ஒரு செல்வந்தர் வீட்டில் நடந்த திருமணத்தை நடத்தி வைக்க அந்தணர் வந்தார். அந்த வீட்டில் நிறைய கன்றுகள் இருந்தன. இதில் ஒரு கன்றை எனக்குத் தாருங்கள். இதை வளர்த்து, பால் கறக்கும் பருவத்தில், கடவுளின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தி கொள்கிறேன், என்று செல்வந்தரிடம் கேட்டார். அவரும் கொடுத்து விட்டார்.மிகச்சிறிய அந்தக் கன்று, தன் ஊர் வரை நடந்து வர சிரமப்படும் என்று இரக்கப்பட்ட அந்தணர், அதை தோளில் சுமந்தபடி நடந்தார். வழியில் மூன்று திருடர்கள் வந்தனர்.கன்றைப் பறிக்க எண்ணிய அவர்கள் ஒரு ஓரமாகப் பதுங்கினர்.முதலில் ஒருவன் வெளியே வந்து, சாமி! யாராவது பன்றிக்குட்டியைச் சுமப்பார்களா? நீங்கள் சுமக்கிறீர்களே? என்று கேட்டான்.மடையா! மடையா! இந்த கன்றுகுட்டியாடா! பக்கத்து ஊர் செல்வந்தர் எனக்கு பரிசாகக் கொடுத்தார், என்றதும் அவன் போய்விட்டான்.அடுத்தவன் வந்தான்.யாராவது கழுதைக் குட்டியை சுமப்பார்களா?நீர் சுமக்கிறீரே? என்றதும், அவனுக்கும் தகுந்த பதிலை சொன்னார் அந்தணர்.மூன்றாமவன் வந்தான்.சாமி! நீர் தான் இறைச்சி சாப்பிடமாட்டீரே! பிறகேன், ஆட்டுக்குட்டியை சுமந்து செல்கிறீர்? என்றதும் அந்தணருக்கு பயம் வந்து விட்டது.அந்த செல்வந்தர்கருமி போலும்! என்னை ஏமாற்ற ஏதோ ஒரு பூதத்தை தந்து விட்டார் என நினைக்கிறேன். யாருமே இதைக் கன்று எனச் சொல்லவில்லையே என நடுங்கியவர், கன்றைகீழே இறக்கி விட்டுச் சென்றார். திருடர்கள் எளிதாகத் துõக்கிச் சென்று விட்டனர்.மற்றவர்கள் கூறுகிறார்கள் என்பதற்காக, நமது நல்ல முடிவுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றஅவசியமே இல்லை. நம் முடிவில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். சுயபுத்தி தான் மனிதனுக்கு மிக முக்கியம்.