Meenakshi Amman Temple

Special supplement · Part 3 · page 68 · 152 / 159

பூலோக கைலாயம்

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பவை இயற்கையின் பஞ்சபூதங்கள் ஆகும். இவற்றின் ஒவ்வொரு அம்சமாகவும் சிவபெருமான் கோயிலில் வீற்றிருக்கிறார். மதுரையிலும் பஞ்சபூத தலங்கள் உள்ளன. அதில் நிலத்திற்குரிய ஸ்தலமாக உள்ளது இம்மையிலும் நன்மை தருவார் கோயில்.

தலவரலாறு

மதுரையை ஆண்ட மலையத்துவஜனின் மகளாகப் பிறந்த மீனாட்சியை, சிவபெருமான் மணந்து கொண்டார். பின்னர் மதுரையில் மன்னராக பொறுப்பேற்றார். எச்செயலையும் செய்யும் முன்பு சிவலிங்க பூஜை செய்ய வேண்டும் என்பது ஐதீகம். எனவே ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து, அதற்கு பூஜித்தபின்பு பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த வரலாற்றின் அடிப்படையில் இங்கு சிவன், லிங்கத்தை பூஜிக்கும் அமைப்பில் காட்சி தருகிறார். இப்பிறப்பில் செய்யும் பாவங்களுக்கு இனி வரும் பிறவிகளில் தான் மன்னிப்பு கிடைக்கும் என்பது பொதுவான வாதம். ஆனால், இப்பிறப்பிலேயே செய்த பாவங்களை மன்னித்து நன்மை தருபவராக அருளுவதால் இவர், ‘இம்மையிலும் நன்மை தருவார்’ என்று அழைக்கப்படுகிறார். எந்தக் கோயிலுக்கு போனாலும் சிவலிங்கத்தின் முன்பகுதியையே நாம் தரிசிப்போம். ஆனால், இந்தக் கோயிலில் மட்டும் லிங்கத்தின் பின்புற தரிசனம் நமக்கு கிடைக்கிறது. இதற்கு காரணம் உண்டு. மேற்கு நோக்கி அமர்ந்து சிவபூஜை செய்ய வேண்டுமென்பது நியதி. இங்கே சிவன் அம்பாளுடன் மேற்கு நோக்கி அமர்ந்து லிங்க பூஜை செய்கிறார். எனவே, லிங்கத்தின் முன்பகுதி அவர்களை நோக்கி இருக்கிறது. பக்தர்களுக்கு பின்புற தரிசனம் கிடைக்கிறது. மீனாட்சியம்மன் கோயிலில் சிவனுக்கு பட்டாபிஷேகம் நடக்கும் முன்பு சிவன், அம்பாள் இருவரும் இங்கு எழுந்தருளுவர். இவ்விருவரையும் மூலஸ்தானத்தை நோக்கி வைத்து, இம்மையிலும் நன்மை தருவார், சுந்தரேஸ்வரர், மீனாட்சி மூவருக்கும் ஒரே சமயத்தில் தீபாராதனை, பூஜை நடக்கும். இந்த பூஜையை சிவனே செய்வதாக ஐதீகம்.

கல் ஸ்ரீசக்ரம்

அம்பாள் மத்தியபுரி நாயகி தனிசன்னதியில் இருக்கிறாள். மதுரையின் மத்தியில் இருப்பதால் இவளுக்கு இப்பெயர். திருமணமாகாதவர்கள் இவளிடம் வேண்டிக்கொள்ள நல்ல வரன் அமையும் என்பதால் இவளுக்கு, ‘மாங்கல்ய வரபிரசாதினி’ என்றும் பெயருண்டு. தாமரை பீடத்தின் மீது நின்றிருக்கும் இந்த அம்பிகையின் பீடத்தில், கல்லால் ஆன ஸ்ரீசக்ரம் உள்ளது. பொதுவாக செம்பில் ஸ்ரீசக்ரம் வரைந்து பிரதிஷ்டை செய்யப்படும். ஆனால், இங்கு கல் ஸ்ரீசக்ரம் இருப்பது வித்தியாசமான அமைப்பு. மத்தியபுரிநாயகி சன்னதிக்கு பின்புறம் அரசமரத்தின் அடியில், லிங்கோத்பவர் காட்சி தருகிறார். திருமணத்தடை உள்ள பெண்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து, பாவாடை, தாலி கட்டி, மஞ்சள், குங்குமம் படைத்து வழிபடுகிறார்கள். இதனால் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை.

