ஐப்பசி மாதத்தில் இங்கு நடைபெறும் கல்பாத்தி தேர் திருவிழா சிறப்பு பெற்றது.
தல சிறப்பு:
கேரள மாநிலத்தில் உள்ள சிவன் கோயில்களில் இங்கு மட்டுமே நடராஜருக்கு கனகசபை அமைந்துள்ளது. இத்தலத்தில் நவகிரகங்கள் தம்பதியருடன் அருள்பாலிப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 5.30 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில்
கல்பாத்தி, பாலக்காடு
கேரளா
பொது தகவல்:
காசி விஸ்வநாதர் கிழக்கு நோக்கியும், விசாலாட்சி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். அம்பாள் சன்னதியின் மேற்கு பாகத்தில் பள்ளிஅறையும், நேர் எதிரில் தெற்கு, கிழக்கு பாகத்தில் தம்பதிகளுடன் நவக் கிரகமும் உள்ளன. கிழக்கு முகம் பார்த்து பிள்ளையார் சன்னதி உள்ளது. வடக்கு, கிழக்கு பாகத்தில் கங்காதர சுவாமி சன்னதியும், வள்ளி, தெய்வானையுடன் முருகன் சன்னதியும், தெற்கு முகம் பார்த்து சண்டிகேஸ்வரரும், கால பைரவர் சன்னதியும் காணப்படுகிறது.
பிரார்த்தனை
எமபயம் நீங்க, திருமணத்தடை, குழந்தைப்பேறு கிடைக்கவும், ஆயுள் விருத்திக்கும் இங்குள்ள சிவனையும், அம்மனையும் வழிபடுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு ருத்ராஅபிஷேகம், மிருத்யுஞ்ஜய ஜெபமும் , அம்மனுக்கும் புது வஸ்திரம் அணிவித்து, குங்கும அர்ச்சனையும் செய்கின்றனர்.
தலபெருமை:
தரை மட்டத்தில் இருந்து தாழ்வாக கருங்கல்லால் கட்டப்பட்ட கோயில். தெற்கு மற்றும் கிழக்கு திசையிலிருந்து 18 படிகள் கீழே இறங்கிச் செல்லும் அமைப்பில் இருப்பதால் குண்டுக்குள் கோயில் என்கின்றனர். காசியைப் போன்று கோயிலிலிருந்து ஆற்றுக்கு இறங்கி செல்லும் படிக்கட்டுகள் இருப்பது போன்று, இங்கு ஓடும் ஆற்றுக்குச் செல்லவும் படிக்கட்டு உள்ளது. கோயிலிருந்தே கல்பாத்தி ஆற்றங்கரைக்கு செல்லும் வழியிருப்பதும் சிறப்பு வாய்ந்ததாகும்.
காசியில் பாதி: கல்பாத்தி நதிக்கரையில் இறந்தவர்கள் நினைவாக ஈமச்சடங்குகள் செய்வதால் காசியில் பாதி கல்பாத்தி என்ற புகழும் இந்த இடத்திற்கு உள்ளது. நடராஜருக்கு கனகசபை உள்ளது. சிவபார்வதி, கணபதி, நடராஜர், சிவகாம சுந்தரி, பிரதோஷமூர்த்தி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியும் எழுந்தருளியுள்ளனர். கேரள மாநிலத்தில் இதுபோல கனகசபை கொண்ட கோயிலை காண்பது அரிதாகும். மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோயிலில் நடப்பது போன்றே ரதோற்ஸவம் இங்கும் நடக்கிறது.
கல்பாத்தி தேர் திருவிழா: ஐப்பசி மாதம் கடைசி ஒன்பது நாட்கள் தேர் உற்ஸவம் நடக்கிறது. மயிலாடுதுறை கோயிலிலும் இதே காலகட்டத்தில் தேர்த்திருவிழா நடக்கிறது. இக்கோயிலில் மூன்று தேர்கள் உள்ளன. பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண கோயில், சாத்தப்புரம் பிரசன்ன கணபதி கோயில் தேர் திருவிழாக்கள் விஸ்வநாதர் கோயில் தேர் திருவிழாவுடன் இணைந்து நடத்தப்படுகிறது. பெரிய தேரில் விஸ்வநாதர், விசாலாட்சியும், அடுத்த தேரில் கணபதியும், மூன்றாவது தேரில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியும் வலம் வருகின்றனர். விஸ்வநாதர் எழுந்தருளும் பெரிய தேர் யானையால் உந்தப்பட்டு ஊர்வலமாக வருகிறது
குங்கும அர்ச்சனை: அம்பாள் விசாலாட்சி தெற்கு நோக்கி இருப்பதால் எமபயம் நீக்கும் சக்தி படைத்தவளாக அருள்பாலிக்கிறாள். திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும், ஆயுள் விருத்திக்கும் அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி, குங்கும அர்ச்சனை செய்கின்றனர். ஆயுள் விருத்திக்கு தம்பதி அர்ச்சனை நடத்தப்படுகிறது. சுவாமிக்கு ருத்ராஅபிஷேகம், மிருத்யுஞ்ஜய ஜெபம் நடக்கிறது.
தல வரலாறு:
பாலக்காட்டில் கல்பாத்தி புழைக்கரையில் லட்சுமி அம்மாள் என்ற மூதாட்டி வாழ்ந்து வந்தார். இவருடைய குடும்பத்தினர் மயிலாடுதுறையில் வசித்து வந்தனர். மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோயில் போன்று கல்பாத்தி புழையிலும் கோயில் அமைக்க மூதாட்டி முடிவு செய்தார். இதற்காக காசிக்கு சென்று பாணலிங்கம் ஒன்றை பூஜித்து ஆனி மாதம் அமாவாசை அன்று எடுத்து வந்தார். கல்பாத்தியில் சுவாமியை பிரதிஷ்டை செய்தார். அப்போது பாலக்காடு பகுதியை ஆட்சி செய்த இட்டிகோம்பி அரசர் மூதாட்டியின் கோரிக்கையை ஏற்று கோயிலை கட்டி, விசாலாட்சி அம்மையை 1425ம் ஆண்டு பிரதிஷ்டை செய்து, கோயிலையும் கட்டி முடித்தார். எழுந்தருளிய சுவாமியை விஸ்வநாதர் என்றும், அம்பாளை விசாலாட்சி என்ற திருநாமத்துடனும் வழிபட துவங்கினார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:கேரள மாநிலத்தில் உள்ள சிவன் கோயில்களில் இங்கு மட்டுமே நடராஜருக்கு கனகசபை அமைந்துள்ளது. இத்தலத்தில் நவகிரகங்கள் தம்பதியருடன் அருள்பாலிப்பது சிறப்பு.