Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அகத்தியர் அகத்தியர்
முதல் பக்கம் » 18 சித்தர்கள்
வல்லபசித்தர்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 நவ
2010
12:11

தாதி பொன்னனையாள் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். அவளது குடிலில் தகரம், செம்பு, பித்தளை பாத்திரங்கள் மட்டுமே இருந்தன. பெண்கள் திறமைசாலிகள். தங்களுக்கு கணவனோ, பிறரோ கொடுக்கும் பணத்திலோ, தாங்கள் உழைத்து சம்பாதித்ததிலோ சிறிதளவாவது மிச்சம் பிடித்து வெள்ளியிலோ, தங்கத்திலோ சிறுநகைஒன்றாவது வாங்கி விடுவார்கள். பொன்னனையாளும் அதற்கு விதிவிலக்கல்ல. சிவபக்தையான அவள், கூடல் மாநகராம் மதுரை அருகிலுள்ள திருப்புவனம் என்ற ஊரில் வசித்தாள். அங்குள்ள பூவன நாதர் அவளது இஷ்ட தெய்வம். அவரது ஆலயத்தில் சேவை செய்தது மட்டுமின்றி, ஆலயத்துக்கு வரும் சிவனடியார்களுக்கு, தான் ஆடிப்பிழைக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து அவர் களுக்கு உணவளிக்கும் பழக்கத்தை யும் கொண்டிருந்தாள். அவளது கண்ணீருக்கு காரணம் தெரிய வேண்டுமே. அவளுக்கு நீண்ட நாளாக ஒரு ஆசை. திருப்புவனநாதர் லிங்கவடிவில் காட்சியளிக்கிறார். அவருக்கு உற்சவர் சிலை இருந்தால், அதைக்கொண்டு திருவிழா நடத்தலாம். திருவிழா நடந்தால், மக்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் ஊர் நோக்கி வருவார்கள். கோயிலின் வருமானம் பெருகும். கோயில் விருத்தியாகும். ஆனால், சிலை செய்ய யார் முன்வருவார்கள்? தானே செய்யலாம் என்றால் அதற்கு அந்தளவுக்கு பணமில்லையே! என்ன செய்வது? இதை நினைத்து நினைத்து கண்ணீர் வடித்தபடியே, தன்னையறி யாமல் உறங்கி விடுவாள். நடனமாடும் நேரத்தில் கூட, இந்த சிந்தனை அவளை வாட்டிக் கொண்டிருந்தது.

ஒருநாள், அவளது ஊருக்கு சில சிவனடியார்கள் வந்தனர். அவர்களை தனது இல்லத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தாள் பொன்னனையாள். அடியார்களும், அவளது பக்தியைப் பற்றி ஊரார் சொல்லக் கேள்விப் பட்டு, அவளது இல்லத்துக்கு சென்றனர். அங்கு அனைவருக்கும் உணவு படைத்தாள். சம்பாதிக்கும் பணமெல்லாம், அடியவர்களுக்கு உணவளிப்பதிலேயே செலவழித்து விடுவாள். அவர்கள் சாப்பிட்டது போக மீதமிருந்தால், அதை மட்டுமே சாப்பிடுவது பொன்னனை யாளின் வழக்கம்.அன்று வந்திருந்த அடியவர் களில் ஒரு அடியவர் மிகுந்த தேஜஸுடன் இருந்தார். அவரது அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. பொன்னனையாளுக்கு உதவியாக இருந்த மற்ற கணிகைகளும், அவளுடன் இணைந்து அடியவர்களுக்கு உணவு பரிமாறினர். அழகாக இருந்த அடியவர் மட்டும் சாப்பிடாமல் அமர்ந்திருந்தார். அதற்கான காரணம் புரியாத கணிகைகள், பொன்னனையாளிடம் அதுபற்றிக் கூறினர். பொன்னனையாள் அவரருகில் சென்று, சுவாமி! மற்றவர்கள் நான் அளித்த இந்த எளிய உணவை சாப்பிடும்போது, தாங்கள் மட்டும் சாப்பிடாமல் இருக்கிறீர்களே! உணவு சுவையாக இல்லையா? தங்களுக்கு வேறு ஏதாவது கொண்டு வர வேண்டுமா? தாங்கள் கேட்பதை நொடியில் சமைத்து தருகிறேன், என்றதும், அந்த அடியவர் சிரித்தார்.

