Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை யாத்திரை பகுதி-1 தங்கும் விடுதிகள் தங்கும் விடுதிகள்
முதல் பக்கம் » ஐயப்பன் சிறப்பு செய்திகள்
சபரிமலை யாத்திரை பகுதி-2
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 நவ
2011
06:11

சபரிபீடம்: நீலிமலையின் உச்சியில் சபரிபீடம் உள்ளது. இந்த பீடம் உள்ள பகுதியில் தான் "சபரிமலை என்று பெயர் தோன்றக் காரணமான சபரி அன்னை வசித்தாள். இந்த மூதாட்டிக்கு ராமபிரானின் மீது மிகுந்த பக்தி உண்டு. பக்தன் பகவானைத் தேடி சென்றது விஷ்ணுவின் மற்ற அவதாரங்களில்...

ஆனால், பகவான் பக்தனைத் தேடி, தனக்குத்தானே 14 ஆண்டு காட்டுவாசம் என்ற தண்டனையை விதித்துக் கொண்டு வந்த அவதாரமே ராம அவதாரம்.

அவ்வகையில், ராமபிரான் வசிஷ்டரைக் குருவாகக் கொண்டு, விஸ்வாமித்திரருக்கு தொண்டு செய்து, இன்னும் காட்டிலுள்ள பல மகரிஷிகளையும் சந்தித்து ஆசி பெற்றார். அந்த ரிஷிகளுக்கும் மேலான பக்தியைக் கொண்டவள் சபரி அன்னை. இவள், இந்த மலையில் தங்கி ராமனின் தரிசனத்திற்காக காத்திருந்தாள். அவள் என்ன செய்தாள் தெரியுமா?

ராமனுக்காக காட்டில் கிடைக்கும் இலந்தைப்பழங்களைப் பொறுக்கினாள். அதை கடித்துப் பார்த்து, இனிப்பானவற்றை சேர்த்து வைத்தாள். இலந்தையை காய்ந்தாலும் தின்னலாம். ராமன் வந்ததும் அந்தப் பழங்களை காணிக்கையாக்கினாள்.எச்சில் பழமெனக் கருதாத பகவானும் சபரியின் அன்பை அந்தப் பழங்களைச் சாப்பிட்டதன் மூலம் ஏற்றார். அவளுக்கு மோட்சம் தந்தார். அந்த பரமபக்தை யின் பெயரே சபரிமலைக்கு நிலைத்து விட்டது. இங்கு தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும். இங்கிருந்து சன்னிதானம் வரை சமதளமான பாதையில் ஆசுவாசமாக நடந்து செல்லலாம்.

யானைப்பாதை: சபரிபீடத்தை அடுத்து சன்னிதானத்திற்கு செல்லும் பாதை இரண்டாகப்பிரிகிறது. இடது பக்கம் செல்லும் பாதை யானைப்பாதை எனப்படுகிறது. ஆனால், பக்தர்கள் வலது பக்கம் உள்ள சரங்குத்தி பாதை வழியாகத்தான் செல்கின்றனர்.

சரங்குத்தி: இது கன்னி ஐயப்பன்மார்களுக்கு ஒரு புனிதமான இடமாகும். இங்கு கன்னிச்சாமிகள், எருமேலியில் பேட்டை துள்ளிவிட்டு கொண்டுவரும் மரத்திலான சரக்கோல்களை போட்டு வழிபடுகின்றனர். எந்த வருஷம் கன்னிச்சாமி யாருமே இங்கு வரவில்லையோ அப்போது உன்னைக் கல்யாணம் செய்துக்கறேன்னு மாளிகை புரத்தம்மனுக்கு ஐயப்பன் வாக்குத் தந்திருக்காராம். அந்த அம்மன் இங்கே வந்துதான் சரங்களைப் பார்வையிடுவதாக கூறப்படுகிறது. இங்கிருந்து சிறிது தூரம் சென்றால் சுவாமி ஐயப்பனின் புனித சந்நிதானம் அடையலாம்.

