திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் தடைபடும் போது பெற்றோர் மனம் பாடுபடவே செய்யும். இத்தடை நீங்க மாவிளக்கு பரிகாரத்தை வீட்டிலேயே செய்யலாம். திருப்பதி வெங்கடாஜலபதிக்காக சனிக்கிழமையிலும், விநாயகர், முருகன், மாரியம்மன், காளியம்மன், காமாட்சி போன்ற தெய்வங்களுக்கு செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையிலும் வழிபாடு செய்யலாம். இடித்து சலித்த பச்சரிசி அல்லது தினை மாவில் ஏலக்காய், வெல்லப்பாகு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும். அதை காமாட்சி விளக்கு போல குழிவாகப் பிடித்து, அதனுள் நல்லெண்ணெய் விட்டு பஞ்சுத்திரியிட வேண்டும். இஷ்ட தெய்வத்தின் முன் வாழை இலை அல்லது தாம்பாளத்தில் இரண்டு தேங்காய் மூடி, பழம், வெற்றிலை பாக்கு வைத்து மாவிளக்கு ஏற்ற வேண்டும். நாம் எந்த தெய்வத்தை வழிபடுகிறோமோ அந்த தெய்வம் வீட்டிற்குள் எழுந்தருள்வதாக கருதி வழிபட வேண்டும். அந்தந்த தெய்வங்களுக்குரிய ஸ்லோகம் அல்லது பாடல்களைப் பாடுவது சிறப்பு. ஒரு நாழிகையாவது (24நிமிடம்) மாவிளக்கு ஏற்றுவது அவசியம். வேண்டுதல் நிறைவேறியதும் மீண்டும் மாவிளக்கேற்றுவது அவசியம்.