அவரது சிரிப்பில் சொக்கிப் போனாள் பொன்னனையாள். அவரது சிரிப்பு அந்த இடத்தையே ஆனந்தமயமாக்கியது. அம்மையே! உலகுக்கே படியளக்கும் எனக்கு, நீ இன்று படியளந்திருக்கிறாய். அதை நினைத்தேன், சிரித்தேன், என்ற அடியவரின் பேச்சில் இருந்த சூட்சுமம், பொன்னனையாளுக்கு புரியவில்லை. உடனே அடியவர் அவளிடம், வருந்தாதே, மகளே! நீ தந்த உணவின் மணம் என்னைச் சாப்பிடத் தூண்டுகிறது. ஆனால், உணவளிக்கும் போது, பெண்கள் மகிழ்ச்சியான மனநிலையைக்காட்ட வேண்டும். அது முகத்தில் எதிரொளிக்க வேண்டும். உன் முகத்தில் ஏதோ வாட்டம் தெரிந்தது. ஏதோ, சோகத்தை மனதில் தாங்கிய நீ தரும் உணவை எப்படி என்னால் மகிழ்ச்சியுடன் சாப்பிட முடியும். நான் சொல்வது சரிதானே! உன் மனதை ஏதோ ஒரு கவலை வாட்டுகிறது என்பது உண்மை தானே! என்றதும், அவளது கண்களில் கண்ணீர் வைகை நதியின் கரை புரண்ட வெள்ளம் போல் பெருகியது. ஐயனே! தாங்கள் என் மன நிலையைப் புரிந்து கொண்டீர்கள். ஆனால், இந்த வருத்தம் என் சுயநலம் கருதியது அல்ல. எம்பெருமானுக்கு, ஒரு சிலை வடிக்க வேண்டும். அதைக் கொண்டு உற்சவம் நடத்தி, மக்களை எனது ஊருக்கு ஈர்க்க வேண்டும். இங்கிருக்கும் பூவனநாதர் கோயில் பெரிய அளவுக்கு உயர வேண்டும்.

