Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ரவீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு ரவீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ரவீஸ்வரர்
  உற்சவர்: சோமாஸ்கந்தர்
  அம்மன்/தாயார்: மரகதாம்பாள்
  தல விருட்சம்: வன்னி
  தீர்த்தம்: சூரிய தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : காமீகம்
  புராண பெயர்: பானுமாபுரி பட்டணம்
  ஊர்: வியாசர்பாடி
  மாவட்டம்: சென்னை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆனியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், கந்தசஷ்டி, மகர சங்கராந்தி, மாசிமகம், பங்குனி உத்திரம்.  
     
 தல சிறப்பு:
     
  சிவன் சன்னதிக்கு மேலேயுள்ள இந்திர விமானம், நடுவில் எவ்வித பிடிமானமும் இல்லாமல் கூடு போன்று கட்டப்பட்டிருக்கிறது. சிவன் மூலஸ்தானத்திலிருந்து பார்த்தால், இந்த அமைப்பு தெரியும். தினமும் சூரியபூஜை!: இக்கோயிலில் சிவன், கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவரது சன்னதி எதிரில் வாசல் கிடையாது. தென்திசையில் உள்ள வாசல் வழியாக நுழைந்துதான், இவரைத் தரிசிக்க முடியும். சிவனுக்கு எதிரேயுள்ள சுவரில், சிவலிங்கம் போன்ற அமைப்பில் துளை அமைத்துள்ளனர். இதற்கு நேரே நந்தி இருக்கிறது. தினமும் காலையில் சூரியனின் ஒளி, சிவலிங்க வடிவ துளையின் வழியாக, சுவாமியின் மீது விழுகிறது. தினமும் இங்கு சூரியனே, முதலில் சிவனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். இதன் பின்புதான் காலசந்தி பூஜை செய்கின்றனர். சிவன் சன்னதி முன்மண்டபத்தில் சூரியன், இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை, உத்தராயண, தெட்சிணாயண புண்ணிய கால துவக்கம், மகரசங்கராந்தி (தைப்பொங்கல்), ரதசப்தமி ஆகிய நாட்களில் சிவன் மற்றும் சூரியன் இருவருக்கும் விசேஷ அபிஷேக, பூஜைகள் நடக்கிறது. ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் சிவன், சூரியனுக்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் 
   
முகவரி:
   
  அருள்மிகு ரவீஸ்வரர் திருக்கோயில், வியாசர்பாடி-600 039. சென்னை.  
   
போன்:
   
  +91-44 2551 8049, 99418 60986. 
    
 பொது தகவல்:
     
  3 நிலை ராஜ கோபுரத்துடன் கூடிய இத்தலத்தில் விநாயகரின் திருநாமம் சுந்தர விநாயகர். கோயிலுக்கு நேரே வெளியில், சூரியபகவான் உருவாக்கிய தீர்த்தம் இருக்கிறது. சிவன் சன்னதிக்கு பின்புறத்தில் வன்னி மரம் இருக்கிறது. பைரவர், நடராஜர், சுந்தரவிநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், ஐயப்பன், ஆஞ்சநேயர் ஆகியோருக்கும் சன்னதிகள் உண்டு.
 
     
 
பிரார்த்தனை
    
  அறியாமல் செய்த பாவம் நீங்க சிவனிடமும், அறிவுக்கூர் மையான குழந்தைகள் பிறக்க முனை காத்த பெருமாள், கல்வி, கலைகளில் சிறந்து திகழ வேதவியாசரிடமும் வேண்டிக்கொள்கிறார்கள்.

நீண்ட நாட்களாக திருமணமாகாத பெண்கள் இங்குள்ள அம்பாளிடம் வேண்டிக்கொள்ள, அப்பாக்கியம் கிடைப்பதாக நம்பிக்கை. சிவன் சன்னதிக்கு பின்புறத்தில் வன்னி மரம் இருக்கிறது.

நாக தோஷம் உள்ளவர்கள், இம்மரத்திற்கு கீழேயுள்ள நாகருக்கு மஞ்சள்பொடி, பால் அபிஷேகம் செய்தும், பெண்கள் சுமங்கலிகளாக இருக்க தாலி கட்டியும் வேண்டிக்கொள்கி றார்கள்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  இங்கு வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து வழிபடுகின்றனர். 
    
 தலபெருமை:
     
