Special supplement · Part 2 · page 43 · 80 / 159
மூன்று கோலம் சிவபெருமான் ரூபம் (வடிவம்), அரூபம்
(வடிவமில்லாமை), அருவுருவம் (லிங்கம்) என மூன்று வடிவங்களில் அருளுகிறார். இதில் ரூபம் என்பது நடராஜர் வழிபாட்டையும், அருவுருவம் என்பது லிங்க வழிபாட்டையும், அரூபம் என்பது வடிவமில்லாமல் வணங்குவதையும் (சிதம்பர ரகசியம் என்னும் ஆகாய வழிபாடு) குறிக்கும். பொதுவாக அருவுருவ வடிவில்தான் சிவன் காட்சி தருவார். நடராஜர் சன்னதி உள்ள தலங்களில் சிவனை ரூபம், அருவுருவம் ஆகிய இரண்டு வடிவங்களிலும் காணலாம். மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இவ்விரு வடிவங்களில்தான் சிவன் காட்சி தருகிறார். ஆனால் ஆண்டில் இரண்டு முறை மட்டும் மூன்று வடிவங்களிலும் இவரைக் காணலாம். ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரையின் போது நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அப்போது சுந்தரேஸ்வரர் சன்னதி முன்புள்ள ஆறுகால் மண்டபத்திற்கு நடராஜர் எழுந்தருளுகிறார். அங்கு தெற்கு நோக்கி நடராஜரை வைத்து, எதிரே அவரது பிம்பம் விழும்படியாக ஒரு வட்டமான கண்ணாடியை வைக்கின்றனர். அன்று அதிகாலையில் பூஜை நடக்கும்போது நடராஜர் (ரூபம்), கண்ணாடியில் தெரியும் பிம்ப நடராஜர் (அரூபம்), மூலஸ்தானத்தில் சுந்தரேஸ்வரர் (அருவுருவம்) ஆகிய மூவருக்கும் தீபாராதனை செய்யப்படுகிறது.