Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஆபத்சகாயேஸ்வரர்
  அம்மன்/தாயார்: பவளக்கொடியம்மை, பிரபாளவல்லி
  தல விருட்சம்: பவள மல்லிகை
  தீர்த்தம்: சகாயதீர்த்தம், சூரிய தீர்த்தம் (கோயிலின் எதிரில் உள்ளது)
  புராண பெயர்: திருத்தென்குரங்காடுதுறை
  ஊர்: ஆடுதுறை
  மாவட்டம்: தஞ்சாவூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
 

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
தேவாரபதிகம்


பழகும் வினைதீர்ப் பவன்பார்ப் பதியோடும் முழவங்க குழல்மொந்தை முழங்கெரியாடும் அழகன் அயில் மூவிலை வேல் வலனேந்தும் குழகன் நகர்போல் குரங்காடு துறையே.

திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 31வது தலம்.


 
     
 திருவிழா:
     
  மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்.  
     
 தல சிறப்பு:
     
  இத்தலம் காவிரிதென்கரையில் இருப்பதாலும், சுக்கிரீவன் வழிபட்ட தலமாதலாலும் தென்குரங்காடுதுறை என்று வழங்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் 5,6,7 தேதிகளில் சூரியனது ஒளிக்கிரணங்கள் சன்னதிக்கு எதிரில் உள்ள சூரிய தீர்த்தத்தில் பிரதிபலித்துக் கடந்து சுவாமி மீது பட்டுத் தழுவுகின்றது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 94 வது தேவாரத்தலம் ஆகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், ஆடுதுறை அஞ்சல் 612 101. திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91 - 94434 63119, 94424 25809 
    
 பொது தகவல்:
     
 

ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. நந்தி பலிபீடம் உள்ளது. முன்மண்டபத்தில் தலப்பதிகக்கல்வெட்டுள்ளது.


கல்வெட்டுக்கள்: இக்கோயிலில் 15 கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் இரண்டு பாண்டியருடையன மற்றவை சோழர் களுடையவை. பாண்டியர்களில் மாறன் சடையனின் 6ஆம் 8ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் அழிந்திருக்கின்றன.  இம்மாறன் சடையன்  8ஆம் நூற்றாண்டில் (கி.பி.770ல்) ஆனைமலைக் கல் வெட்டைச் செதுக்கிய சடாவர்மனாக இருக்கலாம் என்பது வேள்விக்குடி சாசனத்தால் அறியக்கிடக்கின்றது.


சோழர் கல்வெட்டுக்களில் உத்தம சோழன் (கி.பி.970-86) முதலாம் இராசராசன் (கி.பி.985-1013) முதற்குலோத்துங்கன், வீரராசேந்திரன், இரண்டாம் இராசராசன் ஆகியோரது கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அக் கல்வெட்டுக்களின் வாயிலாகச் சில செய்திகள் அறியக்கிடக்கின்றன.


கண்டராதித்தியர் தேவியார் செம்பியன் மாதேவியார் இக்கோயிலைக் கற்கோயிலாக ஆக்கினார். மேலும் முன்னர் வெட்டப்பட்ட கல்வெட்டுக்கள் சிதைந்து விட்டமையால் அவற்றைப் பிழை ஏற்படாதவாறு மீண்டும் புதிதாக வெட்டும்படி கட்டளை இட்டார். இறைவர் திருக்குரங்காடுதுறை மகாதேவர் என்னும் பெயரால் அழைக்கப்பட்டுள்ளார். இக்கோயிலுக்கு கி.பி.994ல் 8 மாநிலம் இறையிலியாகக் கொடுத்துள்ளார், முதலாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் நந்தா விளக்குக்காகத் தானம் செய்யப்பட்டுள்ளது "சுங்கம் தவிர்த்த சோழப் பேராறு என்று' அரசன் பெயரில் ஓர் ஆற்றுக்குப் பெயரிடப்பெற்றது.


இவ்வூர் முதலாம் இராசராசன் காலத்தில் தென்கரைத்  திரைமூர் நாட்டுத் திருத்தென் குரங்காடுதுறை எனவும்; திரிபுனச்  சக்ரவர்த்தி குலோத்துங்க சோழன் காலத்தில் பூ பால குலவல்லி வளநாட்டுத் திரைமூர் நாட்டுத் திருக்குரங்காடுதுறை எனவும் வழங்கப்பட்டதாக அறிகிறோம். இவ்வூருக்கு அண்மையில் உள்ள மருத்துவக்குடி என்னும் ஊரின் பெயரும் கல்வெட்டில் காணப்படுகிறது இம்மருத்துவக்குடியே திருஇடைக்குளம் என்னும் வைப்புத்தலமாகும்.


