்கையின் மீது இரக்கம் கொண்டு எது சொன்னாலும், அவள் என்னைப் பழித்துக் கூறுபவள் ஆயினாள்.

399. மழலை தான்வரச் சொல்தெரி கின்றிலள்
குழலின் நேர்மொழி கூறிய கேண்மினோ
அழக னேகழிப் பாலையெம் அண்ணலே
இகழ்வ தோஎனை யேன்றுகொள் என்னுமே.

தெளிவுரை : பக்திப் பெருக்கில் ஊறியவளாகிய இவள், குழலின் இசை போன்று இனிமையாகப் பேசுபவள். அவள், சிவபெருமானிடம் தன்னை இழந்து, சொல்லின் வகையானது குழறிய தன்மையில் பேசுதல் ஆயினள். அவள் கூறியதாவது, திருக்கழிப் பாலையில் மேவும் என் அண்ணலே ! அழகனே ! அடியேனை இகழாது ஏற்றுத் தாங்கிக் கொள்வீராக என்பதாகும். இது, அகத்துறையின் குறிப்பில் மன்னுயிரானது, ஆன்ம போதத்தை நுகர்ந்து திளைத்து அத்தகைய பேரின்ப மயக்கத்தில், வாய் குழறி ஓதும் தன்மையினைச் சுட்டுவதாயிற்று.

400. செய்ய மேனிவெண் ணீறணி வான்றனை
மைய லாகி மதிக்கிலள் ஆரையும்
கைகொள் வெண்மழு வன்கழிப் பாலைஎம்
ஐயனே அறிவான் இவள் தன்மையே.

தெளிவுரை : சிவந்த திருமேனியில் திருவெண்ணீறு அணிந்து விளங்குகின்ற சிவபெருமானிடம் மையல் கொண்ட இந்த நங்கையானவள், வேறு எதனையும் பொருட்டாகக் கொள்ளாதவளானாள். அவளுடைய தன்மையினைத் திருக்கரத்தில் வெண் மழுவேந்தி மேவும் கழிப்பாலையின் தலைவரே அறிவார். இது, புறப்பற்றினை நீத்து இறைவனையே பற்றி மேவும் ஆன்மாவின் தன்மையை, அகத்துறையின் குறிப்புக் கொண்டு ஓதுதலாயிற்று.

401. கருத்த னைக்கழிப் பாலையுள் மேவிய
ஒருத்த னைஉமை யாள்ஒரு பங்கனை
அருத்தி யாற்சென்று கண்டிட வேண்டும்என்று
ஒருத்தி யாருளம் ஊசலது ஆடுமே.

தெளிவுரை : சிவபெருமான், யாவற்றுக்கும் கருத்தாக மேவிக் கழிப்பாலையுள் உமா தேவியாரைப் பாகம் கொண்டு விளங்குபவர். அப்பெருமானிடம் பேரன்பு கொண்ட நங்கை ஒருத்தியின் உள்ளமானது, அவ்விறைவனைக் காண வேண்டும் என்று தாவிச் சென்று கொண்டிருக்கின்றது.

402. கங்கை யைச்சடை வைத்து மலைமகள்
நங்கை யையுட னேவைத்த நாதனார்
திங்கள் சூடித் திருக்கழிப் பாலையான்
இங்கு வந்திடும் என்றுஇரு மாக்குமே.

தெளிவுரை : சிவபெருமான், கங்கையினைச் சடைமுடியில் தரித்தவராகி, உமாதேவியைத் திருமேனியில் பாகம் கொண்டவராகித் திங்களைச் சூடித் திருக்கழிப்பாலையில் வீற்றிருப்பவர். அப்பெருமானிடம் பேரன்பு பூண்ட இந் நங்கையானவள், ஈசன் அவள் இருக்கும் இடம் தேடி வருவார் என்னும் உறுதியில், இறுமாந்து இருப்பவள் ஆயினாள்.

403. ஐய னேஅழ கேஅனல் ஏந்திய
கைய னேகறை சேர்தரு கண்டனே
மையு லாம்பொழில் சூழ்கழிப் பாலையெம்
ஐய னேவிதி யேஅருள் என்னுமே.

தெளிவுரை : என் தலைவனே ! அழகனே ! நெருப்பைக் கையில் ஏந்திய நீலகண்டப் பெருமானே ! பொழில் சூழ்ந்த கழிப்பாலையில் வீற்றிருக்கும் நாதனே ! நன்மை தீமைகளை விதித்துப் பிறவி தோறும் நெறிப்படுத்தும் ஈசனே ! அருள் புரிவீராக.

404. பத்தர் கட்கமு தாய பரத்தினை
முத்த னைமுடி வொன்றிலா மூர்த்தியை
அத்த னைஅணி யார் கழிப் பாலையெம்
சித்த னைச்சென்று சேருமா செப்புமே.

தெளிவுரை : சிவபெருமான், பக்தர்களுக்கு அமுதம் ஆனவர்; பரம் பொருளாகியவர்; முத்திப் பேறு நல்குபவர்; ஈறிலாப் பெரும் பொருளானவர்; அன்புடையவர்; அணிதிகழ் கழிப்பாலையில் மேவுபவர். என் சித்தத்தில் மேவும் அப்பரமனைச் சேர்ந்து இருக்கும் நெறியை இயம்புவீராக என இவள் வினவுதல் ஆனாள். இது, ஈசனைச் சார்ந்து மேவுதலின் பேரின்ப நிலையை அகத்துறைக் குறிப்பில் ஓதுதலாயிற்று.

405. பொன்செய் மாமுடி வாளரக் கன்தலை
அஞ்சு நான்கும்ஒன் றும்இறுத் தானவன்
என்செ யான்கழிப் பாலையுள் எம்பிரான்
துஞ்சும் போதும் துணையென லாகுமே.

தெளிவுரை : பொன்னால் செய்யப் பெற்ற கிரீடத்தையுடைய இராவணனுடைய பத்துத் தலைகளும் வருந்துமாறு ஊன்றியவர் கழிப்பாலையில் வீற்றிருக்கும் சிவபெருமான். அப்பெருமான், எல்லா ஆற்றலும் உடையவர். அவரால் முடியாதது ஏதும் இல்லை. யான் துஞ்சும்போதும் துணையாக இருந்து துன்பத்திலிருந்து காத்தருள் புரிபவர் அவரே ஆவர்.

திருச்சிற்றம்பலம்

41. திருப்பைஞ்ஞீலி (அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி, திருச்சி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

406. உடையர் கோவணம் ஒன்றும் குறைவிலர்
படைகொள் பாரிடம் சூழ்ந்தபைஞ் ஞீலியார்
சடையிற் கங்கை தரித்த சதுரரை
அடைய வல்லவர்க்கு இல்லை அவலமே.

தெளிவுரை : சிவபெருமான், கோவணத்தை உடுத்தி இருப்பவர்; எத்தகைய குறைபாடும் இன்றி நிறைவுடையவராக விளங்குபவர்; படைக்கலன்களுடன் விளங்கும் பூத கணங்கள் சூழப் பைஞ்ஞீலியில் வீற்றிருப்பவர்; சடை முடியில் கங்கையைத் தரித்தவர்; எல்லா வல்லமையும் சரணம் அடையும் அடியவர்களுக்கு, இப் பூவுலகில் எவ்விதமான துன்பமும் இல்லை.

407. மத்த மாமலர் சூடிய மைந்தனார்
சித்த ராய்த்திரி வார்வினை தீர்ப்பரால்
பத்தர் தாம்தொழுது ஏத்துபைஞ் ஞீலியெம்
அத்த னைத்தொழ வல்லவர் நல்லரே.

தெளிவுரை : சிவபெருமான், பெருமையுடைய ஊமத்த மலரைச் சூடிய அழகர்; சித்தராய்த் திரியும் யோகியர்களுக்கு வினை யாவும் இன்மையாக்குபவர்; பக்தர்கள் தொழுது ஏத்தும் பைஞ்ஞீலியில் மேவும் அன்புக்கு உரியவர். அப் பெருமானைத் தொழ வல்லவர்கள் நன்மை யாவும் அடைபவர்களாகி, நற் பாங்கினைக் கொள்வார்கள்.

408. விழுது சூலத்தன் வெண்மழு வாட்படைக்
கழுது துஞ்சிருள் காட்டகத் தாடலான்
பழுதொன்று இன்றிப் பைஞ்ஞீலிப் பரமனைத்
தொழுது செல்பவர் தம்வினை தூளியே.

தெளிவுரை : சிவபெருமான், சூலத்தை ஏந்தியவர்; மழுப்படையையுடையவர்; நள்ளிருளில் சுடு காட்டில் வீற்றிருக்க, மாசு இல்லாத தூய மனத்தினராய்த் தொழுபவர்களுடைய வினை யாவும் பொடியாகி அழியும்.

409. ஒன்றி மாலும் பிரமனும் தம்மிலே
நின்ற சூழல் அறிவரி யான்இடம்
சென்று பாரிடம் ஏத்துபைஞ் ஞீலியுள்
என்றும் மேவி இருந்த அடிகளே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் முறையே திருவடியையும் திருமுடியையும் தேடியும் காண்பதற்கு அரியவராகிய சிவபெருமான் மேவும் இடமாவது, பூத கணங்களால் ஏத்தப் பெறும் பைஞ்ஞீலியாகும். அப்பெருமான், எக்காலத்திலும் ஏத்தப்பெறுபவராய் மேவும் பரம்பொருள் ஆவர்.

410. வேழத் தின்னுரி போர்த்த விகிர்தனார்
தாழச் செஞ்சடை மேற்பிறை வைத்தவர்
தாழைத் தண்பொழில் சூழ்ந்தபைஞ் ஞீலியார்
யாழின் பாட்டை யுகந்த அடிகளே.

தெளிவுரை : சிவபெருமான், யானையின் தோலை உரித்துப் போர்த்திய விகிர்தனார்; நீண்டு விளங்குகின்ற செஞ்சடையுடையவராய் அதன்மீது பிறைச்சந்திரனைச் சூடியவர். அவர், தாழை விளங்கும் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியில் வீற்றிருப்பவர். அப் பெருமான் யாழில் இசையுடன் பாடும் பாடல்களை விரும்பிக் கேட்கும் அடிகள் ஆவார்.

411. குண்டு பட்டுக் குறியறி யாச்சமண்
மிண்ட ரோடு படுத்துய்யப் போந்துநான்
கண்டங் கார்வயல் சூழ்ந்தபைஞ் ஞீலியெம்
அண்ட வாணன் அடியடைந்து உயந்தனே.

தெளிவுரை : சிவபெருமானுடைய திருவடிப் போதினைக் குறிக்கொள்ளாது, சமண நெறியின்பாற்பட்டுக் காலத்தைக் கழித்த யான், உய்யும் நெறியில் போந்து, வயல் சூழ்ந்த பைஞ்ஞீலியில் வீற்றிருக்கும் தேவர் தலைவனாகிய ஈசன்பால் சார்ந்து, திருவடியைப் பணிந்து உய்ந்தனன்.

412. வரிப்பை யாடரவு ஆட்டி மதகரி
உரிப்பை மூடிய உத்தமனார் உறை
திருப்பைஞ் ஞீலி திசைதொழு வார்கள் போய்
இருப்பர் வானவ ரோடுஇனி தாகவே.

தெளிவுரை : படத்துடன் அழகிய வரிகளையுடைய அரவத்தை ஆட்டி, மதம் பொருந்திய யானையின் தோலை உரித்துப் போர்த்திய உத்தமராகிய சிவபெருமான் உறையும் இடமாவது, திருப்பைஞ்ஞீலியாகும். அத்திசை நோக்கித் தொழும் அன்பர்கள், வானவர் பெருமக்களுடன் இனிது மகிழ்ந்திருப்பார்கள்.

413. கோடல் கோங்கம் புறவணி முல்லைமேல்
பாடல் வண்டிசை கேட்கும்பைஞ் ஞீலியார்
பேடும் ஆணும் பிறர்அறி யாததோர்
ஆடு நாகம் அசைத்த அடிகளே.

