குருவாயூரில் சந்தன அபிஷேகம், சபரிமலையில் நெய் அபிஷேகம் போன்று பாலக்காடு மணப்புள்ளி பகவதிக்கு கருப்பு நிற சாந்து அபிஷேகம் செய்யப்படுகிறது. இவளுக்கு மூன்று கண், நான்கு கோரைப்பற்கள் இருப்பது விசேஷம்.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பகவதி திருக்கோயில்
மணப்புள்ளி, கிழக்கு யாக்கரை
பாலக்காடு, கேரளா.
பிரார்த்தனை
பங்குனியில் நடக்கும் வேலை திருவிழாவில் பகவதிக்கு பூர்ண சாந்தபிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற நாட்களில் பக்தர்கள் முன்பதிவு செய்து நடத்திக் கொள்ளலாம். சாந்தபிஷேகம் செய்வதால், மன சஞ்சலம், நோய் நொடிகள் நீங்கி கல்வி விருத்தி, வேலைவாய்ப்பு கிடைத்து வாழ்க்கை சுபிட்சமாகும் என்ற நம்பிக்கையுள்ளது.
நேர்த்திக்கடன்:
அம்மனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
வெளிச்சப்பாடு: பகவதி அம்மன் அரக்கர்களை வீழ்த்த பயன் படுத்திய வீரவாள், கோயில் பின்புறமுள்ள தெப்பக்குளத்தில் இருப்பதாக நம்பிக்கையுள்ளது. வேலை திருவிழாவின் போது, குளத்தில் பகவதி அம்மன் வாள் எடுக்கும் வெளிச்சப்பாடு திருவிழா நடக்கிறது. அருள் வந்த ஒருவர், குளத்தில் இறங்கி வாளை எடுத்து வந்து பகவதி சன்னிதானத்தில் வைத்து பூஜிக்கிறார். வேலை திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவதே வேல ஊட்டு ஆகும். இந்த திருவிழாவின் போது 15 யானைகள் அணிவகுத்து நிற்கும். பஞ்சவாத்தியம், பாண்டி, பஞ்சாரி மேளம் வாசிக்கப்படும். மணப்புள்ளி பகவதி வடக்கு முகமாக கருப்பு நிறத்தோற்றத்துடன் அருள்பாலிக்கிறாள். நான்கு திருக்கரங்களில் சூலம், கபாலம், கட்கம் (வாள்), கேடயம் உள்ளது. மூன்று கண்களும், நான்கு கோரைப் பற்களும், அழகான ஆடைகளும், ஆபரணங்களும் அணிந்திருக்கிறாள். சிவனைப் போல, நெற்றிக்கண்ணும் அம்பாளுக்கு இருப்பதால், இவளிடம் அநியாயம் செய்வோர் பற்றி முறையிடலாம். நான்கு கோரைப்பற்களும் நான்கு வேதங்களைக் குறிக்கின்றன.
தல வரலாறு:
படிஞ்சாரை யாக்கரை என்ற பகுதியில் வயல்வெளிகள் நிறைந்திருந்தது. பகவதி அம்மன் ஊர் நடுவே தவத்தில் வீற்றிருந்தாள். அறுவடைக் காலத்தில் அரிசி குத்தும் சத்தம் அதிகம் கேட்கவே, கிழக்கு பக்கம் உள்ள ஆலமரத்தடிக்கு சென்று அமர்ந்தாள். அப்பகுதியில் இருந்த பக்தர்கள் அம்பாளுக்கு கோயில் கட்ட ஏற்பாடு செய்தனர். நம்பூதிரிகள் பிரஸன்னம் பார்த்த போது, பகவதி வீற்றிருக்க சரியான இடம் ஆலமரத்தடியே என்பது தெரியவந்தது. அங்கு கோயில் கட்டப்பட்டது. இந்த இடத்தை கிழக்கு யாக்கரை என்கின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:குருவாயூரில் சந்தன அபிஷேகம், சபரிமலையில் நெய் அபிஷேகம் போன்று பாலக்காடு மணப்புள்ளி பகவதிக்கு கருப்பு நிற சாந்து அபிஷேகம் செய்யப்படுகிறது. இவளுக்கு மூன்று கண், நான்கு கோரைப்பற்கள் இருப்பது விசேஷம்.