இச்செய்தியை அம்மருத்துவக்குடி கோயிலில் செதுக்கப்பட்டுள்ள திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டானின் 21-ஆம் ஆண்டுக் கல்வெட்டு தெரிவிக்கின்றது.


 
     
 
பிரார்த்தனை
    
 

தந்தை மகன் உறவில் பிரச்னை இருந்தால் சூரியன், சனி பகவானுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அர்ச்சனை செய்துவழிபடுகின்றனர். தொழில் மற்றும் பொருளாதாரம் மேம்பட இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.  பவுர்ணமியில் அகத்தியருக்கு சந்தனாதி தைலம் சாற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். கால சர்ப்பதோஷம் உள்ளவர்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.


 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

பைரவரும், அகஸ்தியரும் வழிபட்ட தலம். கண்டராதித்தன் மனைவியார் கட்டிய கற்றளி. பிரகாரத்தில் நால்வர், விநாயகர், சிவலிங்கம் அம்பாள் சுக்ரீவன் அமைத்த சந்நிதி, விசுவநாதர், மயில்வாகனர், கஜலட்சுமி, நடராசர் சந்நிதி, சனீஸ்வரன், சூரியன், சந்திரன், நவக்கிரகம் ஆகியோர் காட்சி தருகின்றனர்.


கோஷ்டமூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், அகத்தியர், தெட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். இங்குள்ள துர்க்கைக்கு விசேஷ அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. சுவாமி கருவறை அகழி அமைப்புடையது.


நாடொறும் நான்கு கால பூசைகள். சோழ, பாண்டியர் காலக் கல்வெட்டுகளில் இத்தலம் ""தென் கரைத் திரைமூர் நாட்டு திருக்குரங்காடுதுறை''; பூபாலகுலவல்லி வள நாட்டு திரைமூர் நாட்டு திருக்குரங்காடுதுறை'' எனக் குறிக்கப்படுகின்றது. சுவாமியைத் "திருக்குரங்காடுதுறை மாதேவர்' என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.


நடராஜர்:  தில்லைப் பொன்னம்பலத்தில் ஆனந்த நடனம் ஆடியருளினார். அந்த நடனத்தைக் கண்டுகளிக்க இயலாத அகத்தியரும் ஏனைய முனிவர்களும் வேண்டிக் கொண்டதற்கிணங்க குரங்காடுதுறைக் குழகனார் ஆனந்த நடனம் ஆடியருளினார். அதனால் இப்பகுதிக்கு நடராஜபுரம் எனப் பெயர் வழங்குவதாயிற்று. தெற்குப் பிரகாரத்தில் அகத்தியர் நடராஜர் திருவுருவப்புடைச் சிற்பங்களை வரலாற்றுக் கண் கொண்டு காணலாம்.


அகத்தியர் : சிவத்தலங்கள் பலவற்றைத் தரிசித்துக் கொண்டு வரும் போது இத்தலத்தை வந்தடைந்தார். இங்கே சுவர்ண பைரவர் திருவுருவத்தைப்  பிரதிஷ்டை செய்து வழிபட்டுப் பல வரங்களைப் பெற்று மகிழ்ந்தார். சுவர்ண பைரவரைச் சிறப்போடு பூஜை செய்து அன்புடன் வழிபட்டால் நினைத்த காரியம் எளிதில் கைகூடும். தீராத நோய்கள் தீரும்; தனம் தானியம் பெருகும்; புகழ் உண்டாகும்.


அனுமார் : முன்னொரு சமையம் திருக்கயிலை மலையில் கல்லும் கரைந்து உருகும்படி இசைபாடிக் கொண்டிருந்தார். அவ்வழியே வந்த நாரதர் அந்த இசையைக் கேட்டு மெய்மறந்து அங்கே அமர்ந்திருந்தார். பிறகு அவர் புறப்படும் போது கீழே வைத்திருந்த "மகதி' என்னும் வீனை மீது பனி முடியதால் எடுக்க இயலாமல் புதைந்திருந்தது. அது கண்ட நாரதர் வெகுண்டு அனுமானை நோக்கி உன் இசையை நீ மறப்பாயாக என்று சபித்தார். பின்னர்  மனம் வருந்திய அனுமார் தன்னுடைய மன்னவன் சுக்ரீவன் வழிபட்ட இத்தென்குரங்காடுதுறைக்கு வந்து ஆபத்சகாயேசுரரை மனமுருகி வழிபட்டார். மறந்து போன இசைஞானத்தை மீண்டும் பெற்றுக் களிப்படைந்தார்.