தெளிவுரை : கோடல், கோங்கு ஆகிய மலர்கள் திகழும் சோலைகளில் வண்டுகள் இசைக்கும் எழிலார்ந்த பைஞ்ஞீலியில் மேவும் ஈசன், பெண்ணெனவும் ஆண் எனவும் ஓதற்கும் அரிதானவர். அவர் ஆடுகின்ற அரவத்தை அசைத்து ஆட்டும் அடிகள் ஆவார்.

414. காரு லாமலர்க் கொன்றையந் தாரினான்
வாரு லாமுலை மங்கையொர் பங்கினன்
தேரு லாம்பொழில் சூழ்ந்தபைஞ் ஞீலியெம்
ஆர்கி லாஅமு தைஅடைந்து உய்ம்மினே.

தெளிவுரை : சிவபெருமான், கார் காலத்தில் மலரும் கொன்றை மலர் மாலையைத் தரித்தவர்; வார் அணிந்த உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு அம்மையப்பராக விளங்குபவர். அவர், பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியில், எம் ஆரா அமுதாக விளங்குபவர். அப்பெருமானை அடைந்து உய்தி பெறுவீராக.

415. தருக்கிச் சென்று தடவரை பற்றலும்
நெருக்கி யூன்ற நினைந்து சிவனையே
அரக்கன் பாட அருளும்எம் மானிடம்
இருக்கை ஞீலி என்பார்க்கு இடர் இல்லையே.

தெளிவுரை : தருக்கிச்சென்று, கயிலை மலையைப் பற்றி எடுத்த இராவணனுடைய தோளும் முடிகளும் நெருக்கி ஊன்றியவர், சிவபெருமான். ஆயினும், அவ்வரக்கன், அப்பரமனையே ஏத்திப் பாட, அவர் அருள் செய்தவராயினர். அப்பெருமான் மேவும் இடம், பைஞ்ஞீலியாகும். அத் திருவருளின் செம்மையினை ஓதும் அன்பர்களுக்கு, இடர் யாவும் நீங்கும்.

திருச்சிற்றம்பலம்

42. திருவேட்களம் (அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோயில், திருவேட்களம் (சிதம்பரம் நகர்), கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

416. நன்று நாள்தொறும் நம்வினை போயறும்
என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்
சென்று நீர்திரு வேட்களத் தள்ளுறை
துன்று பொற்சடை யானைத் தொழுமினே.

தெளிவுரை : திருவேட்களத்துள் உறையும் பொற்சடையுடைய சிவபெருமானைத் தினமும் தொழுவீராக. அவ்வாறு தொழுதால், நமது வினை யாவும் தீரும்; எக்காலத்திலும் இன்பம் தழைக்க வாழலாம்.

417. கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பொருப்பு வெஞ்சிலை யாற்புரம் செற்றவன்
விருப்பன் மேவிய வேட்களம் கைதொழுது
இருப்ப னாகில் எனக்கிடம் இல்லையே.

தெளிவுரை : சிவபெருமான், கரும்பு வில்லையுடைய மன்மதனை, நெற்றிக் கண்ணால் எரித்தவர்; மேரு என்னும் மலையைக் கொடிய வில்லாகக் கொண்டு அப்பெருமான் விருப்பம் கொண்டு மேவிய வேட்களத்தைக் கைதொழுது ஏத்தி இருப்பேனாகில் எனக்கு இடம் என்பது இல்லை.

418. வேட்க ளத்துறை வேதியன் எம்இறை
ஆக்க ளேறுவர் ஆனைஞ்சும் ஆடுவர்
பூக்கள் கொண்டவன் பொன்னடி போற்றினால்
காப்பர் நம்மைக் கறைமிடற் றண்ணலே.

தெளிவுரை : வேட்களத்தில் உறையும் வேதநாயகராகிய ஈசன், எமது இறைவன் ஆவார். அவர், இடப வாகனத்தை வாகனமாக உடையவர்; பசுவின் பஞ்ச கவ்வியத்தை அபிடேகப் பொருளாக ஏற்று மகிழ்பவர். அப்பரமனை மலர் கொண்டு ஏத்திப் பொன்னடியைப் போற்றினால், நீல கண்டராகிய அவர், நம்மைக் காத்தருள்வார்.

419. அல்லல் இல்லை அருவினை தானில்லை
மல்கு வெண்பிறை சூடும் மணாளனார்
செல்வ னார்திரு வேட்களம் கைதொழ
வல்ல ராகிய வழியது காண்மினே.

தெளிவுரை : வெண்மையான பிறைச் சந்திரனைச் சூடும் மணாளராகிய சிவபெருமான், திருவேட்களத்தில் வீற்றிருக்கும் செல்வனார் ஆவார். அப் பெருமானைக் கைதொழுது போற்ற வல்லீர் ஆயின், உங்களுக்குத் துன்பமும் இல்லை; அதற்குக் காரணமாகிய வினையும் இல்லை. மற்றும் நற்கதிக்கு உரிய வழியானது, உமக்கு, அப் பெருமானின் இன்னருளால் இனிது புலனாகும்.

420. துன்பம் இல்லைத் துயரில்லை யாம்இனி
நம்ப னாகிய நம்மணி கண்டனார்
என்பொ னார்உறை வேட்கள நன்னகர்
இன்பன் சேவடி யேத்தி இருப்பதே.

தெளிவுரை : நம்பனாகவும், நீலகண்டராகவும், என்பொன் போன்றவராகவும் விளங்கும் ஈசன் உறைவது திருவேட்களம் என்னும் நன்னகர் ஆகும். அப் பெருமானுடைய செம்மை விளங்கும் திருவடியை ஏத்தி இருக்கத் துன்பமும் துயரும் இல்லாது விலகிச் செல்லும்.

421. கட்டுப் பட்டுக் கவலையில் வீழாதே
பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம்நீர்
சிட்ட னார்திரு வேட்களம் கைதொழப்
பட்ட வல்வினை யாயின பாறுமே.

தெளிவுரை : மாந்தர்காள் ! உலகத்தில் தோன்றும் மூவாசைகளாகிய துயரத்தில் பந்தப்பட்டுக் கவலையில் விழாதீர்கள். இந்த உயிரானது, உடலிலிருந்து விலகிச் செல்லும் முன்னர், சிவபெருமான் மேவும் திருவேட்களம் சென்று, கைதொழுது ஏத்துக. அந் நிலையில், உமது கொடியதாகிய தீவினை யாவும் நைந்து கெடும். அதுவே இன்ப வாழ்க்கைக்குத் துணையாகும்.

422. வட்ட மென்முலை யாள்உமை பங்கனார்
எட்டும் ஒன்றும் இரண்டுமூன்று ஆயினார்
சிட்டர் சேர்திரு வேட்களங் கைதொழுது
இட்ட மாகிஇரு மட நெஞ்சமே.

தெளிவுரை : சிவபெருமான், உமாதேவியைத் திருமேனியில் பாகம் கொண்டு திகழ்பவர்; அட்ட மூர்த்தியாக விளங்குபவர்; ஒப்பற்ற ஏகனாகவும், சிவம் சக்தி ஆகிய இரு வண்ணமாகவும் மும் மூர்த்தியாகவும் விளங்குபவர்; முனிவர்கள் தொழுது ஏத்தும் திருவேட்களத்தில் கோயில் கொண்டு வீற்றிருப்பவர். நெஞ்சமே ! அப்பரமனைக் கைதொழுது போற்றி செய்து, விருப்பம் கொண்டு இருப்பாயாக. அதுவே உய்யும் வழி என்பது குறிப்பு.

423. நட்டம் ஆடிய நம்பனை நாள்தொறும்
இட்டத் தால்இனி தாக நினைமினோ
வட்ட வார முலை யாள்உமை பங்கனார்
சிட்ட னார்திரு வேட்களந் தன்னையே.

தெளிவுரை : நடனம் புரியும் நம்பனாகிய சிவபெருமானை இனி விரும்பி ஏத்துவீராக. அப்பெருமான் உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு திருவேட்களத்தில் வீற்றிருப்பவர். அவர் உய்யும் தன்மையை அருள்புரிபவர்.

424. வட்ட மாமதில் மூன்றுடை வல்லரண்
சுட்ட கொள்கைய ராயினும் சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும்
சிட்டர் பொற்றிரு வேட்களச் செல்வரே.

தெளிவுரை : சிவபெருமான், அசுரர்களுடைய மூன்று வலிமையான கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கியவர். அவர் தம்மைச் சூழ்ந்து வணங்கி ஏத்தும் அடியவர்களுடைய தீய வினைகளைத் தீர்த்துக் குளிர்ச்சியான அருளைப் பெழிபவர். அவர், பெருமையுடைய அழகிய திருவேட்களத்தில் வீற்றிருக்கும் செல்வர் ஆவர்.

425. சேட னார்உறை யும்செழு மாமலை
ஓடி ஆங்கெடுத் தான்முடி பத்திற
வாட வூன்றி மலரடி வாங்கிய
வேட னார்உறை வேட்களம் சேர்மினே.

தெளிவுரை : பெருமையுடைய கயிலை மலையைப் பெயர்த்து எடுத்த இராவணனுடைய முடிகள் பத்தும் நொறுங்குமாறு செய்து திருவிரலை ஊன்றியவர், சிவபெருமான். பின்னர், அவ்வரக்கன் ஏத்திப் போற்ற, ஊன்றிய விரலைத் தளர்த்தி அருள் செய்தவர். அத்தகைய சிவபெருமான், வேடர் வடிவு தாங்கிய சீலராய் அருச்சுனருக்குத் திருவருள் புரியும் தன்மையில் உறையும் இடமாவது திருவேட்களம். அதனைச் சென்றடைந்து உய்வீராக.

திருச்சிற்றம்பலம்

43. திருநல்லம் (அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில், கோனேரிராஜபுரம், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

426. கொல்லத் தான்நம னார்தமர் வந்தக்கால்
இல்லத் தார்செய்ய லாவதென் ஏழைகாள்
நல்லத் தான்நமை ஆளுடை யான்கழல்
சொல்லத் தான்வல்லி ரேல்துயர் தீருமே.

தெளிவுரை : நமனுடைய தூதர்கள் உயிரைக் கொண்டு செல்ல வேண்டும் என்று வந்தால், மனையில் உள்ள சுற்றத்தாரால் ஆவது யாது ! தெளிவற்ற மாந்தர்களே ! நல்லம் நகரில் வீற்றிருக்கும் சிவபெருமான், நம்மை ஆளாகக் கொண்டு காத்தருள்பவர். அப் பரமனுடைய திருக்கழலை ஏத்தி நிற்க வல்லீராயின் துயர் தீரும்.

427. பொக்கம் பேசிப் பொழுது கழியாதே
துக்கம் தீர்வகை சொல்லுவன் கேண்மினோ
தக்கன் வேள்வி தகர்த்த தழல்வண்ணன்
நக்கன் சேர்நல்லம் நண்ணுதல் நன்மையே.

தெளிவுரை : நெஞ்சமே ! பொய்ம்மையானது, நிலையற்றதும் ஆகிய சொற்களைப் பேசிப் பொழுதினைக் கழிக்காதே. உனது துயர் யாவும் தீரும் வகையை நான் சொல்லுகின்றேன். கவனமுடன் கேட்பாயாக. தக்கனுடைய வேள்வியைத் தகர்த்த சிவபெருமான், நெருப்பின் வண்ணம் போன்று சிவந்த திருமேனியர். அவர், நல்லம் என்னும் பதியில் வீற்றிருப்பவர். ஆங்குச் சென்றடைந்து, அப்பரமனை வழிபடுதல் எல்லா நன்மைகளையும் உண்டாக்கும்.

428. பிணிகொள் வார்குழற் பேதையர் காதலால்
பணிகள் மேவிப் பயனில்லை பாவிகாள்
அணுக வேண்டில் அரன்நெறி யாவது
நணுக நாதன் நகர்திரு நல்லமே.

தெளிவுரை : பாவத்தை நெஞ்சிற் கொண்டு மேவுபவர்களே ! மாதர்பால் மயக்கத்தால் ஈர்த்துப் பிணிப்பட்டு, அதற்கு ஏற்ற செயல்களை மேவுவதால் எத்தகைய நற்பயனும் விளைவதில்லை. சிவபெருமான் வீற்றிருக்கும் திருநல்லம் என்னும் நகரை அடைந்து, அப்பெருமானை ஏத்துக. அதுவே நல்ல நெறியாகும்.

