திருப்பூர்; முதலிபாளையம், கொடுங்கலுார் பகவதியம்மன் கோவிலில், 11வது ஆண்டு திருக்கல்யாண உற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திருப்பூர் அருகே முதலிபாளையத்தில், செல்வகணபதி, பாலதண்டாயுதபாணி, சமயபுரம் மாரியம்மன், கருப்பண்ண சுவாமி மற்றும் கொடுங்கலுார் பகவதியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின், 11வது ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் கணபதி ஹோமம் நடந்தது. அனைத்து சன்னதிகளிலும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனையும், மாரியம்மன் உற்சவர் திருவீதியுலாவும் நடந்தது. கலை நிகழ்ச்சியாக பவளக் கொடி கும்மியாட்டம் நடந்தது. நேற்று கொடியேற்றத்தைத் தொடர்ந்து, இன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்தில் பகவதியம்மன் அருள் பாலித்தார். அதனை தொடர்ந்து, பகவதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கலை நிகழ்ச்சியாக, பெருஞ்சலங்கையாட்டம் நடந்தது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (22ம் தேதி) அதிகாலை அம்மன் திருக்கல்யாண உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.