பதிவு செய்த நாள்
27
ஜன
2025
05:01
பழநி; பழநி முருகன் கோயிலில் பிப்.,5 முதல் பத்து நாட்களுக்கு தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு குறித்த அரசு துறைகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. ஹிந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், தைப்பூச தினத்தை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என தெரிவித்தார்.
பழநி முருகன் கோயிலில் பிப்.,11ல் தைப்பூச தேரோட்டம் நடைபெற உள்ளது. தைப்பூச திருவிழா பிப்.,5,ல் துவங்கி பத்து நாட்கள் நடைபெறும். இந்நிலையில் பாதயாத்திரை ஆக தைப்பூசத்திற்கு பழநி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்ய அரசு துறை அதிகாரிகளுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இதில் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவு மற்றும் உணவுப் பொருள் பாதுகாப்புத் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம், அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி, ஹிந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சுகுமாரன், திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப், சப் கலெக்டர் கிஷன் குமார், ஹிந்து அறநிலையத்துறை இணைகமிஷனர்கள் கார்த்திக், மாரிமுத்து மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் பாதயாத்திரை பக்தர்கள் குறித்து துறை அலுவலர்களிடம் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, "பிப்., 5ஆம் தேதி துவங்க உள்ள தைப்பூச திருவிழாவிற்கு அன்று வருகை புரிந்து ஆய்வு செய்ய உள்ளேன். கடந்த ஆண்டு 12 லட்சம் பக்தர்கள் தைப்பூச திருவிழாவில் பழநியில் ங்கேற்றனர். இந்த ஆண்டு பக்தர்களின் வருகை அதைவிட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கான வசதிகள் செய்து தர ஒருங்கிணைந்து செயல்பட உள்ளோம். பழநியில் திருவிழா நாட்களில் வழங்கப்பட்டு வரும் அன்னதானம் 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 20 நாட்களுக்கு 4 லட்சம் பக்தர்களுக்கு இரண்டு வகையான உணவு வகைகள் வழங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு 19 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்படும். பழநியில் விடுதிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். உணவகங்களில் அதிக பணம் பெறுபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அன்னதானம் வழங்குபவர்களை வரவேற்கிறோம். ஆனால் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட சில சம்பவங்கள் பக்தர்களுக்கு சுகாதாரமான உணவை வழங்கும் சூழலை உருவாக்கி உள்ளது. அன்னதானம் வழங்க வருபவர்களுக்கு ஆதரவாக அரசு இருக்கும். தைப்பூச தினத்தை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்படும். தொகுப்பூதியத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கோயிலில் பணியாற்றவர்களுக்கு நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நாதஸ்வரம், தவில் வாசிக்கும் நபர்கள் பணி நிரந்தரம் செய்ய தகுதிகள் இருந்தால் நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
பழநி கோயிலுக்கு காலிப் பணியிடங்களை நிரப்ப லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் வந்து உள்ளன. இவற்றை பிரித்து நேர்காணல் நடத்தி பணியிடங்கள் வழங்கப்படும். கோயிலில் பணி பெற்று தருவதாக கூறி முறைகேட்டில் ஈடுபடுவது தெரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பரங்குன்றம் மத வழிபாட்டில் அவரவர் மத வழிபாட்டை செய்ய கடைப்பிடிக்க வேண்டும். திருப்பரங்குன்றத்தில் வக்பு வாரி நிலம் இருப்பது தொடர்பான விஷயத்தில் 1930 இல் லண்டன் பிரிவியூ விசாரணையில் இருந்து தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இரு மதங்கள் குறித்த பிரச்சனையில் எந்த சச்சரவும் வந்து விடக்கூடாது. ஜாதி மத இன வேறுபாடுகளை கடந்து சகோதரத்துடன் பயணிக்க வேண்டும். பிரச்சனைகள் வந்து விடக்கூடாது அதற்கு ஊடகங்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பழநியில் வின்ச் பயணிப்பவர்கள் 32 இருந்து 78 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 58 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கோயில் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பட டாலர் கடைகள் வந்து மாற்றி வைக்கப்படும். தற்போது போகர் சன்னதி எதிரே உள்ள கடை அலுவலகத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார். இந்நிலையில் அமைச்சர் கூறியபடி தைப்பூசத்திற்கு சிறப்பு கட்டணம் வசூலிக்கப்படாத நாட்கள் பிப்.,11,12,13 அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.