பஸ்மக்குளம்: சபரிமலையில் பக்தர்கள் நீராடும் புண்ணிய தீர்த்தமான இக்குளம் ஐயப்பன் சன்னதியின் பின்புறம் உள்ளது. ஐயப்பன்மார்கள் இந்த தீர்த்தத்தில் குளித்து அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களைப் போக்கிக் கொண்டனர். தற்போது இந்த குளம் அசுத்தமாகிவிட்டால் பெரும்பாலும் குளிப்பதில்லை. இந்த குளத்திலிருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுக்கப்படுகிறது. அவற்றில் பக்தர்கள் நீராடுகிறார்கள்.

சன்னிதானம்:: சரங்குத்தி தாண்டியவுடன் தெரியும் ஐயப்பனின் தங்க கோயிலை தரிசித்தவுடனேயே, மனம் உற்சாகமாகிறது. ஐயப்பன் சன்னிதானம் நெருங்க நெருங்க "சாமியே சரணம் ஐயப்பா என்று பக்தர்கள் முழங்கும் சரண கோஷம் விண்ணைப்பிளக்கிறது.

பொன்னு பதினெட்டாம் படி: சன்னிதானத்தை அடைந்ததும் நாம் முதலில் தரிசிப்பது 18 படிகள். ஏகாக்ஷரத்தையும், அக்ஷ்டாக்ஷரத்தையும் பக்கத்தில் எழுதினால் 18 வரும். ஏகாக்ஷரம் என்பது ஹ்ரீம் என்கிற புவனேஸ்வரி மந்திரம். அக்ஷ்டாக்ஷரம் என்பது விஷ்ணுவினுடையது. சிவ சக்தியுடன் கலந்த விஷ்ணு சக்தியே இந்த பதினெட்டு படிகள் பதினெட்டு புராணங்களையும், பகவத் கீதையில் பதினெட்டு அத்தியாயங்களையும் குறிக்கிறது என்று முன்னோர்களால் சொல்லப்பட்டது. காவல் தெய்வங்கள் இருக்குமிடமெல்லாம் பதினெட்டுபடி அமைப்பது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது.
ஐயப்பன் சன்னிதானத்தில் உள்ள பதினெட்டுபடிகளும், ஐந்து பஞ்சேந்திரியங்கள், எட்டு ராகங்கள், மூன்று குணங்கள், ஞானம் ஒன்று. அஞ்ஞானம் ஒன்று என்ற பதினெட்டையும் தாண்டி வருகின்ற பக்தனுக்குத்தான் ஐயனை வழிபட தகுதி உண்டு. பற்றுதல் இல்லாமல் பகவானை பூஜித்தால் அவன் திருவருள் நமக்கு கிடைக்காது.

இந்த 18 படிகள் அனைத்தும் தங்கத்தகடுகளால் ஆனது. 18 படிகள் ஏறும் முன்பு இருபுறமும் உள்ள கடுத்தசுவாமி, கருப்பசுவாமி முதலிய மூர்த்திகளை வணங்கிவிட்டு வழியில் அனுபவித்த துன்பங்களை எல்லாம் மறந்து, தேங்காய் உடைத்து, சரண கோஷத்துடன் பதினெட்டுப்படிகளில் ஏற வேண்டும். நாம் செய்த பாவங்கள் விலகி, ஆணவம் அடங்கி ஐயப்பனின் தரிசனம் வேண்டும் என்ற அடிப்படையில் தான் படி ஏறும் முன் தேங்காய் உடைக்கப்படுகிறது. இங்குள்ள 18 படிகளும் விநாயகர், சிவன், பார்வதி, முருகன், பிரம்மா, விஷ்ணு, ரங்கநாதன், காளி, எமன், சூரியன், சந்திரன்,செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என 18 தெய்வங்களாக விளங்குவதால், தலையில் இருமுடி வைத்திருப்பவர்கள் மட்டுமே 18 படி ஏறமுடியும்.

