விஷ்வகர்மாவால் உருவாக்கப்பட்ட 18 நகரங்களுள் ஒன்றாக இக்கோயில் அமைந்துள்ள பெனுகொண்டா போற்றப்படுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வாசவி கன்னிகா பரமேஸ்வரி திருக்கோயில்
பெனுகுண்டா, மேற்கு கோதாவரி.
பொது தகவல்:
உயர்ந்த கோபுரம், உள்ளே நுழைந்ததும் விஸ்தாரமான இடம், பெரிய கர்ப்பக்கிரகம் என எல்லாமே இங்கு பிரமாண்டமாக இருக்கிறது. மண்டபம் மற்றும் பிராகாரச் சுவர்களில் தெய்வ வடிவங்களை தரிசித்து மகிழலாம். இரண்டாவது பிராகாரத்தில் விநாயகர், நவகிரகங்கள் உள்ளன. உயர்த்திக்கப்பட்ட மேடையில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் நாகேஸ்வரசுவாமி. அவர் நெற்றியில் திருநீறில் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. தனி சன்னதியில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரியும், மகிஷாசுரமர்த்தினியும் அழகிலும், அலங்காரத்திலும், அணிந்திருக்கும் நகைகளிலும் ஜொலிக்கிறார்கள். கண்ணைக்கவரும் வண்ணத்தில் நெருப்புக் குழிக்குள் கன்னிகா பரமேஸ்வரி தன் பெற்றோருடன் இருப்பதைக் காணலாம்.
பிரார்த்தனை
நினைத்த காரியம் நிறைவேற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள இந்நகரத்தில்தான் வாசவி கன்னிகா பரமேஸ்வரி பிறந்ததாகக்கருதப்படுகிறது. இங்கு அவளுக்கு அமைக்கப்பட்டுள்ள கோயில் மிகவும் பிரசித்திப்பெற்றது. முழுமையாக வாஸ்து சாஸ்திர அடிப்படையில் கட்டப்பட்ட கோயில்.
தல வரலாறு:
ஒரு சமயம் ராஜமுந்திரியை சுந்தரவம்சத்தைச் சேர்ந்த விஷ்ணுவர்த்தன் என்பவன் ஆண்டு வந்தான். அவன் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளை சுற்றி வந்தபோது, பெனுகொண்டா பகுதிக்கும் வந்தான். அப்போது இளம் பெண்கள் வழிநெடுக ஆரத்தி எடுத்து அவனை வரவேற்றனர். அவர்களுள் வாசவாம்பிகா என்னும் இளம் பெண்ணும் இருந்தாள். அவள் அழகில் மயங்கிய மன்னன். வாசவாம்பிகையை தனக்கு மணம் முடித்துத் தரும்படி அவளுடைய பெற்றோரிடம் கேட்டான். இதற்கு வாசவாம்பிகாவின் பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் மன்னனோ தன் விருப்பத்தை ஏற்காவிடில், அவளை சிறைபிடித்து மணம் புரிவேன் என்றான். ஊர்கூடியது ஊர் மக்களும் அந்தப் பெண்ணை, மன்னனுக்கு மணம் முடித்துத் தர சம்மதிக்கவில்லை. கோபம் கொண்ட மன்னன், ஊர் வைசிய கோத்திர பரம்பரையைச் சேர்ந்தவர்கள் அனைவரும் 108 தீக்குழிகளை உருவாக்கி, அதில் குதித்து தற்கொலை செய்து கொள்வது என முடிவெடுத்தனர். இந்நிலையில், வாசவாம்பிகாவின் பெற்றோர் அவளை கோயிலுக்குள் அழைத்து வந்து சிவனுக்கு திருமணம் செய்வித்தனர். முதலில் வாசவாம்பிகாவும், தொடர்ந்து ஊர் மக்களும் தீக்குழியில் இறங்கினர். அப்போது ஓர் அதிசயம் நடந்தது. வாசவாம்பிகாவாக இருந்த பெண் பார்வதியாக மாறி மன்னனுக்கு சாபம் அளிக்க, அவன் தலை கழுத்திலிருந்து அறுந்து தனியாக விழுந்தது. இந்த நிகழ்ச்சிகள் கி.பி 11 ம் நூற்றாண்டில் நடந்ததாக நம்பப்படுகிறது. அதற்கான ஆதாரங்கள் இன்றும் பெனு கொண்டா பகுதியில் காணக்கிடைக்கிறது. தீக்குளத்ததற்கு அடுத்தநாள் குழியின், சாம்பலிலிருந்து கன்னிகா பரமேஸ்வரியின் பொற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட சுவாமிக்கு அருகில் வைத்து மீண்டும் திருமணம் செய்யப்பட்டது. பல காலத்துக்குப் பின் பக்தர் ஒருவரின் கனவில் கன்னிகா பரமேஸ்வரி தோன்றி, பொற்சிலையை மாற்றி, கற்சிலை வைக்கும்படி கூறினார். அதன் பின்னரே கற்சிலை கர்ப்பகிரகத்தினுள் வைக்கப்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:விஷ்வகர்மாவால் உருவாக்கப்பட்ட 18 நகரங்களுள் ஒன்றாக இக்கோயில் அமைந்துள்ள பெனுகொண்டா போற்றப்படுகிறது.