உமையுடனும் முருகப்பெருமானுடனும் கூடியுள்ள சிவ திருவடிவம் - சோமாஸ்கந்தர் ஸக+உமா+ ஸ்கந்தர் என்பதம் பிரித்து விவரிக்கின்றன ஞானநூல்கள். இதில் ஸக என்பதற்கு இணைந்துள்ள சேர்ந்துள்ள என்று பொருள். கல்வெட்டு குறிப்புகள் இந்தத் திருவடியை உமாஸகந்த சகிதர் என்கின்றன. அற்புதமான இந்தச் சிவ வடிவை வழிபடுவதால் இம்மையில் சகல சுக போகங்களும் மறுமையில் சிவப்பேறும் கிடைக்கும் என்பது உமாதேவியின் திருவாக்கு! 64 சிவ வடிவங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு திருக்கதை உண்டு. அவ்வகையில் இந்தத் திருவடிவத்துக்குப் பல காரணக்கதைகள் சொல்லப்படுகின்றன.
பிள்ளைவரம் பெற விரும்பி நெடுந்தவம் இருந்தார் திருமால். அதனால் மகிழ்ந்து உமையவள் மற்றும் குமரனுடன் இணைந்து திருக்காட்சி தந்த சிவபெருமான் அழகில் சிறந்த மகன் வேண்டும் என்று திருமால் வேண்டிய வரத்தை அளித்தார். அப்போது சிவானரைப் பலவாறு துதித்த திருமால் உமையும் குமரனும் அருகில் இருப்பதைக் கவனிக்கவில்லை. அதனால் கோபம் கொண்ட உமையவள் மகன் பிறந்தாலும் விரைவில் அவன் மறைந்து போவான் என்று சாபித்தாள். இதனால் மனம் வருந்திய திருமால் தமக்குச் சிவனார் எப்படி காட்சியளித்தாரோ அதே வடிவை வழிபட முடிவு செய்தார். அப்படியொரு திருவடியைச் செய்யும்படி தேவசிற்பியான விஸ்வகர்மாவுக்கு ஆணையிட்டார். அதன்படியே விஸ்வகர்மா செய்து தந்த திருவடிவைத் தொடர்ந்து வழிபட்டும் வந்தார். அதன் பலனாக அவருக்கு மீண்டும் சிவதரிசனமும் உமையின் அருளும் கிடைத்தன. உன் மகன் மறைவான் என்றாலும் அவன் காதலின் தெய்வமாகத் திகழ்வான் என்று அருள்பாலித்தாள் உமையவள்.
இங்ஙனம் திருமாலால் பல காலம் வழிபடப்பட்ட சோமாஸ்கந்த மூர்த்தம் இந்திரனுக்கு அளிக்கப்பட்டு பிறகு அவனிடம் இருந்து முசுகுந்த சக்கரவர்த்தி மூலம் பூவுலகை அடைந்தது என்கிறது திருவாரூர் புராணம் (சோமாஸ்கந்த சருக்கம்.) கந்தபுராணத்திலும் சோமாஸ்கந்த திருக்கோலம் குறித்து கூறப்பட்டுள்ளது. சரவணப்பொய்கையில் ஆறு குழந்தைகளாகத் தவழ்ந்து கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட கந்தன் பிறகு உமையவள் அருளால் ஓருடலும் ஆறுமுகங்களும் கொண்டு அம்மைக்கும் அப்பனுக்கும் இடையில் அமர்ந்து அருள்பாலித்தார் என்கிறது கந்தபுராணம். அதேபோல் அமுதவல்லி- குமுதவல்லியை மணந்த கந்தபெருமான் கயிலைக்குச் சென்று அம்மையப்பனை வணங்கி அவர்களுக்கு நடுவில் அமர்ந்து அருள்பாலித்ததாகவும் ஒரு தகவலைக் கூறுகிறது இப்புராணம்.
இந்த சோமாஸ்கந்தத் திருவடிவை அனுதினமும் வழிபட்டால் அழகிய குழந்தைப்பேறு வாய்க்கும் அஷ்டமா ஸித்திகளும் கைகூடும் விரும்பியவை யாவும் ஈடேறும் இது உமாதேவியின் திருவாக்கு என்கிறது கமலாலயச் சிறப்பு எனும் நூல்.