பதிவு செய்த நாள்
24
ஜன
2025
10:01
முற்கால பல்லவ மன்னனான சிவசிம்மவர்மன், பிராமணர்களுக்கு ஒரு கிராமத்தை தானம் அளித்ததற்கு ஆதாரமான செப்பேடு, கர்நாடக மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட தொண்டை மண்டலத்தை ஆண்டவர்கள் பல்லவர்கள். கடல் வணிகம், கலைகள், போர்களில் வல்லவர்கள். இவர்களுக்கும், கர்நாடக பகுதியை ஆண்ட சாளுக்கியருக்கும் இடையே, அடிக்கடி போர்கள் நடந்தன. வாதாபியை ஆண்ட, இரண்டாம் புலிகேசியை வீழ்த்தி, முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் தன் வெற்றியை பதிவு செய்தார். முற்கால பல்லவ மன்னரான சிவசிம்மவர்மன், அப்போதைய மேலை சாளுக்கிய நாடான, கர்நாடகா வரை போர் தொடுத்து சென்றதும், அங்குள்ள கிராமங்களை, பிராமணர்களுக்கு தானமாக வழங்கும் அளவுக்கு, ஆட்சியில் செல்வாக்குடன் இருந்ததும், தற்போது கிடைத்துள்ள செப்பேட்டின் வாயிலாக தெரிய வந்துள்ளது. அவர் 10 ஆண்டுகள் வரை ஆட்சி செய்திருக்கலாம் என, வரலாற்று ஆய்வாளர்கள் கருதி வந்த நிலையில், அவரின் 20ம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட செப்பேடு கிடைத்துள்ளது.
இது குறித்து, மத்திய தொல்லியல் துறையின் மைசூரு கல்வெட்டு பிரிவு இயக்குனர் முனிரத்தினம் கூறியதாவது: நாட்டில் தனியார் வசம் உள்ள, வரலாற்று சிறப்பு மிக்க தொல்பொருட்களை, மத்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைத்து, பதிவு செய்யும்படி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அந்த வகையில், கர்நாடக மாநிலம், சிக்கபல்லாபூர் மாவட்டம், திப்பூரு கிராமத்தைச் சேர்ந்த, பண்டிட் சிவஸ்வாமி ஆச்சார்யா என்பவரிடம் இருந்த, ஐந்து ஏடுகளுடன் கூடிய செப்பேடு தொகுதியை, ஸ்ரீ சத்ய சாய் பல்கலையின் வரலாற்றுத் துறை பேராசிரியர் யாதவா ரகு கொண்டு வந்தார். ஐந்து – ஆறாம் நுாற்றாண்டைச் சேர்ந்த, சமஸ்கிருதம் மற்றும் துவக்க கால தெலுங்கு, கன்னட எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருந்த செப்பேடுகளை ஆராய்ந்தோம். அதில், ஸ்கந்தவர்மாவின் பேரனும், நந்திவர்மாவின் மகனுமான விஜய சிவசிம்மவர்மன், போர் சூழலுக்கு பிறகு, தன் 20வது ஆட்சியாண்டில் போகூருக்கு வந்த நிலையில், அங்கு அனைத்து வேதங்களையும் கற்றறிந்த பிராமண விற்பன்னரான ஜேஷ்டசர்மா என்பவருக்கு, கோரிகுண்டா விசாயாவில் உள்ள சீயபுரா என்ற கிராமத்தை தானமாக வழங்கிய தகவல் உள்ளது. கார்த்திகை மாதம், பவுர்ணமிக்கு முந்தைய 12வது நாளில் இந்த தானம் வழங்கப்பட்டதாக தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.