பதிவு செய்த நாள்
12
அக்
2018
05:10
பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்யபிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன.
மங்களாசாசனம் என்றால் என்ன?: எல்லோரும் பகவானை பிரார்த்திக்கும் போது பகவானிடம் ஏதாவது பலனை பிரார்த்திப்பார்கள் ஆனால் மகான்கள் பகவானை வணங்கும் போது பகவானின் நலன்களையே பிரார்த்திப்பார்கள். மகான்கள்,ஆசாரியார்கள்,ஆழ்வார்கள் எல்லோரும் மங்களாசாசனம் படிப்பவர்கள்.இவர்கள் சென்று பெருமாளை பாடி மகிழ்விப்பதற்கும் அந்த பாடல்களுக்கு பெயரே மங்களாசாசனம். மங்களாசாசன் பாடியவதில் பெரியவர் பெரியாழ்வார் என்றாலும் அதிகமாக பெருமாள் திருத்தலங்களுக்குச் சென்று பாடியவர் திருமங்கையாழ்வாரே.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும். அவையே 108 திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேபாளிலும் உள்ளன. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின் 84 திருத்தலங்கள் தமிழ்நாட்டிலும்,11 திருத்தலங்கள் கேரளாவிலும், 2 திருத்தலங்கள் ஆந்திராவிலும்,4 திருத்தலங்கள் உத்தரப் பிரதேசத்திலும், 3 திருத்தலங்கள் உத்தரகண்டிலும்,1 திருத்தலம் குஜராத்திலும்,1 திருத்தலம் நேபாளத்திலும்,2 திருத்தலங்கள் விண்ணுலகிலும் உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 84 திருத்தலங்களில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் உள்ள திருநாங்கூரில் மட்டும் 11 திருத்தலங்கள் அருகருகே உள்ளன.இதில் சில இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது மற்றவை அறக்கட்டளை சார்பி்ல் இயங்கிவருகிறது.
108 திவ்யதேசம் என்றாலே அவற்றை மங்களாசாசனம் செய்த ஆழ்வார் பெருமக்கள்தான் நம் நினைவுக்கு வருவார்கள். அவர்களிலும் குறிப்பாக திருமங்கையாழ்வார் நம் நினைவில் முன்னே நிற்பார். காரணம், மிக அதிக எண்ணிக்கையில், 86 திவ்ய தேசங்களுக்கு விஜயம் செய்து அந்தந்தப் பெருமாள்களை கண்ணாற, உளமாற சேவித்து, தன் வருகையைப் பதிவு செய்யும் வகையிலும், பிறர் அனைவருக்கும் அந்த இடத்தில் அப்படி ஒரு பேரருள் கோயில் கொண்டிருக்கிறது என்பதை விளக்கும் வகையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பல பாசுரங்களை, ஒவ்வொரு தலத்துக்கும் இயற்றிப் பேரானந்தம் அடைந்தவர்; நம்மையும் அடையச் செய்பவர்.
108 திவ்ய தேசங்களில் 86 திவ்ய தேசங்களுக்குச் சென்று அந்தந்தப் பெருமாள்களைத் தரிசித்து மங்களாசாசனம் செய்து மகிழ்ந்தார்.இவர் பாடிய இந்த 86 திவ்ய தேசங்களில் திருநாங்கூரில் உள்ள 11 திவ்ய தேசமும் உண்டு.
திருநாங்கூரில் உள்ள 11 திவ்ய தேசத்தில் இருந்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் பெருமாள்களின் பெயர் விவரம்:
01) ஸ்ரீ அண்ணன் பெருமாள்
02)ஸ்ரீ வைகுந்த பெருமாள்
03)ஸ்ரீ புருடோத்த பெருமாள்
04)ஸ்ரீபள்ளி கொண்ட பெருமாள்
05)ஸ்ரீ குடமாடும் கூத்தர்
06)ஸ்ரீ நாராயணப் பெருமாள்
07)ஸ்ரீ செம்பொன் அரங்கர்
08) ஸ்ரீ வரதராஜப் பெருமாள்
09) ஸ்ரீ பார்த்தசாரதி
10) ஸ்ரீ ராஜகோபால சுவாமி
11) ஸ்ரீ மாதவப் பெருமாள்
எப்படிப்போவது: திருநாங்கூர் திவ்யதேசங்களை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் முதலில் நாகை மாவட்டம் சீர்காழி சென்றுவிடவேண்டும்.அங்கு இருந்து நாகை செல்லும் வழியில் 7 வது கிலோமீட்டரில் அண்ணன் பெருமாள் கோவில் உள்ளது.இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் சிறப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் இந்தக்கோவிலில் திருமங்கையாழ்வார் பத்து பாசுரம் பாடி இருக்கிறார், பெருமாளை அண்ணன் என்று அழகு தமிழில் அழைத்து பாடியதால் அண்ணன் பெருமாள் என்று இங்குள்ள பெருமாள் அழைக்கப்படுகிறார்.இது இந்தப்பகுதியில் உள்ள திவ்ய தேசங்களுக்கு நுழைவு வாசலாகவும் உள்ளது.
அனைத்து திவ்ய தேசங்களையும் தரிசிக்க சுமார் 4 மணி நேரமாகும்,40 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யவேண்டும்.ஒவ்வொரு கோவிலும் நடை திறந்திருக்கும் நேரம் மாறுபடும் என்பதால் அண்ணன் பெருமாள் கோவிலில் உள்ள மாதவபட்டரின் ஆலோசனை பெற்றுக் கொள்ளவும் இவர் வழிகாட்டி மற்றும் வாகன ஏற்பாடு செய்வது வரையிலான சேவையை தொண்டாக செய்துதருகிறார்,அவரது எண்கள்:9489856554,9487744534.
-எல்.முருகராஜ்