Special supplement · Part 2 · page 40 · 72 / 159
8 கால பூஜை
‘சீவன் முக்திபுரம்’ என்ற சிறப்புடைய மதுரைச் சொக்கநாதர் கோயிலில் காரண ஆகமம், காமிக ஆகமத்தின் படி பூஜைகள் நடக்கிறது. தினமும் திருவனந்தல், விளாபூஜை, காலசந்தி, திரிகாலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம், பள்ளியறை என எட்டுக்கால பூஜை நடக்கிறது. எட்டுக்கால பூஜைகளிலும் மீனாட்சி அம்மன் வெவ்வேறு கோலங்களில் காட்சி தருகிறாள். அவற்றைப் பற்றி அறிந்து கொள்வோம்.
- திருவனந்தல் அதிகாலை 5:00 மணி அளவில் முதற்பூஜையாக நடப்பது திருவனந்தல். சித்தி விநாயகருக்கு வழிபாடு செய்து தொடங்கும். பள்ளியறையில் உள்ள சோமசுந்தரப் பெருமானின் திருவடிகளை சுவாமி சன்னதிக்கு எழுந்தருளச் செய்வர். பின்னர், மீனாட்சி அம்மனுக்கு வழிபாடு செய்யப்படும். இவ்வழிபாட்டின் போது ‘மகாசோடசி ரூபமாக’ விளங்குவாள் மீனாட்சி. இப்பூஜையின் முடிவில் பக்தர்களுக்கு ஞானப்பால் வழங்கப்படும்.
- விளா பூஜை இக்காலத்தில் விநாயகர், சுப்பிரமணியர், அம்பாள், சுவாமி முதலிய மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடக்கும். ஸ்நபனம், புண்ணியாகவாசனம், அக்கினி காரியம் முதலிய வைதீகச் சடங்குகளுடன் இவ் வழிபாடு தொடங்கும். அப்போது மீனாட்சியம்மன் குழந்தை வடிவில் காட்சி தருவாள். இது காலை 6:00 – 7:00 மணிக்குள் நிகழும்.
- காலசந்தி இது காலப்பூஜையாகும். இவ்வழிபாட்டில் நித்தியாக்கினி காரியமும், நித்திய நைவேத்யமும் நடக்கும். வைகை ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்படும். அதை பத்ரலிங்கம் எனப்படும் பலிபீடத்தில் அபிஷேகம் செய்வர். பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடக்கும். மீனாட்சி இவ்வழிபாட்டின் போது ‘புவனா’ என்னும் சக்தி அம்சமாக காட்சி தருவாள். இப்பூஜை காலை 7:30 – 8:30 மணிக்குள் நடக்கும்.
- திரிகால சந்தி உச்சிக்கால வழிபாட்டிற்கு முன்னர் காலை 10:30 – 10:45 மணிக்குள் இப்பூஜை நடக்கும். இக்காலத்தில் கவுரி என்னும் தேவி அம்சமாக மீனாட்சி விளங்குகிறாள்.
- உச்சிக்காலம் காலை 10:45 – 11:15 மணிக்குள் ஸ்நபனம், ஆவரணபூஜையுடன் இது நடக்கிறது. அப்போது யாமளை (அ) சியாமளை வடிவில் மீனாட்சி விளங்குவாள். மீனாட்சி அம்மன் பசு வடிவில் சொக்கநாதரை வழிபாடு செய்தல் கோபூஜையாகும். எல்லா உயிர்களுக்கும் இருப்பிடம் பசு. அவ்வடிவைக் கொண்டு அம்மை கடவுளை வழிபடுவதால் எல்லா உயிர்களும் கடவுளை வழிபட்ட பலன் இக்காலத்தில் கிடைக்கிறது. பிள்ளையின் நோய்க்குத் தாய் மருந்து உண்பது போல், மக்களாகிய நமது சார்பாக அம்மன் பசு வடிவில் சொக்கநாதரை வழிபடுகிறாள். இவ்வழிபாடு முடிந்த பிறகு மதியம் 12:30 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்படும்.
- சாயரட்சை இது மாலை 4:30 – 5:00 மணிக்குள் நடக்கும். பிரதோஷ கால பூஜை எனவும் இதை அழைக்கின்றனர். அப்போது ஆவாஹணம், அபிஷேகம் முதலியன நடக்கும். இப்பூஜையின் போது பஞ்சதசி வடிவில் (சுகசியாமளையாக) மீனாட்சி காட்சி தருவாள். சாயரட்சை வழிபாட்டில் சோடஷ உபசாரத்துடன் தீபாராதனை நிகழும்.
- அர்த்த ஜாமம் இரவு 7:30 – 8:15 மணிக்குள் இப்பூஜை நடக்கும். இத்தலத்தில் இது சிறப்பான பூஜை. மாதங்கி கோலத்தில் மீனாட்சியம்மன் வெள்ளை நிறப்புடவை உடுத்தி வெள்ளை மலர்கள் அணிந்து சாந்தமாக காட்சி தருவாள். அபிஷேகமும் நடக்கும்.
- பள்ளியறை இப்பூஜையின் போது பள்ளியறைக்கு வரும் சிவபெருமான் ஜடாமுடியில் இருந்து கங்கை இறங்கி எல்லா நீர் நிலைகளிலும் நிறைந்திருக்கிறாள். பின் காலையில் அபிஷேகத்தின் வழியாக சிவபெருமானின் ஜடாமுடியில் சேர்கிறாள். இது அர்த்த ஜாமவழிபாட்டை அடுத்து இரவு 9:15 – 10:00 க்குள் நிகழும். சோடஷி என்னும் நிலையில் மீனாட்சி இக்காலத்தில் அருள்கிறாள். சொக்கநாதருக்கு பள்ளியறை வழிபாடு நடத்திய பின்னர் அவருடைய திருவடிகளைப் பல்லக்கில் எழுந்தருளச் செய்வர். அப்போது வேத, திருமுறை கோஷங்களுடன் மேள, தாள வாத்தியம் முழங்க அம்மன் சன்னதிக்கு கொண்டு வருவர். இந்நேரத்தில் கோயிலின் வரவு, செலவுக் கணக்குகளை சொக்கநாதர் முன்பாக படித்துக் காட்டுவர். மீனாட்சி சன்னதி முன்பு பல்லக்கு வந்தவுடன் அர்ச்சகர் அம்மனுக்கு பூஜையுடன் சப்தமுக கற்பூர ஆரத்தி காண்பிப்பார். மூக்குத்தி பூஜை அம்மையே வந்து பாதபூஜை செய்து அழைத்துச் செல்லும் பாவனையில் வழிபாடு நடக்கும். பின்னர் பள்ளியறையில் சுவாமியை எழுந்தருளச் செய்து பள்ளியறைப் பூஜை நடைபெறும். இப்பூஜையில் குழம்புப்பால், அப்பம் முதலியன நைவேத்யம் நடக்கும். சுவாமி பற்றிய பாடல்கள் பாடல்பெறும். அப்பாடலை நாதஸ்வரக் கலைஞர் வாசிப்பார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி இப்பூஜையை முடிப்பர். இக்காலத்தில் எல்லாச் சிவன் கோயிலில் உள்ள மூர்த்திகளும் இங்கு ஒடுங்குவதாக மரபு. எனவே இப்பூஜையை பார்த்தால் அனைத்து சிவன் கோயில்களையும் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.
- வெள்ளிக்கிழமையன்று அர்த்த ஜாமம், பள்ளியறைப் பூஜைகள் ஒரு மணி நேரம் கழித்து நடைபெறும். திருவிழாக்காலங்களில் சுவாமி அம்மன் ஒரு நாள் முழுவதும் (அ) மாலை வரை வெளி மண்டபங்கள் செல்வதாக இருந்தாலும் மாலைக்கால பூஜை வரை முடிந்து புறப்படாகும். சுவாமி திரும்பி வந்த பிறகு அர்த்தஜாமம், பள்ளியறை பூஜைகள் நடக்கும். இப்படி மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை 5:00 – இரவு 10:00 மணி வரை நாள்தோறும் தினசரி பூஜைகள் நடக்கின்றன. இதற்காக மன்னர்களும், செல்வந்தர்களும் பல்வேறு நிவந்தங்களை செய்துள்ளனர். இப்படி மீனாட்சி அம்மன் கோயிலில் நித்திய (தினசரி) வழிபாடுகளும், நைமித்திய (சிறப்பு) வழிபாடுகளும் பிற கோயில்களுக்கு முன்னுதாரணமாக நடக்கிறது. எனவே அந்தந்த பூஜைகளில் பங்கேற்றால் புண்ணியம் சேரும். இதனை ‘பாரதத்தில்’ ஆசிரியர் நல்லாப்பிள்ளை கீழ்க்கண்ட பாடலால் மெய்ப்படுத்துகிறார். காலை தொழ அற்றைவினைக்கட்டகலும் கட்டுச்சி வேலை தொழ இப்பிறப்பில் வெந்துயர்போம் – மாலையினில் வந்து சிவன் தாளை வந்தித்தால் ஏழ்பிறப்பின் வெந்துயர மெல்லாம் விடும். என்று சிவதரிசன மகத்துவம் என்ற நூல் எடுத்துரைக்கின்றது.
பிரதோஷ வழிபாடு
பிரதோஷ நாளில் மாலையில் சிவதரிசனம் செய்வது சிறப்பு. இதை கீழ்க்கண்ட பாடல் நமக்கு உணர்த்தும்.
இன்ன புண்ணிய காலத்தில்
எய்து தரிசிப்போர்கள்
முன்னர் வெம்பாவத் தாயமுருக்கு
வன் பிணிநிரப்போடு
என்ன பொல்லாங்குந்தீர்வர்
இன்பமும் திருவும் பெற்று
பின்னர்தம் பெருமான் பாதம்
பிரிவறக் கலந்து வாழ்வார்.