தத்வமஸி: பதினெட்டு படி ஏறியவுடன் பக்தர்களை வரவேற்பது கொடிமரம். சன்னிதான வாசலில் "தத்வமஸி என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது "நீ எதை நாடி வந்தாயோ அது நீயாகவே உள்ளாய் என்பது இதன் பொருள். ""ஏ மனிதனே! தெய்வத்தை தேடி நீ இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்திருக்க வேண்டியதில்லை.

காடு மேடுகளைக் கடந்திருக்க வேண்டியதில்லை. உனக்குள்ளேயே நான் இருக்கிறேன். நான், இங்கிருந்து உன்னை எப்படி பாதுகாக்கிறேனோ, அதுபோல் நீயும் உன்னைச் சார்ந்தவர்களை பாதுகாக்கும் வகையில் நடந்து கொள். அவர்களிடம் நல்லதைப் பேசு, நல்லதை செய், நன்மையே நாடு" என்பது இந்தச்சொல்லுக்குள் அடங்கியுள்ள தத்துவம்.

ஐயப்பன் உருவில் அத்வைதம்

இந்து மதத்தின் முப்பெரும் தத்துவங்கள் அத்வைதம். துவைதம், விசிஷ்டாத்வைதம் அத்வைதம் என்பது தானே பிரம்மம் என்பதாகும். விசிஷ்டாத்வைதம் என்பது ஜீவன் வேறு பிரம்மம் வேறு என்பதாகும். துவைதம் என்பது பிரம்மமும் ஜீவனும் வேறு என்றாலும் ஒரு நிலையில் அவைகள் ஒன்றுபடுகின்றன என்பது. இம்மூப்பெரும் தத்துவங்களின் ஓர் உருவமாகத் திகழ்பவர்கள் ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள். மாலை அணிந்து விரதம் தொடங்கிய நாளிலிருந்து அத்வைதத் தத்துவப்படி அஹம்பிரம்மாஸ்மி-தானே கடவுளாகத் திகழ்கிறார். அவரை அனைவரும் சுவாமி என்று அழைத்து சரணம் கூறுகின்றனர். அடுத்து விரதம் முடித்து சபரிமலை ஸ்ரீ ஐயப்ப தரிசனத்திற்கு செல்லும் நேரத்தில், ஜீவன் வேறு பிரம்மம் வேறு முயற்சித்தால் ஜீவன், பிரம்மனைக் காணலாம் என்று விசிஷ்டாத்தைத் தத்துவத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். ஸ்ரீ சுவாமி ஐயப்பனைக் கண்டு அவனருளில் சங்கமிக்கும் நேரத்தில் பிரம்மமும்-ஜீவனும் வேறென்றாலும் ஒரு நிலையில் அவைகள் ஒன்றுபடுகின்றன என்ற துவைத தத்துவத்திற்கு உதாரணமாய்த் திகழ்கிறோம். இப்படி அரத்தமுள்ள இந்து மதத்தின் முப்பெரும் தத்துவங்களின் ஒருருவாகத் திகழ்பவர்கள் தான் ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள்.

