வெளிப்புற கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் வீற்றிருக்கிறார்கள். சுற்றுப் பிராகாரத்தில் மூலவருக்கு இடது புறமாக சுப்ரமணியர் வள்ளி தேவசேனாதிபதியாகவும், வலதுபுறம் விநாயகப் பெருமானும் தனிச்சன்னதியில் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். மகாமண்டபத்தைத் தாங்கி நிற்கும் தூண்களில் வெளிப்புறமாக கிழக்கு நோக்கி விநாயகரும், வடக்கு நோக்கி ஆஞ்சநேயரும் புடைப்புச் சிற்பமாக காட்சி கொடுத்து நம்மை வியக்க வைக்கிறார்கள்.
பிரார்த்தனை
சருமத்தில் வியாதி உள்ளவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடுவதும், இறைவனின் திருநாமம் ஞானகிரீஸ்வரர் என்பதால் ஞானம் வேண்டுபவர்கள் இவரை வணங்குவதும் சிறப்பு.
நேர்த்திக்கடன்:
சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
முகப்பு கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் பலிபீடம் மற்றும் கொடிமரம் அதனைத் தொடர்ந்து நந்தி மண்டபம். தனது நான்கு கால்களும் பக்தர்கள் கண்டு தரிசனம் செய்யும் வகையில் நந்திதேவர் அருள்பாலிப்பது அபூர்வமான அமைப்பாகும். நந்தி மண்டபத்தைத் தாண்டியதும் உள்வாயிலைக் கடந்தால் மகாமண்டபம். அதில் தெற்குப் பார்த்தவாறு ஞானாம்பிகை என்ற திருநாமம் தாங்கி அம்பிகை நின்ற கோலத்தில் அபய வரத ஹஸ்த முத்திரை காட்டி அருள்பாலிக்கிறாள். மிகச் சிறிய வடிவினளாக காட்சியளிக்கிறாள். மகாமண்டபத்தைத் தாண்டியதும் அர்த்த மண்டபத்தில் பஞ்சலோக தெய்வங்கள் கொலுவிருக்க கருவறையில் பரமேஸ்வரன் ஞானகிரீஸ்வரராக லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். கோயிலுக்கு வெளிப்புறமாக இடதுபுறம் ஒரு தீர்த்தம் உள்ளது. இதற்கு பஸ்ம தீர்த்தம் என்று பெயர். இதில் நீராடுவது ஆரோக்கியத்தை அளிக்கும் என்பது நம்பிக்கை. இத்திருத்தலத்தில் ஒரு காலபூஜை வழிபாடே நடந்து வருகிறது என்றாலும் பிரதோஷம், ஆடிப்பூரம், திருவாதிரை, தைமாதம் பரிவேட்டை உற்சவம் மற்றும் மகா சிவராத்திரி போன்ற விழாக்கள் பக்தர்களால் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தல வரலாறு:
ஞானத்தையும், மேதாவிலாசத்தையும், கல்விச் செல்வத்தையும் வழங்கிடும் பரமேஸ்வரன் அருள்பாலிக்கும் தலங்களுள் ஒன்று. கருங்குழி மேலவலம் பேட்டையில் அமைந்துள்ள ஞானாம்பிகை சமேத ஞானகிரீஸ்வரர் ஆலயம். வேதகிரி, ஞானகிரி, தவளகிரி, சோணகிரி, அருணகிரி எனப்படும் பஞ்சகிரி தலங்களுள் இத்தலம் ஞானகிரி தலமாகக் கருதப்படுகிறது. இத்தலத்தையொட்டி சற்று தூரத்தில் அமைந்திருக்கும் ஞானகிரி மலையில் ரங்கநாதர் அருள்பாலித்து வருவதால் ரங்கநாதர் மலை என்றும் இது அழைக்கப்படுகிறது. கவுதம முனிவர், விபண்டக முனிவர் இந்த ஞானகிரி தலத்தில் தவமிருந்ததாக கூறப்படுகிறது. திருப்புகழில் ஒரு பாடலில் ஞானமலை மேவு பெருமானே என்று வருவதால் அருணகிரிநாதர் இத்தலத்துக்கு வருகை புரிந்து ஞானகிரீஸ்வரரை தரிசித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அருட்பிரகாசர் ராமலிங்க அடிகளாரும் இத்தலத்து பெருமாளை தரிசித்திருப்பதாகவும் அதற்கு அடையாளமாகவே இந்தப் பகுதியில் ராமலிங்க மடம் ஒன்று இருப்பதையும் குறிப்பிடுகிறார்கள். இத்தலத்தில் ஏராளமான பஞ்ச லோக உற்சவர் திருமேனிகள் காணப்படுகிறது. இவை யாவும் பாண்டிய மன்னர்கள் காலத்தில் கோயிலுக்குக் கொடுக்கப்படிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த பஞ்சலோக விக்ரகங்களில் வேறு எங்குமே காணக்கிடைக்காத அற்புத வடிவாக நடராஜன் பெருமான் காட்சி கொடுக்கிறார். இவர் மார்பில் மீன் வடிவமும் காணப்படுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:பொதுவாக வடகிழக்கு ஈசான்ய மூலையில் இருக்கும் நவக்கிரகங்கள், இத்தலத்தில் அபூர்வமாக தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ளது சிறப்பு.