Special supplement · Part 2 · page 32 · 40 / 159
அழகோ அழகு!
- சிவபெருமான் திருநடனம் செய்யும் தலங்கள் ஐந்து. அவை சபைகள் எனப்படும் எனவே தான் சிவபெருமானை சபா நாயகர் என்று அழைக்கின்றனர். பஞ்ச சபைகளில் மதுரை என்பது வெள்ளியம்பலம். இது ரஜத சபை என அழைக்கப்படுகிறது.
- ராஜசேகர பாண்டிய மன்னனுக்காக கால் மாறி நடனமாடிய நடராஜர் இங்கு இருக்கிறார்.
- நாம் சொல்வதை அப்படியே சொல்லும் தன்மையுடையது கிளி. இது மீனாட்சியின் காதோரம் இருந்து, நமது வேண்டுதலை எல்லாம் கேட்டுக் மீனாட்சி அம்மனிடம் கூறுகிறது.
- நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரக் காத்திருக்கும் பாவனையில், அன்னை மீனாட்சியின் திருச் சிலையில் வலது பாதம் சற்று முன்நோக்கி இருக்கிறது.
- அஷ்ட சக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், முதலி மண்டபம், கிளிக்கூண்டு மண்டபம், கம்பத்தடி மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், வீரவசந்தராயர் மண்டபம், திருக்கல்யாண மண்டபம் சிறப்பு மிக்கவை.
- மீனாட்சியின் திருக்கல்யாணம் முன்பு திருக்கல்யாண மண்டபத்தில்தான் நடந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது பக்தர்கள் அனைவரும் பார்க்க வசதியாக மேற்கு வடக்கு ஆடி வீதிகள் சந்திப்பில் நடக்கிறது.
- உயிர்கள் உய்யும் பொருட்டு சிவபெருமான் திருவிளையாடல் நிகழ்த்திய இடம் மதுரை. இவற்றை விளக்கக் கோயிலின் பல பகுதிகளில் சிற்பங்கள், ஓவியங்கள், புடைச் சிற்பங்கள், சுதைச் சிற்பங்கள் உள்ளன.
- மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முச்சிறப்பினை உடையது மதுரை.
- தலமரம்: கடம்ப மரம், வில்வ மரம்
- முற்காலத்தில் கடம்ப வனமாக இருந்த இப்பகுதிதான் தற்போது மதுரை என அழைக்கப்படுகிறது.
- இங்குள்ள பொற்றாமரைக்குளம் பல சிறப்புக்களை உடையது.
- இதுவே நாரை முக்தி பெற்ற குளம். நாரையின் வேண்டுகோளுக்கு இணங்க இக்குளத்தில் மீன்கள் இல்லை.
- இத்தலத்திற்கு மதுரை, ஆலவாய், நான்மாடக் கூடல் என பல பெயர் உண்டு.
- கோபுர தரிசனம் கோடிப்புண்ணியம் என்பதற்கு ஏற்ப, இக்கோயிலில் பன்னிரெண்டு கோபுரங்களும், இரண்டு விமானங்களும் உள்ளன.
- நான்கு திசைகளில் நான்கு ராஜ கோபுரங்கள், சித்திர கோபுரம், ஐந்து நிலை அம்மன் சன்னதி நுழைவுக் கோபுரம், கடகக் கோபுரம், நடுக்காட்டுக்கோபுரம். பலகக் கோபுரம். இடபக் குறியிட்ட கோபுரம் அல்லது சின்ன மொட்டைக் கோபுரம். அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி மூன்று நிலைக் கோபுரங்கள் என பன்னிரண்டு நிலைக் கோபுரங்கள் உள்ளன.
- சுவாமி சன்னதியில் இந்திர விமானம் அல்லது விண்ணிழி விமானம்
- அம்மன் சன்னதியில் விமானம் உள்ளன. இரண்டு விமானங்களும் தங்க விமானங்களாக ஒளி வீசுகின்றன.
- சித்தி விநாயகர் (தல விநாயகர்), முக்குறுணி விநாயகர் சிறப்புடையவர்கள்.
- ஒவ்வொரு மாதமும் திருவிழா நடைபெறும். சித்திரைத் திருவிழா, ஆவணி மூலத்திருவிழா, தெப்பத்திருவிழா சிறப்பானவை. இத்திருவிழாக்களில் திருவிளையாடல் நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.
- கம்பத்தடி மண்டபம் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மீனாட்சி திருக்கல்யாண சிற்பம் இங்கு தான் உள்ளது.
- தடாதகை (மீனாட்சி) – சொக்கநாதர் திருமணம் முடிந்த நிலையில் தன்னைத்தானே வழிபட அமைத்த திருத்தலம் நடுவூர். அதுவே இன்று மேல மாசி வீதியில் அமைந்துள்ள இம்மையில் நன்மை தருவார் கோயில்.
- சித்திரக் கோபுரத்தின் சிறப்பு: சதா சிவ மூர்த்தி, பன்னிரெண்டு திருமுகங்களுடனான முருகப் பெருமான், பஞ்சமுக லிங்கம், பஞ்சமுக விநாயகர் ஆகியோர் திருவடிவங்கள் அடங்கிய சுதை சிற்பங்கள் உள்ளன.
- சோமசுந்தரப் பெருமான் கருவறையில் சுயம்பு லிங்கத்தின் அருகில் மனோண்மணி என்னும் பெயரில் அமைந்த அம்மன் சிலை, பிறர் பார்வையில் படாதவாறு உள்ளது. சிவனை விட்டு நீங்காமல் நிறைந்திருப்பது சக்தி எனும் தத்துவத்தை விளக்குகிறது இவ்வமைப்பு முறை.சங்கப்புலவர் சன்னதி இங்குள்ளது.
- செங்கோல் பெறும் விழா நடைபெறும் இடமே ஆறுகால் மண்டபம். சித்திரை மாதம் மீனாட்சி அம்மன் செங்கோல் பெறும் நிகழ்ச்சியும், ஆவணி மாதம் சொக்கநாதர் செங்கோல் பெறும் நிகழ்ச்சியும் நடைபெறும்.