அரதத்தர்  என்பவர் கஞ்சனூரில் அவதரித்த வைணவ பக்தராவார். இவர் இளம்பருவம் முதற்கொண்டே சிவபக்தி மிக்கவராகக் கஞ்சனூரில் உள்ள சிவாலயத்தில் எழுந்தருளி இருக்கும் தெட்சிணாமூர்த்தியை வழிபட்டுச் சிவஞானம் கைவரப் பெற்றவர். பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலி மீது ஏறி நின்று சிவபரத்துவத்தைத் தாபித்தவர். இவர் நாள்தோறும் கஞ்சனூர், திருக்கோடிக்கா, திருவாலங்காடு, திருவாவடுதுறை, ஆடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை, ஆகிய ஏழு சிவத்தலங்களையும் தரிசித்த பின்னரே உணவு கொள்ளும் நியமம் உடையவர், ஒரு நாள் வழக்கம் போல ஆடுதுறையை வழிபட்டு மீளும்போது மழை பெய்தது, இருளும் அடர்ந்தது வழியறியாமல் திகைத்து நின்றார்.


ஆபத்சகாயேசுரர் வயோதிக அந்தண வடிவங் கொண்டு, கோல் தாங்கிய கையினராய் அவருக்கு வழித் துணையாகச் சென்று அவரது இல்லத்தில் அவரைவிட்டு வந்ததாகக் கூறுவர். வைணவப்பெண் ஒருத்தி திருமங்கலக்குடியில் வாழ்ந்து வந்தாள். அவள் ஆபத்சகாயேசுரர் மீது அளவற்ற பக்தி கொண்டு வழிபடுவது வழக்கம். ஒரு நாள் நிறைமாத கர்ப்பிணியாகிய அவள் ஆடுதுறை அரனைத் தரிசிக்க வந்தாள். தரிசித்துத் திரும்பும்போது காவிரியாற்றில் வெள்ளம் பெருகியது. ஓடக்காரனும் இல்லை. ஊர் செல்ல இயலாமல் உடல்நோவ இவ்வாலயத்தை வந்தடைந்தாள். ஆபத்சகாயேசுரரை மனமுருக வேண்டினாள். அப்பெருமான் ""தாயும் நீயே தந்தை நீயே'' என வரும் திருஞானசம்பந்தர் வாக்கின் படி தாயாகத்தோன்றி உதவியருளினார். சுகப் பிரசவமாயிற்று. பின்னும் அவர் திருமங்கலக் குடிக்குச் சென்று அவர் பெற்றோரிடம் சுகப்பிரசவச் செய்தியைச் சொல்லி, "தாயும் சேயும் நலம், சென்று அழைத்து வாருங்கள் என்றார். அவர்கள் "தாங்கள் எந்த ஊரினர் ? என்று வினவ; "மருத்துவக்குடி' என்று சொல்லி இருப்பிடம் மீண்டார் எனச் சொல்லுவர்.


இத்தலத்தில் சூரியனுக்கும் சனிக்கும் விசேஷ ஆராதனைகள் செய்து வழிபட்டால், தந்தைக்கு மகனுக்கும் உண்டாகும் மனக்கசப்பும் விரோத குணமும் நீங்கப்பெற்று இன்புறுவர் என்பது உண்மை.


கோயிலின் அமைப்பு: இராஜகோபுரம் கிழக்கு நோக்கியதாகவும் மூன்று மாடங்களையுடையதாகவும் அமைந்துள்ளது. இதனைக் கடந்து உள்ளே சென்றால் கொடிமரத்து விநாயகரையும் பலிபீடத்தையும் சிறுமண்டபத்துள்ளே அமைந்துள்ள நந்தியையும் காணலாம். அகன்ற வெளிப் பக்கத்துப் பெரிய பிரகாரத்தை வலம்வந்து உள்ளே சென்றால் மணிமண்டபத்தைக் காணலாம். அம்மண்டபத்தின் தென்புறச் சுவரில் இத்தலத்தின் தேவாரப் பதிகங்களையும் திருப்புகழ்ப் பாடல்களையும் கல்லெழுத்துக்களில் வடித்துள்ளமையைப் படித்து உணரலாம்.


