அமெரிக்காவில் ஏலம் விடப்படும் தென்காசி சுவாமி சிலையை மீட்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2025 10:01
தென்காசி; தென்காசி கோவிலில் இருந்து திருடு போன பழமையான ரூ 12 கோடி மதிப்பிலான வீணை தட்சிணாமூர்த்தி சிலையை மீட்க வேண்டும் என சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் கோரிக்கை விடுத்தார்.
தமிழக போலீசில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக பணியாற்றிய ஓய்வு பெற்றவர் பொன் மாணிக்கவேல். ஓய்வுக்குப் பிறகும் கடத்தப்பட்ட தொன்மையான சிலைகளை மீட்க வ வலியுறுத்தி வருகிறார். நேற்று தென்காசி குற்றாலம் சித்திரை சபை கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அங்கு அவர் கூறுகையில், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே பாப்பான்குளம் வாடா கலைநாயகி திருவெண்காடு கோவிலில் இருந்து 700 ஆண்டுகள் பழமையான வீணாதர தட்சிணாமூர்த்தி ஐம்பொன் விக்ரகம் 45 ஆண்டுகளுக்கு முன்பு திருடு போனது. ஏற்கனவே சிலை கடத்தலில் 10 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற சுபாஷ் சந்திர கபூரின் சகோதரி சுஷ்மா ஷெரின் என்பவரிடம் உள்ளது. சிலை மதிப்பு ரூ.12 கோடியாகும். அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் வசிக்கும் சுஷ்மா ஷெரின், வீணை தட்சிணாமூர்த்திக்கு சிலையை ஏலம் விட பட்டியலிட்டுள்ளார். அவரிடம் தமிழகத்தை சேர்ந்த ரூ 280 கோடி மதிப்பிலான 39 சிலைகள் உள்ளன. நமது தொன்மையான சிலையை மீட்க மத்திய மாநில அரசுகள் முயற்சி எடுத்து அந்த ஏலத்தை தடுத்து நிறுத்தி மீட்க வேண்டும் என்றார்.