மன்னாதிமன்னர்களும், பிரபுக்களும் இங்கு வந்தார்கள் என்றால், அவர்கள் தரும் நன்கொடையைக் கொண்டு கோயிலை பெரிதாக்குவேன். உற்சவர் சிலையை வடித்து முடிப்பேன். இதெல்லாம், எப்படி நடக்கப் போகிறதோ என்ற கவலை தான், என் முகவாட்டத்துக்கு காரணம். இருப்பினும், தங்கள் முன்னால் கனிந்த முகம் காட்டாமைக்கு வருந்துகிறேன். அடியவர், இந்தச் சிறியவளின் தவறை புறந்தள்ளி, அமுது செய்ய வேண்டும், என அவரது பாதத்தில் விழுந்து வேண்டினாள். அடியவர் அவளைத் தேற்றினாள். அவளது விருப்பம் அவரை மிகவும் கவர்ந்தது. அவர் அவளிடம், மகளே! கலங்காதே. உன் விருப்பம் விரைவில் நிறை வேறும். உன் வீட்டிலுள்ள பாத்திரங்களை எடுத்து வா. சிலைசெய்ய நான் வகை செய்கிறேன், என்றார்.அவள் அந்த சோகத்திலும் நகைத்தாள். சுவாமி! என்னிடம் பித்தளையும், செம்பும், சிறு வெள்ளி பாத்திரமுமே உள்ளன. இதை விற்றால் வெற்றிலை வாங்கக்கூட பணம் கிடைக்காதே, என்றாள். மகளே! நான் சொல்வது உனக்குப் புரியவில்லை. பாத்திரங்களை என் முன்னால் எடுத்து வை. நான் அவற்றில் திருநீறு தூவுகிறேன். இன்றிரவு, அவற்றை தீ மூட்டி அதற்குள் தூக்கிப் போடு. அவை அனைத்தும் என்ன எடை இருக்கிறதோ, அதில் பாதியளவுக்கு தங்கமாக மாறிவிடும். அதைக் கொண்டு நீ சிலை செய்து விடலாம். சாதாரண சிலை வடிக்க இருந்த நீ, உன் பெயரிலுள்ள பொன்னைப் போல, பொன்னாலேயே சிலை வடித்து விடலாம், என்றார். அடியவரின் வாக்கை சிவவாக்காக கருதிய பொன்னனையாள், பாத்திரங்களை எடுத்து வைத்தாள். அவர் திருநீறைத் தூவினார். அவள் அடியவரிடம், சுவாமி! தாங்கள் இன்று இரவு என் வீட்டிலேயே தங்க வேண்டும். பாத்திரங்களை நெருப்பில் போடும்போது, நீங்களும் அருகில் இருந்தால் நன்றாக இருக்கும், என்றாள். தாதியின் பேச்சை மறுத்த அடியவர், அம்மா! சிவனடியார்கள் யார் வீட்டிலும் இரவு நேரத்தில் தங்குவதில்லை. நான் மதுரைக்கு புறப்படுகிறேன். அங்குள்ள ஆலயத்தில், சோமசுந்தரக் கடவுளின் பிரகாரத்தில் தங்கியிருப்பேன். உனக்கு ஏதாவது வேண்டுமென்றால் அங்கு வா, எனச் சொல்லி கிளம்பி விட்டார். பொன்னனையாள் அன்றிரவில் பாத்திரங்களை நெருப்பில் போட்டாள். என்ன ஆச்சரியம்!

தீயிலிட்ட பாத்திரங்கள் உருகி பொன் மட்டும் வெளிப்பட்டது. தீ அணைந்ததும், பொன்னை வாரி எடுத்த பொன்னனையாள், அதை ஒரு சிறந்த சிற்பியிடம் ஒப்படைத்து,சிவனின் உற்சவர் சிலையை வடிக்கச் சொன்னாள். அந்தச்சிற்பியும் அழகிய சிலை வடிவமைத்தார். அதைப் பார்த்த அவளது கண்களில் ஆனந்தக்கண்ணீர் ஆறாய்ப்பெருகியது. சிலையின் அழகில் சொக்கிப்போன அவள், அதன் மேல் ஆசை கொண்டவளாய், சிலையில் கன்னத்தில் கிள்ளி முத்தமிட்டாள். தன் வீட்டுக்கு வந்து, இந்த அதிசயம் நிகழக்காரணமாக இருந்த சிவனடியாரிடம் சிலையைக் காட்டுவதற்காக எடுத்துக்கொண்டு, மதுரை சென்றாள். இதனிடையே மதுரைக்கு வந்த அந்த அடியவர்,நகர வீதிகளில் அலைந்து திரிந்தார். அப்போது, அவர் ஒரு ஆணை பெண்ணாக்கினார். ஒரு முதியவரை இளைஞனாக்கினார். இரும்பை தங்கமாக்கினார். பிறவியிலேயே பேசாத ஒருவனை பேச வைத்தார். ஊசியை தரையில் நிறுத்தி, அதன் மேல் கால் கட்டை விரலை வைத்து நடனமாடினார். இவரது சித்து வேலைகளால் மக்கள் கவரப்பட்டனர். ஊரெங்கும் இவரைப் பற்றி எழுந்த பேச்சு, அப்போது மதுரையை ஆண்ட அபிஷேகப் பாண்டியனையும் எட்டியது. சித்தரை அழைத்து வர ஆட்களை அனுப்பி வைத்தான். என்னைப் பார்க்க வேண்டுமானால், உன் மன்னனை இங்கே வரச்சொல், என சொல்லிவிட்டார் சித்தர்.

