இறைவனிடம் நம் வேண்டுதல்கள் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02பிப் 2018 03:02
இறைவனிடம் நாம் எப்படி வேண்ட வேண்டும் என பல பேருக்கு தெரிவதில்லை. வேண்ட தெரியாமல் வேண்டினால் பலன் வேறு மாதிரி இருக்கும். அதற்கு ஒரு சுவாரஸ்மான கதை உண்டு..
வைர வியாபாரி ஒருவன் தன் வைரங்கள் அனைத்தையும் விற்றுவிட்டு பணத்தை ஒரு முட்டையில் கட்டிக்கொண்டு தன் சொந்த ஊருக்கு வந்துகொண்டிருந்தான். அவன் தன் ஊருக்கு செல்ல ஒரு ஆற்றை கடக்க வேண்டி இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்தை பொருட்படுத்தாத வைர வியாபாரி நீரில் இறங்கி எப்படியாவது ஆற்றை கடந்து சென்றுவிடலாம் என்று எண்ணி அந்த ஆற்றில் இறங்கினான். அப்போது வெள்ள நீர் அவனை நிலை தடுமாற செய்தது. இதனால் அவன் தன் பண மூட்டையை வெள்ளத்தில் தவறவிட்டான். உடனே ஐயோ என் பண மூட்டையை வெள்ளம் அடித்து செல்கிறதே யாரேனும் காப்பாற்றுங்கள் என்று கதறினான்.
அந்த ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ஒரு மீனவனின் காதில் இந்த வைர வியாபாரியின் கதறல் சத்தம் கேட்டது. உடனே அவன் ஆற்றில் குதித்து கடுமையாக போராடி அந்த பணமூட்டையை எப்படியோ மீட்டு எடுத்துக்கொண்டு கரையை அடைந்தான். பின் இந்த பண முட்டையை காப்பாற்ற சொல்லி யாரோ கதறினீர்களே, நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் ? நான் உங்கள் பண முட்டையை மீட்டுக்கொண்டு வந்துவிட்டேன். வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்று சத்தமாக அழைத்தான். ஆனால் வெகு நேரம் ஆகியும் யாரும் அதை பெற்றுக்கொள்ள வரவில்லை. பிறகு தான் அவனுக்கு புரிந்தது, அந்த பண மூட்டைக்கு சொந்தக்காரர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார் என்று. ஐயோ பாவம், அந்த பணக்காரர் இந்த பண முட்டைக்கு பதிலாக தன்னை காப்பாற்றுங்கள் என்று குரல் கொடுத்திருந்தால் இந்த பண மூட்டையை விடுத்து நான் அவரை காப்பாற்றி இருப்பேனே. ஆனால் அவர் இப்படி செய்துவிட்டாரே என்று அந்த மீனவன் வருந்தினான்.
இப்படி தான் நாமும் நம் தேவைகளை சில நேரங்களில் இறைவனிடம் வேண்டத் தெரியாமல் வேண்டுகிறோம். அதனால் பல நேரங்களில் நாம் நம் வாழ்வில் நிம்மதியை இழக்க நேரிடுகிறது. எனவே இறைவனிடம் வேண்டும் போது, நிதானமாக வேண்டுதல் வைக்க வேண்டும்.