ஐயப்பன் மூலஸ்தானம்: படியேறிய பக்தர்கள் கொடிமரம் தாண்டி கோயிலை வலம் வந்து ஹரிஹர புத்திரனாகிய தர்மசாஸ்தாவை கண்டு மனமாற வேண்டிக்கொள்ளலாம். ஐயப்பனை தரிசித்தாலே இந்தப்பிறவியின் பலனை அடைந்த சந்தோஷம் ஏற்படும்.
மூலஸ்தானத்தில் ஐயப்பன் ஆனந்த சொரூபனாய், கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக, கேட்டவரம் தரும் வள்ளலாக ஐயப்பன் அருள்பாலிக்கிறார். இவர் மூன்று விரலை மடக்கி, ஆட்காட்டி விரலால் பெருவிரலைத் தொட்டுக் கொண்டு "சின்முத்திரை காட்டுகிறார். "சித் என்றால் "அறிவு. இந்த வார்த்தையே "சின் என திரிந்துள்ளது. எது உண்மையான அறிவு என்பதை விளக்குவது சின்முத்திரை. மனிதா! நீ என்னை நாடி இத்தனை மேடுகளை கடந்து வந்தாயே! இதனால், நான் மகிழ மாட்டேன். என் மடங்கிய மூன்று விரல்கள் உன்னிடமுள்ள ஆணவம், கன்மம் (பொறாமை), மாயை(உலக வாழ்வும் இன்பமும் நிலைத்திருப்பது என்ற எண்ணம்) ஆகியவை. என் ஆட்காட்டி விரலே ஜீவாத்மாகிய நீ. என் கட்டை விரலே பரமாத்மாவாகிய நான். ஆம்...மானிடனே! இந்த மூன்று குணங்களையும், நீ விட்டு விட்டாயானால், என்னை நிஜமாகவே அடையலாம்,என்கிறார். யோகபாதாசனத்தில், சற்று கண் திறந்த நிலையில் தியான கோலத்தில் உள்ள ஐயப்பனைக் கண்குளிரத் தரிசிக்கும் போது, இவரது காலில் சுற்றியுள்ள வஸ்திரம் ஒன்றை அவசியம் கவனிக்க வேண்டும். இதை "யோக பட்டம் என்பர்.

நெய் அபிஷேகம்: ஐயப்பன் தரிசனம் முடிந்தபின் கன்னிமூலை கணபதியையும் , நாகரையும் தரிசித்துவிட்டு திருமுற்றத்திலிருந்து இறங்க வேண்டும். குருசாமியுடன் இருமுடி கட்டுகளை பூஜித்து, பூஜைப் பொருட்கள் அடங்கிய முடியினை திறந்து நெய் தேங்காயை உடைக்க வேண்டும். அந்த நெய்யை ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்ய கொடுக்க வேண்டும். பின் அபிஷேகம் செய்த நெய்யையும், நெய தேங்காயின் ஒரு முடியையும் சுவாமியின் பிரசாதமாக வீட்டுக்கு எடுத்து செல்லலாம். இன்னொரு முடியை பதினெட்டுப்படிகளின் முன் உள்ள அங்கினிகுண்டத்தில் எறிந்து விட வேண்டும்.

நெய் தேங்காய்: தனிநெய்யையோ, தேங்காயையோ நிவேதனமாக்காது. நெய் தேங்காயை நிவேதனமாக்கியது ஏன்? முக்கண் கொண்ட தேங்காய் சிவனை உருவகப்படுத்தும். பசு நெய் கோபாலனாகிய மகா விஷ்ணுவை உருவகப்படுத்தும். சிவன் விஷ்ணு இருவருடைய அருள் கதிரொளியின் கூட்டு சக்தியே சாஸ்தாவாகிய ஐயப்பனாதலால் நெய் தேங்காயும் சேர்த்து அவருக்கு நிவேதனப் பொருளாகின்றன.

இருமுடி : சபரிமலையை நோக்கி புறப்படும் போது இருமுடிக் கட்டி புறப்படுவார்கள்.
இவற்றுள் ஒரு முடியில் சுவாமிக்குரிய அபிஷேக நிவேதனப் பொருட்கள் இருக்கும். இன்னொன்றில் நம் தேவைக்குரிய உணவுப் பொருட்கள் இருக்கும். நாம் போகப் போக நம் உணவுப் பொருட்கள் குறைந்து கொண்டே போய் இறைவனின் சன்னதியருகே செல்லும்போது நம் உணவுப் பொருட்கள் அடங்கிய முடி குறைந்திருக்கும். சுவாமி முடி மட்டும் அப்படியே மிஞ்சியிருக்கும். இது ஒவ்வோர் ஆத்மாவும் இறைவனை அடையும் நிலையை உணர்த்துவது. மானுடராய்ப் பிறந்த நாம் இறைவனைத் தேட ஆரம்பிக்கும் போது இறைவன் மீதுள்ள பக்தி ஒரு முடியாகவும் நம் உலக தேவைகள் ஆகிய லௌகீகம் ஒரு முடியாகவும் இருக்கிறது. இரண்டு அம்சங்களுடனேயே தான் நாம் இறைவனைத் தேடுகிறோம். அந்த தேடலில் மெய்ஞ் ஞானம் கிட்டக் கிட்ட நம் லௌகீகப்பற்று குறைந்து மறைந்து போகிறது. இறைப் பக்தி ஒன்றுதான் மிஞ்சுகிறது. அப்பொழுதான் இறைவனடியும் தரிசனமாகிறது.