மன்னனும் வந்து பார்த்தான். அவரைப் பற்றி அவன் அவரிடமே கேட்டான். என்னை எல்லாம் வல்ல சித்தர் என்று நீ அழைக்கலாம். நானே ஆதியும், அந்தமும் ஆவேன்,என்றார். சித்தரே! உம் சித்து வேலைகளை ஒப்புக் கொள்கிறேன். அதற்காக நீரே கடவுள் என்பதைப் போல் பேசுகிறீரே! எங்கே! இந்தக் கோயிலில் இருக்கும் கல்லால் செய்யப்பட்ட இந்த யானை, உம் சக்தியால் கரும்பு தின்னுமா? என்று கேட்டான். ஒரு கட்டு கரும்பை வரவழைக்கச் சொன்னார் சித்தர். கல்யானையின் முன்னால் போட்டார். சாப்பிடு என கண்ஜாடை காட்டினார். அம்மட்டிலே அது உயிர் பெற்று எழுந்து சாப்பிட ஆரம்பித்து விட்டது. மன்னன் சித்தரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். அவனுக்கு புத்திர பாக்கியம் இல்லை. சித்தரிடம் தன் குறையைச் சொன்னான். அடுத்த ஆண்டிலேயே ஒரு ஆண் குழந்தைக்கு தந்தையானான். இப்படி பல அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டிருந்த சித்தரைக் காண வந்த பொன்னனையாள், மீனாட்சியையும், சுந்தரேஸ்வரரையும் வணங்கி விட்டு, பிரகாரத்தில் இருப்பதாகச் சொன்ன அடியவரை தேடி அலைந்தாள்.

துர்க்கை சன்னதி அருகில், ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். அவரை உற்று நோக்கிய போது, அவள் வீட்டுக்கு வந்த அடியவர் தான் என்பதில் சந்தேகமில்லாமல் போயிற்று. அவரை வணங்கிய அவள், சுவாமி! என்னை நினைவிருக்கிறதா? தாங்கள், சில மாதங்களுக்கு முன் என் வீட்டுக்கு அமுதுண்ண வந்திருந்தீர்கள். அப்போது, சிவனின் சிலை செய்யும் என் லட்சியத்தை வெளியிட்டேன். ஞாபகப் படுத்திப் பாருங்கள், என்றாள். ஓ! பொன்னனையாளா? நலமாக இருக்கிறாயா? உன் ஆசை பூர்த்தியாகி விட்டதா? என்றார் ஏதுமறியாதவர் போல.அவள் அந்தச்சிலையை அவர் முன்னால் எடுத்து வைத்தாள். பார்த்தாயா! நம்பிக்கையே வாழ்வின் அஸ்திவாரம். நீ, நான் சொன்னதை நம்பி பாத்திரங்களை தீயில் இட்டிருக்கிறாய். நினைத்ததை சாதித்து விட்டாய், என்றதும், சுவாமி, தாங்கள் யார்? தங்கள் பெயர் என்ன? தாங்கள் துறவு மேற்கொண்ட கதையை எனக்குச் சொல்ல வேண்டும், என்றாள் பொன்னனையாள். பெரியவர் சிரித்தார். எனக்கு ஆயிரம் பெயர்கள் இருக்கிறது தாயே! ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக அழைப்பார்கள். சிலர் சிவனே என்பார்கள். சிலர் பரமசிவா என கூப்பிடுவார்கள். இருந்தாலும், இந்தக் கோயிலில் உள்ளவர்கள் சுந்தரேசா என்பார்கள். ஆனால், இந்த எளிய மானிடன் தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பெயர் வல்லபன்,என்றார். அவள் அவரது பாதத்தை மீண்டும் நமஸ்கரித்து, அவரைச் சுற்றிலும் தான் கொண்டு வந்த பூக்களால் பந்தல் போல் அலங்கரித்தாள். அந்த சமயத்தில், அவர் தியானத்தில் இருந்தார். நீண்டநேரம் அப்படியே இருக்கவே, அவரிடம் விடை பெறுவதற்காக, தியானத்தைக் கலைக்க முற்பட்டாள் பொன்னனையாள். ஆனால், அவர் எழவே இல்லை. அப்படியே கற்சிலையாக மாறி விட்டார். அவள் அழுது தீர்த்தாள்.

