ஆஞ்சநேயருக்கு துளசிமாலை, வடைமாலை சாற்றியும், நாகருக்கு ராகுகாலத்தில் தீபமேற்றியும், தன்வந்திரிக்கு நெய் தீபமேற்றியும் வழிபாடு செய்கின்றனர்.
தலபெருமை:
மைத்துனர் பெருமாள்: பொதுவாக கோயில்களில் பெருமாள் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருப்பார். ஆனால், இங்கு மேற்கு நோக்கிய நிலையில் இருக்கிறார். தம்பதிகளான கோகிலாம்பாளும், கல்யாண சுந்தரரும் கிழக்கு நோக்கி அமர்ந்திருந்த போது, மைத்துனராக விஷ்ணு திருமணத்தை நடத்தி வைக்க, மேற்குநோக்கி அமர்ந்தார் என காரணம் சொல்கின்றனர். இவர் லட்சுமி தாயாரை மடியில் தாங்கிய கோலத்தில் சேவை சாதிக்கிறார். சோழநாட்டில் உள்ள திவ்யதேசங்களில் இத்தலம் அபிமானத்தலமாகத் திகழ்கிறது. இங்குள்ள உற்சவருக்கு வரதராஜர் என்பது திருநாமம். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக இருக்கும் இவரை வழிபட்டால் மணவாழ்வு விரைவில் கைகூடும். வைகானஸ ஆகமப்படி இங்கு பூஜை நடக்கிறது.
மூலிகை அபிஷேகம்: கையில் அமிர்தகலசம் தாங்கிய கோலத்தில் வடக்குநோக்கி தன்வந்திரி தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். நீண்டகாலம் நோயால் அவதிப்படுபவர்கள் இவருக்குரிய அஸ்த நட்சத்திரம், புதன்கிழமைகளில் மூலிகைத்தைலம் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இவருக்கு நெய்தீபமேற்றி 11 முறை வலம் வந்தால் ஆரோக்கியம் மேம்படும்.
தல வரலாறு:
கிழக்கில் விக்ரமன் என்னும் காவிரியாறும், மேற்கில் கிளை நதியான காளி வாய்க்காலும் அமைந்திருக்க நடுவில் அமைந்த தலம் மேலத்திருமணஞ்சேரி. பசுவாகப் பிறக்கும்படி சாபம் பெற்ற பார்வதி பூலோகம் வந்தாள். அப்பசுவை மேய்க்கும் இடையனாக விஷ்ணு உடன் வந்தார். சாபவிமோசனம் பெற்று அம்பிகை சிவனைத் திருமணம் செய்தபோது, உடனிருந்து திருமண வைபவத்தை நடத்தி மகிழ்ந்தார். அத்துடன் அதே தலத்தில் தன் மனைவி லட்சுமியுடன் கோயில் கொண்டார். இந்த நிகழ்வின் அடிப்படையில் லட்சுமிநாராயணப் பெருமாள் கோயில், கல்யாணசுந்தரர் கோயில் அருகில் அமைந்துள்ளது. திருமண விழாவிற்கு வந்திருந்த தேவர்களை விஷ்ணு எதிர் கொண்டு வரவேற்றார். இதனால் அந்த இடம் எதிர்கொள்பாடி என அழைக்கப்படுகிறது. சிவ பார்வதி கல்யாண உற்சவத்திற்கு சீர்வரிசைகள் இன்றும் எதிர்கொள்பாடியில் இருந்தே எடுத்துச் செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்குள்ள பெருமாள் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பு.