மஞ்சமாதா: ஐயப்பன் கோயிலுக்கு இடது பக்கம் மஞ்சமாதா தனிசன்னதியில் அருளுகிறாள். இங்கு மஞ்சள்பொடி தூவி, தேங்காய் உருட்டி வலம் வந்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும்.இங்குள்ள மணி மண்டபத்தில் தான் ஐயப்பனின் திருவாபரணப்பெட்டி வைக்கப்பட்டு பூஜை செய்யப்படும். இவளது சன்னதிக்கு அருகில் நாகர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. இங்கு தான் கொடுகொட்டி பாடல் பாடுவது வழக்கம். ஜாதக ரீதியாக சனிதோஷம் உள்ளவர்கள் கொடுகொட்டி கலைஞர்களை பாடச்செய்து மஞ்சமாதாவை வணங்கிவருவர்.

ஜோதி தரிசனம்: எப்போதும் தவக்கோலத்தில் அருளும் ஐயப்பன், ஆண்டுதோறும் மகரசங்கராந்தி நாளில் மட்டும் திருவாபரணம் அணிந்து முழு அலங்காரத்துடன் அருள்பாலிப்பார். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் சன்னிதானத்திற்கு எதிரில் உள்ள ஐயப்பனின் ஐந்தாவது மலையான காந்த மலையில் ஜோதி சொரூபமாக ஐயப்பன் காட்சிதருவார்.

ஐயப்பன் ஆபரணம் பூணுவது ஏன்?

சபரிமலையில் துறவு பூண்ட யோக நிலையில் ஐயப்பன் எழுந்தருளியிருக்கிறார்.
அப்படி இருந்தும் மகர விளக்கின் போது பந்தள மகா ராஜாவின் அரண்மனையிலிருந்து ஆபரணங்கள் வருவதும் அதை அணிவதும் அவர் காட்சித் தருவதும் சிறப்புப் பூஜை நிகழ்ச்சிகளாகும்.

துறவியான சுவாமி ஆபரணங்கள் பூண்டு காட்சி தருவதேன்?

அதற்கு ஓர் அபூர்வக் காரணம் உண்டு. ஐயப்பன் தன் அவதார நோக்கத்தின் நிமித்தம் பந்தள நாட்டை விட்டு சபரிமலைக்குப் புறப்படும் போது எல்லாரிடமும் தனித்தனியாக விடை பெற்றுக் கொண்டு வந்தார். அவர்களுள் பந்தள நாட்டில் நமக்குக் குருவாக இருந்த குருவும் ஒருவர். அந்தக் குருவிடம் சுவாமி உங்களுக்கு நான் குருதட்சனையாக என்ன தர வேண்டும் என்று கேட்டார் ஐயப்பன்.குரு நெகிழ்ந்து போய் பெருமானே நீர் எனக்கு இப் பிறவியில் மாணாச்சுர் என்று கூறும் பேறே எனக்கு குருதட்சனை என்றார். அவருடைய மனைவியோ ஊமையாகவும், குருடனாகவுமிருந்த தங்கள் குழந்தையைக் குணப்படுத்தித் தரவேண்டும் என்று வேண்டினார். குரு பத்தினியின் கோரிக்கைப்படி அந்த குழந்தை பிணிக்கு நீங்கச் செய்தார் ஐயப்பன். அப்பொழுது தம் முன் நிற்பது தெய்வம் என்று உணர்வைக் கடந்து நெகிழ்ச்சியுற்ற நிலையில் அய்யனே நீ தங்கமும் ரத்தினமும் ஜொலிக்க மகராஜனாய் இருக்க வேண்டும், என்று ஆசீர்வதித்து விட்டார் குரு.
எல்லாவற்றையும் கடந்த சுவாமிக்கு ஏன் சுவர்ண ரத்ன ஆபரணங்கள் என்ற உணர்வு அந்த குருவுக்கு அப்பொழுது தோன்றவில்லை. எனினும் குருவின் ஆசி ஆசிதானே.
அது பொய்ந்து விடக் கூடாதே அதனால் தான் ஆண்டுக்கு ஒரு முறை (மகர விளக்கு விழாவின் போது தை 1-ம் தேதி முதல் தை 4-ம் தேதி வரை) சுவாமி பந்தள ராஜன் பரம்பரையினர் கொண்டு வரும் ஆயிரம் சவரனுக்கு மேற்பட்ட தங்க ரத்ன ஆபரணங்களை அணிந்து காட்சி தருகிறார் ஸ்ரீ ஐயப்பன்.

