தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் மண்டபம்; பக்தர்கள் வேண்டுகோள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2025 10:01
இளையான்குடி; இளையான்குடி அருகே உள்ள பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் உள்பிரகாரத்தில் மண்டபம் கட்ட வேண்டுமென்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி மாதம் நடைபெறும் பொங்கல் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.இந்த விழாவின் போது தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்திருந்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனை வேண்டி வருகின்றனர். இந்நிலையில் கோயிலில் உள் பிரகாரத்தில் மண்டப வசதி இல்லாத காரணத்தினால் பக்தர்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து பக்தர்கள் சிலர் கூறியதாவது, தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் மூலம் ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாயாக கிடைத்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கும்பாபிஷேகத்திற்கு கூட ஹிந்து சமய அறநிலைத்துறை நிதி போதிய ஒதுக்கீடு செய்யாத காரணத்தினால் நன்கொடைதாரர்கள் மூலம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.கோயிலின் வருமானம் கோடிக்கணக்கான ரூபாய் உள்ள நிலையில் கோயிலின் உள்புறம் போதுமான மண்டப வசதி இல்லாததால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பக்தர்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகிறோம்.திருவிழா காலங்களில் தகரங்களைக் கொண்டு தற்காலிகமாக கொட்டகை அமைத்து வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.ஆகவே ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் பக்தர்களின் நலன் கருதி உடனடியாக கோயிலின் உட்பிரகாரத்தில் கல் மண்டபம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.