பதிவு செய்த நாள்
28
நவ
2011
03:11
வாபர் ஒரு இஸ்லாமியர். கொள்ளைக்காரனாக இருந்தனர். ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வழியில் அவர் தன்னுடன் வந்த மக்களுக்கு கூடாரங்கள் அமைத்துக் கொடுத்து தங்க வைத்திருந்தார். கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கொள்ளையடித்து அந்த பொருட்களை தன்னுடன் தங்கியிருந்தவர்களுக்கு வழங்கி வந்தார். அரசர்களால் வாபரை பிடிக்கமுடியவில்லை. எனவே அவர்கள் ஐயப்பனிடமே இதுபற்றி முறையிட்டனர்.
ஒருமுறை ஐயப்பன் வாபரை காணச்சென்றார். குழந்தையாக இருந்த ஐயப்பன் வாபருக்கு எச்சரிக்கை விடுத்தார். என்னைக் காணவரும் பக்தர்களை துன்புறுத்தினால் உன்னை அழித்துவிடுவேன் என்று கூறினார். இரக்க குணமுள்ள வாபர் சிறுவனான ஐயப்பனை பார்த்து, நீ என் குழந்தை போல இருக்கிறாய். உன்னை எப்படி நான் கொல்லுவேன். என்னை நீ துன்புறுத்தாதே. போய்விடு என்றார். இதற்கெல்லாம் கலங்காத ஐயப்பன் வாபரை கொல்ல முயன்றார். உடனே வாபர் ஐயப்பனிடம் என்னை நீ கொன்றுவிட்டால் என்னை நம்பி இங்கு குடியிருக்கும் மக்களை என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டார்? உடனே ஐயப்பன் அவர்களுக்கு வேண்டிய பொருளைக் கொடுத்து நல்லபடியாக வாழ வைக்கிறேன் என்றார். அதன்படி அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது. அத்துடன் எனது கோயிலுக்கு வரும் பக்தர்கள் உனது இடத்துக்கும் வருவார்கள். அவர்களை சோதித்தபின்பே நீ எனது மலைக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும்.
இதன்படி சரியாக விரதமிருக்காதவர்கள், பிரம்மச்சாரியம் பூணாதவர்கள், இளம் பெண்கள் ஆகியோரை நீ இந்த இடத்திலேயே தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று உத்தரவிட்டார். ஐயப்பனின் தாராள மனமறிந்த வாபர், ஐயப்பனின் சொல்படி இன்றுவரை பக்தர்களை சோதித்துக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்தப் பள்ளிவாசலில் பக்தர்களுக்கு இப்போதும் திருநீறு தருகிறார்கள். அங்கு விபூதி பூசியபிறகுதான் சபரிமலைக்கு செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.