சுவாமி! தங்களை வணங்க வந்தேன். தங்களையே எங்கள் ஊருக்கு அழைத்துச் சென்று, இச் சிலையை பிரதிஷ்டை செய்ய எண்ணியிருந்தேன். தாங்களோ கல்லாய் சமைந்து விட்டீர்களே! இனி,நான் என்ன செய்வேன்? என அவர் மீது விழுந்து கதறினாள். அப்போது அசரீரி ஒலித்தது. மகளே! கலங்காதே. உன் வீட்டுக்கு வந்த நானே சிவன். சித்தராய், இப்பூவுலகில் அமர்ந்து கருணை செய்யவே வந்தேன். மதுரையம்பதியில், நான் இதே பிரகாரத்தில் சித்தராய் இருப்பேன். எனக்கு நீ பூப்பந்தல் இட்டு அலங்காரம் செய்ததைப் போல், யாரெல்லாம் எனக்கு பூப்பந்தல் வழிபாடு செய்கின்றனரோ, அவர்களுக்கெல்லாம் நடக்காது என ஒதுக்கி வைத்த செயல் களைக் கூட வெற்றிகரமாக நிறைவேற்றித் தருவேன், என்றது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் செல்பவர்கள் சுவாமி பிரகாரத்தில், துர்க்கை சன்னதியை ஒட்டியுள்ள வல்லப சித்தரை தரிசிக்கலாம். சன்னதியில் தியானகோலத்தில் இவர் அமர்ந்திருப்பார். இப்போதும் பூப்பந்தல் வழிபாடு நடக்கிறது. பூக்கூடார வழிபாடு என்று இப்போது சொல்கிறார்கள். இவருக்கு வல்லபசித்தர் என்ற பெயர் தவிர சிவசித்தர், சுந்தரானந்தர் என்ற பெயர்களும் உண்டு. குழந்தையில்லாத பெண்களும், கணவனைப் பிரிந்திருக்கும் பெண்களும், கல்வியில் முதல்நிலைக்கு வர வேண்டும் என விரும்பும் மாணவர்களும் இந்த சித்தரை வணங்கி பூக்கூடாரமிட்டு வழிபட்டால், நினைத்தது நிறைவேறும்.

நூல்:

சந்தரானந்தன் வைத்திய திரட்டு
சந்தரானந்தர் விஷ நிஷவாணி
சந்தரானந்தர் வாக்கிய சூத்திரம்
சந்தரானந்தர் கேசரி
சந்தரானந்தர் சித்த ஆனம்
சந்தரானந்தர் தீட்சா விதி
சந்தரானந்தர் பூசா விதி
சந்தரானந்தர் அதிசய காரணம்
சந்தரானந்தர் சிவயோக ஞானம்
சந்தரானந்தர் மூப்பு
சந்தரானந்தர் தண்டகம்

தியானச் செய்யுள்:

சித்து விளையாட்டில் சிறந்தவரே
சிவனுடன் கலந்தவரே
ஆயசித்தி அனைத்தும் அறிந்தவரே
அபயம் அளிக்கும் அருளாளரே
மதுரையம்பதி வாழ் மகத்துவமே
உன்பாதம் சரணம்

வல்லபசித்தர் ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 800 ஆண்டுகள் 28 நாள் ஆகும்.

 
மேலும் 18 சித்தர்கள் »
temple news

வான்மீகர் மார்ச் 06,2013

வான்மீகர் முனிவர் புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 32 ... மேலும்
 
temple news

உரோமரிஷி மார்ச் 06,2013

அஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் ... மேலும்
 
temple news
இவர் பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றியவரும் சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாகப் ... மேலும்
 
temple news

நந்தீஸ்வரர் மார்ச் 06,2013

நந்தீஸ்வரர் முனிவர் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 3 ... மேலும்
 
temple news

மச்சமுனி மார்ச் 06,2013

மச்சமுனி ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 300 ஆண்டுகள் 42 நாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar