பதிவு செய்த நாள்
22
ஜன
2025
10:01
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியில் இருந்து 12வது நாள், காஞ்சிபுரம் செவிலிமேடில் ராமானுஜருக்கு உள்ள தனி சன்னிதியில், அனுஷ்டான குள உற்சவம் விமரிசையாக நடைபெறும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான அனுஷ்டானகுள உற்சவம் நேற்று விமரிசையாக நடந்தது. இதில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், ராமானுஜருடன் செவிலிமேடு சாலை கிணறு அனுஷ்டான குளம் அருகில் உள்ள ராமானுஜர் சன்னிதியில், பகல் 12:30 மணிக்கு எழுந்தருளினார். தொடர்ந்து, சாலை கிணறு தீர்த்தத்தில் திருமஞ்சனம் நடந்தது. பின், மாலை 4:20 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன், வரதராஜ பெருமாள் வேடுவர் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மஹாதீபாராதனை முடிந்ததும், வரதராஜ பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு, துாப்புல் வேதாந்த தேசிகன் கோவிலுக்கு சென்றார். அங்கு, பெருமாளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அங்கிருந்து புறப்பாடாகி, வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்றார். உற்சவத்திற்கான ஏற்பாட்டை வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் சாலை கிணறு ராமானுஜர் சன்னிதி பக்தர்கள் செய்திருந்தனர்.