நீரில் உறையும் தெய்வங்களே! அநுபவிக்கப்படும் பொருள்களை எரிப்பதன் வாயிலாக அநுபவிப்பவர்களை எரிக்கும் நெருப்பு என்னை அணுகாமல் விலக்கியருள்வீர்களாக! அவ்வாறே துன்பம் தரும் அரக்கர்களை அகற்றுவீர்களாக! உடலை வாட்டும் காய்ச்சலை விரட்டுவீர்களாக! துன்பத்திற்குக் காரணமான பாபங்களைப் போக்கியருள்வீர்களாக! பொறிகள் புலனாற்றற் குறைவை (இந்த்ரியங்களின் சக்திக் குறைபாட்டை) போக்குவீர்களாக! பொருளின்மையையும் போக்கியருள்வீர்களாக! அனைத்து இடையூறுகளையும் அறவே அகற்றி அருள்புரிவீர்களாக!
ஓ...... பூமித்தாயே! எண்ணற்ற மக்களால் நீ நிறைந்திருக்கிறாய். அழிவிற்கான அனைத்துக் காரணங்களிலிருந்தும் எங்களைக் காப்பாற்றுவாயாக இன்பமாக வாழ்வதற்கும் தகுதி உடையவர்களாக ஆக்குவாயாக அறியாமையால் நாங்கள் செய்யும் தவறுகளை மன்னித்து அருள்புரிவாயாக!