பதிவு செய்த நாள்
27
ஜன
2025
10:01
வத்திராயிருப்பு; அண்ணன், தங்கை பாசத்திற்கு உதாரணமாக திகழும் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அர்ச்சுனாபுரம் நல்லதங்காள் கோயிலில் அம்மன் சிலையை உடைத்து அடியில் இருந்த தங்கம், வெள்ளி மற்றும் உண்டியல் பணத்தை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இப்பகுதியில் 15ம் நுாற்றாண்டில் வாழ்ந்த ராமலிங்க சேதுபதிக்கு நல்லதம்பி, நல்லதங்காள் என இரு குழந்தைகள். இதில் நல்லதங்காளை மானாமதுரையை சேர்ந்த காசிராஜனுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். அவருக்கு 7 குழந்தைகள் பிறந்தனர். வறுமையால் சொந்த ஊர் வந்த நல்ல தங்காளை, அண்ணன் நல்லதம்பியின் மனைவி அலட்சியப்படுத்தினார். வேதனையடைந்த நல்ல தங்காள் 7 குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அங்கு அப்பகுதியினர் நல்லதங்காளுக்கு கோயில் அமைத்து வணங்கி வருகின்றனர். நேற்று காலை கோயிலை திறக்க பூஜாரி தங்கமணி வந்தபோது முன் மண்டப கிரில் கம்பிகள் வளைக்கப்பட்டும், கருவறையில் இருந்த அம்மன் சிலை உடைந்தும் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். போலீசாரிடம் தெரிவித்தார். டி.எஸ்.பி., ராஜா, இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் கோயிலில் இருந்து வயல் வழியாக கண்மாய் கரை வரை ஓடியது. கோயிலில் கைரேகை பிரிவினர் தடயங்களை சேகரித்தனர். உண்டியலில் அதிகளவில் பணம் கிடைக்கும் என மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. எதிர்பார்த்த பணம் கிடைக்காததால் கருவறை அம்மன் சிலையை கடப்பாறையில் பெயர்த்து அடியில் இருந்த தங்கம், வெள்ளி பொருட்களை திருடி சென்றிருக்கலாம் எனவும், கீழே தள்ளியதில் அம்மன் சிலை உடைந்திருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி கிராமத்தினர் கோயில் முன் திரண்டனர். அவர்களை சமாதானப்படுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர்.