அயிலாங்குடி அருகில் திவ்யதேசங்களில் ஒன்றான திருமோகூர் காளமேகப்பெருமாள், யானைமலை ஒத்தக்கடை யோகநரசிங்கப்பெருமாள் கோயில்கள் உள்ளன. கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இக்கோயில் கருவறை கருங்கல்லால் ஆனது. தாயாரை மடியில் ஏந்திய கோலத்தில் மூலவர் ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக காட்சியளிக்கிறார். பெருமாளுக்கு எதிரே கருடாழ்வார் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார்.
பிரார்த்தனை
லட்சுமி வராஹரை வழிபட்டால் இயற்கை சீற்றமான சுனாமி, புயல், பஞ்சம் போன்ற தீங்குகள் உண்டாகாது. பூமியில் உயிர்கள் நிம்மதியாக வாழ முடியும்
நேர்த்திக்கடன்:
துளசி மாலை சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
அளவில்லாத பெருமை: இந்த உலகத்திற்கே உயிராக விளங்குவதால் வராஹமூர்த்தியை மகாவராஹ: விச்வாத்மா என்று குறிப்பிடுவர். பொய்கையாழ்வார் தன் பாசுரத்தில்,பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார்? என்று போற்றியுள்ளார். உலகத்தைத் தன் திருவடிகளால் அளந்ததால் திரிவிக்ரமாவதாரம் தான் மிகப் பெரியது என நினைக்கிறோம். ஆனால், அந்த பூமியே வராஹப் பெருமானின் மூக்கில் ஒட்டிக் கொண்டிருந்தது. அதனால், அவரின் பெருமையை அளக்க முடியாது. இதனை ஆண்டாளும் தன் பாசுரத்தில் மானமிலாப் பன்றி என்று குறிப்பிட்டுள்ளார். மானமிலா என்றால் அளவிலாத பெருமை . லட்சுமி வராஹரை வழிபட்டால் இயற்கை சீற்றமான சுனாமி, புயல், பஞ்சம் போன்ற தீங்குகள் உண்டாகாது. பூமியில் உயிர்கள் நிம்மதியாக வாழ முடியும்.
தல வரலாறு:
இரண்யாட்சன் என்ற அசுரன் பிரம்மாவை நோக்கி தவம் செய்து பல வரங்களைப் பெற்றான். தன் தவ வலிமையால் தேவர்களை எதிர்த்துப் போருக்குப் புறப்பட்டான். அவனைக் கண்ட தேவர்கள் பயந்தோடினர். அவனைக் கண்டு மூவுலகமும் நடுங்கியது. பூமியைச் சுருட்டி கடலுக்கு அடியில் சென்று ஒளித்து வைத்தான். பிரம்மா செய்வதறியாமல் திகைத்தார். பாற்கடல் வாசனான மகாவிஷ்ணுவைச் சரணடைந்தார். பிரம்மாவின் மூக்கிலிருந்து வராஹ வடிவம்(பன்றி) வடிவத்தில் விஷ்ணு வெளிப்பட்டார். அப்பெருமானின் மூக்குப்பகுதியில் ஒரு கொம்பு முளைத்தது. கர்ஜித்தபடி கடலுக்குள் பாய்ந்த அவர், பூமி அமிழ்ந்திருக்கும் இடம் நோக்கிப் புறப்பட்டார். தன் கொம்பினால் பூமியைத் தாங்கியபடி வந்தார். வராஹமூர்த்தியைத் தடுக்க வந்த இரண்யாட்சன் மீது பாய்ந்து தன் கோரைப் பற்களால் அவன் உடலை இருகூறாகக் கிழித்துக் கொன்றார். பூமாதேவியைக் காத்த வராஹர் மீது தேவர்கள் பூமாரி பொழிந்தனர். இதன்அடிப்படையில் மதுரையில் லட்சுமிவராஹருக்கு புதிதாக கோயில் கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் திருவிடந்தை, கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம், கல்லிடைக்குறிச்சியில் மட்டுமே வராஹர் கோயில்கள் உள்ளன.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:லட்சுமி வராஹருக்கென அமைந்த கோயில்களுள் இதுவும் ஒன்று.