பதிவு செய்த நாள்
27
ஜன
2025
05:01
கோவை; காமாட்சிபுரி ஆதினம், 51 சக்தி பீடம் கோவிலில் நடந்த குண்டம் விழாவில், திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஒண்டிப்புதுார் அருகே கோவை காமாட்சிபுரி ஆதினம், 51 சக்தி பீடம் கோவிலில், மகாசக்தி அங்காளபரமேஸ்வரி அன்னையின், 44ம் ஆண்டு திருக்கல்யாண மகா உற்சவம், குண்டம் திருவிழா கடந்த, 22ம் தேதி துவங்கியது. காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில், விநாயகர் வேள்வி, 108 விநாயகர் பூஜை, கோமாதா பூஜை, அம்மன் அபிஷேகம், கருப்பராயர் பூஜை, கன்னிமார் பூஜை, வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், முளைப்பாரி இடுதல், மஹா சரஸ்வதி வேள்வி, புஷ்ப பல்லக்கு உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக, குண்டம் திருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாணம், குண்டத்துக்கு பூ இடுதல், கரும்பு சமர்ப்பித்தல், அக்னி இடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தி பரவசமடைந்தனர். நோயில் இருந்து குணமடைந்தவர்கள், மூடிய குண்டத்தில் உப்பு செலுத்தி வழிபட்டனர். உலகில் அமைதி நிலவவும், மக்கள் நிறைவாக வாழவும், பல்வேறு பூஜைகள் தினமும் நடத்தப்பட்டன. நிறைவு நாளான நாளை பரிவேட்டை, குதிரை வாகன உற்சவம், மகிஷாசூரன் வதம், விளக்கு வழிபாடு, அம்மன் தரிசனம், காமதேனு வாகன உற்சவம் நடக்கிறது.