பதிவு செய்த நாள்
20
ஜன
2025
11:01
திருச்செந்தூர்; சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி கோபுர திருப்பணிகளுக்காக யாகசாலை பூஜை நடைபெற்று கோபுர பாலாலயம் இன்று நடைபெற்றது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூபாய் 300 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகிறது. எச்.சி.எல்., நிறுவனம் சார்பில் ரூ 200 கோடியும் , திருக்கோவில் சார்பில் ரூ 100 கோடி பங்களிப்புடன் இந்த பணிகள் நடைபெற்றுவருகிறது. கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 28ல் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக பெருந்திட்ட பணிகளை தொடக்கிவைத்தார். இதில் திருமண மண்டபம், பக்தர்கள் தங்கும் விடுதிகள், பூங்காக்கள், அன்னதான மண்டபம், மற்றும் குடமுழுக்கு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகிறது. இரண்டு ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த பணிகள் தற்போது 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. ஜூலை 7ம் தேதி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கோவில் கோபுர திருப்பணிகளுக்கான கோபுர பாலாலயம் இன்று நடந்தது. கந்தசஷ்டி யாகசாலை மண்டபத்தில் மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகள் , சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளின் 17 விமான கலச கும்பங்கள் வைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கும்ப கலசங்கள் விமான தளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கும்ப கலசங்களில் இருந்த புனித நீரால் மூலவர் மற்றும் சண்முகர்க்கு அபிசேகம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலை மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகள், சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளின் 17 கும்ப கலசங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. திருச்செந்தூர் கோவிலில் 15 ஆண்டுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற இருப்பது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் அறநிலை துறை ஊழியர்கள் எச்.சி.எல்., நிறுவன முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.