பதிவு செய்த நாள்
31
ஜன
2026
12:01
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து உள்ளனர்.
காஞ்சிபுரம் தாமல்வார் தெரு பின்புறம் உள்ள முனிசிபல் குடியிருப்பில், வரலாற்று ஆய்வாளர் மு.அன்பழகன், காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சு.உமாசங்கர் ஆகியோர், நேற்று முன்தினம் கள ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, அங்குள்ள வேப்ப மரத்தடியில் விஷ்ணு கற்சிலையை கண்டறிந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: காஞ்சிபுரத்தில் விஷ்ணு கற்சிற்பத்தை கண்டெடுத்தோம். இச்சிலை, 90 செ.மீ., அகலமும், 118 செ.மீ., உயரமும், 21 செ.மீ., தடிமனும் கொண்டது. கிழக்கு திசை பார்த்த நிலையில் உள்ள இந்த கற்சிற்பத்தின் தலைக்குப் பின்னால், ஐந்து தலை நாகம் படமெடுத்த நிலையில் உள்ளது. விஷ்ணு வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்டபடி வீராசனத்தில் அமர்ந்த நிலையில் உள்ளார். வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்கும் உள்ளது. காது மற்றும் மார்புகளில் அணிகலன்கள் காணப்படுகின்றன. தலையில் மகுடம் உள்ளது. சோழர் காலத்தைச் சேர்ந்த இந்த சிற்பம், கி.பி. 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.