  திருமண வரம் தரும் அம்பிகை: முற்காலத்தில் இங்கு சிவன் சன்னதி மட்டும் இருந்தது. இப்பகுதியை ஆண்ட வீச்சாவரன் என்னும் மன்னனுக்கு புத்திரப்பேறு இல்லை. தனக்கு அப்பாக்கியம் தரும்படி இங்கு சிவனை வேண்டினான். சிவன், அம்பிகையிடம் மன்னனின் மகளாகப் பிறக்கும்படி அருளினார். அதன்படி, மன்னனின் அரண்மனை நந்தவனத்திலுள்ள ஒரு மகிழ மரத்தினடியில் அம்பிகை குழந்தை வடிவில் தவழ்ந்தாள். அவளைக் கண்ட மன்னன், மரகதாம்பிகை என பெயர் சூட்டி வளர்த்தான். அவளும் இத்தலத்து இறைவன் மீது பக்தி கொண்டாள். அவளது திருமண வயதில் சிவன், அவளை மணந்து, தன்னுடன் ஐக்கியப்படுத்திக்கொண்டார். இதன் பின்பு, இங்கு அம்பிகைக்கு சன்னதி எழுப்பப்பட்டது. சிவன், அம்பிகையை திருமணம் செய்த வைபவம் ஆனி மாத பிரம்மோற் ஸவத்தின்போது நடக்கிறது. தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி அருளும் அம்பிகை, திருமண பாக்கியம் தருபவளாக அருளுகிறாள். நவராத்திரி விழா இவளுக்கு 10 நாட்கள் எடுக்கின்றனர். இவ்விழாவின் பத்தாம் நாளில் "மகிஷன் வதம்' வைபவம் நடக்கும். அப்போது அம்பாள் சன்னதி எதிரில் ஒரு வாழை மரம் கட்டி, (வாழை மரத்தின் வடிவில் மகிஷன் இருப்பதாகக் கருதி), அதில் வன்னி இலையையும் சேர்த்துக்கட்டிவிட்டு, அம்பாள் சார்பாக வெட்டி விடுகின்றனர். இந்த வைபவம் இங்கு விசேஷமாக நடக்கும்.

முனை காத்த பெருமாள்: பதினென் புராணங்களையும், வேதங்களையும் இயற்றிய வேதவியாசர் வழிபட்ட தலம் இது. எனவே இத்தலம் அவரது பெயரால், "வியாசர்பாடி' எனப்பெயர் பெற்றது. இவருக்கு சிவன் சன்னதிக்கு பின்புற பிரகாரத்தில் சிறிய சன்னதி இருக்கிறது. புலித்தோல் மீது, பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் இவரது சிலை வடிக்கப்பட்டிருக்கிறது. இவர் வலது கையில் சின்முத்திரை காட்டி, இடது கையில் சுவடி வைத்திருக்கிறார்.

பவுர்ணமியன்று மாலையில் இவருக்கு வில்வமாலை அணிவித்து, விசேஷ பூஜை செய்கின்றனர். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு, இவரிடம் வேண்டிக்கொண்டால், அவர்களது கல்வி சிறக்கும். தை மாதத்தில் ரதசப்தமியன்று, வியாசர் இங்கு சிவனைப் பூஜிப்பதாக ஐதீகம். வியாசர் சன்னதிக்கு அருகில், "முனைகாத்த பெருமாள்' சன்னதி இருக்கிறது. வேதவியாசர் மகாபாரதக் கதையைச் சொன்னபோது, விநாயகர் தனது தந்தத்தை உடைத்து எழுதினார். அப்போது, தந்தத்தின் கூரிய முனை, மழுங்கி விடாமல் இந்த பெருமாள் காத்தருளினாராம். எனவே இவர், "முனை காத்த பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசியின்போது மட்டும் இவர் புறப்பாடாகிறார்.
 
     
  தல வரலாறு:
     
  சூரியபகவானின் மனைவியான சமுக்ஞா தேவி, அவரது உக்கிரம் தாங்காமல், தனது நிழல் வடிவை பெண்ணாக்கி சூரியனிடம் விட்டுச் சென்றுவிட்டாள். சாயா (நிழல்) தேவி எனப்பட்ட அவள், சமுக்ஞாதேவியின் பிள்ளைகளிடம் பாரபட்சமாக நடந்து கொண்டாள். இதை அறிந்த சூரியன் அவளிடம் கேட்டபோது, சமுக்ஞாதேவி தன்னை பிரிந்து சென்றதை அறிந்தார். கோபம் கொண்ட சூரியன், சமுக்ஞாதேவியைத் தேடிச் சென்றார். வழியில் பிரம்மா, ஒரு யாகம் நடத்திக் கொண்டிருந்தார்.

மனைவியைத் தேடிச் சென்ற வேளையில், சூரியன் பிரம்மாவைக் கவனிக்கவில்லை. தன்னை சூரியன், அவமரியாதை செய்ததாக எண்ணிய பிரம்மா, அவரை மானிடனாகப் பிறக்கும்படி சபித்துவிட்டார். இந்த சாபம் நீங்க, நாரதரின் ஆலோசனைப்படி பூலோகம் வந்த சூரியன் இத்தலத்தில் ஒரு வன்னி மரத்தடியில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவனை வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த சிவன், சாபவிமோசனம் கொடுத்த ருளினார். சூரியனின் வேண்டுதலுக்காக சிவன், அந்த லிங்கத்தில் ஐக்கியமானார். சூரியனுக்கு விமோசனம் கொடுத்தவர் என்பதால், அவரது பெயரிலேயே "ரவீஸ்வரர்' (ரவி என்பது சூரியனின் ஒரு பெயர்) என்றும் பெயர் பெற்றார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சிவனுக்கு எதிரேயுள்ள சுவரில், சிவலிங்கம் போன்ற அமைப்பில் துளை அமைத்துள்ளனர். இதற்கு நேரே நந்தி இருக்கிறது. தினமும் காலையில் சூரியனின் ஒளி, சிவலிங்க வடிவ துளையின் வழியாக, சுவாமியின் மீது விழுகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar