பதிவு செய்த நாள்
27
ஜன
2025
10:01
போடி; இந்து முன்னணி சார்பில் மதுரை கோட்ட அளவிலான பொதுக்குழு கூட்டம் மாநில செயலாளர்கள் முத்துக்குமார், சேவகன் தலைமையில் போடியில் நடந்தது. மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஜெகன், கோட்ட செயலாளர் கணேசன், மாவட்ட தலைவர் சுந்தர், செயலாளர் கணேஷ் குமார் முன்னிலை வகித்தனர். பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் பாண்டியன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். நகர பொதுச் செயலாளர் கண்ணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய கோயில் புனிதத்தை கலங்கப்படுத்தும் நபர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். பழனி தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு பாதுகாப்பு, வழி பாட்டிற்கான வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். கோயில் நிலங்களை ஆக்கிரமித்து உள்ள நபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை நிறுத்த வேண்டும். தமிழகத்தில் வெளிநாட்டினர் ஊடுருவலை தமிழக அரசு தடுக்க வேண்டும். ரயில் பாதுகாப்பு சதி திட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். புழல் சிறை அதிகாரிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இந்து அறநிலையத்துறை சார்பில் குறைந்த கட்டணத்தில் பார்க்கிங் வசதி ஏற்படுத்திட வேண்டும். தேனி மாவட்டத்தில் ஆசை வார்த்தை கூறி மத மாற்றத்தில் ஈடுபடும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். உத்தமபாளையத்தில் விரைவில் தேர் திருவிழா நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.