பதிவு செய்த நாள்
03
ஆக
2017
05:08
நாமும் சரி, எல்லா ஜீவன்களும் சரி ஆசைப்படுவது இரண்டே இரண்டு விஷயங்களுக்குத்தான். ஒன்று ஆனந்தமாக இருக்க வேண்டும். இரண்டு துன்பம் தொலைய வேண்டும். அவ்வாறு துன்பத்தைத் தொலைப்பதற்கும் ஆனந்தமாக இருப்பதற்கும் நாம் வேறு வேறு வழிகளைக் கையாள்கிறோம். இதில் பெரும்பாலானோர் கையாளும் வழி நேர்மைக்குப் புறம்பானதாகவே இருக்கும்.
அப்படி அவர்கள் கையாளும் வழி சரியாக இருந்திருந்தால் உலகில் ஏறத்தாழ எல்லோருமே ஆனந்தமாக இருந்திருப்பார்கள். ஆனால் நாம் காண்பது அதற்கு நேர் மாறாகத்தானே இருக்கிறது. இதற்குக் காரணம் நாம் இன்பம் இருப்பதாக நினைக்கும் பொருளில் உண்மையில் இன்பம் இல்லை. இன்பமும் துன்பமும் வேறெங்கோ வெளியில் உள்ள எந்தப் பொருளிலும் இல்லை; ஒருபோதும் இருந்ததும் இல்லை. நம் மனத்திலேதான் இருக்கிறது. இதையே சாஸ்திரங்கள், மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ: - ஒருவன் பந்தப்பட்டவனாக இருப்பதற்கும் முக்தனாக இருப்பதற்கும் அவனது மனமே காரணம் என்கின்றன.
அப்படியானால் நமது துக்கத்திற்கும் சந்தோஷத்திற்கும் நம் மனம்தான் காரணமா? கண்டிப்பாக! சரி. எது காரணமாக இருந்தால் என்ன? இப்போது படுகின்ற துன்பத்திலிருந்து விடுபடுவது எப்படி? மனத்தைப் பக்குவப்படுத்துவதுதான் ஒரே வழி! ஆனால் அந்த மனம் எப்போதும் ஒரே நிலையில் இருப்பது இல்லை. சத்வம், ரஜஸ்தமஸ் என்ற மூன்று குணங்களாக அவரவருடைய வினைக்கேற்ப மாறி மாறி இருக்கும். இதனை பகவான் கிருஷ்ணர் கீதையில் விரிவாக விளக்குகிறார். சாமான்ய மனிதர்களுடைய மனத்தில் எப்போதும் ஏதாவது ஒரு பொருளின் மீது ஆசையோ அல்லது வெறுப்போதான் இருந்து கொண்டிருக்கும். கீதையில் கண்ணன் இதனை, காம ஏஷ க்ரோத ஏஷ... காமமும் குரோதமுமே நம்முடைய உண்மையான எதிரிகள் என்கிறார் இதனைப் புரிந்து கொள்வதால் என்ன பலன்?
தீதும் நன்றும் பிறர் தர வாரா, பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் (குறள்: 319) என்பவை ஆன்றோர் வாக்கு.
இதனை நாம் ஏற்றுக்கொண்டு, நமது துன்பத்திற்கு நம்முடைய ஆசையும் குரோதமுமே காரணம் என்று புரிந்து கொண்டு விட்டால், நமக்கு ஏற்படும் துன்பத்தை எளிதாகக் கையாளலாம். யாரையும் குறை கூறாமல், மனதில் எந்த வித வஞ்சகமும் இல்லாமல், பழிவாங்கும் மனப்பான்மை இல்லாமல், பொறாமை இல்லாமல் நடப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியும். நாம் பேசும்போது நம்முடைய நாக்கை நாமே கடித்துக்கொள்வது உண்டு. அதற்கு யாரைக் குறை கூறுவது? வாசற்படியில் கால் இடறி விழுந்தபோது யாரைக் குறை கூறினோம்? சொல்லக் கூடாது என்று நினைத்த வார்த்தைகளையோ, விஷயத்தையோ வாய் தவறி, மறந்து, கூறி அதனால் பெரும் நஷ்டப்பட்டபோது யாரைக் குறை கூறினோம்? அதைப் போல் நமக்கு ஏற்படும் அனைத்து இன்ப துன்பங்களுக்கும் நாமே காரணம். இதனைச் சற்றே வேறு விதமாகச் சிந்திப்போம். உலகம் யாவையும் தாமுள.... என்றபடி இவ்வுலகைப் படைத்தது இறைவன். உலகிலுள்ள எல்லா ஜீவன்களுக்கும் அசையும், அசையாப் பொருட்களுக்கும் பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து... வேண்டத்தக்கது அறிபவனும் வேண்ட முழுதும் தருபவனும்... இறைவன்.
அப்படியிருக்கும்போது நம்முடைய வினைப்பயனை, உலகிற்கே அம்மையப்பனாய் விளங்கும் கடவுளால் இன்னொருவருக்கு எப்படித் தர முடியும்? அல்லது இன்னொருவருடைய வினைப் பயனை நமக்கு எப்படித் தர முடியும்? ஒரு தாய் தன் வயிற்றில் பிறந்த ஒரு குழந்தையைக் காரணமின்றி, பட்டினி போட்டு வஞ்சித்துவிட்டு இன்னொரு குழந்தைக்கு எப்படிப் பால் சோறு ஊட்ட முடியும்? அப்படித் தந்தால் இறைவனைத் தர்மத்தின் சொரூபம் என்று எப்படிப் போற்ற முடியும்? மேலும் அவன்தான் யுகம் தோறும் தர்மத்தை நிலை நாட்ட நான் அவதரிக்கிறேன் என்று எப்படிக் கூறிக்கொள்ள முடியும்? மேலும், ஒருவன் என்ன தவறுகள், பாவங்கள் செய்தாலும் அவனுக்கு ஒரு துன்பமும் நேராது என்றால், உலகில் மக்கள் மேன்மேலும் பாவங்கள் செய்து அதர்மமே தலை விரித்து ஆடும் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பது சிலப்பதிகாரக் கோட்பாடுகளில் ஒன்று. ஆக நம் வினைக்கும் பின்விளைவிற்கும் நாமே காரணம். இதைப் பற்றி சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன?
ஸ்ரீமத் ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் ராவண வதத்திற்குப் பிறகு சீதையைக் காணச் செல்கிறார் ஆஞ்சநேயர். ராமரின் ஜெயத்தைப் பற்றிக் கூற, மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தாள் பிராட்டி. அப்போது அவரது கண்கள் பிராட்டியைச் சுற்றி இருந்த அரக்கிகள் மீது விழுந்தன. இவ்வளவு காலம் சீதையைத் துன்புறுத்திய அவர்களைக் கண்டு கோபம் பொங்கி வந்தது. அவர்களைப் பலவாறு துன்புறுத்திக் கொல்ல விரும்பினார். அவரது மன நிலையை அறிந்து கொண்ட பிராட்டி கூறினாள்; எனது துர்பாக்கியத்தினாலும் முன் ஜென்மத்தில் செய்த பாபத்தினாலும்தான் நான் இந்தக் கஷ்டங்களை எல்லாம் அனுபவிக்கும்படி ஆயிற்று. அதனால் இவர்கள் யாரும் துன்பப்படுத்தப்பட வேண்டியவர்கள் இல்லை.
என் வினைக்கு நானே காரணம். அவர்களை ஒன்றும் செய்யாதே! இதனைப் படிக்கும் நம் எல்லோருக்கும் என்ன தோன்றும்? சீதை யார்? பூமாதேவியின் பெண் அல்லவோ? அதனால் அவளால் பொறுமையாக இருக்க முடியும். மேலும் நாம் சாதாரண மானுடர்கள். தெய்வங்கள் செய்வதை நம்மால் எப்படிச் செய்ய முடியும்? என்று எண்ணலாம். ஆனால், பிரச்சனை நம்மால் பொறுமையாக இருக்க முடியுமா, முடியாதா என்பதல்ல, நமக்கு நிம்மதி வேண்டுமா, வேண்டாமா என்பதே. நிம்மதி வேண்டும் என்றால் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
முடியவில்லையே! என்னுடைய நஷ்டத்திற்கு இவர் தான் காரணம் என்று திட்டவட்டமாக நம் மனத்திற்குத் தெரியும்போது, பிறருடைய வார்த்தைகள் நம்மைக் காயப்படுத்தும்போது, பிறரை நிந்திக்காமல், கோபப்படாமல், பழிவாங்காமல் எப்படி இருக்க முடியும்? மேலும் நம்முடைய நிம்மதியே அவர்களைப் பழிக்குப் பழி வாங்குவதில்தான் உள்ளது என்று நாம் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கும்போது, நாம் என்ன செய்வது? இங்குதான் நாம் மீண்டும் பெரியோர்களின் செய்கையைக் கவனிக்க வேண்டும். சீதை மேலும் என்ன சொன்னாள் தெரியுமா?
பாபானாம் வா ஷுபானாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம்
கார்யம் கருணாம் ஆர்யேண ந கஸ்சித் நாபராத்யதி
லோக ஹிம்ஸா விஹாராணாம் ரக்ஷஸாம் காமரூபிணாம்
குர்வதாமபி பாபானி நைவ கார்யம் அஷோபனம்
பாவம் செய்தவர்கள், வதம் பண்ணக் கூடிய அளவுக்குத் தவறு செய்தவர்கள் என்று யாராக இருந்தாலும் அவர்களை மன்னிக்க வேண்டும். ஒரு தவறும் செய்யாதவன் என்று யாருமே கிடையாது. அபராதமே செய்யாதவன் என்று, ஒருவருமே கிடையாது. அதனால் தவறை மன்னிக்க வேண்டும்! லோக ஹிம்சை செய்வதையே பொழுதுபோக்காகக் கொண்டவர்களாய் நினைத்த உருவம் கொண்டு, தீமைகளே செய்யும் அசுரர்களுக்கும்கூட நாம் தீமை (அவர்கள் செய்ததற்குப் பிரதியாக) செய்யக் கூடாது என்று கூறினாள் பிராட்டி. எனவே, நமது நன்மைக்காக, நம் கஷ்டங்களுக்கு நாமே காரணம் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கஷ்டத்திற்குக் காரணமானவர்களை மன்னிக்க வேண்டும். இதுவே துன்பத்தின் வேதனையிலிருந்து விடுபட்டு ஆனந்தம் பெற ஒரே வழி!