பதிவு செய்த நாள்
22
ஜன
2025
10:01
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை, பாகனேரியில் நகரத்தாரின் பாரம்பரிய செவ்வாய் பொங்கல் விழா நேற்று நடந்தது. 1422 பானைகளில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி கோயிலில் ஆண்டுதோறும் தை பொங்கலுக்கு அடுத்து வரும் செவ்வாய் அன்று பாரம்பரிய முறையில் நகரத்தார்களால் செவ்வாய் பொங்கல் விழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான செவ்வாய் பொங்கல் விழா நேற்று நடந்தது. நேற்று முன்தினம் நகரத்தார் குடும்ப தலைவர்களின் பெயர்களை சீட்டில் எழுதி ‘குடவோலை’ முறையில், வெள்ளி குடத்தில் மொத்தமாக 916 குடும்ப தலைவர்களின் பெயர்களை எழுதி போட்டு குலுக்கி எடுத்தனர். அதில் முதலில் நாட்டரசன்கோட்டை ராமசாமி என்பவர் பெயர் வந்தது. இவரது குடும்ப உறுப்பினர்கள் முதலில் மண் பானையில் பொங்கல் வைத்தனர்.
நேற்று மாலை 4:45 மணிக்கு கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர். அங்கிருந்து பொங்கல் பானையை ஊர்வலமாக எடுத்து வந்து, விநாயகர் கோயில் அருகே நேற்று மாலை 5:13 மணிக்கு முதலாவதாக மண் பானையில் பொங்கல் வைத்தனர். அந்த பானையில் நகரத்தார் அனைவரும் பால் ஊற்றி வழிபட்டனர். அதனை தொடர்ந்து 916 குடும்பத்தினரும் (916 புள்ளிகள்) பொங்கல் வைத்தனர். இங்கு முற்றிலும் வெண் பொங்கல் மட்டுமே வைக்கப்படும். செவ்வாய் பொங்கல் விழாவில் பங்கேற்க வணிகம் மற்றும் வேலை நிமித்தமாக மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து நகரத்தார் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். பொங்கல் வைத்ததும், சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். நேற்று இரவு கண்ணுடைய நாயகிக்கு ஆடு பலியிட்டும் நேர்த்தி செலுத்தினர். தேவஸ்தான கண்காணிப்பாளர் சரவண கணேசன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
பாகனேரியில் செவ்வாய் பொங்கல்; பாகனேரி புல்வநாயகி அம்மன் கோயிலில் நகரத்தார், அதே போன்று வெள்ளி குடத்தில் 506 குடும்ப தலைவர்களின் பெயர்களை எழுதி, குலுக்கி எடுத்தனர். அதில் முதலாவதாக வந்த பாகனேரி ஆர்.எம்.,சேதுராமன் குடும்பத்தினர் முதலில் மண் பானையில் பொங்கல் வைத்ததும், அனைவரும் பொங்கல் வைக்க துவங்கினர். செவ்வாய் பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று இரவு புல்வநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. எம்.சுதா, ஆசிரியை, மெல்போர்ன் சிட்டி, ஆஸ்திரேலியா: எனது சொந்த ஊர் நாட்டரசன்கோட்டை. முதலில் சிங்கப்பூரில் பணிபுரிந்தேன். அங்கிருந்து ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் சென்று அங்கு ஆசிரியையாக உள்ளேன். ஒவ்வொரு ஆண்டும் செவ்வாய் பொங்கல் அன்று தவறாமல் இங்கு குடும்பத்துடன் வந்துவிடுவோம். எங்கள் உறவுகளை சந்தித்து உறவுகளை வளர்ப்போம். ஆண், பெண்ணுக்கு இங்கு தான் வரன் பார்க்கும் படலமும் நடைபெறும், என்றார்.