கடுமையான தவம் செய்த முனிவர் ஒருவர் தன் வாழ்நாளின் முடிவில் விண்ணுலகம் சென்றார். அங்கே தனக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் சொர்க்கத்தின் வாசல் அவருக்காகத் திறக்கப்படவே இல்லை. அதனால், அங்கிருந்த காவலர்களை உள்ளே அனுமதிக்குமாறு கேட்டார். அந்தக் கதவுகளைத் தங்களாலும் திறக்க முடியாது என்றும்; தகுதியானவர் வந்தால் அக்கதவுகள் தாமாகவே திறக்கும் என்றும் சொன்னார்கள் அவர்கள். காரணம் அறிய தேவேந்திரனிடம் சென்றார், முனிவர், பூவுலகில் ஆற்ற வேண்டிய தருமங்களை அவர் முழுமையாகக் கடைப்பிடிக்காததால் சொர்க்கம் திறக்கவில்லை என்றார் இந்திரன். அப்படியானால் தான் செய்த தவத்திற்கு வலிமை இல்லையா? என்று கேட்டார், முனிவர். தவத்தால் கிடைப்பதைவிடப் பெரும் புண்ணியம் இல்லற தர்மத்தை அனுஷ்டிப்பதால் கிடைக்கும். பெற்றோருக்கு செய்யும் சேவை, விருந்தினருக்கு அளிக்கும் உபசாரம், குழந்தைகளுக்கு ஆற்றவேண்டிய கடமைகளைச் செய்தல் போன்றவற்றால் கிடைக்கும் பேறுகளே சொர்க்கத்திற்குச் செல்ல எளிதான வழி! சொன்னார் தேவேந்திரன்.
கேட்ட முனிவர், மறுபடியும் ஓர் பறவையாக பூவுலகில் பிறந்து, தனது கடமைகளைச் செய்துவிட்டு மீண்டும் வானுலகம் வந்தார். அப்போது சொர்க்கத்தின் வாசல் திறந்து உள்ளே செல்ல அவருக்கு வழிவிட்டது. மகாபாரதத்தில் வரும் நீண்ட கதையின் சுருக்கம் இது. இந்தக் கதை சொல்லும் நீதி இதுதான். உங்கள் குடும்பத்திற்கு, உங்கள் பெற்றோருக்குச் செய்யவேண்டிய கடமைகளை முழுமனதுடன் செய்யுங்கள். விருந்தினரோ, நண்பரோ அவரிடம் உண்மையாக இருங்கள். அவர்களின் ஆசி இருந்தாலே போதும். தெய்வத்தின் அனுகிரகம் உங்களுக்குத் தானாகவே கிடைக்கும். மேலான அனைத்தும் தானாகவே உங்களைத் தேடிவரும் என்பதுதான்.