மூலஸ்தானத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் வரதராஜப்பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். கோயில் வளாகத்தில் நாகர்களுடன் வரத விநாயகர் சன்னதியும், நம்மாழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனி தனி சன்னதியிலும், மூலவருக்கு எதிரில் கருடாழ்வார் சன்னதியும், மார்பில் ராமருடன் ஆஞ்சநேயர் அமர்ந்த நிலையில் தனி சன்னதியிலும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.
பிரார்த்தனை
இங்கு பெருமாளை வேண்டுவோர், வேண்டிய வரங்களை பெறுகின்றனர். போட்டி தேர்வில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றிபெறுவதும். வியாதிகள் குணமாவதும் ஐதீகமாக நம்பப்படுகிறது.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு திருமஞ்சனம் செய்தும் துளசி மாலை அணிவித்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
மூலவர் வரதராஜ பெருமாளாக அருட்காட்சியளிப்பதால், வளாகத்திலுள் அனைத்து சுவாமிகளின் பெயருக்கு முன்பு வரத என சேர்க்கப்பட்டுள்ளது. கோயிலில் தினமும் இருகால பூஜைகள் நடக்கிறது. புதன் சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம், அலங்காரங்களுடன் சுவாமி அருள்பாலிக்கின்றார். . இங்குள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றுப்படி செய்தால், நினைத்த காரியங்கள் கைகூடும், என்றனர்.
தல வரலாறு:
மாலவன்குன்று என்றழைக்கப்படும் இப்பகுதி குடியிருப்புகளாக மாறுவதற்கு முன்பு விளைநிலங்களாக இருந்துள்ளன. அப்போது இந்த சிறிய குன்றுதான் நெல் கதிர் அடிக்கும் களமாக இருந்தது. இந்த சிறிய குன்றில் மீது கோயில் அமையப் பெற்றிருப்பது சிறப்பு. இங்கு விமானத்துடன் கூடிய கோயில் சமீபத்தில் தான் கட்டப்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மூலவர் வரதராஜ பெருமாளாக அருட்காட்சியளிப்பதால், வளாகத்திலுள் அனைத்து சுவாமிகளின் பெயருக்கு முன்பு வரத என சேர்க்கப்பட்டுள்ளது.