இரண்டாவது வாயிலுக்கு முன்னே தெற்குநோக்கிய அருள்தரு பவளக் கொடியம்மன் சந்தியையும் அதன் எதிரில் நோக்கி எழுந்தருளியுள்ள மூத்தபிள்ளையாரையும் தரிசிக்கலாம்.உள்ளே சென்றால் எதிரில் தோன்றும் மேல் மாடப்பத்தியில் சுக்ரீவன் ஆபத்சகாயேசுரரை வணங்கும் காட்சியும், சுக்ரீவனை இறைவன் அன்னப்பறவையாவும் அவன் தேவியை பாரிஜாத (பவளமல்லிகை) மரமாகவும் உருமாற்றியருளிய தல வரலாற்றுக் காட்சி சுதை வேலைப்பாட்டில் அமைந்துள்ளதைக் காணலாம்.


உள்ளே மூன்றாம் வாயிலைக் கடந்து சென்றால் பலிபீடமும் நந்தியும் அமைந்து விளங்குவதையும், கருவறை வாயிலில் கம்பீரமாகக் காத்து நிற்கும் புடைச் சிற்பமாக விளங்கும் இரண்டு துவாரபாலகர்களையும் காணலாம். அருகில் விநாயகரும் அமர்ந்துள்ளார். மூலஸ்தானத்தில் அருள்தரும் ஆபத்சகாயேசுரரைக் கண்டு தரிசித்துத் திரும்பினால் தெற்குப் பக்கத்தில் பாதுகாப்பாக வைக்கப் பட்டிருக்கும் பஞ்ச லோகத்தால் அமைந்துள்ள நடராஜர், சிவகாமசுந்தரி சோமாஸ்கந்தர் முதலிய பல வேலைப்பாடமைந்த திருவுருவச் சிலைகளைக் காணலாம்.


உள் பிரகாரத்தில் தெற்குப் பக்கம் நால்வர் சன்னதியும் தெட்சிணாமூர்த்தி சன்னதியும் அமைந்துள்ளன. கர்ப்பக் கிரகத்தின் தெற்குச் சுவரில் அகத்தியர், நடராஜர், காரைக் காலம்மையார், விநாயகர் திருவுருவங்களைப் புடைச் சிற்பங்களாகக் காணலாம். இவற்றின் அருகில் இக்கோயிலைக் கற்கோயிலாக அமைத்த கண்டராதித்தியர் தேவியாரான செம்பியன் மாதேவியார் சிவபிரானை வழிபடுவதாக அமைந்துள்ள புடைச்சிற்பத்தையும் காணலாம்.


மேற்கு மண்டபத்துத் திருமாலைப் பத்தியில் தென் கோடியில் முதல் இரு வாயில்களில் விநாயகரையும், மூன்றாவது வாயிலில் பிலிபீடம் நந்தியோடு அமைந்துள்ள பண்டைய வரலாற்றுப் பவளக் கொடியுடனாகிய ஆபத்சகாயேசுரரையும் சுக்ரீவனையும் தரிசிக்கலாம்.  அடுத்துபலிபீடம் நந்தியோடமைந்த சுவாமியையும் அம்பிகையையும்; அதனையடுத்து வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளியுள்ள முருகப் பெருமானையும் தரிசிக்கலாம். எதிரில் திருமாலும் பிரமனும் அடியும் முடியும் தேடிய அண்ணாமலையார் சோதிவடிவமாக விளங்கும் புடைச்சிற்பத்தைக் காணலாம்.


முருகன் சன்னதியை அடுத்து முனிவர்கள் வழிபட்ட சிவலிங்கத் திருமேனிகள் அமைந்துள்ளன. இறுதியில் கஜ லட்சுமியைக் கண்டு தரிசித்துத் திரும்பினால் வடக்கு நோக்கிய சன்னதியில் எட்டுத் திருக்கரங்களோடு விளங்கிக் காட்சி நல்கும் துர்கா தேவியை தரிசிக்கலாம். அருகில் (மேற்கில்) கங்கா விசர்சன மூர்த்தியையும் பைரவ மூர்த்தியையும் கண்டுகளிக்கலாம். இவ்விருபுடைச் சிற்பங்களும் கைத்திறமைக்குச் சிறந்த எடுத்துக் காட்டுக்களாகவும், காண்போர் வியக்கத்தக்கனவாகவும் அமைந்துள்ளன. அவற்றின் அருகில் விஷ்ணு துர்க்கை எழுந்தருளி விளங்குகின்றாள்.