சித்தர் சிவன்

மதுரையில் திருவிளையாடல் நிகழ்த்திய சிவன், வல்லப சித்தராக வந்து கல் யானையை கரும்பு தின்னச் செய்தார். இவர் பத்மாசனத்தில் வலது கையில் ஆகாயம் காட்டி, இடக்கையில் சாம்பிராணி குங்கிலியம் வைத்து காட்சி தருகிறார். கல்வி, கலைகளில் வளர்ச்சி பெறவும், மன அமைதிக்காகவும் இவருக்கு பவுர்ணமி மற்றும் திங்கள்கிழமைகளில் சாம்பிராணி பதங்க (தைலத்திற்கு முந்தைய நிலை) காப்பிட்டு, பூப்பந்தல் வேய்ந்து வேண்டிக்கொள்கின்றனர். தை, சித்ரா பவுர்ணமி மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது.

காரமான புளியோதரை

கோயில் முன் மண்டபத்திலுள்ள காசி விஸ்வநாதர், வெள்ளை நிறத்தில் காட்சி தருகிறார். அருகில் விசாலாட்சி இருக்கிறாள். சிவபக்தனான ராவணனை அழித்து சீதையை மீட்ட ராமர், தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் மணல் லிங்கத்தை பூஜித்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கும் அதே போன்ற மணல் லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இவருக்கு பின்புறம் கையில் கோதண்டத்துடன் ராமர் காட்சியளிக்கிறார். இத்தலத்தில் ஜுரத்தைக் குணப்படுத்தும் ஜுரதேவர், மனைவி ஜுரசக்தியுடன் தரிசிக்கலாம. உடல் உபாதை, ஜுரம் உள்ளவர்கள் திங்களன்று இவர்களுக்கு மிளகு ரசம், சாத நைவேத்யம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.

பரிந்துரைக்கும் சண்டிகேஸ்வரர்

பொதுவாக சிவன் கோயில்களில் அவரது கணக்காளரான சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு எதுவும் நடப்பதில்லை. ஆனால், இத் தலத்திலுள்ள சண்டிகேஸ்வரருக்கு பக்தர்கள் விசேஷ பூஜை செய்கிறார்கள். தீராத பிரச்னைகளிலிருந்து விடுபட சிவனுக்கு மாலை அணிவித்து பூஜை செய்து, அதே மாலையை இவருக்கு அணிவித்து வழிபடுகிறார்கள். இதனால், சண்டிகேஸ்வரர் தங்களது பிரச்னை தீர சிவனிடம் பரிந்துரை செய்வார் என்று நம்புகிறார்கள். எனவே இவரை பக்தர்கள், ‘பரிந்துரைக்கும் சண்டிகேஸ்வரர்’ என்று அழைக்கிறார்கள்.

முருகனுக்கு பூக்குழி

அம்மன் கோயில்களில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதை பார்த்திருப்பீர்கள். ஆனால், சிவன் கோயிலில், அதுவும் முருகனுக்கு பூக்குழி இறங்கும் வைபவம் நடப்பதை பார்த்திருக்கிறீர்களா? இக்கோயிலில் பக்தர்கள் முருகனுக்கு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள். வைகாசி விசாகத்திற்கு மறுநாள் இந்த வைபவம் நடக்கிறது.

எப்படி செல்வது
மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அருகே உள்ளது.
நேரம்
காலை 6:15 – 12:00 மணி; மாலை 4:30 – 9:30 மணி
தொடர்புக்கு
94434 55311, 93451 55311

விஷேச நாள்: மாசியில் பிரம்மோற்ஸவம், வைகாசி விசாகம், ஆவணியில் சிவன் பூஜை, சிவராத்திரி, திருக்கார்த்திகை

Advertisement
Top
Advertisement