பைரவரின் சக்தி பற்றி சுப்ரபேதாகமம் என்ற நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. இவர் சிவபெருமானின் அம்சம். இந்த பிரபஞ்சத்தையே ஆட்டிப்படைக்கும் அளவற்ற சக்தி படைத்தவர் சிவன். அந்த சக்தியில் கோடியில் ஒரு பங்கால் உருவானவர் பைரவர். சிவபெருமானின் நேரடி சக்தி என்பதால், இவரை வணங்குவோர் அடையும் நன்மைக்கு அளவே கிடையாது. பைரவர் என்ற சொல்லுக்கு அச்சுறுத்தும் போர்க்குரல் உடையவர் என்று பொருள். சிவபெருமான் அசுரர்களையும், தனக்கு அடங்க மறுத்த அரசர்களையும் எதிர்த்து போரிடும் போது ஏற்ற வடிவமே பைரவக் கோலம். இவர் ஆயுதங்களை எடுக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. சத்தம் போட்டாலே போதும்! எதிரிகள் அடங்கிப் போவார்கள். இவரை வைரவர் என்று கிராமப்புறங்களில் சொல்வர். நவரத்தினங்களில் வைரத்தின் ஒளி பிரமிப்பு தருவதாக இருக்கும். அதுபோல், பக்தர்கள் மனதில் அஞ்ஞானத்தை அழித்து ஞானம் என்னும் ஒளியேற்றுபவர் என்பதால், இப்பெயர் ஏற்பட்டது. இவரை ஞாயிறு அன்று ராகு காலத்தில் (மாலை 4:30 6:00 மணி) வழிபடுவது சிறப்பு.