பின்னர் சண்டேசுரர் சன்னதியை வணங்கிக் கடந்து சென்றால் தெற்கு நோக்கியவாறு எழுந்தருளியுள்ள சிவகாமியம்மையுடனாய ஆனந்த தாண்டவ மூர்த்தியைத் தரிசித்துக் கண் பெற்ற பயனைப் பெறலாம். கூத்தப் பெருமான் சன்னதிக்கு மேற்கில் நாயக்கர் கால கலை வேலைப்பாடமைந்த அறுபத்துமூவர் திருவுருவப் படங்களையும், கிழக்கில் அழகிய மஞ்சத்தில் பன்னிரு திருமுறைகளையும் காணலாம். பக்கத்தில் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ள சுவர்ண பைரவர், சூரியன் சனீச்சரர், பாணலிங்கம், அரதத்தர் ஆகிய திருவுருவங்கள் அமைந்துள்ளன. அவற்றின் அருகில் ஒன்பான் கோள்களும் உயரிய மேடை மீது எழுந்தருளியுள்ளன.


வாயிலைக் கடந்து வந்து அருள்தரு பவளக்கொடி யம்மையைக் கண்டு வணங்கி வலம் வந்தால் பின்புறச் சுவரில் சுக்ரீவன் சிவபூஜை செய்வதாகவும் செம்பியன் மாதேவி சிவபூசை செய்வதாகவும் அமைந்துள்ள இரண்டு சிறிய புடைச் சிற்பங்களைக் காணலாம். பின்னர் சண்டே சுவரியைத் தரிசித்துக் கொண்டு இராச கோபுரத்தருகில் வந்து தண்டனிட்டு வணங்கிச் சிவம் நிறைந்த சிந்தையுடன் விடைபெறலாம்.


 
     
  தல வரலாறு:
     
 

இதிகாச மாகிய இராமயணத்தில் வரும் இராம பக்தன். இவன் தென் குரங்காடுதுறையை அடைந்து சிவபெருமானை வழிபட்டு வரும் நாளில், பகைமை காரணமாகச் சுக்ரீவனைத் தேடிக் கொண்டு வாலி வந்தான். மிகவும் வல்லமை படைத்த அந்த வாலிக்கு அஞ்சிய சுக்ரீவன் ஆடுதுறை அரவச்சடை அந்தணனாகிய அரனை அடைக்கலம் புகுந்து நின்று தன்னைக்  காப்பாற்றியருளுமாறு வேண்டிக் கொண்டான். அப்போது சிவபிரான் சுக்ரீவன் அன்னப் பறவையாகவும் அவன் தேவியைப் பாரிஜாத மரமாகவும் (பவள மல்லிகை மரம்) வேற்றுருக் கொள்ளச் செய்து காப்பாற்றியருளினான்.


சுக்ரீவனுக்கு வந்த ஆபத்தைப் போக்கியருளி அவனுக்குச் சகாயம் செய்தமையால், இறைவன் ஆபத்சகாயேசுரர் எனவும், துன்பத்தில் துணைவர் எனவும் வழங்கப்படுகின்றார். அம்மையின் திருநாமம் பிரபாளவல்லி என்றும் பவளக்கொடி என்றும் வழங்கப்படுகிறது.


சூரியபூசை: ஒவ்வோர் ஆண்டும் சித்திரைமாதம் 5,6,7 தேதிகளில் சூரியனது ஒளிக்கிரணங்கள் சந்நிதிக்கு எதிரில் உள்ள சூரிய தீர்த்தத்தில் பிரதிபலித்துக் கடந்து சுவாமி மீது பட்டுத் தழுவுகின்றது.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஒவ்வோர் ஆண்டும் சித்திரைமாதம் 5,6,7 தேதிகளில் சூரியனது ஒளிக்கிரணங்கள் சந்நிதிக்கு எதிரில் உள்ள சூரிய தீர்த்தத்தில் பிரதிபலித்துக் கடந்து சுவாமி மீது பட்டுத் தழுவுகின்றது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.