429. தமக்கு நல்லது தம்உயிர் போயினால்
இமைக்கும் போதும் இராதுஇக் குரம்பைதான்
உமைக்கு நல்லவன் தானுறை யும்பதி
நமக்கு நல்லது நல்லம் அடைவதே.

தெளிவுரை : நெஞ்சமே ! நமக்கு, மிகவும் உயர்ந்த நல்ல பொருளாக விளங்குவது நமது உயிரே ஆகும். அது இமைக்கும் நேரத்தில் நம்மைவிட்டுச் செல்லும் இயல்புடையது. அவ்வாறு உள்ள தன்மையில், இவ்வுடம்பு இல்லாது, உடனே கெட்டு அழியும். எனவே, உமாதேவியை விரும்பி மேவும் சிவபெருமான் உறையும் பதியாகிய நல்லம் என்னும் தலத்தைச் சென்றடைவதே, நமக்கு நல்லது ஆகும். இது ஆங்குச் சென்று ஈசனை ஏத்தித் தொழுதலை உணர்த்திற்று.

430. உரைத ளர்ந்துட லார்நடுங் காமுனம்
நரைவி டையுடை யான்இடம் நல்லமே
பரவு மின்பணி மின்பணி வாரொடே
விரவு மின்விர வாரை விடுமினே.

தெளிவுரை : நெஞ்சமே ! அந்தி காலத்தில், பேசும் இயல்பு குறைந்து நாவானது குழறி, உரை தளரவும், உடலானது நடுங்கியும், மேவி நலியுறும் முன்னர், வெள்ளை இடபத்தையுடைய சிவபெருமானின் இடமாகிய நல்லம் என்னும் பதியைச் சென்றடைக, அப்பரமனைப் பரவி ஏத்துமின்; பணிமின்; பணிந்து ஏத்தும் திருத்தொண்டர்களுடன் சேர்ந்து வழிபடுமின்; அவ்வாறு வழிபடாதவர்களை விட்டு அகலுமின்.

431. அல்ல லாகஐம் பூதங்க ளாட்டினும்
வல்ல வாறு சிவாய நமஎன்று
நல்லம் மேவிய நாதன் அடிதொழ
வெல்ல வந்த வினைப்பகை வீடுமே.

தெளிவுரை : நெஞ்சமே ! இயற்கையின்பால் நின்று மேவும் ஐம்பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் இவற்றால் இடையூறு காணப்பட்டாலும், உரிய தன்மையில், திருவைந் தெழுத்தாகிய சிவாய நம என்று சிந்தையில் கொண்டு நல்லம் மேவிய சிவபெருமானின் திருவடியைத் தொழுமின். உன்னை ஆட்கொண்டு துன்பத்தைத் தரவந்த வினையாகிய பகை அழிந்து விடும்.

432. மாத ராரொடு மக்களும் சுற்றமும்
பேத மாகிப் பிரிவதன் முன்னமே
நாதன் மேவிய நல்லம் நகர்தொழப்
போது மின்எழு மின்புக லாகுமே.

தெளிவுரை : நெஞ்சமே ! மனைவி மக்கள் மற்றும் சுற்றத்தினர் ஆகியவர்கள், வேற்றுமை கொள்ளுதலும், பிரிதலும் உடைய இத் தேகமானது, நீங்குவதன் முன்னர், சிவபெருமான் வீற்றிருக்கும் நல்லம் நகர் சென்று தொழுவதற்குப் போதுமின். விரைந்து எழுமின். அப்பெருமானே அடைக்கலம் தரும் தலைவர் ஆவார்.

433. வெம்மையான வினைக்கடல் நீங்கிநீர்
செம்மை யாய சிவகதி சேரலாம்
சும்மை யார்மலர் தூவித் தொழுமினோ
நம்மை யாளுடை யான்இடம் நல்லமே.

தெளிவுரை : மாந்தர்காள் ! வெம்மையுடையதாகிய வினைக் கடலில் இருந்து வெளிப்பட்டுச் செம்மை யுடையதாகிய சிவகதியைச் சேர வேண்டுமானால், நம்மை ஆளாகக் கொண்டு விளங்கும் சிவ பெருமானின் இடமாகத் திகழும் நல்லம் நகர் சார்ந்து அப்பரமனைப் பூக்கள் கொண்டு புரவித் தொழுது ஏத்துவீராக.

434. கால மான கழிவதன் முன்னமே
ஏலு மாறு வணங்கிநின்று ஏத்துமின்
மாலும் மாமல ரானொடு மாமறை
நாலும் வல்லவர் கோனிடம் நல்லமே.

தெளிவுரை : நெஞ்சமே ! வாழ்நாளானது கழிந்து இறுதிக்காலம் நெருங்குவதற்கு முன்னர், சிவ பெருமானை இயன்ற அளவில் வணங்கி நின்று ஏத்துமின். அவர், திருமால், பிரமன் ஆகியவர்களுக்குத் தலைவராக விளங்குபவர்; நான்கு மறைகளிலும் வல்லவர். அப்பரமன் மேவும் இடம் நல்லம் ஆகும்.

435. மல்லை மல்கிய தோளரக் கன்வலி
ஒல்லை யில்ஒழித் தான்உறையும் பதி
நல்ல நல்லம் எனும்பெயர் நாவினால்
சொல்ல வல்லவர் தூநெறி சேர்வரே.

தெளிவுரை : வளமையும் உறுதியும் கொண்ட தோள் கொண்ட இராவணனுடைய வலிமையை விரைவில் அழித்த சிவபெருமான் உறையும் நற்பதியானது, நல்லம் ஆகும். அதனையே மந்திரமாக கொண்டு நல்லம் நல்லம் என நாவினால் ஏத்தி உரைக்க வல்லவர்கள், தூயதாகிய முத்தி இன்பத்தைப் பெறுவார்கள்.

திருச்சிற்றம்பலம்

44. திருஆமாத்தூர் (அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில், திருவாமத்தூர், விழுப்புரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

436. மாமர்த் தாகிய மாலயன் மால்கொடு
தாமாத் தேடியும் காண்கிலர் தாள்முடி
ஆமாத் தூர்அர னேஅரு ளாய்என்றென்று
ஏமாப்பு எய்திக்கண் டார்இறை யானையே.

தெளிவுரை : பெருமையுடையவராகிய திருமாலும், பிரமனும் மயங்கிய நிலையில், தமது முயற்சியின் காரணமாகத் தேடியும், ஈசனின் திருத்தாளையும் திருமுடியையும் காண்கிலர். ஆமாத்தூரில் வீற்றிருக்கும் அரனே ! அருள்வீராக ! என அவர்கள் மகிழ்ந்து ஏத்த, அப்பரமனுடைய இன்னருளைப் பெறுவாராயினர்.

437. சந்தி யானைச் சமாதிசெய் வார்தங்கள்
புந்தி யானைப் புத்தேளிர் தொழப்படும்
அந்தி யானை ஆமாத்தூர் அழகனைச்
சிந்தி யாதவர் தீவினை யாளரே.

தெளிவுரை : சிவபெருமான், காலை, பகல், மாலை ஆகிய சந்திக் காலங்களில் அடியவர்களால் தொழப்படுபவர்; யோக நிலையில் தியானம் செய்யும் அன்பர்களின் புந்தியில் விளங்குபவர்; தேவர்களால் தொழப்பெறும் அந்திவானம் போன்ற, சிவந்த திருமேனி உடையவர்; ஆமாத்தூர் வீற்றிருக்கும் அழகர். அப்பரமனைச் சிந்தித்து ஏத்தாதவர்கள், தீய வினைகளால் உந்தப்பெற்றவர்களாவர்.

438. காமாத் தம்எனும் கார்வலைப் பட்டுநான்
போமாத் தையறி யாது புலம்புவேன்
ஆமாத் தூர்அர னேஎன்று அழைத்தலும்
தேமாத் தீங்கனி போலத்தித் திக்குமே.

தெளிவுரை : காமமாகிய கருமையுடன் இருள் வலையில் பட்டு மீண்டு வருகின்ற நல்ல நெறியினை அறியாது புலம்பிய நான், ஆமாத்தூர் அரனே என்று அழைத்தேன். அந்நிலையில், என் உள்ளமானது இனிமையுடைய கனி போன்று, என் உள்ளத்தில் இனிமை கொண்டது.

439. பஞ்ச பூத வலையிற் படுவதற்கு
அஞ்சி நானும் ஆமாத்தூர் அடிகனை
நெஞ்சி னால்நினைந் தேன்நினைவு எய்தலும்
வஞ்ச ஆறுகள் வற்றின காண்மினே.

தெளிவுரை : ஐம்பூதங்களாகிய வலையில் சிக்குண்டு நான் அஞ்சி நிற்கும் காலத்தில் ஆமாத்தூரில் மேவும் அழகிய நாதனை நெஞ்சில் நினைத்தேன். அத்தகைய எண்ணமானது பதிந்தவுடன் என்னுள்ளத்தில் பெருகியிருந்த வஞ்சனையாகிய மாயத் தன்மை யாவும் என்னை விட்டு அகன்றன.

440. குராமன் னும்குழ லாள்ஒரு கூறனார்
அராமன் னும்சடை யான்திரு ஆமாத்தூர்
இராம னும்வழி பாடுசெய் ஈசனை
நிராம யன்தனை நாளும் நினைமினே.

தெளிவுரை : சிவபெருமான், நறுமணம் கமழும் குராமலர் விளங்கும் கூந்தலையுடைய உமாதேவியைத் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டு, அம்மையப்பராக விளங்குபவர்; பாம்பினைச் சடையில் பொருத்தியவர்; இராமபிரானால் பூசித்து ஏத்தப் பெற்றவர். அப்பெருமான், நிராமயமாக, ஆமாத்தூரில் வீற்றிருப்பவர். அவரை, நாள்தோறும் நினைத்து ஏத்துவீராக.

441. பித்த னைப்பெருந் தேவர் தொழப்படும்
அத்த னைஅணி ஆமாத்தூர் மேவிய
முத்தி னைஅடி யேன்உள் முயறலும்
பத்தித வெள்ளம் பரந்தது காண்மினே.

தெளிவுரை : சிவபெருமான், அடியவர்கள்பால் பேரன்பு கொண்டராய்ப் பித்தனைப் போன்று விளங்கிக் கருணை புரிபவர்; பெருமையுடைய தேவர்களால் தொழுது ஏத்தப்படுபவர்; அன்புக்கு உரியவர். அணி கொண்டு மேவும் ஆமாத்தூரில் மேவி, அடியவர்களின் மனத்தெழும் அன்பின் முத்தாக கொண்டு விளங்க முயன்ற அளவில், அவர் பக்தி வெள்ளத்தால் என்னை மகிழ்வுறச் செய்து கருணை புரிவராயினர், இத்தன்மையில் நீங்களும் அவ்வாறு ஏத்தி நின்று, இறைவனைக் காண்பீர்களாக.

442. நீற்றி னார்திரு மேனியன் நேரிழை
கூற்றி னான்குழற் கோலச் சடையிலோர்
ஆற்றி னான்அணி ஆமாத்தூர் மேவிய
ஏற்றி னான்எமை ஆளுடை ஈசனே.

தெளிவுரை : சிவபெருமான், திருமேனியில் திருநீற்றைக் குழையப் பூசி விளங்குபவர்; உமா தேவியை ஒரு கூறாகக் கொண்டு திகழ்பவர்; அழகிய சடை முடியில் கங்கையைத் தரித்து மேவும்பவர்; ஆமாத்தூரில் மேவி, இடப வாகனத்தில் வீற்றிருப்பவர். அவர், எம்மை ஆளாகக் கொண்டு விளங்கும் ஈசன் ஆவார்.

443. பண்ணிற் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்கு
அண்ணித் தாகும் அமுதினை ஆமாத்தூர்
சண்ணிப் பானைத் தமர்க்குஅணித் தாயதோர்
கண்ணிற் பாவையன் னான்அவன் காண்மினே.

தெளிவுரை : சிவபெருமான், பண்ணின் இசை கொண்டு பாடுகின்ற பக்தர்களுக்கு அண்மையில் விளங்குபவராகி, அமுதம் போன்று விளங்குபவர்; ஆமாத்தூரில் வீற்றிருந்து அடியவர்களுக்கு அருள் செய்பவர். அப் பெருமான், கண்ணின் கருமணி போன்று விளங்கி ஒளி தந்தருளுபவராவர்.

444. குண்டர் பீலிகள் கொள்ளும் குணமிலா
மிண்ட ரோடுஎனை வேறு படுத்துய்யக்
கொண்ட நாதன் குளிர்புனல் வீரட்டத்து
அண்ண னார்இடம் ஆமாத்தூர் காண்மினே.

தெளிவுரை : வேற்றுச் சமயத்தில் இருந்து என்னை வேறுபடுத்தி, யான்உய்யுமாறு செய்தவர் சிவ பெருமான். அவர் குளிர்ச்சியான நீர்வளம் பெருகும் வீரட்டத்தானத்தில் தேவர் தலைவராய் மேவி, ஆமாத்துஆரில் வீற்றிருப்பவர் ஆவார். அப் பரமனைத் தரிசித்து உய்வீராக.

445. வானஞ் சாடும் மதியர வத்தொடு
தானஞ் சாதுடன் வைத்த சடையிடைத்
தேனஞ் சாடிய தெங்கிள நீரொடும்
ஆனஞ் சாடிய ஆமாத்தூர் ஐயனே.

தெளிவுரை : வானத்தில் விளங்கி மேவும் சந்திரனானது, அச்ம் கொள்ளாதவாறு, அரவத்தோடு நெருங்கி விளங்கும் தன்மையில், சடையின் மீது வைத்து விளங்கும் சிவபெருமான். அவர், தேன் முதலான பஞ்சாமிர்தமும் தெங்கின் இளநீரும் பசுவின் பஞ்ச கவ்வியமும் பூசனையாக ஏற்று மேவும் ஆமாத்தூர் அழகர் ஆவார்.

446. விடலை யாய்விலங் கல்எடுத் தான்முடி
அடர வோர்விரல் ஊன்றிய ஆமாத்தூர்
இடம தாக்கொண்ட ஈசனுக் கென்னுளம்
இடம தாகக்கொண்டு இன்புற்று இருப்பனே.

தெளிவுரை : யாருக்கும் கட்டுப்படாதவனாய்க் கயிலை மலையை எடுத்த இராவணனுடைய முடிகள் அடருமாறு, ஓர் விரலை ஊன்றிய சிவபெருமான், ஆமாத்தூரில் இடமாகக் கொண்டு விளங்குபவர். அப் பரமனை நான் என்னுள்ளத்தை இடமாகக் கொண்டு ஏத்தி இன்புற்று இருப்பேன்.
திருச்சிற்றம்பலம்

45. திருத்தோணிபுரம் (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

447. மாதி யன்று மனைக்கிரு என்றக்கால்
நீதி தான்சொல நீயெனக்கு ஆர்எனும்
சோதி யார்தரு தோணி புரவர்க்குத்
தாதி யாவன்நான் என்னும்என் தையலே.

தெளிவுரை : நான், எனது மகளை நோக்கி, இந்த மனைக்குள்ளே இரு என்று சொன்ன அளவில், அவள் எனக்கு அறிவுரை கூற நீ யார் ? சோதி வடிவாக விளங்கும் தோணிபுரத்தில் மேவும் சிவபெருமானுக்கு யான் தாதியாகிப் பணி செய்பவள் ஆவேன் என மொழிதல் ஆயினள்.

448. நக்கம் வந்து பலியிடுஎன் றார்க்குஇட்ட
மிக்க தையலை வெள்வளை கொள்வது
தொக்க வீர்வயல் தோணி புரவர்க்குத்
தக்கது அன்று தமது பெருமைக்கே.

தெளிவுரை : நீர்வளம் நிறைந்த வயல்சூழ்ந்த தோணிபுரத்தில் மேவும் சிவபெருமான், நக்கராய் வந்து பலியிடுக என்று கேட்டபோது, இந்நங்கை விருப்பத்துடன் வந்து, இட, அவளுடைய வளையல் களைக் கவர்ந்து கொள்வது தக்கது ஆகுமா ! இச் செயல் ஈசனுடைய பெருமைக்கு ஏற்றதன்று.

449. கொண்டை போல்நய னத்துஇம வான்மகள்
வண்டு வார்குழ லாளுட னாகவே
துண்ட வான்பிறைத் தோணி புரவரைக்
கண்டு காமுறு கின்றனள் கன்னியே.

தெளிவுரை : கொண்டை (மீன்) போன்ற விழியுடைய இமவான் மகளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு வீற்றிருக்கும் சிவபெருமான், பிறைச் சந்திரனையும் சடைமுடியில் தரித்துத் தோணிபுரத்தில் வீற்றிருப்பவர் ஆயினார். அவரைக் கண்டு இப் பெண் காமுறுகின்றனள். இது என்னே !

450. பாலை யம்மொழி யாள்அவள் தாழ்சடை
மேலள் ஆவது கண்டனள் விண்ணுறச்
சோலை ஆர்தரு தோணி புரவர்க்குச்
சால நல்லள்ஆ கின்றனள் தையலே.

தெளிவுரை : பாலை யாழ் போன்ற இனிய மொழியுடைய கங்கையானவள் சடை முடியில் விளங்கச் சிவபெருமான், சோலைகள் திகழும் தோணிபுரத்தில் வீற்றிருக்கும் கண்டனள் இந்நங்கை. ஆயினும், அப் பரமன்பால் மயங்கிக் காதலிக்கின்றனனே !

451. பண்ணின் நேர்மொழி யாள்பலி இட்டஇப்
பெண்ணை மால்கொடு பெய்வளை கொள்வது
சுண்ணம் ஆடிய தோணிபு ரத்துறை
அண்ண லாருக்குச் சால அழகிதே.

தெளிவுரை : பண்ணின் இசையென இனிய மொழியுடைய இந்த நங்கையானவள், திருநீற்றினை விரவப் பூசிய தோணிபுரத்தில் உறையும் அண்ணலாருக்கு விருப்பத்துடன் பிச்சை இட்டனள். அங்ஙனம் இருக்க, இவளைத் தன்பால் மயங்கி நிற்குமாறு செய்து, கைவளையலையும் கவர்ந்து கொள்வது அப் பெருமானுக்கு அழகாகுமா !

452. முல்லை வெண்நகை மொய்குழ லாய்உனக்கு
அல்லன் ஆவது அறிந்திலை நீகனித்
தொல்லை ஆர்பொழில் தோணி புரவர்க்கே
நல்லை யாயிடு கின்றனை நங்கையே.

தெளிவுரை : நங்கையே ! கனிகளைத் தரும் பொழில் சூழ்ந்த தொன்மை விளங்கும் தோணிபுரத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு, நீ நல்லவன் ஆகின்றனை. ஆயினும், அப்பரமன் உனக்கு நல்லவராக இல்லை என்பதை நீ அறிந்து கொள்ளவில்லையே !

453. ஒன்று தானறி யார்உல கத்தவர்
நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பிலர்
துன்று வார்பொழில் தோணி புரவர்தம்
கொன்றை சூடும் குறிப்பது ஆகுமே.

தெளிவுரை : இப் பெண்ணானவள் உற்ற நோய்க்குக் காரணம் யாது என, உலகத்தவர் அறியமாட்டார்கள். அதனை அவள்பால் சென்று சொல்வதற்கும் நினைப்பிலம். அவளுடைய குறிப்பானது, பொழில் சூழ்ந்த தோணிபுரத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான் சூடியுள்ள கொன்றை மாலையைத் தான் சூடி இன்புற வேண்டும் என்பதாகும்.

454. உறவு பேய்க்கணம் உண்பது வெண்தலை
உறைவது ஈமம் உடலிலோர் பெண்கொடி
துறைகள் ஆர்கடல் தோணி புரத்துறை
இறைவ னார்க்கு இவள்என் கண்டு அன்பாவதே.

தெளிவுரை : துறைகள் பொருந்தி கடலையடுத்த தோணிபுரத்தில் உறையும் சிவபெருமான், பேய்க் கூட்டங்களுடன் உறவு கொண்டவராகியும், மண்டையோட்டைப் பிச்சைப் பாத்திரமாகக் கொண்டு, பலியேற்று உண்டும் விளங்குபவர். அவ்விறைவன், சுடுகாட்டில் உறைபவராகித் திருமேனியில் உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டிருப்பவர். இந்த நங்கையானவள், அப்பெருமானின் எத்தகைய சிறப்பினைக் கண்டு அன்பு கொண்டனள் !

455. மாக யானை மருப்பேர் முலையினர்
போக யானும் அவள்புக்க தேபுகத்
தோகை சேர்தரு தோணி புரவர்க்கே
ஆக யானும் அவர்க்குஇனி யாளதே.

தெளிவுரை : பேரழகுடைய மகளிர் சென்று சிவ பெருமானைக் கருதிக் காதல் வயப்பட்டவராய் மயங்கிய நிலை கண்ணுற்ற யான், தோணிபுரத்தில் மேவும் அப்பெருமான்பால் அன்புற்று அடிமையானேன்.

456. இட்ட மாயின செய்வாள்என் பெண்கொடி
கட்டம் பேசிய காராக் கன்றனைத்
துட்ட டக்கிய தோணி புரத்துறை
அட்ட மூர்த்திக்கு அன்பது ஆகியே.

தெளிவுரை : துட்டனாகிய இராவணனை அடக்கிய தோணிபுரத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான், அட்ட மூர்த்தியாக விளங்குபவர். அப்பெருமானுக்கு அன்புடையவளாகிய இந்நங்கை, அப்பெருமான்பால் மயங்கியவளாகித் தன்னுடைய விருப்பத்திற்கு உகந்தவற்றைச் செய்பவள் ஆயினள்.

திருச்சிற்றம்பலம்

46. திருப்புகலூர் (அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

457. துன்னக் கோவணச் சுண்ணவெண் ணீறணி
பொன்னக் கன்ன சடைப்புக லூரரோ
மின்னக் கன்னவெண் திங்களைப் பாம்புடன்
என்னுக் கோவுடன் வைத்திட் டிருப்பதே.

தெளிவுரை : கோவண ஆடை உடுத்தியும், திருவெண்ணீறு தரித்தும் விளங்கும் சிவபெருமான், பொன் மலர்ந்து விரிந்தது போன்ற ஒளிமிக்க அழகிய சடையுடையவர். ஈசனே ! புகலூரில் மேவும் பெருமானே ! தேவரீர் மின்னல் விரிந்து மலர்ந்தது போன்று விளங்கும் சந்திரனைப் பாம்புடன் சேர்ந்து இருக்குமாறு வைத்திருப்பது எதன் பொருட்டு !

458. இரைக்கும் பாம்பும் எறிதரு திங்களும்
நுரைக்கும் கங்கையும் நுண்ணிய செஞ்சடைப்
புரைப்பி லாத பொழிற்புக லூரரை
உரைக்கு மாசொல்லி ஒள்வரை சோருமே

தெளிவுரை : சிவபெருமான், சீறி இரைக்கும் பாம்பும் ஒளியுடைய சந்திரனும், நுரைத்துப் பொங்கி எழுகின்ற கங்கையும் சிவந்த சடைமுடியின் கண் வைத்து விளங்குபவர். அப்பெருமான், பொழில் திகழும் புகலூரில் வீற்றிருப்பவர். இந்த நங்கையானவள், அப் பரமனின் புகழைக் கூறுவீராக என்று கேட்டு, மெய் சோர்ந்து கைவளையலைக் கழல விட்டாள்.

459. ஊச லாம்அர வல்குலென் சோர்குழல்
ஏச லாம்பழி தந்தெழில் கொண்டனர்
ஓசொ லாய்மக ளேமுறை யோஎன்று
பூசல் நாம்இடு தும்புகு லூரர்க்கே.

தெளிவுரை : இந்த நங்கையானவள், கூந்தலை விரித்தவளாகித் தன்னை மறந்து ஏனையோர் பழித்துக் கூறும் தன்மையில், தனது அழகை இழந்து, பசலை கொண்டனள். அதனைக் கவர்ந்து கொண்டவர் புகலூரில் மேவும் ஈசன் ஆவார். மகளே ! நீ சொல்வாயாக ! இவ்வாறு நின்னைக் கவர்ந்தவராகிய ஈசன்பால் சென்று நாம் முறை இடுவோம்.

460. மின்னின் நேரிடை யாளுமை பங்கனைத்
தன்னை நேர்ஒப்பு இலாத தலைவனைப்
புன்னைக் கானற் பொழிற்புக லூரனை
என்னு ளாகவைத்து இன்புற்று இருப்பனே.

தெளிவுரை : சிவபெருமான், மின்னலைப் போன்ற இடையுடைய உமாதேவியைப் பாகமாக உடையவர்; தனக்கு ஒப்பாக வேறு எவரும் இல்லாத தனித் தலைவராக விளங்குபவர். புன்னை மரங்கள் சூழ்ந்த பொழில் திகழும் புகலூரில் வீற்றிருப்பவர். அப்பரமனை, என்னுள்ளத்தில் பதித்து இன்புற்று இருப்பேன்.

461. விண்ணி னார்மதி சூடிய வேந்தனை
எண்ணி நாமங்கள் ஓதி எழுத்தஞ்சும்
கண்ணி னாற்கழல் காண்பிட மேதெனில்
புண்ணி யன்புக லூரும்என் நெஞ்சுமே.

தெளிவுரை : சிவபெருமான், விண்ணில் மேவும் சந்திரனைச் சூடி விளங்குபவர். அப்பெருமானை மனத்தால் எண்ணித் திருநாமங்களை ஓதியும் திருவைந்தெழுத்தைப் பதித்தும் கண்ணால் திருக்கழலைக் காண்கின்ற இடமாவது, யாது என்றால், ஒன்று புண்ணியனாகிய அப்பெருமான் வீற்றிருக்கும் புகலூர் ஆகும். மற்றொன்று அப் பெருமானைத் துதித்துத் திருவைந்தெழுத்து ஓதித் தியானம் கொண்டு விளங்குகின்ற என் நெஞ்சமே ஆகும்.

462. அண்ட வாணர் அமுதுண நஞ்சுண்டு
பண்டு நான்மறை யோதிய பாடலன்
தொண்ட ராகித் தொழுது மதிப்பவர்
புண்ட ரீகத்து ளார்புக லூரரே.

தெளிவுரை : சிவபெருமான், தேவர்கள் அமுதத்தினை உண்ணும் பொருட்டுத்தான் நஞ்சினை உட்கொண்டு காத்தருளியவர்; நான்கு வேதங்களை விரித்து ஓதியவர். அப்பெருமான், தொண்டராக இருந்து ஏத்துகின்ற அடியவர்களை மதித்து, அவர்களுடைய இதயத் தாமரையில் வீற்றிருப்பவர். அவர் புகலூரில் வீற்றிருக்கும் இறைவன் ஆவார்.

463. தத்து வந்தலை கண்டறி வாரிலைத்
தத்து வந்தலை கண்டவர் கண்டிலர்
தத்து வந்தலை நின்றவர்க்கு அல்லது
தத்து வனலன் தண்புக லூரனே.

தெளிவுரை : தத்துவங்கள் யாவும் அறிந்து அவ்வழியில் சிவபெருமானைக் கண்டு அறிபவர் இல்லை. தத்துவங்களையும் முற்றுமாய் அறிந்து கண்டவரும் இல்லை. தத்தவங்களைக் கடந்து நின்று மேவும் சிவஞானிகளுக்கன்றித் தத்துவாதீதனாகிய அப்பரமனை, அறிதல் அரிதாகும். அத்தகைய பெருமான், குளிர்ச்சி மிக்க புகலூரில் மேவும் ஈசனே ஆவார்.

464. பெருங்கை யாகிப் பிளிறி வருவதோர்
கருங்கை யானைக் களிற்றுரி போர்த்தவர்
வருங்கை யானை மதகளிறு அஞ்சினைப்
பொருங்கை யானைகண் டீர்புக லூரரே.

தெளிவுரை : எதிர்த்து வந்து யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவராகிய சிவபெருமான் புகலூரில் வீற்றிருக்கும் யானையைப் போன்றவர். அடியவர்களை அலைக் கழித்துத் தாக்கும் ஐம்புலன்களாகிய யானையை அடக்குபவர், அப்பரமனேயாவர்.

465. பொன்னொத்த நிறத் தானும் பொருகடல்
தன்னொத் தநிறத் தானும் அறிகிலாப்
புன்னைத் தாது பொழிற்புகு லூரரை
என்னத் தாஎன என்னிடர் தீருமே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் அறிவதற்கு அரிய சிவபெருமான், புன்னை மலர்ப்பொழில் திகழும் புகலூரில் வீற்றிருப்பவர். அப்பரமனை என் அன்பனே என்று ஏத்த இடம் தீரும்.

466. மத்த னாய்மதி யாது மலைதனை
எத்தி னான்திரள் தோள்முடி பத்திற
ஒத்தி னான்விர லால்ஒருங்கு ஏத்தலும்
பொத்தி னான்புக லூரைத் தொழுமினே.

தெளிவுரை : கயிலையை எடுத்த இராவணனை விரலால் ஊன்றித் தோளும் முடியும் நெரித்துப் பின்னர் அவ்வரக்கன் ஏத்த, அருள் செய்தவர், சிவபெருமான், அப்பரமன் மேவும் புகலூரைத் தொழுது ஏத்துவீராக.

திருச்சிற்றம்பலம்

47. திருவேகம்பம் (அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்)

திருச்சிற்றம்பலம்

467. பண்டு செய்த பழவினை யின்பயன்
கண்டுங் கண்டுங் களித்திகாண் நெஞ்சமே
வண்டு லாமலர்ச் செஞ்சடை யேகம்பன்
தொண்ட னாய்த்திரி யாய்துயர் தீரவே.

தெளிவுரை : நெஞ்சமே ! முற் பிறவிகளில் செய்த வினையின் பயனாக, இப் பிறவியை அடைந்தனை. இதில் காண்கின்ற உலக இன்பத்தில் திளைத்திருக்கின்றனையே ! வண்டு உலவும் மலரைச் செஞ்சடையில் சூடி விளங்கும் ஏகாம்பரநாதருக்குத் தொண்டனாக இருந்து உலகப் பற்றின்றிப் பணி செய்வாயாக. அதுவே துயர் தீருவதற்கு உரிய வழியாகும்.

468. நச்சி நாளும் நயந்தடி யார்தொழ
இச்சை யால்உமை நங்கை வழிபடக்
கொச்சை யார்குறு கார்செறி தீம்பொழில்
கச்சி யேகம் மேகை தொழுமினே.

தெளிவுரை : திருக்கச்சி ஏகம்பநாதனை, அடியவர்கள் நாள்தோறும் விரும்பித் தொழுகின்றனர். உமாதேவியார் விரும்பி ஏத்தி வழிபட்டார். அப்பரமனைத் தெளிவில்லாத கீழ் மக்கள் அடைய மாட்டார்கள். நெஞ்சமே ! அப்பெருமானைத் தொழுது ஏத்துக.

469. ஊனில் ஆவி இயங்கி உலகெலாம்
தானு லாவிய தன்மையர் ஆகிலும்
வானு லாவிய பாணி பிறங்கவெங்
கானில் ஆடுவர் கச்சி யேகம்பரே.

தெளிவுரை : திருக்கச்சியில் மேவும் ஏகம்பப் பெருமான், சரீரத்தில் விளங்கி இயங்குகின்ற உயிராவார்; உலகம் யாவும் தானாகி விளங்கும் தன்மையுடையவர். வான் முழுதும் விளங்கி, நாதத்தின் ஒலியாகத் திகழ்பவர். அப்பெருமான், மயானத்தில் நின்று நடனம் புரிபவர்.

470. இமையா முக்கணர் என்நெஞ்சத்து உள்ளவர்
தமையா ரும்அறி வொண்ணாத் தகைமையர்
இமையோர் ஏத்த இருந்தவன் ஏகம்பன்
நமையா ளும்அவ னைத்தொழு மின்களே.

தெளிவுரை : சிவபெருமான், இமைத்தல் புரியாத மூன்று கண்களையுடையவர்; என் நெஞ்சில் வீற்றிருப்பவர், தன்னை யாராலும் அறிந்து கொள்ள முடியாத பேரருளாற்றலை உடையவர்; தேவர்களால் ஏத்தப் படுபவர். அத்தகைய பெருமையுடைய ஏகம்பப் பெருமான், நம்மை ஆளும் தலைவர் ஆவார். அப் பரமனைத் தொழுது போற்றுவீராக.

471. மருந்தி னோடுநற் சுற்றமும் மக்களும்
பொருந்தி நின்றெனக் காயஎம் புண்ணியன்
கருந்தடங் கண்ணி னாள்உமை கைதொழ
இருந்த வன்கச்சி யேகம்பத்து எந்தையே.

தெளிவுரை : சிவபெருமான், மருந்தாக விளங்கி மன்னுயிர்களைக் காத்தருள்பவர்; நல்ல சுற்றமாகவும் நன்மக்களாகவும் பொருந்தி நின்று எனக்கு எல்லாமாகவும் ஆகி, மகிழ்ச்சியைத் தருகின்ற புண்ணியன்; உமாதேவியாரால் பூசித்து ஏத்தி வழிபடப்படுபவர். அப்பரமன், திருக்கச்சியேகம்பத்தில் மேவி விளங்கும் எம் தந்தையே ஆவார்.

472. பொருளி னோடுநற் சுற்றமும் பற்றிலர்க்கு
அருளு நன்மைதந் தாயஅ ரும்பொருள்
சுருக்கொள் செஞ்சடை யான்கச்சி யேகம்பம்
இருள்கெடச் சென்று கைதொழுது ஏத்துமே.

தெளிவுரை : சிவபெருமான், எல்லாப் பொருளும் சுற்றமும் ஆகியவர்; தான் என்னும் அகப் பற்றும் தனது என்னும் புறப்பற்றும் இல்லாதவர்களுக்கு, அருள் புரியும் அரும் பொருளாகியவர்; சுருண்ட செஞ்சடையுடையவர். அப்பெருமான், கச்சியேகம்பத்தில் வீற்றிருக்கத் தீவினைகள் தீரும் பொருட்டுக் கை தொழுது ஏத்துக.

473. மூக்கு வாய்செவி கண்ணுடல் ஆகிவந்து
ஆக்கும் ஐவர்தம் ஆப்பை அவிழ்த்தருள்
நோக்கு வான்நமை நோய்வினை வாராமே
காக்கும் நாயகன் கச்சியே கம்பனே.

தெளிவுரை : சிவபெருமான், மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்கள் வழியாகக் கட்டப்பெற்றுள்ள பந்தத்தை அவிழ்த்து, உயிரானது தன்னைச் சார்ந்து, பற்றி, மேவி இருந்து, நற்கதியடையுமாறு, அருள் நோக்குப் புரிபவர்; வினையாகிய பிணியினால் நலியாதவாறு காப்பவர். அத்தகைய தலைவர், கச்சி ஏகம்பனே ஆவார்.

474. பண்ணில் ஓசை பழத்தினில் இன்சுவை
பெண்ணொடு ஆணென்று பேசற்கு அரியவன்
வண்ணம் இல்லி வடிவுவேறு ஆயவன்
கண்ணில் உண்மணி கச்சியே கம்பனே.

தெளிவுரை : கச்சியில் மேவும் ஏகம்பப் பெருமான், பண்ணில் ஓசையாகவும் பழத்தில் மேவும் இனிய சுவை போன்றும் இரண்டறக் கலந்து மேவுபவர்; பெண்ணென்றும் ஆண் என்றும் பேதப்படுத்திச் சுட்டிப் பேசுவதற்கு அரியவர்; இத்தகைய வண்ணம் கொண்டவர் எனவும், வடிவத்தினர் எனவும், ஓதுவதற்கு அரியவர். அத்தகைய பரமன், கண்ணின் மணியாக விளங்கி, யாவும் காண்கின்றவராய் மேவும் பெரும் பொருளாகியவர்.

475. திருவின் நாயகன் செம்மலர் மேலயன்
வெருவ நீண்ட விளங்கொளிச் சோதியான்
ஒருவ னாய்உணர் வாய்உணர்வு அல்லதோர்
கருவுள் நாயகன் கச்சியே கம்பனே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் தேடிக்கொண்டு முறையே திருவடியையும் திருமுடியையும் காணுமாறு மேவிய காலத்தில், சோதி வடிவாக நெடிது ஓங்கிய பெருமான், ஈசன். அவர், யாவையும் உணரும் உணர்வாகவும், பிறவற்றால் உணர்வதற்கு அரியவராய் விளங்கியும், எப்பொருட்கும் கருவாகத் திகழும் நாயகன் ஆவார். அவர், கச்சி ஏகம்பனே.

476. இடுகு நுண்ணிடை யேந்திள மென்முலை
வடிவின் மாதர் நிறம்மனம் வையன்மின்
பொடிகொல் மேனியன் பூம்பொழிற் கச்சியுள்
அடிகள் எம்மை அருந்துயர் தீர்ப்பரே.

தெளிவுரை : நுண்ணிடையார் எனப்படும் மாதர்பால் மையல் கொண்டு காலத்தை வீணாகக் கழிக்காதீர்கள். திருநீற்று மேனியராகப் பூம்பொழிற் கச்சியுள் மேவும் ஏகம்பப் பெருமானைக் கைதொழுது ஏத்துவீராக. அவர் எல்லாத் துன்பங்களையும் தீர்த்தருள்பவர்.

477. இலங்கை வேந்தன் இராவணன் சென்றுதன்
விலங்க லைஎடுக் கவ்விரல் ஊன்றலும்
கலங்கிக் கச்சியே கம்பவோ என்றலும்
நலங்கொள் செலவளித் தான்எங்கள் நாதனே.

தெளிவுரை : இலங்கை வேந்தனாகிய இராவணன் கயிலை மலையினைப் பெயர்த்து, இறைவன் திருவிரலால் ஊன்றப்பெற்ற நிலையில் கலங்கிக் கச்சித் திருவேகம்ப நாதனே எனக் கதறவும், அப்பெருமான் நலம் மிகுந்த வரங்களை அருளிச் செய்தனர். அவர் எங்கள் தலைவர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

48. திருவேகம்பம் (அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்)

திருச்சிற்றம்பலம்

478. பூமே லானும் பூமகள் கேள்வனும்
நாமே தேவர் எனாமை நடுக்குறத்
தீமே வும்உருவா திருவே கம்பா
ஆமோ அல்லற் படஅடி யோங்களே.

தெளிவுரை : நான்முகனும் திருமாலும் தமக்குள் முரண் கொண்டு தாமே பெருந்தேவர் என்று தருக்கி மேவாதவாறு, அவர்கள் நடுக்கம் கொள்ளுமாறு பெரும் தீத் திரட்சியாய் நெடிது ஓங்கிய சிவபெருமானே ! திருவேகம்பப் பெருமானே ! அடியவர்களாகிய நாங்கள் வினைக் கொடுமையால் அல்லல் படுதல் முறையோ ! தேவரீர், கனிந்து அருள் புரிவீராக.

479. அருந்தி றல்அம ரர்அயன் மாலொடு
திருந்த நின்று வழிபடத் தேவியோடு
இருந்த வன்எழி லார்கச்சி யேகம்பம்
பொருந்தச் சென்று புடைபட்டு எழுதுமே.

தெளிவுரை : சிறப்பான ஆற்றலையுடைய தேவர்களும், நான்முகன், திருமால் ஆகியோரும் நின்று வழிபட, உமாதேவியாரை உடனாகக் கொண்டு விளங்குபவர் ஈசன். அவர் வீற்றிருக்கும் எழில் ஆர்ந்த கச்சி ஏகம்பத்தை யடைந்து, மனம் பொருந்தி வணங்குவதற்கு எழுவீராக.

480. கறைகொள் கண்டத்து எண் தோள்இறை முக்கணன்
மறைகொள் நாவினன் வானவர்க்கு ஆதியான்
உறையும் பூம்பொழில் சூழ்கச்சி யேகம்பம்
முறைமை யாற் சென்று முந்தித் தொழுதுமே.

தெளிவுரை : சிவபெருமான், நீலகண்டத்தை யுடையவர்; எட்டுத் தோள்களை உடையவர்; மூன்று கண்களை யுடையவர்; வேதங்களை நாவினால் விரித்து ஓதியவர்; தேவர்களுக் கெல்லாம் ஆதி தெய்வமாகத் திகழ்பவர். நெஞ்சமே ! அப்பெருமான் உறையும் அழகிய பூம்பொழில் சூழ்ந்த கச்சியில் மேவும் திருவேகம்பத்தை முறைமையாற் சென்று முந்தி நின்று கைதொழுது ஏத்துவாயாக.

481. பொறிப்பு லன்களைப் போக்கறுத்து உள்ளத்தை
நெறிப்ப டுத்து நினைந்தவர் சிந்தையுள்
அறிப்பு றும்அமு தாயவன் ஏகம்பம்
குறிப்பி னாற்சென்று கூடித் தொழுதுமே.

தெளிவுரை : நெஞ்சமே ! மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களை, அவ்வவற்றின் விருப்பமான போக்கின்படி சென்று அழியாவிடாது உள்ளத்தை நல்ல நெறியில் காத்திருப்பாயாக. சிவபெருமான், தன்னை நினைந்து ஏத்தும் அடியவர்களுடைய சிந்தையுள் மேவி நல்லறிவைத் தோன்றச் செய்பவர்; இனிமை விளங்கும் அமுதமாகத் திகழ்பவர். அப் பரமன், திருவேகம்பப் பெருமான் ஆவார். அப் பெருமானைத் தொழுவதற்கு அடியவர்கள் கூட்டாகச் சென்று வணங்குக.

482. சிந்தை யுட்சிவ மாய்நின்ற செம்மையோடு
அந்தி யாய்அனலாய்ப் புனல் வானமாய்ப்
புந்தி யாய்ப்புகுந்து ள்ளம் நிறைந்த எம்
எந்தை யேகம்பம் ஏத்தித் தொழுமினே.

தெளிவுரை : எந்தையாகிய ஏகம்பப் பெருமான், சிந்தையுள் இனிமை நிலவுபவராகிப் பதித்தன்மையாய் விளங்குபவர்; செம்மை விளங்குகின்ற அந்தி வண்ணத்தினராகவும், நெருப்பு, நீர், வானம் எனவும் திகழ்பவர். அப்பெருமானை புந்தியுள் புகுந்து, அறிவாய் நிறைந்தவர். அப்பரமனை ஏத்தித் தொழுவீராக.

483. சாக்கியத் தோடு மற்றும் சமண்படும்
பாக்கி யம்இலார் பாடுசெ லாதுறப்
பூக்கொள் சேவடி யான்கச்சி யேகம்பம்
நாக்கொடு ஏத்தி நயந்து தொழுதுமே.

தெளிவுரை : சாக்கியரும் சமணரும் ஈசனை ஏத்தும் பாக்கியம் இல்லாதவர்கள். அத்தன்மையில் நெஞ்சமே ! நீ செல்லாதே. கச்சி ஏகம்பப் பெருமானுடைய சேவடியைப் பூக்களால் அருச்சித்து, நாவினால் அப்பரமனுடைய புகழை ஓதி, விரும்பித் தொழுது ஏத்துக.

484. மூப்பி னோடு முனிவுறுத்து எந்தமை
ஆர்ப்ப தன்முன் னணி அமரரக் கிறை
காப்ப தாய கடிபொழில் ஏகம்பம்
சேர்ப்ப தாகநாம் சென்றடைந்து  உய்துமே.

தெளிவுரை : மூப்பு வந்து உடல் தளர்ச்சியால் அயர்ச்சியும், காலனால் சினந்து பற்றும் பாசக் கயிறும் எம்மை ஆர்த்து நெருங்குவதன் முன்னர், தேவர்களுக்குத் தலைவராகிக் காப்பவராகிய திருவேகம்பப் பெருமானை நாம் சேர்வோம். அந்பெருமானே நாம் உய்வதற்கு உரிய அருளைப் புரிபவர். ஏகம்பப் பெருமானைக் கை தொழுது உய்க, என்பது குறிப்பு.

485. ஆலு மாமயிற் சாயல்நல் லாரொடும்
சால நீயுறு மால் தவிர் நெஞ்சமே
நீல மாமிடற்று அண்ணல் ஏகம்பனார்
கோல மாமணிப் பாதமே கும்பிடே.

தெளிவுரை : நெஞ்சமே ! மயில் போன்ற சாயலையுடைய மாதர்பால் மையல் கொண்டு மயங்காதே. நீலமா மிடற்றுடைய அண்ணலாகிய திருவேகம்பப் பெருமானின் அழகிய பேரொளிப் பாதமலரைக் கும்பிட்டு உய்க.

486. பொய்ய னைத்தையும் விட்டவர் புந்தியுள்
மெய்ய னைச்சுடர் வெண்மழு வேந்திய
கைய னைக்கச்சி யேகம்பம் மேவிய
ஐய னைத்தொழு வார்க்கில்லை அல்லலே.

தெளிவுரை : பொய்மையுடைய உலகப் பற்றினை விட்டு, மெய்ம்மையுடைய, வெண் மழுவாளராகிய சிவ பெருமானைத் தொழுவீராக. அப்பெருமான் கச்சியில் ஏகம்பத்தில் வீற்றிருப்பவர். அவரே தலைவர். அவரை வணங்குபவர்களுக்கு அல்லல் இல்லை.

487. அரக்கன் தன்வலி யுன்னிக் கயிலையை
நெருக்கிச் சென்றெடுத் தான்முடி தோள்நெரித்து
இரக்க இன்னிசை கேட்டவன் ஏகம்பம்
தருக்க தாகநாம் சார்ந்து தொழுதுமே.

தெளிவுரை : இராவணனைக் கயிலையின் கீழ் நெரியுமாறு ஊன்றிய சிவபெருமான், அவ் வரக்கனின் இனிய இசையைக் கேட்டு மகிழ்ந்தவர். அவர் வீற்றிருக்கும் திருவேகம்பத்தைச் சார்ந்து நாம் தொழுவோமாக.

திருச்சிற்றம்பலம்

49. திருவெண்காடு (அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவெண்காடு, நாகப்பட்டினம் மாவட்டம்)

488. பண்காட் டிப்படி யாயதன் பத்தர்க்குக்
கண்காட் டிக்கண்ணில் நின்ற மணியொக்கும்
பெண்காட் டிப்பிறை சென்னிவைத் தான்திரு
வெண்காட் டையடைந்து உய்ம்மட நெஞ்சமே.

தெளிவுரை : நெஞ்சமே ! சிவபெருமான் பண்கொண்டு பாடிப் போற்றும் தன் பக்தர்களுக்கு, ஞானமும் தெளிவும் காட்டிக் கண்ணின் மணியென விளங்குபவர். அப்பெருமான், உமாதேவியை இடப்பாகமாகக் கொண்டு, பிறைச் சந்திரனைச் சென்னியில் தாங்கியனர். அப்பரமன் வீற்றிருக்கும் திருவெண்காட்டையடைந்து உய்திபெறுக.

489. கொள்ளி வெந்தழல் வீசி நின்று ஆடுவார்
ஒள்ளி யகணஞ் சூழ்உமை பங்கனார்
வெள்ளி யன்கரி யனப்சு வேறிய
தெள்ளி யன்திரு வெண்காடு அடைநெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! சிவபெருமான் எரியும் நெருப்பைக் கையில் ஏந்தி வீசி, நின்று ஆடபவர்; பூத கணங்கள் சூழ உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு, அம்மையப்பராக விளங்குபவர்; வெண்மை திகழும் பிறைசூடி வெள்விடையேறி வெண்ணீற்றைத் திருமேனியில் கொண்டு விளங்குபவர்; கரிய கண்டத்தை யுடையவர். அப்பெருமான் மேவும் திருவெண்காட்டை அடைந்து ஏத்துக.

490. ஊனோக் கும்இன்பம் வேண்டி உழலாதே
வானோக் கும்வழி யாவது நின்மினோ
தானோக் கும்தன் அடியவர் நாவினில்
தேனோக் குமதிரு வெண்காடு அடைநெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! ஊனின் பால் பெருக்கத்தையுடைய புலன்கள் வாயிலாகக் காணும் அநித்திய இன்பத்தை நாடி உழலாதே. பேரின்பத்தைக் கண்டு ஆன்மாவானது நற்கதி கொள்ளும் நெறியில் நிற்பாயாக. தன்னையே நோக்கி வழிபடுகின்ற தனது அடியவரின் நாவினில், தேன் போன்று இனிமையாய் மேவும் சிவபெருமான் வீற்றிருக்கும் திருவெண்காட்டை அடைந்து உய்வாயாக.

491. பருவெண் கோட்டுப் பைங்கண்மத வேழத்தின்
உருவம் காட்டிநின்றான் உமை அஞ்சவே
பெருவெண் காட்டிறை வன்உறை யும்இடம்
திருவெண் காடடைந்து உய்ம்மட நெஞ்சமே.

தெளிவுரை : நெஞ்சமே ! யானையின் தோலை உரித்து உமாதேவி அஞ்சும் வடிவனத்தினராகிய பெருமான், பெருவெண் காடராகிய சங்காரகாலக் கடவுள் ஆவார். அப்பெருமான் வீற்றிருக்கும் திருவெண்காட்டை அடைந்து உய்க.

492. பற்ற வன்கங்கை பாம்பு மதியுடன்
உற்ற வன்சடை யான்உயர் ஞானங்கள்
கற்ற வன்கய வர்புரம் ஓரம்பால்
செற்ற வன்திரு வெண்காடு அடைநெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! சிவபெருமான், உயிர்களுக்குப் பற்றாக விளங்குபவர்; பாம்பும் சந்திரனும் சடையில் வைத்துள்ளவர்; மகா ஞானியாக விளங்குபவர்; தீயவர்களாகிய முப்புர அசுரர்கள ஓரம்பினால் எரித்துச் சாம்பலாக்கியவர். அப்பெருமான் வீற்றிருக்கும் திருவெண்காட்டை அடைந்து உய்வாயாக.

493. கூடி னான்உமை யாள்ஒரு பாகமாய்
வேட னாய்விச யற்கருள் செய்தவன்
சேட னார்சிவ னார்சிந்தை மேயவெண்
காட னார்அடி யேஅடை நெஞ்சமே.

தெளிவுரை : நெஞ்சமே ! சிவபெருமான், உமாதேவியாரை உடனாகக் கொண்டு அம்மையப்பராக விளங்குபவர்; வேடுவனாகி அருச்சுனருக்கு அருள் செய்தவர்; வேடுவனாகி அருச்சுனருக்கு அருள் செய்தவர்; யாவராலும் பெருமையாக ஏத்தப்படுபவர். அன்பின் மிக்க பதியானவர். அப்பெருமான், சிந்தை கொண்டு மேவும் வெண்காட்டில் வீற்றிருப்பவர். அவரது திருவடியைத் தஞ்சமாக அடைவாயாக.

494. தரித்த வன்கங்கை பாம்பு மதியுடன்
புரித்த புன்சடை யான்கய வர்புரம்
எரித்த வன்மறை நான்கினோடு ஆறங்கம்
வரித்த வன்உறை வெண்காடு அடைநெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! சிவபெருமான், சடைமுடியில் கங்கை, பாம்பு, சந்திரன் ஆகியவற்றைத் தரித்துள்ளவர்; தீயவர்களாகிய முப்புர அசுரர்களின் கோட்டைகளை எரித்தவர்; நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் விரித்து ஓதியவர். அப்பெருமான் வீற்றிருக்கும் திருவெண்காட்டைத் தஞ்சமாக அடைந்து உய்வாயாக.

495. பட்டம் இண்டை யவைகொடு பத்தர்கள்
சிட்டன் ஆதிஎன் றுசிந்தை செய்யவே
நட்ட மூர்த்திஞா னச்சுட ராய்நின்ற
அட்ட மூர்த்திதன் வெண்காடுஅடைநெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! சிவபெருமான், நெற்றிப் பட்டமும் இண்டை மாலையும் அணிந்தவர்; பக்தர்களே ! சிட்டனே என்றும் ஆதி மூர்த்தியே என்றும் ஏத்தித் தியானம் செய்ய விளங்குபவர்; திருநடனம் புரிபவர்; ஞானசம் சுடராய் விளங்கி அட்ட மூத்தியாகத் திகழ்பவர். அப்பெருமான் வீற்றிருக்கும் திருவெண்காட்டை அடைந்து உய்க.

496. ஏன வேடத்தி னானும் பிரமனும்
தான வேடமுன் தாழ்ந்தறி கின்றிலா
ஞான வேடன் விசயற்கு அருள்செயும்
கான வேடன்றன் வெண்காடு அடைநெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! பன்றியின் வடிவு தாங்கிய திருமாலும், நான்முகனும் காண்பதற்கு அரியவராகிய சிவபெருமான், தான் அவ் வேடத்தையுயைடவராகி யாரும் அறியாதவராய் அழல் ஆயினார். ஞான வடிவத்தினராகிய அப்பெருமான், காட்டில் வாழும் வேடுவராகத் திருக்கோலம் தாங்கி, அருச்சுனருக்கு அருள் செய்தவர். அப்பரமன் வீற்றிருக்கும் திருவெண்காட்டை அடைந்து உய்வாயாக.

497. பாலை யாடுவர் பன்மறை ஓதுவர்
சேலை யாடிய கண்ணுமை பங்கனார்
வேலை யார்விடம் உண்டவெண் காடர்க்கு
மாலை யாவது மாண்டவர் அங்கமே.

தெளிவுரை : சிவபெருமான், பால் அபிடேகம் கொள்பவர்; வேதம் ஓதுபவர்; சேல் போன்ற விழியுடைய உமாதேவியைப் பாகமாக உடையவர்; கடல் நஞ்சினை உட்கொண்டு, கண்டத்தில் தேக்கியவர். வெண்காடராகிய அப்பெருமான் அணிவது மாண்டவர்களின் எலும்பினைக் கோர்த்த மாலையே.

498. இராவ ணம்செய மாமதி பற்றவை
இராவ ணம்உடை யான்றனை உள்குமின்
இராவ ணன்றனை ஊன்றி அருள்செய்த
இராவ ணன்திரு வெண்காடு அடைமினே.

தெளிவுரை : சிவபெருமான், இரவுக் காலத்தில் வண்ணம் கொண்டு ஒளிரும் பெருமையுடைய சந்திரனைச் சூடியவர்; ஐராவதம் என்னும் யானையால் பூசித்து வழிபடப் பெற்றவர். நெஞ்சமே ! அத்தகைய பெருமானை நினைத்து ஏத்துமின். கயிலை மலையைப் பெயர்த்த இராவணனைத் திருப்பாதத்தால் ஊன்றி நெரித்து, அவன் ஏத்த அருள் செய்த அப்பெருமான், இருள் வண்ணத்தையுடைய கரிய கண்டத்தையுடையவர். அவர், திருவெண்காட்டில் வீற்றிருப்பவர். அவரை அடைந்து உய்க.

திருச்சிற்றம்பலம்

50. திருவாய்மூர் (அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

499. எங்கே என்னை இருந்து இடம் தேடிக்கொண்டு
அங்கே வந்துஅடை யாளம் அருளினார்
தெங்கே தோன்றும் திருவாய்மூர்ச் செல்வனார்
அங்கே வாஎன்று போனார் அதுஎன்கொலோ.

தெளிவுரை : தென்னை மரங்கள் விளங்கும் திருவாய்மூரில் வீற்றிருக்கும் சிவபெருமான், நான் எங்கே இருக்கின்றேன் என்று அன்புடன் என்னிடம் தேடி வந்து, திரு அடையாளத்தைக் காட்டித் திருவாய்மூருக்கு வா என்று, சொல்லிச் சென்றார், இவ் வற்புதம் என்கொல் !

500. மன்னு மாமறைக் காட்டு மணாளனார்
உன்னி உன்னி உறங்குகின் றேனுக்குத்
தன்னை வாய்மூர்த் தலைவன் ஆமா சொல்லி
என்னஐ வாஎன்று போனார்அது என்கொலோ.

தெளிவுரை : பெருமை விளங்கும் மறைக்காட்டில் வீற்றிருக்கும் மணாளராகிய சிவபெருமானை நினைந்து உருகித் தியானித்த வண்ணம் உறங்கி இருந்தேன். அப்போது வாய்மூரில் மேவும் என் தலைவன், என்னை ஆமோதிக்குமாறு தோன்றி, வா என்று முன் சென்றார். அது என் கொல் !

501. தஞ்சே கண்டேன் தரிக்கிலா தார்என்றேன்
அஞ்சேல் உன்னை அழைக்கவந் தேன்என்றார்
உஞ்சேன் என்றுகந் தேஎயுந்து ஓட்டந்தேன்
வஞ்சே வல்லரே வாய்மூர் அடிகளே.

தெளிவுரை : தஞ்சம் வேண்டி வருந்தியபோது தாமதிக்காது வந்தவரை யார் என்றேன். அந் நிலையில் சிவபெருமான், அஞ்சேல் ! உன்னை அழைக்க யான் உய்ந்தேன் என்று மகிழ்ந்து, ஓடத் தொங்கினேன். வாய்மூரில் வீற்றிருக்கும் அடிகளின் திருக்குறிப்புதான் யாதோ !

502. கழியக் கண்டிலேன் கண்ணெதி ரேகண்டேன்
ஒழியப் போந்திலேன் ஒக்கவே ஓட்டந்தேன்
வழியிற் கண்டிலேன் வாய்மூர் அடிகள்தம்
சுழியிற் பட்டுச் சுழல்கின்றது என்கொலோ.

தெளிவுரை : சிவபெருமானை நான் நேரில் கண்ணெதிரே கண்டேன். அவர் மறைந்ததாகக் காண வில்லை. அவரை விலகியும் போகவில்லை. அவருடன் சேர்ந்தே ஓடிவந்தேன். ஆயினும், அப்பெருமானை இடையில் காணவில்லை. வாய்மூர் அடிகளின் அருள் திருவிளையாடலில் தலைப்பட்டு நான் சுழல்கின்றேன். என்கொல் !

503. ஒள்ளி யார்இவர் அன்றிமற்று இல்லைஎன்று
உள்கி உள்கி உகந்திருந் தேனுக்குத்
தெள்ளி யார்இவர் போலத் தெருவாய்மூர்க்
கள்ளி யார்அவர் போலக் கரந்ததே.

தெளிவுரை : சோதி வடிவினராகவும் அறிவு பூர்வமானவராகவும் திகழும் சிவபெருமானுக்கு நிகராக யாரும் இல்லை என்று நினைந்து, உள்ளம் கசிந்து உருகி, உகந்து இருந்தேன். அப்போது, அப்பெருமான், காட்சி நல்கி, என் உள்ளத்தைக் கவர்ந்தவர். பின்னர் மறைந்தனரே ! என்னே !

504. யாதே செய்துமி யாமலோம்நீ யென்னில்
ஆதே தேயயும் அளவில் பெருமையான்
மாதே வாகிய வாய்மூர் மருவினார்
போதே என்றும் புகுந்ததும் பொய்கொலோ.

தெளிவுரை : எச்செயல் செய்தாலும் அது நம்மால் நிகழ்வதன்று, எல்லாம் இறைவன் செயலே எனக் கண்டறிந்து ஏத்துதலே நற்பயனை அளிக்கும். பெருமையுடைய மாதேவராகிய வாய்மூர் அடிகள் என்னை மருவி வருவாயாக என்று, உரைத்தருளியது பொய்யோ !

505. பாடிப் பெற்ற பரிசில் பழங்காசு
வாடி வாட்டம் தவிர்ப்பார் அவரைப்போல்
தேடிக் கொண்டு திருவாய்மூர்க் கேஎனா
ஓடிப் போந்திங்கு ஒளித்தவாறு என்கொலோ.

தெளிவுரை : சிவபெருமான், திருவீழி மிழலையில் முதற்கண் (திருஞானசம்பந்தருக்கு)  மாற்றுக் குறைந்த காசு அளித்துப் பின் அப்பெருமானைப் பாட அக்குறை தவிர்த்தவரைப் போன்று, என்னைத் தேடிக் கொண்டு வந்து திருவாய்மூர்க்கு வா என்று புகன்று, பின்னர் ஒளித்தவாறுதான் என் கொல் !

506. திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ்
உறைப்புப் பாடி அடைப்பித்தா ருந்நின்றார்
மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப்
பிறைக்கொள் செஞ்சடையார் இவர் பித்தரே.

தெளிவுரை : திருமறைக்காட்டில் திருக் கதவைத் திறக்குமாறு பாடிய என்னினும், செந்தமிழின் உறைப்பு மிகுந்ததாகத் திருஞானசம்பந்தர் பாடி, அத் திருக்கதவத்தை அடைப்பித்தனர். அவர் அருகில் விளங்கிப் பொலிவுடன் நின்றபோதும் திருவாய்மூரில் வீற்றிருக்கும் பெருமான், தம்மை மறைத்துக் கொள்வரோ ! பிறைச்சந்திரனைச் செஞ்சடையில் வைத்து மேவும் அப்பெருமான் பித்தரே ஆவார் !

507. தனக்கே றாமை தவிர்கென்று வேண்டினும்
நினைத்தேன் பொய்க்குள் செய்திடு நின்மலன்
எனக்கே வந்தெதிர் வாய்மூருக் கேஎனாப்
புனற்கே பொற்கோயில் புக்கதும் பொய்கொலோ.

தெளிவுரை : திருமறைக்காட்டில் திருக்கதவம் திறத்தலைத் தனக்குக் குறிப்பாக அமையப் பெறாமை புரிந்து, கதவினைத் திறக்கச் செய்தவர், சிவபெருமான். அப்பரமன் என் எதிரில் வந்து நின்று, வாய்மூருக்கு வா என்று புகன்று, புனலின் பக்கம் திகழும் அழகிய திருக்கோயிலின்கண் புகுந்ததும் பொய்கொலோ !

508. தீண்டற் கரிய திருவடி ஒன்றினால்
மீண்டற் கும்மதித் தார்அரக் கன்தனை
வேண்டிக் கொண் டேன்திரு வாய்மூர் விளக்கினைத்
தூண்டிக் கொள்வன்நான் என்றலும் தோன்றுமே.

தெளிவுரை : திருமால் முதலிய தேவர்களாலும் தீண்டுவதற்கு அரிய திருவடி ஒன்றினால் இராவணனை அடர்த்து நெரித்தும் பின்னர் அருளவும் செய்தவர் சிவபெருமான், அப் பரமனாகிய திருவாய்மூரில் மேவும் சோதியை நான் வற்புறுத்தி வேண்டிக் கொண்ட ஞான்று, எனக்கு முன் தோன்றி காட்சி நல்கினர்.

திருச்சிற்றம்பலம்

51. திருப்பாலைத்துறை (அருள்மிகு பாலைவனேஸ்வரர் திருக்கோயில், பாபநாசம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

509. நீல மாமணி கண்டத்தர் நீள்சடைக்
கோல மாமதி கங்கையும் கூட்டினார்
சூல மான்மழு ஏந்திச் சுடர்முடிப்
பால் நெய் யாடுவர் பாலைத் துறையரே.

தெளிவுரை : சிவபெருமான், நீலகண்டத்தையுடையவர்; நீண்ட சடையின்கண் அழகிய சந்திரனையும் கங்கையும் சேருமாறு பொருந்தியவர்; சூலம், மான், மழு, ஆயுதம் ஆகியவற்றை ஏந்தியுள்ளவர். அப்பெருமான், ஒளி திகழும் முடியில் பாலும் நெய்யும் அபிடேகப் பொருளாகக் கொண்டு மகிழ்பவர். அப்பரமன், பாலைத்துறையில் வீற்றிருக்கும் இறைவன் ஆவார்.

510. கவள மால்களிற் றின்உரி போர்த்தவர்
தவள வெண்ணகை மங்கையொர் பங்கினர்
திவள வானவர் போற்றித் திசைதொழும்
பவள மேனியர் பாலைத் துறையரே.

தெளிவுரை : சிவபெருமான், கவளமாகிய உணவைக் கொள்ள ஆணவமாகிய மயக்கத்தையுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர்; தவள வெண்ணகையாள் என்னும் திருநாமத்தையுடையவர் அம்பிகையைத் திருமேனியில் பாகமாகக் கொண்டு, அம்மையப்பராக விளங்குபவர்; யாவற்றிலும் திளைத்து மேவும் தேவர்களால் திசை நோக்கிப் பேற்றித் தொழப் பெறுபவர். பவளம் போன்ற செம்மேனியராகிய அப்பெருமான், பாலைத் துறையில் வீற்றிருப்பரவ் ஆவார். இத் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள அம்பிகையின் திருநாமம், இத் திருப்பாட்டில் ஓதப் பெற்றது காண்க.

511. மின்னின் நுண்ணிடைக் கன்னியர் மிக்கெங்கும்
பொன்னி நீர்மூழ்கிப் போற்றி அடிதொழ
மன்னி நான்மறை யோடுபல் கீதமும்
பன்னி னார்அவர் பாலைத் துறையரே.

தெளிவுரை : மின்னலைப் போன்ற நுண்ணிய இடையுடைய கன்னிப் பெண்கள் திரளாகக் கூடிப் பொன்னி(காவிரி)யில் மூழ்கி, நீராடிச் சிவபெருமானைத் தொழுது போற்றுகின்றனர்; பெருமையுடன் திகழும் நான்கு வேதங்களுடன் பல்வகையான இசைப் பாடல்களும் பாடுவராயினர். அத்தகைய தலைவர் பாலைத்துறையில் மேவும் பரமர் ஆவார்.

512. நீடு காடிய மாய்நின்ற பேய்க்கணம்
கூடி பூதம் குழுமி நின்று ஆர்க்கவே
ஆடி னார்அடி காகிய நான்மறை
பாடி னார்அவர் பாலைத் துறையரே.

தெளிவுரை : நெடிய சுடுகாட்டை இடமாகக் கொண்டு பேய்க்கணங்களும் பூதங்களும் குழுமி இருந்து ஆரவாரம் செய்து களித்து மகிழ, சிவபெருமான் நடனம் ஆடுபவர். நான்கு வேதங்களையும் அழகுடன் ஓதும் அப் பரமன், பாலைத்துறையில் வீற்றிருப்பவர் ஆவார்.

513. சித்தர் கன்னியர் தேவர்கள் தானவர்
பித்தர் நான்மறை வேதியர் பேணிய
அத்த னேநமை ஆளுடை யாய்எனும்
பத்தர் கட்குஅன்பர் பாலைத் துறையரே.

தெளிவுரை : சித்தர்கள், சப்த கன்னியர்கள், தேவர்கள் அசுரர்கள், பித்தர்கள், நான்கு மறைகளை ஓதும் வேதியர்கள் என, யாவரும் தம்மை ஆளும் பெருமானாகத் தியானித்துச் சிவபெருமானை ஏத்துகின்றனர். அத்தகைய பக்தி செய்யும் அன்பர்களுக்கு அருள் புரிபவர், பாலைத் துறையில் மேவும் பரமன் ஆவார்.

514. விண்ணி னார்பணிந்து ஏத்த வியப்புறம்
மண்ணி னார்மறவாது சிவாய என்று
எண்ணி னார்க்குஇட மாஎழில் வானகம்
பண்ணி னார்அவர் பாலைத் துறையரே.

தெளிவுரை : சிவபெருமானைத் தேவர்கள் கூடி நின்று ஏத்திப் பணிகின்றனர். இப்பூவுலகத்து மாந்தர்கள், மறத்தல் இல்லாத தன்மையால், அதி சூக்கும பஞ்சாட்சர மந்திரமாகிய சிவாய என்று எண்ணித் தியானம் செய்கின்றனர். அவ்வாறு ஏத்தும் அன்பர்களுக்குப் பெரும் சிறப்பினை அருளுகின்றவர் பாலைத்துறையில் மேவும் பரமனே ஆவார்.

515.குரவ னார்கொடு கொட்டியும் கொக்கரை
விரவி னார்பண் கெழுமிய வீணையும்
மருவு நாண்மலர் மல்லிகை செண்பகம்
பரவு நீர்ப்பொன்னிப் பாலைத் துறையரே.

தெளிவுரை : சிவபெருமான், குருவாக விளங்கிச் சனகாதி முனிவர்களாகிய நால்வர்க்கு உபதேசம் செய்தவர்; கொடுகொட்டி கொக்கரை முதலான வாத்தியங்கள் முழங்கப் பண்ணின் இசை விளங்கும் வீணையை வாசிப்பவர். அப்பெருமான், நாள்தோறும் பூத்து மலரும் மல்லிகை, செண்பகம் ஆகிய மலர்கள் விளங்கக் காவிரி நீர் பரவி விளங்கும் பாலைத் துறையில் மேவும் பரமன் ஆவார்.

516. தொடரும் தொண்டரைத் துக்கம் தொடர்ந்துவந்து
அடரும் போதுஅர னாய்அருள் செய்பவர்
கடலின் நஞ்சணி கண்டவர் கடிபுனல்
படரும் செஞ்சடைப் பாலைத் துறையரே.

தெளிவுரை : சிவபெருமான், தன்னைத் துதித்து ஏத்தும் அடியவர்கள், துயரால் வருந்தி நலிகின்றபோது அத்துன்பத்தை அழிக்கும் ருத்திர மூர்த்தியாய் மேவி, அருள் புரிபவர்; கடலில் தோன்றிய நஞ்சினைக் கண்டத்தில் தேக்கி, அணிந்து மேவும் ஆபரணம் போன்று செய்தவர். அப்பெருமான், படர்ந்து விளங்கும் சிவந்த சடைமீது கங்கையைத் தரித்தவர். அவர், பாலைத் துறையில் மேவும் இறைவன் ஆவார்.

517. மேகம் தோய்பிறை சூடுவர் மேகலை
நாகந் தோய்ந்த அரையினர் நல்லியல்
போகந் தோய்ந்த புணர்முலை மங்கையோர்
பாகம் தோய்ந்தவர் பாலைத் துறையரே.

தெளிவுரை : சிவபெருமான், மேகத்தில் தோய்ந்து விளங்கும் பிறைச் சந்திரனைச் சூடுபவர்; ஐந்தலை நாகத்தை உடுத்தும் ஆடையாக அரையில் கட்டி இருப்பவர். உயிர்களுக்கு நன்மை புரியும் இயல்புடைய உமாதேவியைத் திருமேனியில் பாகமாகக் கொண்டு அம்மையப்பராகத் திகழ்பவர். அப்பெருமான், பாலைத் துறையில் மேவும் இறைவன் ஆவார்.

518. வெங்கண் வாளரவு ஆட்டி வெருட்டுவர்
அங்க ணார்அடி யார்க்கு அருள் நல்குவர்
செங்கண் மாலயன் தேடற்கு அரியவர்
பைங்கண் ஏற்றினர் பாலைத் துறையரே.

தெளிவுரை : சிவபெருமான், சீற்றம் கொண்ட அரவத்தைப் பற்றி ஆட்டி அச்சுறுத்துபவர்; அழகிய கனிந்த நோக்குடையவராகி, அடியவர்களுக்கு அருள் புரிபவர்; திருமாலும் பிரமனும் தேடியும் காண்பதற்கு அரியவராகியவர்; இடப வாகனம் உடையவர். அவர் பாலைத் துறையில் மேவும் பரமர் ஆவார்.

519. உரத்தி னால்அரக் கன்னுயர் மாமலை
நெருக்கி னானை நெரித்தவன் பாடலும்
இரக்க மாஅருள் செய்தபா லைத்துறை
கரத்தி னால்தொழு வார்வினை ஓயுமே.

தெளிவுரை : தனது வலிமையால் கயிலையைப் பெயர்த்தபோது இராவணனை நெருக்கிப் பின் அவ்வரக்கன் ஏத்திப் பாட இரக்கம் கொண்டு இன்னருள் செய்த பெருமான், பாலைத் துறையுள் மேவும் ஈசன் ஆவார். அப்பரமனைக் கரங்கூப்பித் தொழும் அடியவர்களின் வினையானது நீங்கிச் செல்லும்.

திருச்சிற்றம்பலம்.

 
மேலும் ஐந்தாம் திருமறை »
temple news
52. திருநாகேச்சரம் (அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம், தஞ்சாவூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar