ஆரம்பத்தில், ஊரில் இருந்து காட்டுக்கு நடந்து வந்து, அம்மனை வணங்கியவர்கள், பிறகு, காட்டையே ஊராக்கிக் குடிபுகுந்தனர். கொன்றை மரங்கள் அடர்ந்த வனம், கொன்றையூர் என்றானது; பின்னாளில் அது, கொன்னையூர் என மருவியது.
பிரார்த்தனை
இங்குள்ள நெல்லிமரத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்க தொட்டில் கட்டியும் திருமணம் நடைபெற மஞ்சள் கயிறு கட்டியும் சுகப்பிரசவம் நிகழ தொட்டிலும், வளையலும் கட்டி பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் தாங்கள் நினைத்தது நிறைவேறியதும் கண்மலர், உருவபொம்மை, உப்பு, மிளகு, அமோகமாக விளைந்த நெல் என நேர்த்திக் கடனைச் செலுத்தி, வணங்குகின்றனர். மேலும், சந்தனம் மற்றும் பாலபிஷேகம் செய்து, சர்க்கரைப் பொங்கல், மாவிளக்கு நைவேத்தியம் படைத்தும், முடிகாணிக்கையும் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
இங்கு பங்குனி மாதத்தில் நடைபெறும் 15நாள் திருவிழா மிகவும் பிரசித்திபெற்றது. இந்த திருவிழாவிற்கு சுற்றியுள்ள பல ஊர்களிலிருந்தும் வரும் பக்தர்கள் அம்மனை வணங்கி தங்களது வேண்டுதல்களையும், நேர்த்திக் கடனையும் செலுத்துகின்றனர்.
தல வரலாறு:
முன்னொரு காலத்தில் இந்தப் பகுதி கொன்றை மரங்களும் கற்றாழைச் செடிகளும் சூழ்ந்த வனமாகத் திகழ்ந்தது. யாதவ இனத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர், அதிகாலையில் எழுந்து, பால் கறந்து, தலையில் தூக்கிச் சென்று ஊருக்குள் சென்று விற்று வருவது வழக்கம். அந்தக் கால கட்டத்தில், ஊர்மக்களை பல விசித்திரமான நோய்கள் தாக்கின; இதனால், நிலத்தில் வேலை செய்ய ஆளே இல்லாமல் போனது. விதைத்தவையெல்லாம், நீர் பாய்ச்ச ஆளின்றி, வாடின; கருகின. மழையும் தப்பிவிட... குடிப்பதற்குக்கூட தண்ணீர் கஷ்டம் எனும் அளவுக்கு அடுத்தடுத்து பிரச்சனைகள். மக்கள் அனைவரும் உலகாளும் நாயகியை வேண்டினர். அவர்களின் நோய்கள் யாவும் குணமாகவேண்டும்; மனமெல்லாம் குளிர்ந்து பூரிக்க வேண்டும்; பூமி செழித்து, அனைவருக்கும் வயிறார உணவு கிடைக்கவேண்டும் என யோசித்தவள், பூமிக்குள் புகுந்து கொண்டாள். பாலை எடுத்துக்கொண்டு, வழக்கம்போல் அந்தப் பெரியவர் வரும்போது, கொன்றை மரத்தின் வேர்களில் அவரது கால்கள் பட, தடுமாறினார். பால் மொத்தமும் கொட்டியது. மண்ணெல்லாம் பாலாயிற்று. எத்தனை கவனமாக நடந்துபோனாலும், இப்படித் தடுமாறுவதும், பால் கீழே மண்ணில் கொட்டி வீணாவதும் தினமும் தொடர்ந்தது. பெரியவர் கவலையானார். ஒருநாள், கோடரியால் அந்தக் கொன்றை மரத்தின் வேரை வெட்டினார். அங்கிருந்து குபுக்கென்று ரத்தமும் பாலுமாக வெளிப்பட, அதிர்ந்துபோனார் பெரியவர். விஷயம் தெரிந்து, ஊரே கூடியது. இன்னும் இன்னும் தோண்டிப் பார்க்க.... அழகிய விக்கிரகத் திருமேனியில் வெளிப்பட்டாள், தேவி ! பள்ளத்தில் இருந்து வெளியே எடுத்து, மேடான பகுதியில் வைத்ததுதான் தாமதம்... உடலையே துளைத்தெடுப்பது போல் பெய்தது, கன மழை ! கிணறுகளும் குளங்களும் ஊரணிகளும் நிரம்பின; பிறகு வரப்பு வழியே, வாய்க்கால் வழியே வயல்களுக்குச் சென்று, விதைகளைக் குளிரச் செய்தன. தேகத்தைத் துளைத்த மழையால், மக்களின் தோல் நோய்கள் யாவும் நீங்கின.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:குழந்தை பாக்கியம் கிடைக்க இங்குள்ள நெல்லிமரத்தில் தொட்டில் கட்டி வழிபடுவது சிறப்பு.