மகரஜோதியின் தத்துவம்: இறைவனுக்கென்று உருவ வழிபாடு பிற்காலத்தில் தான் இருக்க முடியும். ஏனெனில் மனிதன் தோன்றிய காலத்தில் உலோகங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. கற்களில் துவங்கிய சிற்பக்கலை படிப்படியாக வளர்ந்து, பிற்காலத்தில் ஐம்பொன் வரை சென்றது. எனவே மனிதன் துவக்க காலத்தில் ஒளியையே தெய்வகமாக வழிபட்டுள்ளான். சூரிய வழிபாடு தான் முதலில் தோன்றியது. நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என மனிதன் பகுத்தறிந்த போது ஜோதி வடிவாக அவன் இறைவனைக் கண்டான். அதனால்தான் வள்ளலார் இறைவனை அருட்பெருஞ்ஜோதி என அழைத்தார்.
இறைவன் திருவண்ணாமலையில் ஜோதியாய் காட்சி அளிக்கிறார். கார்த்திகை அன்று ஏற்றப்படும் தீபம் ஆண்டு முழுவதும் எரிவது அதனால் தான். இதே போல் தான் ஐயப்பசுவாமியும் ஜோதி வடிவாக காட்சி அளிப்பது, பொன்னம்பல மேட்டில் மகரசாந்தியன்று அவர் ஆண்டுதோறம் இந்த கலிகாலத்திலும் ஜோதி வடிவாய் காட்சி அளிக்கிறார். பக்தர்கள் சன்னிதானத்தைச் சுற்றியுள்ள சன்னிதானம், பாண்டித்தாவாளம், புல்மேடு, சரங்குத்தி, நீலிமலை, மரக்கூடம், மலைஉச்சி, சாலக்கயம் மற்றும் அட்டதோடு ஆகிய 9 இடங்களில் இருந்து மகரஜோதியைக் காணலாம்.

 
மேலும் ஐயப்பன் சிறப்பு செய்திகள் »
temple news
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ளார் காடந்தேத்தி அய்யனார். இவரை வழிபட்டால் ஏழரை, ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அருகே ஸ்ரீவாரிநகரில் அருள்பாலிக்கிறார் பாலசாஸ்தா. ... மேலும்
 
temple news
ராமநாதபுரத்தில் மேற்கு நோக்கி காட்சி தருகிறார் கூரி சாத்த அய்யனார். ராமநாதபுரத்தை ஆட்சி செய்தவர்கள் ... மேலும்
 
temple news
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் குண்டு தாங்கிய அய்யனாரப்பன் கோயில் உள்ளது. இங்கு பொற்கலை, பூரணியுடன் ... மேலும்
 
temple news
விருதுநகர் ராஜபாளையத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடி வாரத்தில் பாலாறு, நீராறு ஒன்றாக சேர்கிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar