’சொக்கா... இதுவும் உன் திருவிளையாடலா’ மேலூரில் சிவனுக்கு வந்த சோதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஆக 2017 11:08
மேலுார், மேலுார் சிவன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய பக்தர்கள் தயாராக இருந்தும் அரசின் அனுமதி கிடைக்காததால் வேதனையில் உள்ளனர்.
மேலுாரில் பழமையான கல்யாண சுந்தரேஸ்வரர், காமாட்சியம்மன் கோயில் உள்ளது. சிவாச்சாரியாரை தேடி சிவனே வந்ததாக கூறப்படும் இக்கோயிலில் திருவிழா முதல் திருமணம் வரை நடப்பதால் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். கும்பாபிஷேகம் முடிந்து 17 ஆண்டுகளுக்கு மேலாகியும் பராமரிப்பின்றி கோயில் பாழாகி வருகிறது. மேல்தளத்தில் செடிகள் முளைத்து வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் மழை நீர் சன்னதிக்குள் ஒழுகு கிறது. சில ஆண்டுகளுக்கு முன் கோயில் கோபுரத்தின் கொடுங்கை விழுந்தது. மழை நீர் ஒழுகி யு.பி.எஸ்., முதல் ஜெனரேட்டர் வரை பழுதாகி கோயில் இருளில் மூழ்கி கிடக்கிறது. தவிர கோயிலை சுற்றி சமூக விரோதிகள் கழிப்பறையாக பயன்படுத்துவது பக்தர்களை வேதனை அடைய செய்கிறது. பக்தர்கள் கூறியதாவது: கோயில் திருப்பணிக்கு அறநிலையத்துறை நிதி ஒதுக்க காலதாமதம் செய்தது. இதனால் உபயதாரர்கள் 35 லட்சம் ரூபாய் செலவு செய்ய தயாராக உள்ளார்கள். ஆனால் அரசின் அனுமதி கிடைக்கவில்லை. மனிதர்களுக்கு சோதனை ஏற்பட்டால் சிவனிடம் முறையிடலாம். ஆனால் சிவனுக்கே சோதனை என்றால் யாரிடம் போய் முறையிடுவது, என்றனர்.